குரலற்றவர்களின் குரல் – இந்திய அரசியலமைப்பை புரிந்து கொள்வோம்

இந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட முகப்புரையுடன் தொடங்குகிறது:

இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாய நலம்நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து, அதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும்வண்ணம் அவர்கள் அனைவரிடமும் உடன்பிறப்புணர்வை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம். ஒன்று குவிக்கப்பட்ட அதிகாரம் சர்வாதிகாரத்தையே உருவாக்கும். சர்வாதிகாரம் உருவாகாமல் தடுக்கப்பட வேண்டுமென்றால் ஜனநாயக ஆட்சி அமைப்பில் அதிகாரங்களைப் பிரிப்பது அவசியம். இந்திய ஜனநாயக அமைப்பில் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றும் அரசாங்கத்தின் கிளை அமைப்புகளாகும். சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை – அனைத்தும் சக்திவாய்ந்தவை. அதேநேரத்தில் ஒவ்வொரு கிளைக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன, இந்த ஒவ்வொரு அதிகாரத்திற்கும் வரம்புகள் உள்ளன. இந்திய ஜனநாயக அமைப்பில் அரசும், ஆட்சியும், நிர்வாகமும் அரசியலமைப்பு (constitution) அடிப்படையில்தான் இயங்க வேண்டும். அரசியலமைப்பு உரிமைகளை விளக்குவதற்கும் அதை உறுதி செய்வதற்கும் நீதித்துறை பணிபுரிகிறது.

இந்திய நீதித்துறை, நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அனைத்தின் மீதும் அதன் கட்டுப்பாட்டை செலுத்தும் தன்மை உடையது. 

பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டது. அந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நீதித்துறை நினைத்தால் அந்த சட்டம் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டது என்று அறிவிக்க முடியும். உச்ச நீதிமன்றம் அரசியலமைப்புக்கு பாதுகாவலாகவும் மற்றும் மேல் முறையீடு செய்வதற்கு நாட்டின் உச்ச நீதிமன்றமாகவும் உள்ளது.

மற்ற இரண்டு கிளைகளும் (சட்டமன்றம், நிர்வாகம்) அதில் உள்ள விதிகளின்படி தங்கள் பணிகளைச் செய்கின்றன. இது அரசியலமைப்பு திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்

நாட்டில் உள்ள அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும், நிறைவேற்றப்பட வேண்டும். இதைச் செய்ய அரசு தவறும் போது, மாநில இயந்திரங்களை பொறுப்புக்கூற வைப்பது அரசியலமைப்பின் அடிப்படையில் நீதிமன்றங்களின் பொறுப்பாகும்.

 டெல்லி நீதி மன்றத்தின் அரசியலமைப்பு நடவடிக்கை.

உத்தரவு – 1

இந்திய தலை நகர் டெல்லியில் பிப்ரவரி 26, 2020 அன்று வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு, கொடூர தாக்குதல், பொருளாதார சூறையாடலை எதிர்கொண்டு கொலை செய்யப்பட்டார்கள் டெல்லி வாழ் இந்திய குடி மக்கள். அவர்களின் உரிமையை பெற்றுத் தரவும், பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை தில்லி உயர்நீதிமன்றம் உணர்த்தியதை நாம் அறிவோம்.

செவ்வாய்க்கிழமை 25, 2020 பா.ஜ.க.வின் டெல்லி தலைவர்களின் வெறுப்பு பேச்சின் காரணமாக ஆரம்பித்த வன்முறை வட டெல்லியின் பல பகுதிகளிலும் பரவியது. 

நிலைமையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (பிப்ரவரி 26 அதிகாலை 12:30 மணிக்கு) டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் மற்றும் நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அலோக்குமார், இணை போலீஸ் கமிஷனர், ராஜேஷ் தியோ, டி.சி.பி (குற்றம்), மற்றும் டெல்லி என்.சி.டி அரசாங்கத்தின் நிலையான ஆலோசகர் சஞ்சோய் கோஸ் மற்றும் டெல்லி காவல்துறை முன்னிலையில் சிறப்பு விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக மனிதாபிமான நடவடிக்கைகள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அந்த நேரத்தில், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகள் இல்லாததால் மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவமனைக்கு வெளியே செல்வதற்கும், அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனைகளுக்கு அனுப்பி உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீஸ் உதவி தேவைப்பட்டது. 

மனித உரிமைச் சட்டத்தில் மருத்துவ சேவைகளுக்கு சிறப்பு அனுமதி உண்டு. சர்வதேச சட்டத்தின் கீழ், ஆயுத மோதலின் போது கூட, காயமடைந்த பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்க மருத்துவ நிபுணர்களுக்கு எந்த குறுக்கீடும் இருக்கக்கூடாது.

இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவு இந்தியாவில் உள்ள அனைத்து நபர்களுக்கும் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்கிறது. இந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கடமைகளை நிறைவேற்றுவதற்காக நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவின் காரணமாக காயமடைந்தவர்கள் பாதுகாப்புடன், அவசர சிகிச்சை பெற்றார்கள், இல்லையென்றால் உயிரிழப்பு இன்னும் அதிகமாக ஆகியிருக்கும்.

26.02.2020 அதிகாலை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் காயமடைந்த பலரும் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டது. அதன்படி, நீதிமன்றம் “பாதிக்கப்பட மக்களுக்கு உதவிய டெல்லி காவல்துறைக்கு   பாராட்டுதலை தெரிவித்தது. அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் ஒரு சிக்கலான சூழ்நிலை எப்படி தீர்க்கப்படும் என்பதையே இது காட்டுகிறது.”

FIR – முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கான சட்டம்

உத்தரவு – 2

பிப்ரவரி 26 அன்று, சமூக செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் சார்பில் மனித உரிமை வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், வன்முறையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாதது குறித்து டெல்லி உயர் நீதி மன்றத்தில் ஒரு மனு அளித்தார்.

பிப்ரவரி 26 அன்று தலைமை நீதிபதி அமர்வு – முதல்பெஞ்ச் இல்லை. எனவே இந்த விவகாரம் அந்த நாள் அமர்வில் இருந்த நீதிபதி முரளிதர் ஜே. மற்றும் நீதிபதி தல்வந்த் சிங் ஆகியோரிடம் அந்த மனு விசாரணைக்கு வருகிறது.

FIR – முதல் தகவல் அறிக்கை என்பது என்ன?

FIR – முதல் தகவல் அறிக்கை என்பது ஒரு சம்பவம் பற்றிய உண்மையை கண்டுபிடிப்பது அல்ல. இது புலனாய்வுக்குரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது என்று காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களின் பதிவு.

இந்த முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) அடிப்படையில் காவல்துறையினர் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். பின்னர் அந்த குற்றச்சாட்டுகள் சார்ந்த  ஆதாரங்கள், பொருள்கள், தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். பின்பு எஃப்.ஐ.ஆரில் உள்ள குற்றச் சாட்டுகள், தகவல்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து போலீசார் குற்றப்பத்திரிக்கை (அறிக்கை) தாக்கல் செய்வார்கள்.

எனவே, எஃப்.ஐ.ஆர் என்பது காவல்துறையை இயக்க மற்றும் விசாரணையைத் தொடங்க முக்கியமான முதல் படியாகும்.

FIR – முதல் தகவல் அறிக்கையும் – உச்சநீதி மன்றமும்

பிரிவு 154 இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது கட்டாயமாகும். காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த லலிதா குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு எப்.ஐ.ஆர்., பதிவு குறித்து போலீசாருக்கு வழிகாட்டியுள்ளது.

அதில் “குற்றங்களின் தன்மையைப் பொறுத்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும்; புகார் கிடைத்தவுடனேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டுமென்றும், எப்.ஐ.ஆர். பதிவு செய்த 7 நாளில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும். கூடவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

டெல்லி நீதி மன்றத்தில் நடந்தது என்ன?

பா.ஜ.க. தலைவர்களின் வன்முறையைத் தூண்டும் வெறுப்பு பேச்சு வீடியோக்களை நீதிமன்றத்தில் ஓட விட்டு நீதிபதியே காட்சியப்படுத்திய பிறகும் எஃப்.ஐ.ஆர்க தாக்கல் செய்ய இது “உகந்த நேரம் அல்ல” என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா மல்லுக்கு நிற்கிறார். 

நீதிபதி முரளிதர், ‘எது பொருத்தமான நேரம் திரு.மேத்தா?, இந்த நகரம் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது?’ இந்த காணொளிகள் வெறுப்பை தூண்டுபவை என நீங்களே ஒப்புக்கொள்ளும் போது ஏன் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை? ஏன் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இத்தனை தயக்கம் காட்டுகிறீர்கள்? நாங்கள் அமைதி நிலவ விரும்புகிறோம். இந்த நகரம் போதுமான வன்முறையை கண்டுவிட்டது. 1984 வன்முறையை திரும்ப கொண்டு வர வேண்டாம்.’ 

இந்த காணொளிகளில் ‘ஒரே முழக்கம் (சுட்டுக் கொல்லுங்கள்) திரும்ப திரும்ப வருகிறது அது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. நீங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றால் அது மிகவும் தவறான ஒரு செய்தியை சொல்லும். 

‘பொது சொத்துக்கு சேதம் என்றவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நீங்கள், ஏன் இது போன்ற பேச்சுக்களுக்கு எதிராக பதிவு செய்யவில்லை?  இந்த பேச்சுக்களில் உள்ள குற்றத்தை கூட ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?’ என துஷார் மேத்தாவைப் பார்த்துக் கேட்டார் நீதிபதி முரளிதர்.

 அனைத்து வெறுப்பு பிரச்சார காணொளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதியாமல் காலம் தாழ்த்துவது மேலும் மோசமான விளைவுகளை உண்டாக்கும். சட்டத்தின் ஆட்சியே உயர்ந்தது, சட்டத்திற்கு மேலானவர்கள் இங்கே யாரும் இல்லை.’ என்று கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

இந்த உத்தரவு அரசு நிறுவனங்களையும், அவை சட்டத்திற்கு கட்டுப்பட்டவை என்பதையும் நினைவூட்டுவதற்கான நீதிமன்றத்தின் வேலையை தெளிவாக்குகிறது. ஒரு அரசும், அரசு நிர்வாகமும் முறை தவறும் போது நீதித் துறை செய்ய வேண்டிய அடிப்படை பணிதான் இது. இதை செய்ததற்கு நீதிபதிக்கு கிடைத்த பரிசு? 

நீதிமன்றங்கள் நீதி வழங்கத் தவறினால் ஒன்றுபட்ட போராட்டத்தின் வழியே தங்களுக்கான நீதியை மக்கள் நிலைநாட்டிக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது.

இந்தியாவை தங்கள் அதிகாரத்திக் கீழ் கொண்டு வர புறப்பட்ட அதிகார வெறி கொண்டவர்கள், அதற்காக கொள்கை, கோட்பாடுகளை உருவாக்கினார்கள். இந்திய அரசியல் அமைப்பை புரிந்து கொண்டு அதன் வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறி அரசியல் அமைப்பையே கேள்விக்குரியாக்கி இருக்கிறார்கள்.

இந்திய நாட்டை, அதன் குடிமக்களை நேசிக்கும் நாம் இந்த நாட்டின் அடிப்படையான அரசியலமைப்பை படித்தோமா? அதைப் படித்து பாதுகாக்கும் ஆளுமைகளை உருவாக்கினோமா? 

இந்திய அரசியல் அமைப்பை பாதுகாக்க என்ன செய்தோம்? இனிமேல் என்ன செய்ய முடியும்? சிந்திப்போம்….