வாய்மையின் வெற்றி
இராஜீவ் காந்தி படுகொலை – புலனாய்வு
ஆசிரியர் – T.R.கார்த்திகேயன் – ராதா வினோத் ராஜு
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. பி.ஜே.பி.யின் சுப்ரமணியன்சாமியும், காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமியும் இது குறித்து விரிவாக எழுதியிருக்கின்றனர். சுப்ரமணியன் சாமி தனது நூலில் ராஜீவ் காந்தியை திட்டமிட்டு மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்தது விடுதலைப்புலிகளே என்றும், அதே நேரத்தில் வேறு சில வெளிநாட்டு உளவு நிறுவனங்களுக்கும் இக் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்றும் எழுதியிருந்தார்.
திருச்சி வேலுச்சாமி ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது விடுதலைப்புலிகளே என்றும் இதன் பின்னணியில் சுப்ரமணியன்சாமியும், சந்திராசாமியும் இருந்ததாகவும் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தியும் இதற்கு உடந்தையாகயிருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இராஜீவ் காந்தி படுகொலையை விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் திரு.T.R.கார்த்திகேயனும் அவருடன் இணைந்து பணியாற்றிய இன்னொரு அதிகாரியான ராதாவினோத் ராஜுவும் எழுதியுள்ள “வாய்மையின் வெற்றி – இராஜீவ் காந்தி படுகொலை – புலனாய்வு” என்ற நூலில் இக் கொலையைத் திட்டமிட்டுச் செய்தவர்கள் விடுதலைப்புலிகளேயென்றும், அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லையென்றும் மிகத் தெளிவாக எழுதியுள்ளனர். இதோ இது குறித்து எழுதியிருப்பதைப் பார்ப்போம்.
“விடுதலைப் புலிகள் அன்னிய சக்திகளுடன் இணைந்து ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்திருக்க வாய்ப்பு உண்டா? பிரபாகரன், ராஜீவ் காந்தி படுகொலைச் சதித்திட்டத்தை வெகு ரகசியமாகவே செயல்படுத்த விரும்பினார். இந்திய மண்ணில் இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தாலும்கூட இந்தச் சதியில் மற்ற அமைப்புகளை அவர் பங்கேற்கச் செய்ய விரும்பவில்லை. தவிர கூலிப் படையினர் மூலம் தங்களது சதித் திட்டங்களை நிறைவேற்றுவது விடுதலைப் புலிகளின் மரபல்ல.
இராஜீவ் படுகொலைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உளவுப் படைப்பிரிவின் செயல்பாடுகள் அங்கு ஏற்கனவே இயங்கி வந்த அரசியல் பிரிவு உறுப்பினர்களுக்கே தெரியக் கூடாது என்று பிரபாகரன் நினைத்தார். விடுதலைப் புலிகள் நடத்திய படுகொலைகள் அனைத்துமே அதே இயக்க உறுப்பினர்களால் தலைவர் பிரபாகரன் ஆணைப்படி செய்யப்பட்டவையே. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பிரபாகரனின் கணக்குப்படி விடுதலைப் புலிகளின் நலனிற்காக ராஜீவ் காந்தி ஒழித்துக் கட்டப்படவேண்டும். அதை அவர்கள் திட்டமிட்டுச் செயல்படுத்தினார்கள். அதை நிறைவேற்ற அவர்களுக்கு இருக்கும் தமிழ் ஈழ தாகம் ஒன்றே போதுமானது. பணமோ, ஆயுதங்களோ அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல” (பக்கம் 249)
தொடக்கத்தில், ராஜீவ் படுகொலையில் தங்களுக்குத் தொடர்பில்லை என மறுத்த விடுதலைப்புலிகள், சில ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் தான் அவரைக் கொன்றதாக ஒப்புக் கொண்டனர். அண்மைக் காலமாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இராஜீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகளே என மிக வெளிப்படையாக மேடைகள் தோறும் பேசி வருகிறார். எனவே ராஜீவ் படுகொலையைத் திட்டமிட்டுச் செய்தது விடுதலைப் புலிகளே என்ற T.R.கார்த்திகேயனின் கூற்றில் உண்மையிருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூரில் 21.5.1991 அன்று இராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே மத்திய அரசு அப்போது ஹைதராபாத்தில் சிறப்பு காவல் பிரிவின் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த T.R.கார்த்திகேயன் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. இந்தக் குழுவில் T.R.காத்திகேயன் தவிர 4 துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்களும் எட்டு CBI கண்காணிப்பாளர்களும், 14 துணைக் கண்காணிப்பாளர்களும், 44 சப் இன்ஸ்பெக்டர்களும் இருந்தனர். இப்பொறுப்பை ஏற்றது குறித்து T.R.கார்த்திகேயன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார் (பக்கர் 315)
“ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமைப் பொறுப்பை நான் கேட்டுப் பெறவில்லை. மத்திய புலனாய்வு துறையிலும், மற்ற துறைகளிலும் அப்போது டில்லியிலிருந்து பல மூத்த அதிகாரிகள் இந்த விசாரணைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்கள். மறுத்தார்கள். அப்போது ஹைதராபாத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உயர் பொறுப்பு வகித்திருந்த நான் இந்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மிக மிகக் கேட்டுக் கொண்டதன் பேரிலும், அது தேசத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை என்பதோடு நான் மிகவும் வியந்த, விரும்பிய ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்கள் யார் என்று கண்டு பிடிக்க முடியாத ஒரு மர்மமாகவே இருக்கும் என்ற பலரின் கருத்துக்கு மாறாக, குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற மன உறுதியுடன் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். நான் எந்த விதமான அரசியல் குறுக்கீட்டிற்கும் இடம் கொடுக்க மாட்டேன். சந்தேகிக்கப்படுகின்ற நபர்களைத் துன்புறுத்தி விசாரிக்க மாட்டேன் என்ற என் நிபந்தனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்ட பின்னர்தான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.
மேலும் அவர் கூறுவதாவது “அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு தான் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டேன்” இடையில் அவ்வப்போது லேசாகத் தலையீடுகள் வந்த போது கண்டிப்புடன் ஒதுக்கித் தள்ளினேன் (பக்கம் 321)
T.R.கார்த்திகேயனின் இந்த நூலைப் படிக்கின்ற போது ஒரு விறுவிறுப்பான மர்ம நாவலைப் படித்த உணர்வு ஏற்படுகிறது. “மகாத்மா காந்தி, இந்திரா காந்தி படுகொலைகளில் கொலையாளி யார் என்பது தெரியும். அவற்றில் மேற்கொண்டு புலனாய்வு செய்து சதித்திட்டத்தைக் கண்டு பிடிக்க வேண்டியதிருந்தது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புலனாய்வுக் குழு தனது பணியைப் பூஜ்யத்திலிருந்து துவங்க வேண்டியதிருந்தது” என்று குறிப்பிடும் அவர், தனது தலைமையிலான புலனாய்வுக் குழுவினர் எப்படி பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி விடுதலைப் புலிகளே இப்படுகொலையைச் செய்தனர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்ததை பல்வேறு அத்தியாயங்களில் படிப்படியாக விவரித்துக் கொண்டே போகிறார்.
நூலின் முதல் அத்தியாயத்தில் ராஜீவ் காந்திக்கும் தனக்குமிருந்த அறிமுகத்தை விவரிக்கும் அவர், இன்னொரு அத்தியாயத்தில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றிருந்த போது அங்கு தான் சென்று அவர்களது செயல்பாடுகளைக் கண்ணுற்று வந்ததையும், பிறிதொரு அத்தியாயத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகின்றார். கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்த சிவராஜன், தனு, சுபா ஆகியோரை உயிருடன் பிடிக்கமுடியவில்லையே என்று ஆதங்கப்படுகிறார்.
19.9.94 அன்று சிறப்பு நீதி மன்றத்தில் தொடங்கிய இந்த விசாரணை 20.1.1998ல் முடிவுற்றதாகவும், 288 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகவும், தொடக்கத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சித்தீக், உயர் நீதி மன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்ற பிறகு, நீதிபதி N.நவநீதம் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரித்து தீர்ப்பை வழங்கியதாகவும் குறிப்பிடும் அவர் முதன்மைப் புலனாய்வு அதிகாரியான CBI உதவிக் காவல் கண்காணிப்பாளர் ரகோத்தமன் 67 நாட்கள் கூண்டில் நின்று சாட்சியம் அளித்ததாகவும் குறிப்பிடுகின்றார்.
தண்டனை வழங்கப்பட்டவர்களின் மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வார்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதி மன்ற அமர்வு “ராஜீப் காந்தி படுகொலை தடா சட்டத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவுகளின் படி ஒரு தீவிரவாதச் செயலோ அல்லது பாதிப்பூட்டும் செயலோ அல்ல என்று தீர்ப்பளித்தது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக T.R.கார்த்திகேயன் இந்நூலில் குறிப்பிடுகின்றார். தவிரவும் சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைகள் மேற்கொண்டிருந்த கால கட்டத்தில் பத்திரிகைகளில் வந்த பல செய்திகள் உண்மைக்குப் புறம்பானதாக இருந்ததாகவும், விசாரணை அதிகாரிகளை இவை குழப்பத்தில் ஆழ்த்தியதாகவும் தெரிவிக்கின்றார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது (வைகோ உட்பட) எந்த விதமான குற்றச் சாட்டையும் முன் வைக்காத அவர், திராவிடக் கழகத்தினர் விடுதலைப்புலிகளுக்கு பல்வேறு வகைகளிலும் உதவி செய்ததைக் குறிப்பிடத் தவறவில்லை.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதியரசர் எம்.என்.வெங்கடாசலய்யா.. ஒரு கொடூரமான படுகொலை, ஒரு பிரமிக்கத்தக்க புலனாய்வு மற்றும் வழக்கு பற்றி மிக மிக ரசித்துப் படிக்கத் தக்க வகையில் எழுதியுள்ள திரு.கார்த்திகேயன் நம்முடைய பாராட்டுதல்களுக்கு உரியவர். எழுத்துநடை தெளிவாகவும், அதே நேரத்தில் மனதில் பதியும்படியும் அமைந்துள்ளது” என்று குறிப்பிடுள்ளார். இந்த நூலை மிகவும் ஆழ்ந்து ரசித்துப் படித்த எனது கருத்தும் இதுதான்.
திரு.கார்த்திகேயனும், ராதா வினோத் ராஜீவும் எழுதியுள்ள இந்த ஆங்கில நூலை எஸ்.சந்திரமௌலி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்நூலை சென்னை ராஜராஜன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அதன் முகவரி….
ராஜ ராஜன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை,
தி.நகர், சென்னை – 600017.

































