வாசித்து வாழ்வோம்… 8  சேயன் இப்ராகிம் போர்க்களத்தின் செய்திகள்

தமது தாயகத்தை மீட்பதற்காக பாலஸ்தீன மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவரும் வீரமிகு போராட்ட வரலாற்றைக் கூறும் பல நூல்கள் வெளிவந்துவிட்டன. 

அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னொரு நூல் தான் V.S. முகம்மது அமீன் எழுதியுள்ள “போர்க்களத்தின் செய்திகள்”. இதனை இன்னொரு நூல் என்று அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்டுள்ள நூல் இது. 

நூலாசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல் இது ஒரு முறைப்படுத்தப்பட்ட தொடராக இல்லாமல் ஊடுபாவாக ஓடி ஒரு வரலாற்றுக் கைக்குட்டையாக நெய்யப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. “சமரசம்” மாதம் இருமுறை இதழில் அவர் தொடராக எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

நூலின் மொழிநடை மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. ஒரு வரலாற்றை இத்தனை சுவைபடவும், விறுவிறுப்பாகவும், உணர்ச்சிகரமாகவும் எழுத முடியும் என்பதை நூலாசிரியர் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அவர் சூட்டியுள்ள தலைப்புகளின் பெயர்கள் கவித்துவமாக இருக்கின்றன. 

நம் காலத்தின் ரத்தத் துளிகள், அபாபீல் பறவைகளின் எரிகற்கள், போர்க்களத்தில் பூக்களுக்கு என்ன வேலை, மெல்லத் திறந்தது கதவு, சிறகொடிந்த தேவதையும் உயிர் கொடுத்த போராளியும், ரோஜா செடிகளும் கள்ளிச் செடிகளும்,  இயன்றவரை களமாடு இறுதிவரை போராடு, சூழும் சூழ்ச்சிகள் யாவும் வீழும்  என அத்தியாயங்களுக்கு அவர் சூட்டியுள்ள பெயர்களே இதற்கு உதாரணமாகும்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரால் விரட்டப்பட்ட யூதர்கள் எப்படி பாலஸ்தீனத்தை படிப்படியாக ஆக்கிரமித்து அந்நாட்டில் வாழ்ந்து வந்த பூர்வீகக் குடிகளான அரபுகளை துரத்தி அடித்து அதனை அபகரித்துக்கொண்ட வரலாறு தொடங்கி, தங்களது தாய் நாட்டை மீட்பதற்காக பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்கள், நிராயுதபாணிகளான அம்மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள், இங்கிலாந்தும் அமெரிக்காவும் இஸ்ரேலின் அடாவடித் தனங்களுக்கு துணை நிற்கும் நியாயமற்ற போக்கு, தனது இன மக்களுக்குத் துணை நிற்காத அரபு நாடுகளின் துரோகம், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்காத இஸ்ரேல் அரசின் செயற்பாடுகள், பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஹமாஸ் ஆகிய இயக்கங்களின் வீரம் செறிந்த போராட்டங்கள், எகிப்து ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தங்கள் எனப் பாலஸ்தீனப் பிரச்சினையில் அனைத்து அம்சங்களையும் இந்நூல் சுருக்கமாக எடுத்தியம்புகிறது.

இஸ்ரேலில் வசிக்கின்ற சில அறிவுஜீவிகள் (யூதர்கள்) பாலஸ்தீன மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களுக்கு ஆதரவாக நிற்பதையும் நூலாசிரியர் பதிவு செய்யத் தவறவில்லை.

இந்நூலின் கடைசி ஒன்பது அத்தியாயங்கள் ஹமாஸ் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்டங்களை குறித்தும், மேற்கத்திய நாடுகள் அந்த இயக்கத்தின் மீது கூறுகின்ற குற்றச்சாட்டுகளின் பொய்த்தன்மை பற்றியும் விரிவாகப் பேசுகிறது. ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் பலர் இஸ்ரேலின் உளவு ஸ்தாபனமான மொஸாத்தால் கொல்லப்பட்ட செய்திகளும் இதில் இடம்பெற்றுள்ளன. வரலாற்றுச் செய்திகளுக்கு இடையில் பொருத்தமான இடங்களில் யூதர்கள் குறித்த திருமறையின் வசனங்களும் இடம் பெற்றிருப்பது நூலின் சிறப்புக்கு மேலும் மெருகூட்டுகிறது.

“வலியும் வருத்தமுமே தமது வாழ்வாக மாறிவிட்ட ஒரு சமூகத்தின் பிடிங்கி எறியப்பட்ட வரலாற்றை துல்லியமாக எடுத்து வைக்கும் அவரது சொற்கள் மிகவும் வசீகரமானவை. முப்பத்தி நான்கு அத்தியாயங்களாக விரியும் இந்நூல் விறுவிறுப்பான மொழிநடையோடு நம்மை பாலஸ்தீனத்திற்கே அழைத்துச் செல்கிறது. பாலஸ்தீன் ஆக்கிரமிக்கப்பட்ட வரலாறு, சமகால மோதல்கள் என்பனவற்றை புள்ளிவிவரங்களோடும் வரலாற்றுத் தகவல்களோடும் நம்பிக்கையூட்டும் சுப சோபனங்களோடும் அவர் முன்வைக்கும் பாங்கு அலாதியானது” என இலங்கை அபிவிருத்தி நிறுவனத்தின் பணியாளர் ரவூப்ஸெய்னா நூலில் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ள முன்னணி எழுத்தாளரும் “கிழக்கு பதிப்பகத்தின்” ஆசிரியருமான மருதன் உலக முன்னணி பிரச்சனை பிரதேசங்களாகத் திகழும் அதேசமயம் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாத ஒரு குழப்பமான பிரதேசமாகவும் மத்தியகிழக்கு நீடிக்கிறது. தொன்மையான வரலாற்றையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும் ஒரு இடமாகவும் எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கொண்ட ஓர் இடமாகவும் கூட மத்திய கிழக்கு இருக்கிறது. உண்மையில் இவை அனைத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றே நினைக்கிறேன். முகம்மது அமீன் எழுதியிருக்கும் “போர்க்களத்தின் செய்திகள்” எனும் நூல் இந்த நுணுக்கமான தொடர்பை நமக்கு  எளிமையாக அறிமுகம் செய்து வைக்கிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையின் பின்னணியைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு அடிப்படை நூலாகவும் இது திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

போராடுகின்ற தனது இனத்தை சேர்ந்த பாலஸ்தீன மக்களுக்குத் துணை நிற்காமல் அவர்கள் முதுகில் குத்துகிற விதத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்தக் காலகட்டத்தில் V.S. முகமது அமீனின் போர்க்களத்தின் செய்திகள் என்ற நூல் பாலஸ்தீன மக்களின் நீண்டகால போராட்டத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. இந்நூலை சென்னையிலுள்ள உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.