



“இறை நம்பிக்கைக்கு அழைத்துச் செல்லாத அறிவு ஒரு அறியாமை.”
– இப்னு ருஷ்த்
அறிவியலும் ஈமான்-இறைநம்பிக்கையும் முரணாகப் பார்க்கப்படடு வரும் இவ்வுலகில், குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய ஓர் உயர்ந்த குரல்.
புதிய கண்டுபிடிப்புகளும் விஞ்ஞான உண்மைகளும் குர்ஆனிய சிந்தனைக்கு அச்சுறுத்தலல்ல, மாறாக அதன் உண்மையை உறுதிப்படுத்தும் சான்றுகளே என நிதானமாகவும் உறுதியுடனும் உலகை உலுக்கிச் சொன்னது அந்தக் குரல்.
சிந்தனை தெளிவுடன், அமைதியாகவும் ஆனால் ஆழமான கருத்துக்களைப் பகர்ந்த அந்தக் குரலின் சொந்தக்காரர் — ஒரு புவியியல் (geology) அறிஞர், உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய சிந்தனையாளர், அல் குர்ஆனின் அறிவியல் அற்புதங்களை சான்றோடு பகர்ந்த பன்முக நூலாசிரியர் — அவர்தான் கலாநிதி பேரறிஞர் டாக்டர் சக்லூல் ராகிப் முஹம்மத் அல்-நஜ்ஜார்.
முஹம்மத் அல் நஜ்ஜார் 2025 நவம்பர் 9 ஆம் தேதி ஜோர்டானில் காலமானார். 92 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்து, புவி பற்றிய பல அறிவியல் உண்மைகளை பசித்த அறிவியல் உள்ளங்களுக்கு விருந்தாக தந்தவர், தனது படைப்பாளனிடம் மீண்டுள்ளார்.
அவர் எழுதிய அனைத்தும் அறிவியலின் நுட்பத்தையும் ஈமானின் ஆழத்தையும் இணைத்த கலவையாக மலர்ந்தவை.
‘அல் குர்ஆனில் பூமி, “பிரபஞ்சத்திலும் உள்ளங்களிலும் அல்லாஹ்வின் நியதிகள்”, “சத்தியத்திற்கும் மாயைக்கும் இடையில் அறிவியல் அற்புதம்”, “அல் குர்ஆனில் அறிவியல் அற்புத வசனங்கள்” ஆகியவை அவர் எழுதிய நூல்களில் சில.
இப்படிப்பட்ட பல அற்புத நூல்களை உலகிற்கு வழங்கிய அறிவாளுமையை இப்போது இழந்து விட்டோம்.
“இஸ்லாமிய உலகம் அதன் புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் நேர்மையான வழிகாட்டிகளில் ஒருவரான டாக்டர் அல் நஜ்ஜார் (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டட்டும்), வாழ்நாள் முழுவதும் அறிவு, நம்பிக்கை மற்றும் ஞானத்துடனும் அல்லாஹ்வை நோக்கி அழைப்பு விடுத்த வழிகாட்டியை இழந்துவிட்டது” என்று அவரது மறைவுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சங்கம் [International Union of Muslim Scholars] இரங்கல் தெரிவித்துள்ளது.
அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை
டாக்டர் ராகிப் அல் நஜ்ஜார் 1933 நவம்பர் 17 அன்று எகிப்தில் ஆன்மிகமயமான அறிவார்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், பத்து வயதிலேயே குர்ஆனை மனப்பாடம் செய்தார். அவரது தாத்தா ஒரு இமாம். அவரது தந்தை, மாமாக்கள், தாய்வழி மாமாக்கள் உலகப் புகழ் பெற்ற அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகம் மற்றும் தாருல் உலூமில் பட்டம் பெற்றவர்கள்.
குர்ஆனிய – அறிவியல் கண்ணோட்டத்தின் விதைகள் அவரது இளமையிலேயே விதைக்கப்பட்டன. ஒரு இளைஞனாக, அவர் தனது கிராமத்தின் அறிவுஜீவிகள் – ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் ரமலான் கால மாலை நேரக் கூட்டங்கள், உரையாடல்களில் கலந்து கொண்டார்.
அவர்கள் குர்ஆனைப் படித்து அதைப் பற்றி சிந்தித்து, அதன் மொழியியல் மற்றும் சட்ட ஞானத்தைப் பற்றி விவாதித்தனர்.
இந்த அமர்வுகளில் அவருக்குக் கிடைத்த குர்ஆனிய அறிவும், விளக்கமும், அவரது தந்தை வழங்கிய வீட்டுப் பயிற்சிகளும், இறை வசனங்கள் மற்றும் படைப்புகளுக்கு இடையிலான அற்புதமான இணக்கத்தை ஆராய்வதற்கான அவரது வாழ்நாள் ஆர்வத்தை வடிவமைத்தன.
கல்விப் பயணம்
டாக்டர் அல்-நஜ்ஜார் 1951 ஆம் ஆண்டு தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, கெய்ரோ பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தில் புவியியல் துறையில் பட்டம் பெற்றார். 1959 வரை எகிப்தில் தனது துறையில் பணியாற்றினார்.
பின்னர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Wales, U.K) தனது சொந்த செலவில் இரண்டு ஆண்டுகள் (1963) புவியியலில் முனைவர் பட்டத்தை முடித்தார். இது “ஒரு சாதனை – a record time” என்று சொல்லப்பட்டது.
அவரது திறமையை அங்கீகரித்து, வேல்ஸ் பல்கலைக்கழகம் அவருக்கு முதுகலை ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் வழங்கியது, அப்போது அவர் தனது துறையில் 14 ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார். ஆய்வுக் குழு அவரது ஆராய்ச்சியின் முழு வெளியீட்டையும் வெளியிட பரிந்துரைத்தது. பல்கலைக் கழகம், 600 பக்க சிறப்புப் பதிப்பாக வெளியிட்டது. அது 2004 ஆம் ஆண்டுக்குள் 17 முறை மறுபதிப்பு செய்யப்பட்டது.
பூமி அறிவியலில் (Earth Science) 45க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வறிக்கைகளை மேற்பார்வையிட்டுள்ளார். தனது பணிக்காலம் முழுவதும், ராபர்ட்சன் ரிசர்ச் (Robertson Research – UK)) உட்பட பல்வேறு சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பெட்ரோலிய நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார். மேலும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியா முழுவதும் பல அறிவியல் இதழ்களுக்கு பங்களித்துள்ளார்.
அறிவுசார் பங்களிப்பு
புவியியல், நீர் மற்றும் பெட்ரோலியம் ஆய்வுகளில் நிபுணராக இருந்தபோதிலும், அல்-நஜ்ஜார் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை குர்ஆன் மற்றும் சுன்னாவின் அறிவியல் அற்புதங்களை ஆராய்வதற்காக அர்ப்பணித்தார்.
மனித படைப்பு, விலங்குகள், வானங்கள் மற்றும் பூமி பற்றிய குர்ஆனின் வசனங்களை அவரது எழுத்துக்கள் விவரித்தது. அவரது ஆய்வுகள் அனைத்தும் சர்வவல்லமையுள்ள ஒரு படைப்பாளனின் துல்லியத்தை பிரதிபலிக்கின்றன.
பல நவீன அறிவியல் உண்மைகளை அவற்றின் கண்டுபிடிப்புக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு கிதாப் வெளிப்படுத்தியது. அந்த கிதாப்-குர்ஆன் உண்மையில் அறிவியல் அறிவுக்கு முந்தியது, ஆனால் ஒருபோதும் குர் ஆன் அறியலோடு முரண்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அல் நஜ்ஜாரின் நோக்கமாகும்.
இஃஜாஸ் இல்மி – إعجاز علمي (Scientific Miracle of the Quran) அறிவியல் அதிசயம் அல்லது குர்ஆனின் அறிவியல் பற்றிய அவரது கருத்துக்கள் குறித்து, ‘குர்ஆன் அறிவியல் நூல் அல்ல; அதை அறிவியலுடன் ஒப்பிடுவது தவறு’ என்று சில அறிஞர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
அதற்கு பின்வருமாறு பதிலளித்தார் : “கல்வியில் நாம் இருமையால் அவதிப்படுகிறோம். மார்க்க அறிஞர்கள், ஷரியா மற்றும் மொழியில் ஆழமாக தேர்ச்சி பெற்றிருந்தாலும், பெரும்பாலும் நவீன அறிவியல் யதார்த்தங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர், இது அவர்களை அவர்களின் சகாப்தத்திலிருந்து – சமகாலத்தில் இருந்து தனிமைப்படுத்துகிறது.
மாறாக, நமது விஞ்ஞானிகள் – மருத்துவர்கள், பொறியாளர்கள், வானியலாளர்கள், புவியியலாளர்களும் தங்கள் துறைகளில் சிறந்து விளங்க முடியும். ஆனால், அதற்கான கலாச்சார, சமூகச் சூழல் இல்லாததால், அவர்களின் அறிவுக்கும் குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கும் இடையிலான இணக்கத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள். இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையில் பாலத்தை உருவாக்குவதே எனது முயற்சி.”
‘குர்ஆன் என்பது அறிவியல் புத்தகம் அல்ல அது வழிகாட்டும் ஒளிவிளக்கு. ஆனால், அது எந்த நிறுவப்பட்ட அறிவியல் உண்மைக்கும் முரண்படாது. மாறாக சிந்தனைக்கான கதவுகளைத் திறக்கிறது. ஈமான் என்பது அறிவுக்கு எதிரானது அல்ல. அது அறிவை முழுமைப்படுத்துவதாகும்’ என எப்போதும் வலியுறுத்தினார்.
அவரது பங்களிப்புகள் அனைத்தும் அறிவியலை அல்லாஹ்வை அடையும் பாலமாக ஆக்கி, ஒவ்வொரு அறிவியல் உண்மையையும் அல்லாஹ்வை புரிந்து கொள்ளும் அற்புதச் சான்றாக விளக்கின.
இஸ்லாமிய உலகில் அறிவியலையும் குர்ஆனிய சிந்தனையையும் இணைத்துப் பேசிய அரிய ஆளுமையாக விளங்கிய பேரறிஞர் கலாநிதி ஸக்லூல் அல் நஜ்ஜார் – இஸ்லாத்தின் மகிமையை காக்கவும், அதனை வலிமைமிக்க குரலில் உலகிற்கு விளக்கவும் அவர் எழுப்பிய குரல் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
இஸ்லாத்தை உலகிற்கு எடுத்துரைப்பவர்களுக்கு கண்ணியம் காக்கும் தைரிய குரல் தேவை என்பதை அவர் தனது வாழ்வால் உணர்த்தினார்.
அசந்தர்ப்பமான நெருக்கடி நேரங்களில் தற்காப்பு என்று நினைத்துக் கொண்டு காட்டிக் கொடுக்கும் பலவீனத்தை விட்டுவிட்டு சத்தியத்தை காக்கும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும் அதற்கான தைரியமும் வேண்டும் என்பதற்கு நஜ்ஜாரின் நிலைப்பாடு அழியாத அடையாளமாகும்.
அலி இஸ்ஸத் பெகோவிச் ஒருமுறை : “கொள்கையில் உறுதியாக இருப்பது ஆயுதங்களை ஏந்துவதை விட கடினமானது, ஆனால் அதுதான் வெற்றிக்கான ஒரே பாதை” என்று கூறினார்.
“இஸ்லாத்தின் கொள்கை நியாயமானது, ஆனால் அது பெரும்பாலும் பலவீனமான நாக்குகளால் முன்வைக்கப்படுகிறது.” என்கிறார் ஷேக் முஹம்மது அல்-கசாலி.
இஸ்லாம் சார்ந்த உரையாடல்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் அதற்குள் பேணப்பட வேண்டிய ஆளுமைமிக்க சமநிலையையும் சுருக்கமாகக் கூறும் இந்த வார்த்தைகளுக்கு, பேராசிரியர் ஸக்லூல் ரகீப் அல்-நஜ்ஜார் வாழும் சான்றாக இருக்கிறார்.
2005 ஆம் ஆண்டு லண்டன் குண்டுவெடிப்புக்குப் பிறகு பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்தில் நடந்த “இஸ்லாம் வன்முறைகளை ஆதரிக்கிறதா” என்ற தலைப்பில் நடந்த உரையாடலில் அல் அஸ்ஹர் பலக்லைக் கழக தூதுக்குழுவில் இருந்த அல் நஜ்ஜார் பிரிட்டிஷ் அதிகாரியிடம், “பாலஸ்தீனம், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அப்பாவிகளைக் கொன்றது யார்?”ஆக்கிரமிப்பைத் தொடங்கியது யார்? நமது நிலங்களை ஆக்கிரமித்தது யார்? என்று கேட்டார்.
அமைதி நிலவியது, பின்னர் அந்த அதிகாரி : “எல்லோரும் உங்கள் நேர்மையுடன் பேசினால் போதும்” என பதிலளித்தார் இந்த வரலாற்றுப் பதிவை நேரில் கண்ட சாட்சியத்துடன் வழங்கிய காலித் ஹம்திக்கு நன்றி.
அவரது அறிவு, தைரியம், நம்பிக்கை, சத்தியக் குரல் இவை அனைத்தும் இளம் சந்ததியினருக்கு ஊக்கமும் தைரியமும் கொடுக்கும்.
“பலமான விசுவாசி பலவீனமான விசுவாசியை விட சிறந்தவர், கடவுளுக்கு மிகவும் பிரியமானவர்.” என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னு தைமிய்யா[ரஹ்]வின் ஒரு சொல் இருக்கின்றது… “கௌரவம் என்பது முழு வலிமையில் இல்லை, மாறாக ஒரு கொடுங்கோல ஆட்சியாளருக்கு முன் உண்மையைப் பேசுவதில் உள்ளது.”
மதத்தையும் உலக வாழ்க்கையையும் சமநிலைப்படுத்துதல், சந்தேகங்களிலிருந்து மனதைப் பாதுகாத்தல் மற்றும் குர்ஆனை வாழ்க்கை முறையாக மாற்றுதல் பற்றிய அவரது அவரது வார்த்தைகள் இளம் தலைமுறைகளுக்கு அவர் அளித்த காலத்தால் அழியாத அறிவுரையாக இருக்கிறது.
இப்படி, சத்தியத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாத பேரறிஞர் ஸக்லூல் நஜ்ஜார் அவர்களின் மறைவு கண்களை குளமாக்குகிறது, உள்ளத்தை கனமாக்குகிறது. ஆனால் நமது நாவு சொல்கிறது ‘நாங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவாம்.’
யா அல்லாஹ்! உனது அடியான் ஸக்லூல் நஜ்ஜார் மீது கருணை புரிவாயாக. அவரது பாவங்களை மன்னித்து, உயர்ந்த சுவனத்தை வழங்குவாயாக. அவருடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும், அவருடைய மாணவர்களுக்கும், அவரை நேசித்த அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பொறுமையையும் மனநிறைவையும் அருள்வாயாக.



































