





அல்-ஷிஃபா மருத்துவமனை (Al-Shifa Hospital – அரபியில் مستشفى الشفاء, “குணமாக்கும் இடம்” என்ற பொருள்) காசா பகுதியின் மிகப்பெரிய மருத்துவ வளாகமாகும். காசா நகரின் வடக்கு ரிமால் பகுதியில் அமைந்துள்ள இது, போருக்கு முன் 700க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மையமாக இருந்தது.
2023 அக்டோபரில் இஸ்ரேல் தனது இனப்படுகொலைப் போரைத் தொடங்கியதிலிருந்து அல்-ஷிஃபா மருத்துவ வளாகம் மீண்டும் மீண்டும் குறிவைத்து தாக்கப்பட்டது. அந்த ஆண்டு நவம்பரில் மருத்துவமனை முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது, அப்போது அதன் மருத்துவ இயக்குனர் டாக்டர் முகமது அபு சல்மியா கைது செய்யப்பட்டு ஏழு மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார். மார்ச் 2024 இல் இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டு, வளாகம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனை ஓரளவு புதுப்பிக்கப்பட்டது, ஆனால் இன்னும் பெரும்பாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
காசாவின் 36 மருத்துவமனைகளில், 2025 டிசம்பர் நடுப்பகுதி நிலவரப்படி 18 மருத்துவமனைகள் மட்டுமே இன்னும் பகுதியளவு செயல்பாட்டில் உள்ளன, அதே நேரத்தில் மூன்று தற்காலிக மருத்துவமனைகளைத் தவிர மற்ற அனைத்தும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன.
சுமார் 4,000 குழந்தைகள் உட்பட 18,500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவை என்ற நிலையில் அதற்கான வாய்ப்புகள் அங்கு அரிதாகவே இருக்கிறது.
பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலிய தாக்குதல்களில் காசா முழுவதும் 1,722 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வளவு நெருக்கடிகளை சந்தித்த பிறகும், 25-12-2025 வியாழக்கிழமை, அழிக்கப்பட்ட அல்-ஷிஃபா மருத்துவ வளாக முகப்பில் 168 மருத்துவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு எவ்வளவு சிக்கல்களுக்கு பிறகும்-இடையிலும் அதிலிருந்து மீண்டு வர முடியும்- சாதிக்க முடியும் என்பதற்கு அடையாளம்.
இந்த மருத்துவர்கள் “மனிதநேயக் குழு- Humanity Cohort” என்று தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டவர்கள். உண்மையில் இந்த தலைப்புக்கு பொருத்தமானவர்கள் இவர்கள். இரண்டு வருட பஞ்சம், இடப்பெயர்வு மற்றும் இனப்படுகொலை தாக்குதலின் போது காசாவின் மருத்துவமனைகளுக்குள் இடைவிடாமல் வேலை செய்து கொண்டே, படித்து தேர்வுகளையும் எழுதினார்கள். அவர்களில் சிலர் காயமடைந்தனர், சிலர் கைது செய்யப்பட்டனர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
“துன்பத்தின் கருவறையிலிருந்து, குண்டுவீச்சுக்கு உள்ளாகி, இடிபாடுகள் மற்றும் இரத்த ஆறுகளுக்கு மத்தியில்” பட்டம் பெறுவதாக காசா சுகாதார அமைச்சக அதிகாரி யூசுப் அபு அல்-ரீஷ் விவரித்தார்.
விழாவில் போரின் போது கொல்லப்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் புகைப்படங்களைக் காட்டும் வெற்று நாற்காலிகள் இருந்தன.
இந்த நிகழ்வு உலகுக்கு சொல்லும் பாடம் – செய்தி ஒன்றுதான்… அதை அவர்களின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.
அல்-ஷிஃபாவின் மருத்துவம் இயக்குனர் டாக்டர் முகமது அபு சல்மியா, ‘காசாவின் சுகாதார வசதிகள் மீதான தனது தொடர் தாக்குதல்கள் மூலம் பாலஸ்தீனத்தின் மனித வளத்தை அழிக்க இஸ்ரேல் முயன்றது, “ஆனால் அதில் அது தோற்றுப் போய்விட்டது” என்கிறார்.
பட்டதாரிகளில் ஒருவரான டாக்டர் அகமது பாசில், “இடிந்த கட்டிடத்திற்குள் மிகவும் கடினமான காலங்களில், கடும் நெருக்கடிகளுக்கு இடையே முதுநிலைப் பட்டங்களைப் பெறுவது, பாலஸ்தீனியர்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்கள் மற்றும் அவர்கள் அறிவியல் முன்னேற்றத்திக் தங்கள் பங்களிப்பை வழங்குவதில் உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு ஒரு செய்தியாக அனுப்புகிறது” என்று கூறினார்.
ஆயுதங்களால் ஒரு போது மனதின் வலிமையை வெல்ல முடியாது. இதை உலக மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த விடயத்தையும் அறதோடும் நிதானமாகவும் உறுதியோடும் எதிர்கொள்ள வேண்டும்.

































