

உலகெங்கிலும் அரசியல் ஆராய்சியாளர்கள் அரசியல் போக்குகளைக் கவனித்து அதன் திசைவழியை விளக்கி வருகிறார்கள். அவர்கள் கணிப்பின் படி, பாசிசம் புதிய வடிவங்களுடன் உலகின் பல பகுதிகளில் மேலேழும்பத் தொடங்கியுள்ளது. பாசிசம் என்பது ஹிட்லர் காலத்தில் தோன்றி இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்துவிட்டு உலகப் போர் முடிந்தவுடன் மறைந்துவிடவில்லை. அது ஆங்காங்கே நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது. இப்போது புதிய பாசிசமாக எழுச்சி பெறுகிறது.
நவீன பாசிசம் துப்பாக்கிமுனையில் இன ஒழிப்பைச் செய்வதில்லை. அது கீழ்கண்ட நான்கு திட்டங்களை, தான் ஆட்சி செய்யும் இடங்களில் செயல்படுத்த முயல்வதாக அரசியல் ஆய்வாளர் அலெக்ஸ் லீ என்பவர் கூறுகிறார். அவை :
1. குடியுரிமை சட்டங்களைத் திருத்துதல்.
2. சிவில் உரிமைகளை குறைத்தல்
3. இராணுவத்திற்குப் பதிலாக போலீசை பயன்படுத்தி அடக்கு முறையை ஏவுதல்.
4. இனப் பெருமையினை நாட்டின் எழுச்சி கீதமாகப் பறைசாற்றல்
இதையொட்டிதான் ஜெர்மனியில் 1990ல் குடியேறிகளின் இருப்பிடங்களில் தொடர் குண்டுவீச்சுகள் நாட்டின் இராணுவத்தால் வீசப்பட்டு அவர்கள் நாட்டை விட்டு அஞ்சி வெளியேறினர்.
மற்றொரு ஆய்வாளர் நவீன பாசிசம் பற்றி விளக்குகையில் அதன் அடிப்படை வெறுப்பு அரசியலைப் பரப்புவதே என்றும், தேசபக்தி எனும் பெயரில் இன வெறுப்பைப் பரவலாக்குவதே என்றும் கூறுகிறார். இந்தக் கணிப்பு இத்தாலி, பிரான்சு, சுவிஸர்லாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளின் அரசியல் சூழல்களைக் கொண்டு செய்யப்பட்டதாகும்
ஐரோப்பிய நிறவெறி சிந்தனையாளர்கள் ஆர்தர் டி கோபினேயு என்பவரும், ஹூஸ்டன் ஸ்டூவர்ட் சேம்பர்லீன் என்பவரும் இந்து மதத்தின் வர்ணாசிரமப் பிரிவினையைப் பாராட்டியும், மனுநீதி நூலை மேற்கத்திய நாடுகளும் அங்கீகரிப்பதின் மூலம் ஆரிய இன மேன்மையை மேலும் செழுமைப்படுத்த இயலும் என்கின்றனர்.
நவீன பாசிசத்தின் பன்முகங்கள்
நவீன பாசிசத்தின் மற்றுமொரு அம்சம் ஜனநாயகத்தை ஒழித்து எதேச்சதிகாரத்தை நிறுவவது ஆகும். அப்படி உருவாகும் வரை ஜனநாயக செயல்பாடுகளில் நம்பிக்கை உள்ளதாக நடித்து, படிப்படியாக முழு அதிகாரத்தையும் கைப்பற்றியவுடன், தாங்கள் வைத்ததே சட்டம் என்று ஆவது ஆகும். இதன் முக்கிய குணம் தங்கள் இனம் அல்லாதோரை “மாற்றானாக” சித்தரிப்பதே ஆகும். நவீன பாசிசத்தின் முதன்மை எதிரி கம்யூனிஸ்டுகள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நவீன பாசிசம், பல்வேறு தொழில் நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நாட்டை நவீனப்படுத்தி, பெரும் வளர்ச்சியை உருவாக்குவதாக தம்பட்டம் அடிக்கும் இதன் மைய நோக்கம் சிறுபன்மையினர் மீது வெறுப்பு உண்டாக்க வைப்பதே. நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் சிறுபான்மையினரே தடைகற்கள் என்று அது பரப்புரை செய்யும். அதற்கான பணியில் பலரை ஈடுபடுத்தும். வெறுப்பு அரசியலே நாட்டை முன்னேற்றும் என்ற நம்பிக்கையை வெகுஜனங்களிடம் உருவாக்கும், தங்களுக்கு முன் இருந்த ஜனநாயக சக்திகள் எல்லாம் மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டன என்று ஒலமிடும்.
அமெரிக்கா, இங்கிலாந்தில் அது நிறவெறியை வளர்ப்பதின் மூலமும், பிரான்ஸ் நாட்டில் அல்கேரிய மக்களுக்கு எதிரான உணர்வுகளை உருவாக்கியும், சுவிஸர்லாந்தில் வெளி நாட்டிலிருந்து வந்துள்ள தொழிலாளிகளுக்கு எதிராகவும், இந்தியாவில் மதத்தின் பெயராலும், இன்னும் பல நாடுகளில் அது பலவித யுக்திகளைப் பயன்படுத்தியும் நவீன பாசிசம் பலப்பட்டு வருகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.
இந்தச் செயல்பாட்டிற்காக உலக அளவிலே பல நிறுவனங்கள் ஆதரவாக செயல்பட்டுவருகின்றன என்பதும் உண்மை. ஒவ்வொரு நாட்டின் தன்மைகேற்ப எம்மாதிரி அடக்குமுறைத் திட்டங்கள் செயல்படுத்தப் படவேண்டும் என்பதை ஆய்வு செய்து வழிகாட்டும் அரசியல் ஆய்வு நிலையங்கள் செயல்படுகின்றன.
அவர்கள் முன்வைக்கும் முதல் திட்டம், உலகில் உள்ள முற்போக்கு சக்திகளை பலவீனப்படுத்துதல் ஆகும். அதைத் தொடர்ந்து பிரிவினையை அதிகரித்தல் என்பதே அதன் முக்கிய திட்டமாக இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பிரிவினை உணர்வை பலப்படுத்துவதின் மூலம் பெரும்பான்மையினர் தங்களுக்கான தலைமை என்று ஒரு கட்சியை விமர்சனமின்றி ஏற்கும் நிலை உருவாகும். பெரும்பான்மையினரின் விமர்சன அறிவு ஊடகத்தாலும், பொய் செய்திகளாலும் மழுங்கடிக்கப்படும். அவர்கள் படிபடிப்படியாக சிறுபான்மையினரை வெறுக்கத் தொடங்கி ‘மாற்றான்’ என்ற நிலையிலிருந்து ‘எதிரி’ என்ற நிலையில் அவர்களைப் பாவிக்கத் தொடங்கி விடுவார்கள். இக்கட்டத்தில் சமூக நீதி, ஜனநாயகம் என்றெல்லாம் குரல் எழுப்புபவர்கள் தேசவிரோதிகளாக்கப்படுவார்கள்.
இந்தியாவில் நவீன பாசிசம்
இதுதான் அப்படியே இந்தியாவில் நடைபெறத் தொடங்கியுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் இஸ்லாமியர்கள் பிரிக்கப்பட்டு, வெகுண்டெழுவார்கள், அதன் மூலம் அவர்களைத் தனிமைப்படுத்தி, நாட்டுக்கு எதிரானவர்கள் என்று அடையாளப் படுத்துவதுடன், இந்துக்களையும் தங்கள் பக்கம் இழுத்து வைக்கமுடியும் என்று ப.ஜ.க திட்டமிட்டது. அப்படித்தான் நடைபெற்றிருக்க வேண்டும்.
ஆனால் பல்வேறு முற்போக்கு சிந்தனைகளின் உரத்தினால் உருவான பல இந்துக்கள், கிறித்துவர்கள் என அனைவரும் இஸ்லாமியரின் பின் இன்று இணையத் தொடங்கி போராடத் தொடங்கிவிட்டனர். மத அடையாளங்களைத் தாண்டி மனித நேய உணர்வுகள் வெளிப்படத் தொடங்கிவிட்டன.
பெரும்பான்மையைப் பெற்றுள்ள நவீன பாசிச அரசான ப.ஜ.க. இப்போராளிகளைப் பற்றியும், போராட்டங்களைப் பற்றியும் கவலை கொள்ளாது. படிப்படியாக தன்னுடைய இன வெறியாட்டத்தை நிறைவேற்ற முயலும். அதன் முயற்சியாகத்தான் இஸ்லாமியருக்கு எதிரான அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இன வெறுப்பு என்பது இனஒழிப்பை நோக்கி தள்ளப்படும் ஆபத்தும் உள்ளது. இன அழித்தொழிப்பிற்கான பத்து படிநிலைகளை ஆய்வளர் கிரகேரி ஸ்டன்டோன் என்பவர் விளக்கியிருக்கின்றார். மக்களை வகைபடுத்துதல், பிரித்தல், அவமானப்படுத்துதல் மதத்தின் பெயரால் ஒடுக்குதல் போன்றவை அவற்றில் அடங்கும்.
அதன் ஒரு முக்கிய படிநிலையாகத்தான் இந்த குடியுரிமை சட்டமும், குடிமக்கள் கணக்கெடுப்பும் ஆகும். ஜெர்மனியில் 1933ல் இப்படித்தான் நாஜிக்கள் குடிமக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டனர். 60 இலட்சம் பேர் குடியுரிமை இழந்தனர். முகாம்களில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.. இந்தியாவிலும் முகாம்கள் கட்டப்படும் என்று. அவை இங்கும் கட்டப்பட்டு வருகின்றன.
ஜனநாயகப் பூர்வமான எதிர்ப்புகளுக்கு இடம் மறுக்கப்படும் நிலை, சுருக்கப்பட்ட ஜனநாயக வெளியில் என்ன செய்வது என்பதே மனித உரிமையாளர்களுக்கும், முற்போக்காளர்களுக்கும், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுபான்மையினருக்கும் முன் உள்ள சவால்.
அதை அவர்கள் ஒற்றுமையுடன் இணைந்து சட்ட மறுப்புப் போராட்டம் உட்பட பல வகை புதுமையான ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் எதிர் கொண்டே ஆகவேண்டும் என்பது வரலாறு அவர்கள் மீது சுமத்தியிருக்கும் கடமையாகும். ஆனால் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றவேண்டிய கடைமையும் ஆகும்.
இரா.முரளி- கட்டுரையாளர், பேராசிரியர்-சமூகச் செயற்பாட்டாளர்
…..
வல்லரசுக் கனவில் இந்தியா?
2020 இல் இந்தியா வல்லரசாக கனவு காணுங்கள் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறிச் சென்றார். 2020 ஆகிவிட்டது வல்லரசு வந்து விட்டதா. பாலியல் வன்புணர்வு இந்தியா எனும் பொருள்படும் Rape in India எனும் முழக்கம் தான் 2019 இல் இறுதியில் கேட்டது.
எது வல்லரசு? ஏன் வல்லரசாக வேண்டும்? என்று யாரும் எதிர் கேள்வி கேட்கவில்லை. வலிமையான அரசு தான் வல்லரசு என்றால் இந்தியா வல்லரசுதான். மக்களின் சனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் அரசுக்கு எதிரான குரல்வளையை நசுக்குவதற்குமான வலிமை அரசுக்கு உள்ளது.
சனநாயகப் படுகொலை செய்வதற்கும் நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைப்பதற்கும் நாட்டின் உயிர்நாடியான மதச்சார்பின்மையை குழிதோண்டிப் புதைப்பதற்குமான அனைத்து நடவடிக்கையும் எந்த விவாதமுமின்றி பெரும்பான்மை அரசு என்கிற அதிகார வெறியின் மூலம் நடைமுறைப்படுத்தும் பண்பு வல்லரசின் குணமாக உள்ளது.
அமெரிக்கா வல்லரசானதன் பலன்களை உலகம் அனுபவித்து வருகிறது. ஹிரோஷிமா, நாகசாகி என்கிற பகுதிகளை அழித்து புற்பூண்டு முளைக்காத அளவுக்கு மனிதப்படுகொலைகளை நடத்திய அமெரிக்கா, தான் வல்லரசு என உலகுக்கு உணர்த்தியது.
அமெரிக்காவின் வல்லரசுக் கனவு நனவாக இரையான நாடுகளின் எண்ணிக்கை பல.
வளர்த்த கடா சத்தாம், மார்பில் பாய்ந்த போது அந்த நாடும் அழிவுக்கு உள்ளானது. பேரழிவு ஆயுதங்கள் பதுக்கி வைத்திருக்கிறது என்கிற பொய்யை மூலதனமாக்கி ஈராக்கை நாசமாக்கியது.
செப்டம்பர் 11 இல் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதற்கு உசாமா பின் லாடன் தான் என்று காரணம் காட்டி யூப்ரடீஸ் டைகரீஸ் நதிக்கரை நாகரீங்களை அழித்தொழித்தது. அமெரிக்காவின் வல்லரசுப் பயணத்தில் ஆஃப்கானிஸ்தான் சிதைவுகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது.
வல்லரசுக்கு அடிப்படையான தேவை எதிரி. நண்பன் இல்லாமல் அமெரிக்காவால் வாழ முடியும். எதிரி இல்லாமல் வாழ முடியாது. ‘என்னுடன் இல்லை என்றால் என் எதிரி நீ’ என்பதுதான் அமெரிக்காவின் வல்லரசு விதி. அது புஷ் முதல் ட்ரம்ப் வரை தொடர்கிறது.
அமெரிக்காவுக்கு நிகராக ரஷ்யா இருந்த வரை இருபெரும் பேட்டை ரவுடிகளால் பனிப்போர் நீடித்தது. ரஷ்யா வீழ்ந்த பிறகு எதிரி இல்லாமல் தவித்த அமெரிக்கா ஆயுத வியாபாரத்துக்கு குந்தகம் வராமல் இருக்க தேடிக்கண்டு பிடித்தது தான் “இஸ்லாமோ ஃபோபியா”.
அமெரிக்காவின் வளர்ப்பு ரவுடி இஸ்ரேல் ஏற்கனவே வல்லரசு நோய்க்கிருமியின் விளைநிலமாக இருக்கிறது. சற்றுத் திரும்பிப் பார்த்தால் பிரிட்டன் வல்லரசானதற்கு உரமும் வளமுமாக இருந்தது காலனிய கால வேட்டைதான்.
இந்தியா உட்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் கொள்ளை அடித்துக் கடத்திச் சென்ற வளங்களால் வலிமை பெற்று வளர்ச்சி பெற்று வல்லரசான நாடுதான் பிரிட்டன் போன்ற காலனி ஆதிக்க நாடுகள்.
இப்போது நவ காலனிய காலம் இதற்கு படை எடுத்துச் சென்று மக்களை ஆட்சி செய்து வரி வசூல் செய்ய வேண்டிய தேவை இல்லை. கார்ப்பரேட்டும் வகுப்புவாதிகளும் ஒன்றிணைந்து தரகு முதலாளிகளை ஆட்சியாளர்களாக்கி ஒப்பந்தங்கள் மூலமாக நாட்டு வளங்களை நவீன முறையில் சுரண்டலாம்.
இனி பாய்மரக் கப்பலில் காலனியம் வராது. ‘உண்மைக்குப் பிறகான’ (Post truth) யுகத்தில் பொய்களை விதைத்து பொய்களை உற்பத்தி செய்து சனநாயக சமூகத்தில் வாழும் மக்களால் காலனியம் வரவேற்கப்படும்.
சனநாயக தூண்களெல்லாம் பாசிசத்துக்கு ஆதரவான கருத்தேற்பை உற்பத்தி (Manufacturing Consent- நன்றி,நோம் சாம்ஸ்கி) செய்து பாசிசத்துக்குப் பின்னால் அணிவகுக்கும். இந்த நடைமுறை ஒரு நாடு வல்லரசாவதற்கு வழிவகுக்கும்.
பெரும் பொய்கள் வரிசை வரிசையாக வலம் வருவது பொது நெறியாகும் போது நாட்டில் குடிமக்களுக்குப் பதிலாக தேசப்பற்றாளர்கள் தேசத்துரோகிகள் என்று மக்கள் இரு பிரிவினராக பிரிக்கப்படுவார்கள். சனாதன தர்மத்தின் முன்னால் வேறு எவரும் இல்லை. சனாதன பாதுகாவலர்கள் அல்லாதவர்கள் ‘அந்நியர்கள்’. அவர்களுக்காக அகதி முகாம்கள் ஆயத்தமாகின்றன.
உள்நாட்டு பொருளாதார உற்பத்தி (GDP) வளர்ச்சி 4.5 விழுக்காடாக குறைந்துள்ளது. 2012க்குப் பிறகான மிகக் குறைந்த வளர்ச்சிக் குறியீடு. இது நாட்டின் முக்கிய பிரச்சனையல்ல. வங்காளதேசத்திலிருந்து அகதிகளாக வருகின்ற பஞ்சப்பராரிகள் தான் பிரச்சனைக்குரியவர்கள். அவர்களுடைய மதம் தான் மிகப் பெரிய பிரச்சனை.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த வளர்ச்சிக் குறியீட்டில் பாதி குறைந்துள்ளது. அம்பானி அதானிகளின் வளர்ச்சியல்ல அன்றாடங்காய்ச்சிகளின் வளர்ச்சி.
GDP என்ற வளர்ச்சிக் குறியீட்டின் அளவுகோல்களை, உலகப் பொருளாதார நிபுணர்களின் விமர்சனத்துக்கு ஆளான மறுமதிப்பீட்டிற்குப் பிறகும் இந்த அவல நிலை.
தவறான மதிப்பீட்டு முறையியலை கையாண்ட பிறகும் நாட்டின் வளர்ச்சி அதள பாதாளத்துக்குச் செல்வது சீதாராமன்களுக்கு பிரச்சனையல்ல. அவர்களுக்கு பிரச்சனை ராமன் பிறந்த அதே இடத்தில் கோயில் தான். முதல் மோடி அரசின் பொருளாதார ஆலோகரான அரவிந்த் சுப்ரமணியன் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த கட்டுரையில் இந்தியாவின் வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கைகள் குறைந்தது 2.5 விழுக்காடு அதிகரித்து ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டது என்று கூறியதை அறிவாளிகள் உணர்வார்கள்.
சுப்ரமணியசாமி நிர்மன மனதோடு சீதாராமன்களை குறை சொல்வது தனக்கு பதவி கிடைக்காது போன காரணத்தால் என்று நாம் கூறக்கூடாது. எழுபது ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவு என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வெளிப்படையாகக் கூறியது உண்மையே வெல்லும் (சத்யமேவ ஜெயதே) என்பதை காட்டுகிறது.
IMF, உலகக் கல்வி, OECD, ADB, முடீஸ். S andP, RBI ஆகியவை ஏற்கனவே கூறிய எச்சரிக்கை தான் இன்று பூதாகரமாக வந்துள்ளது. ஆக்ஸ்ஃபாமின் ‘உலக சமத்துவமற்ற அறிக்கை’ 2017 இல் இந்தியாவில் உற்பத்தி செய்த சொத்தில் 73 விழுக்காடும் மக்கள் தொகையின் ஒரு விழுக்காட்டிற்கு மட்டுமே கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. இது பா.ஜ.க. அரசின் மீது கொள்கை எதிர்ப்பு கொண்ட இயக்கத்தின் அறிக்கையல்ல. வல்லரசாவதின் இலட்சணம்.
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உற்பத்தி செய்வோம். உருவாக்குவோம் என்று ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் 2017-18இல் மட்டும் 15-29 வயதுக்குட்பட்ட 11.56 கோடி இளைஞர்கள் தொழிலின்றி தெருவில் நிற்கிறார்கள். இவர்கள் இன்று இந்தியாவெங்கும் முழக்குகிற முழக்கங்கள்தான் உலகை திரும்பிப் பார்க்க வைக்கின்றன.
சென்ற பொருளாதார ஆண்டில் மட்டும் கார்ப்பரேட் வரிச் சலுகை 30லிருந்து 22 விழுக்காடாக குறைந்து அவர்களுக்கு உதவி செய்ததன் மூலம் பாவப்பட்ட அதானி அம்பானிகளுக்கு கிடைத்த இலாபம் 1.45 இலட்சம் கோடி.
இதனை வரவேற்று ஒரு கார்ப்பரேட் CEO தனது ட்விட்டரில் ‘இந்த தடவை தீபாவளி முன் கூட்டியே வந்து விட்டது’ என அகமகிழ்ந்து சீதா ராமன்களுக்கு வாழ்த்துக் கூறினார்.
அப்போது விதர்பாவில் விவசாயிகள் பட்டினியால் வீரமரணம் அடைந்து கொண்டிருந்தார்கள். தலித்துகள் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். பசு நேசர்களால் வீட்டுக் குளிர்சாதனப் பெட்டிகளில் பீஃப் இருக்கிறது என்ற சந்தேகத்தால் தேசத்துரோக அஃக்லாக்குகள் கொல்லப்பட்டார்கள். கோயில் கருவறைக் குள்ளே சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு தேசபக்தர்களால் ஆளானார்கள்.
இதுதான் வல்லரசு. நல்லரசு எது என்று யாரும் கேட்காதீர்கள்.





































