



தெற்கு அமெரிக்கா உலகின் நான்காவது பெரிய கண்டமாகும். இது தனக்குள் 12 நாடுகளை கொண்டுள்ளது. இந்த கண்டம் இயற்கையாகவே மிகப் பசுமை நிறைந்த கண்டமாகவும் உலகில் உள்ள பல உயிர்களின் வாழ்விடமாகவும் உள்ளது.
இந்த கண்டத்தில் தான் பூலோகத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடு அமைந்துள்ளது. அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும்.
அமேசான் மிகவும் அடர்த்தியான காடு. மழை பொழிந்தால் அந்த மழைநீர் தரையை தொடுவதற்கு 10 நிமிடங்கள் ஆகும். இதன் மூலம் அக்காடு எவ்வளவு அடர்த்தி என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. உலகில் அறியப்படாத பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது. இக்காடு 2.5 மில்லியன் பூச்சிகளுக்கும், 10,000 க்கும் அதிகமான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ 2,000 க்கும் அதிகமான பறவை, பாலூட்டி இனங்களுக்கும் தாயகமாக விளங்குகிறது.
இந்த இயற்கை அழகில் சுமார் 20 சதவீதம் காட்டை கடந்த 40 வருடத்தில் மனிதன் அழித்திருக்கிறான்.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதாரத் தேவை என்று சொல்லி மழைக்காடுகளை அழிப்பதை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வகுடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமேசான் காடுகள் “காட்டுத் தீ”க்கு இரையாகின. அப்போது ஃபிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமேசான் ‘காட்டுத் தீ’யை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவத் தயார் என்று தெரிவித்தார். ஆனால் அதை பிரேசில் அதிபர் போல்சினோரா நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகம் இன்று பல்வேறு வழிகளில் சிக்கல்களை சந்தித்து வருகிறது. சிறிய அளவிலான மாற்றங்களை தனி ஒருவரால் செய்துவிட முடியும் என்றபோதிலும் கூட சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட விசயங்களை செய்திட அரசின் உதவியோ அல்லது மிகப்பெரிய சமூக மாற்றமோ தேவைப்படும் என்ற எண்ணம் நம்மில் இருக்கிறது. ஆகவே தான் நாம் பல்வேறு சமயங்களில் பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படாமல் அமைதியாக இருந்துவிடுகிறோம். ஆனால், அது உண்மையல்ல.
தனி மனிதர்கள் நினைத்தால் கூட இந்தப்பூமியில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்திட முடியுமென நிரூபித்து இருக்கிறார்கள் பிரேசில் நாட்டைச் சேர்ந்த செபாஸ்டினோ சல்கடோ மற்றும் அவரது மனைவி லூலியா டெலூயிஸ் வானிக் சல்கடோ.
பிரேசில் நாடு இயற்கையில் வளமான காடுகள் அமைந்த ஒரு நாடு. செபாஸ்டியோ சல்கடோ போட்டோகிராபரான இவர். 1990களின் ஆரம்பத்தில் ருவாண்டா நாட்டில் நடந்த இனப்படுகொலையை படமெடுத்ததற்குப் பின்னால் ஒரு கனத்த இதயத்தோடு தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊர் திரும்பிய அவரை மற்றுமொரு அதிர்ச்சி தாக்கியது.
சல்காடோ சிறு வயதிலிருந்தே பசுமையான சூழலில் தான் வாழ்ந்தவர். அவர் ஊரை விட்டுப் போகும்போது கூட அந்த ஊர் பசுமையாகத் தான் இருந்தது. ஆனால் அவர் திரும்பி வந்து பார்த்த போது அந்த ஊர் பசுமையாக இருந்ததற்கான ஒரு அறிகுறியைக் கூட அவர் காணவில்லை. எல்லா மரங்களும் வெட்டப்பட்டு இருப்பதைக் கண்டார்.
அங்கிருந்த வன உயிரினங்கள் எதுவும் இல்லை என்பதை அறிந்து கொண்டார்.
காடுகளின் அழிவைப் பற்றி அவர் சொல்லும் போது ‘காடுகள் மட்டும் அழியவில்லை, நானும் அழிந்துபோனேன்’ என்கிறார்.
காடுகள் அழிக்கப்பட்டு விட்டது. நம்மால் என்ன செய்திட முடியும் என மனம் தளராமல் அவரும் அவரது மனைவியும் காடுகளை மீட்டெடுக உறுதிபூண்டனர்.
அன்று துவங்கியது தான் இந்த தம்பதியரின் பயணம். அவர்கள் தங்களது பயணத்தை துவங்கியபோது வெறும் 0.5% தான் மரங்கள் இருந்தன. மரங்களையும் செடிகளையும் அவர்கள் நட ஆரம்பித்த பிறகு மெல்ல மெல்ல பறவைகளும் பூச்சியினங்களும் அங்கே தானாக வரத்துவங்கின. இந்த இணையர்கள் Instituto Terra எனும் அமைப்பை உருவாக்கினார்கள். இதன் மூலமாக மில்லியன் கணக்கான மரங்கள் நடுவது சாத்தியமானது.
அதற்கு முதல் கட்டமாக தன் பெற்றோர்களிடமிருந்து நிலத்தை விலைக்கு வாங்கி அதில் மரங்களை நட ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாக நடந்தாலும் போகப்போக நிலைமை மிகவும் மோசமானது. இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் இவர்கள் (re plantation) செய்த மறு நடவு காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக காடும் வளர ஆரம்பித்தது.
தொடர்ந்து பல பணியாளர்கள் உதவியோடு முழுநேரம் இந்த பணியில் ஈடுபட்டனர். நடப்பட்ட மரங்கள் அனைத்தும் அந்த மண்ணின் மரங்களாக (native trees) இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். அடுத்த 20 ஆண்டுகளில் வளமான காட்டை உருவாக்கியிருந்தார்கள்.
காடுகள் உருவாக்கத்திற்குப் பிறகு 172 பறவை இனங்கள், 33 வகையான பாலூட்டிகள், 293 வகையான தாவரங்கள் மற்றும் 15 வகையான ஊர்வன இனங்கள் அங்கு திரும்பியுள்ளன.
இதுவரைக்கும் இப்படியொரு சாதனையை எவருமே செய்ததில்லை என்பதே உண்மை. இதற்காகவே இந்த இணையர் கொண்டாடப்படுகிறார்கள். நீங்கள் உலகில் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம், நீங்கள் எந்தவித பிரச்சனைகளை வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் நீங்கள் நினைத்தால் உங்களால் அந்த பிரச்சனையை சரிசெய்திட முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்கள் இந்த தம்பதியினர்.



































