பேராசிரியர் தாவூத் அல்-ஹிதாபி, முழுப் பெயர் தாவூத் அப்துல் மலிக் யஹ்யா அல்-ஹிதாபி (பிறப்பு: ஏப்ரல் 7, 1955) ஏமன் ஆராய்ச்சியாளர். மேலாண்மை அறிவியலில் சர்வதேச விரிவுரையாளர். கல்வித் துறையில் ஆய்வுப் பட்டம் பெற்றவர். பாடத்திட்ட உருவாக்கம், பயிற்றுவிப்பு முறைகளில் தேர்ந்த அனுபவம் கொண்டவர். ஏமனில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கழகத்தின் முன்னாள் தலைவர். International Association for Talent Development இன் நிறுவனர் மற்றும் தலைவர். தற்போது மலேசியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இயக்குநராகவும் இருக்கிறார் (Director of International Cooperation and scholarships & Islamic Agency for Quality Assurance and Accreditation – IIUM).
மேலப்பாளையம் டைம் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை சகோதரி ஜெசிமா அமுல்ராஜ் MSc.,MPhil (Biotech).,MSc (Psy), MA (Edu), மலேசியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக(IIUM – International Islamic University)த்தில் பாடத் திட்ட உருவாக்கத்தில் ஆய்வுப் படிப்பை (Ph.D) மேற்கொண்டு வருகிறார். அவர் பேராசிரியர் தாவூத் அல் ஹிதாபி அவர்களிடம் செய்த நேர்காணல். பின் வருமாறு…
- இஸ்லாமியப் பார்வையில் கல்வியின் படிநிலைகள் என்ன?
இஸ்லாமியக் கல்வி என்பது மக்கள் அதைக் கற்று பயிற்சி செய்வதன் மூலம் உலக வாழ்க்கையிலும் மரணத்திற்கு பின்னால் உள்ள வாழ்க்கையிலும் திருப்திகரமான வாழ்க்கை வாழ்வதற்கு காரணமாக அமைவதுதான்.
உலக வாழ்வில் ஒரு மனிதன் தனது வாழ்க்கையை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதையும், மனிதர்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ்வதற்கு அவசியமானவற்றையும் அவனுக்கு கற்றுத்தர வேண்டும்.
ஒருவனது நற்குணம் தான் செயல்களையும் பண்புகளையும் நிர்ணயிக்கிறது. அதேபோன்றுதான் ஒரு கல்வி முறை, அதைப் படிக்கும் மாணவர்களை ஆளுமையும் திறனும் உள்ளவர்களாக வடிவமைக்கிறது. எனவே ஒழுக்கமும் நேர்மைச் சிந்தனையுமுள்ள மனிதர்களை உருவாக்குவதற்கு இஸ்லாமியக் கல்வி முறை அவசியமாகிறது.
இஸ்லாமியக் கல்வியின் படிநிலை 1.ஒழுக்கத்தை பயிற்றுவிப்பது, 2. சமூகத்தை செழுமைப்படுத்தும் திறனையும், தகுதியையும் வளர்த்தெடுப்பது, 3. உலக வாழ்வின் தொடர்ச்சியாக மறுமையிலும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டுவது.
- மத்திய காலத்திற்குப் பிறகு முஸ்லிம்களிடம் சிந்தனை, அறிவு, கல்விப் பகுதிகளில் ஏற்பட்ட தேக்க நிலைக்கு காரணங்களாக நீங்கள் எதை குறிப்பிடுவீர்கள்?
கல்வித் துறையில் முஸ்லிம்கள் கவனம் குவிக்காமல் இருப்பது மிக முக்கியமான காரணம். இன்றும் கூட முஸ்லிம் நாடுகள் பலவற்றில் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டதாக இல்லை.
அதுமட்டுமல்ல கல்வியைப் பற்றி முஸ்லிம்களின் மனநிலையும் புரிதலும் பயனுள்ள கல்வியை பயில்வது, அதை செயல்முறைபடுத்தி வாழ்க்கைத் தரத்தில் மேம்படுத்துவது என்றில்லாமல் சான்றிதழ் பெறுவதில் மட்டுமே நோக்கமாக இருக்கிறது.
நமக்கிருக்கும் ஒரே வழி நமது கல்வி அமைப்பை – முறையை பயனுள்ளதாகவும், பயன் விளைவிப்பதாகவும் உருவாக்க வேண்டும். அந்தக் கல்வி முறை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் மனித இனத்துக்கே பயன் தரும் வகையில் இருக்க வேண்டும்.
கல்வியில் கவனமில்லாமல் இருக்கும் பில்லியன் கணக்கான முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் குழந்தைகளின் இளம்பருவக் கல்வி முதல், ஆய்வுக் கல்வி வரை கல்வி முறையை சீராக்கி அதன்படியே வளரும் தலைமுறையை வார்த்தெடுக்க வேண்டும்.
- கல்வித் துறையில் முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன?
முஸ்லிம்களின் கல்வி நிலை இன்று அழுகிய நிலையில், பின் தங்கியதாக இருக்கிறது. திறன் மிக்கதாக இல்லை. நமது கல்வி முறையை மேம்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நாம் குர்ஆனையும் நபிமொழிகளையும் வாசிக்கும் போதுதான் நமது பாடத்திட்டத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள முடியும்.
நமது குழந்தைகளை ஆளுமைமிக்க முஸ்லிம்களாகவும், உலகளாவிய சிந்தனை (universal person) கொண்டவர்களாகவும், மாற்றுச் சிந்தனை கொண்டவர்களோடு ஆக்கப்பூர்வமான முறையில் உறவாடும் தன்மைகொண்டவர்களாகவும் உருவாக்கும் வகையில் நமது பாடத்திட்டம் இருக்க வேண்டும்.
- இந்தியா போன்ற பல்வேறு நம்பிக்கையுடைய மக்கள் கலந்து வாழும் நாடுகளில் முஸ்லிம்களின் கல்வி குறித்த உங்களுடைய பார்வை?
இஸ்லாம் ஐந்து இலக்குகளை முழுமைப் படுத்த முயற்சி செய்கிறது. ஐந்து இலக்குகளும் முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர் அனைவருக்கும் பொருந்தக்கூடியது.
1. சிந்திக்கும் திறனை வளர்த்தெடுப்பது. தேவை அறிந்து ஒன்றை திறம்படச் செய்வது, புதிய ஒன்றை கண்டுபிடித்து அதன் மூலம் மனித சமூகத்துக்கு நன்மை செய்ய சிந்திக்க வழிவகை செய்வது.
2. மதச் சுதந்திரம்.
முஸ்லிம் – முஸ்லிம் அல்லாதவர் யாராக இருந்தாலும் அவரவர் மத நம்பிக்கையை சுதந்திரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உரிமை வழங்குவது.
3. அமைதியான – இணக்கமான குடும்பம்.
பாதுகாப்பான, அமைதியான குடும்ப அமைப்பு, சமாதானமான சமூகமாக பிரதிபலிக்கும். பாதுகாப்பான சமூக அமைப்பில் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும். எனவே மகிழ்ச்சியான குடும்ப அமைப்பை உருவாக்க நாம் சிந்தித்து அதை சாத்தியப்படுத்த வேண்டும். இது இஸ்லாத்தின் முக்கியமான இலக்குகளில் ஒன்று.
4. மனிதர்களின் கண்ணியத்தை பாதுப்பது
முஸ்லிமின் கண்ணியத்தை மட்டுமல்ல முஸ்லிம் அல்லாத ஒவ்வொரு மனிதனின் கண்ணியம், மனித உரிமை, அமைதி அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.
5. பொருளாதார மேம்பாடு
ஒரு நாடு பொருளாதார ரீதியாக மேம்படுவது நமக்கு அவசியம். அதன் மூலம் தனி மனிதர்கள் தன்னிறைவுடையவர்களாக வாழ முடியும். இந்த ஐந்து இலக்குகளைத்தான் “மகாஸிதுஷ் ஷரீஆ” என்று அழைக்கிறோம். இவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இஸ்லாம் வழிகாட்டுகுகிறது.
பல்சமய மக்கள் கலந்து வாழும் நாட்டின் முஸ்லிம்கள், அனைத்து மக்களோடும் சேர்ந்து இந்த ஐந்து இலக்குகளையும் நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இவைகள் இஸ்லாத்தின் இலக்குகள் மட்டுமல்ல அல்ல! முழு மனித சமூகத்தின் அமைதியான வாழ்க்கைக்கும் அடிப்படையாகும்.
- குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்வியாக எதை முன் வைப்பீர்கள்?
குழந்தைகளின் எட்டு வயதுக்குள், அவர்களது தனித்தன்மை, குணநலன்களில் 80 சதவீதத்தை முறைப்படுத்தி விடலாம். அதில் முக்கியமாக ஆன்மீகம், அறிவு, உடல் நலம், நன்னடத்தை, சமூகம், உளவியல், உணர்ச்சி, வாழ்க்கைத் திறன் (spiritual, intellectual, physical, moral, social, psychological, emotional, life skills development) ஆகியவைகள் குறித்து சீராக (very balanced satate) முழுமையான முறையில் பயிற்றுவித்து ஆளுமைத் திறனும் தகுதியும் உள்ளவர்களாக உருவாக்க வேண்டும். இப்படி உருவாகும் குழந்தைகள் சமூகத்திற்கு பயன் தருபவர்களாகவும், நல்ல குடிமக்களாகவும் உருவாகி வருவார்கள். இவர்கள் தான் ஆக்கப்பூர்வமான, நேர்மறை சிந்தனை கொண்ட முஸ்லிம்களாக இயங்க முடியும்.
- இளைஞர்கள் உருவாக்கத்தில் உங்களுடைய ஆலோசனை என்ன?
குழந்தைகள் இளைஞர்களாக வளர்ச்சியடையும் காலம் மேற்கண்ட ஆளுமைப் பண்புகளை, அந்த வயதுக்கு ஏற்ற வகையில் பயிற்றுவிக்க வேண்டும். இளைஞர்களுக்கு தொழில், பொருளாதார மேம்பாட்டுத்திறனையும் (professional skills) சேர்த்து பயிற்றுவித்து நாட்டையும், தான் வாழும் சமூகத்தையும் செழுமைப்படுத்தும் தகுதிகளை வளர்த்தெடுக்க வேண்டும்.
இது போன்ற ஆளுமைப் பண்புகளை பயிற்றுவிப்பதுதான் இளைஞர்கள் சீராக சிந்திக்கவும், மற்றவர்களை எதிர்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் உதவும்.
7. முஸ்லிம் சமூகம் சிறந்த சமூகமாகவும் பொருளாதார தன்னிறைவோடு மேம்படுவதற்கும் வழிகாட்டுதல் என்ன?
உளரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமூகத்தை மேம்படுத்துவதுதான் சமூக வாழ்க்கையின் அடிப்படை நோக்கம். ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் நன் மதிப்பீடுகள் போன்றவைகள் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். எந்த சமூகத்தில் மனிதர்களின் கண்ணியம் மதிக்கப்பட்டு எல்லோரும் நீதமாகவும், சமமாகவும் நடத்தப்படுகிறார்களோ, அதுதான் சிறந்த சமூக அமைப்பாக இருக்க முடியும்.
ஒருவர் மற்றவர்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் அதேநேரம், மற்றவர்களோடு கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த பண்புகள் குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய செயல்திட்டங்களில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமும் ஒன்றாகும். சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் தன்னிறைவானவர்களாக வாழ வழி ஏற்படுத்தித்தர வேண்டும்.
பசியின்போது அவர்களுக்கு அவன் உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான். (106 :04) என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் இரண்டு விஷயங்களை எப்போதும் குறிப்பிட்டுப் பேசுகிறது : 1, பசியை அகற்றுவது 2, பாதுகாப்பளிப்பது. சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனும் தார்மீக பொறுப்புகளோடு திடமானவனாக, பாதுகாப்போடு இருப்பதை இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அதற்கு உளரீதியான பயிற்றுவிப்புடன் கூடிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியம்.
8. சமூகத்தை வழி நடத்துபவர்களின் ஆளுமை உருவாக்கத்திற்கு முக்கியத் தேவை எது?
தளராத நம்பிக்கையும், வழி நடத்தும் ஆளுமைப் பண்பும் தலைவர்களுக்கான அடையாளம். உலகின் எந்தப் பகுதியில் வாழ்பவர்களாக இருந்தாலும், சமூகத்தை வழி நடத்துவதற்கான தலைமைத்துவ பண்பை உருவாக்குவதில் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. சமூகத்தை வழி நடத்தும் வளம் பொருந்திய, ஆற்றல் உள்ள தலைமை பண்புள்ளவர்களை கல்வியின் மூலம் தான் உருவாக்க முடியும்.
9. பாரம்பரிய மதரஸாக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?
பாரம்பரிய மதரஸாக்கள் நல்ல நிலையில் தான் இயங்குகின்றன. ஆனால் போதுமான வளங்களோடு இல்லை. மதரஸாக்கள் இஸ்லாமிய பாடங்களில் மட்டும் கவனம் குவித்து வருகின்றன.
“கல்வி, வாழ்க்கைக்கானது” என்று நாம் பார்க்கிறோம். ‘வாழ்க்கை என்பது உலக வாழ்க்கை மறுமை வாழ்க்கை ஆகிய இரண்டையும் உள்ளடக்கமாகக் கொண்டது.’
மார்க்க அறிஞர் மட்டுமல்ல, மருத்துவர், பொறியாளர், பொருளாதார வல்லுநர்களும் நமக்கு வேண்டும்.
நமது குழந்தைகளை ஆன்மீகம், அறிவு, உடல், நன்னடத்தை, சமூகம், உளவியல், உணர்ச்சி, பொருளாதாரம் மேம்பாடு, ஆளுமைத் திறன் மேம்பாடு ஆகிய வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் சீரான முறையில் அணுகுவதற்கு பயிற்றுவிக்க வேண்டும். வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் கையாளும் பயிற்சி அளிக்கப் போதுமானதாக மதரஸாக்களின் பாடத் திட்டங்கள் இல்லை.
அதோடு ஆசிரியர்களின் தகுதியும், திறனும் மேம்படுத்தப்பட வேண்டும். “ஆசிரியர்களை மேம்படுத்தாமல் பாடத்திட்டத்தை மேம்படுத்த முடியாது.” திறன் குறைந்த ஆசிரியர்களால் நடத்தப்படும் எந்தப் பாடத்திட்டமும் பயனுள்ள மனிதர்களை உருவாக்காது.
முதலில் பாடத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். இரண்டாவது இந்த பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களை மேம்படுத்த வேண்டும். அடுத்து, இந்த இரண்டையும் கவனமாக கையாளும் திறனுள்ள நிர்வாகிகளை உருவாக்க வேண்டும்.
இந்த மூன்றும் இன்றைய மதரஸாக்களின் முக்கியத் தேவையாக இருக்கிறது.
10. பாடத்திட்ட வடிவமைப்பு, பயிற்றுவிப்பு முறை அது சார்ந்த துறைகளில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறீர்கள். பள்ளிக் கல்வியோடு இஸ்லாமியப் பாடங்களையும் இணைத்து கற்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளேன். ஒருங்கிணைந்த பாடம் என்பதன் பொருள் மாணவர்களுக்கு மதச்சார்புள்ளது, மதச்சார்பற்றது என்று பாடங்களை இருவகைப்படுத்தாமல் “இஸ்லாமிய மதிப்பீடுகளை அறிவியல் உள்ளிட்ட மற்ற பள்ளிப் பாடங்களோடு ஒருங்கிணைத்து நடுத்துவதாகும்.”
வெற்றிகரமான பாடத்திட்டத்திற்கு 1. ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் அமைக்கப்பட்ட பாடங்கள் 2. அதை நடத்துவதற்கான கையேடு 3. அதில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இம்மூன்றும் முக்கியம்.
11. இளநிலையில் அறிவியல் (இயற்பியல், வேதியியல்) படித்த உங்களை, கல்வித் துறையில் முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்பில் நோக்கி நகர்த்தியது எது?
ஆரம்ப கால கட்டத்தில் எனக்கு கணிதமும், இயற்பியலும் விருப்பமான பாடங்களாக இருந்தன. கால ஓட்டத்தில் அறிவியல் சார்ந்த முறைகள் உட்பட இந்தக் கல்வி முறை சிறப்பாக இல்லை என்ற சிந்தனை எனக்குள் வேர் விடத் தொடங்கியது.
அதன் காரணமாக நான் கல்வித் துறை நோக்கி நகர்ந்தேன். நான் தகுதியான மாணவனாக இருந்ததால் எனக்கு கிடைத்த உதவித் தொகை மூலம் முதுநிலைக் கல்வியையும், ஆய்வுக் கல்வியையும் பிரிட்டன் சென்று படித்து முடித்தேன். அப்போது என்னுள் வேர் விட்ட ஒரு சிந்தனை காரணமாக பயன் தரும் ஒரு புதிய பாடத்திட் திட்டத்தை உருவாக்கும் ஆசை கிளை விடத் தொடங்கியது.
அதன் மூலம் எனது நாட்டில் தலை சிறந்த மாணவர்களை உருவாக்கி பயன்தர முடியும் என்று நம்பினேன். அதுபோலவே முதுநிலை மற்றும் ஆய்வு மாணவர்களை நான் உருவாக்கியிருக்கிறேன். பள்ளிக் கூடங்கள், பல்கலைக் கழகங்கள் மட்டுமல்ல மருத்துவமனைகளையும் உருவாக்கி எனது நாட்டிற்கு ஒரு கல்வியாளனாக நான் பங்களிப்பு செய்திருக்கிறேன்.
நான் ஒரு இயற்பியலாளராக இருந்தால் ஒரு பேராசிரியராக மட்டுமே இருந்திருப்பேன். நான் ஒரு கல்வியாளனாக என்னை உருவாக்கிக் கொண்டால் கல்வித் துறை சார்ந்த பகுதிகளில் பயனுள்ள தாக்கத்தை என் நாட்டிற்கு வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்து லில்லாஹ்…




































