“செயல்கள் எண்ணங்களை – சிந்தனைகளைப் பொறுத்தே அமையும் என்பது நபிமொழி.

நாம் செய்கின்ற எந்த காரியத்தின் பிரதிபலிப்பும் நமது எண்ணங்களின் அடிப்படையில்தான் அமைகின்றன.

தீய எண்ணம் கொண்டவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் என்ற உங்களது கேள்விக்கு, அதன் பலனை நிச்சயம் ஏதோ ஒரு வகையில் அவர்கள் அனுபவிப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

பிறரின் குறைகளை நீங்கள் வெளிப்படுத்தினால் உங்களது குறைகளை வெளிப்படுத்த மற்றொருவனை இறைவன் வைத்திருப்பான் என்ற இமாம் கஸ்ஸாலி ரஹ்… அவர்களின் வாக்கு எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்வோம் என்பதை தெளிவுபடுத்துகிறது.

சிந்தனைகள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை நடைமுறை வாழ்வில் இருந்து பார்க்கலாம்.

நடைமுறைச் செய்தி 1 : +2 முடித்த பின் ஒரு கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் சேருகின்ற முதல் நாள் கல்லூரி கலையரங்கில் கீழ்தளத்தில் முதலாமாண்டு மாணவர்களும் மேல் தளத்தில் அவர்களின் பெற்றோர்களும் அமர்ந்திருப்பார்கள்.

முதல்வர் உள்ளிட்ட மேன்மைக்குரியவர்கள் கல்லூரியின் ஒழுக்க மாண்புகள் மற்றும் விதிமுறைகளை ஆங்கிலத்தில் பேசியபின் All are you going to your respective department என்ற வார்த்தையோடு அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் அவரவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைசார்ந்த வகுப்பிற்குச் செல்வார்கள்.

ஒரு வழியாக தனது வகுப்பை தேடி கண்டுபிடித்த பின் புதுமணப்பெண் போல தலையை கீழே தொங்கப் போட்டு எந்த இடம் காலியாக இருக்கிறதோ அந்த இடத்தில் அமர்ந்திருப்பான்.

ஒரு வாரம் கழித்து தலையை மெதுவாக தூக்கி நம்முடன் படித்தவன் நமக்கு தெரிந்தவன் நமது ஏரியாக்காரன் என யாராவது தென்பட்டால் அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பான்.

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்… நன்றாக படிப்பவர்கள் முதல் பெஞ்சில்; சேட்டை செய்பவர்கள் கடைசி பெஞ்சில்; விருப்பம் இல்லாதவர்கள் வலது இடது புறங்களில் ஆங்காங்கே குழு குழுவாக சிலர் அமர்ந்திருப்பதை அனுபவித்திருப்பாய் என நம்புகிறேன்.

இரண்டு மூன்று மாதங்கள் கழிந்த பின் உருவான ‘மாணவர் கூட்டணி’ இறுதி ஆண்டை நிறைவு செய்கின்ற வரை அதே கூட்டணியுடன் தொடர்ந்து நிறைவுபெற்றிருக்கும்.

என்ன… உங்க வாழ்க்கைய ஆராய்ந்து பார்க்க போயிட்டீங்களா? என்ன இதெல்லாம் உண்மைதானே…?!

சரி விஷயத்திற்கு வருவோம். முதல் பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள் நன்றாக படிப்பவர்கள் என்று அவர்களுக்குள் திட்டமிட்டு உட்கார்ந்திருக்கிறார்களா? எதார்த்தமாக உட்கார்ந்திருக்கிறார்களா?  

டேய் நாம எல்லாம் சேட்டை செய்யனும் அதனால கடைசி பெஞ்சில் உட்காரலாம் என்று திட்டம் போட்டு அமர்கிறார்களா?  அல்லது எதார்த்தமாக நடக்கிறதா?

இது போன்ற எல்லா கேள்விகளையும் அலசிப் பார்த்தால் “அந்தந்த குரூப் மாணவர்கள்” திட்டம் போட்டு உட்காருவதில்லை; யதார்த்தமாக அது நடக்கிறது என்ற பதிலைத் தான் நீ சொல்வாய்.

மாணவர்களின் தகுதிகளுக்கு ஏற்ப குழு குழுவாக அப்படி அமர்வது எதார்த்தமாக நடக்கிறது என்றால் எப்படி? ஏன்?

நடைமுறை செய்தி 2 : சிறு வயதிலிருந்து பல நபர்களை பார்த்திருப்போம்; சிலரிடம் பழகியிருப்போம்; சிலரை நண்பர்களாக தேர்ந்தெடுத்து இருப்போம், உற்ற நண்பர்களாக சிலருடன் பழகி இருப்போம்.

சிலரைப் பார்த்து ஹாய் சொல்லி அகன்று செல்வோம்; சிலரிடம் சிரித்துவிட்டு செல்வோம். பேச வேண்டும் என்பதற்காகவே சிலரிடம் பேசுவோம். சிலரிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்போம். சிலரிடம் மனம் விட்டு பேசி இருப்போம்.

6-10 வகுப்பு வரை சில நண்பர்கள். 11, +2 வில் அவர்கள் அல்லாத வேறு சில நண்பர்கள். கல்லூரியில் நண்பர்களின் வட்டம் மாறுபடும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படுகின்ற நண்பர்கள் வேறு, மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால்… சிறுவயதில் இருந்து இப்போது வரை நாம் பழகிய சுமார் 30-35 நண்பர்களில், இன்று வரை தொடர்பில் இருப்பது என்னவோ மூன்று நான்கு நண்பர்கள் மட்டும்தான்.

தொடர்ந்து தொடர்பில் இருக்கும் அந்த நண்பருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பாருங்கள்.

உங்களது சொந்த ஊருக்கும் உங்கள் நண்பருடைய சொந்த ஊருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் காரணிகளாக வைத்திருக்கும் சில காரணங்களைத் தாண்டி உங்களது தொடர்பு எப்படி? ஏன்? நிலைத்திருக்கிறது?

மனிதப் படைப்பின் அடிப்படை

மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதனுக்கு 3 வகையான இயல்புகளை இறைவன் வகுத்துள்ளான்.

ஒன்று : மலக்கு(அமரர்க)ளின் குணம் – நன்மை செய்வது.

இரண்டு : ஷைத்தா(சாத்தா)னின் குணம் – தீமை செய்வது.

மூன்று : விலங்குகளின் குணம் – சாப்பிடுவது தூங்குவது உடலுறவு கொள்வது.

நன்மை, தீமை, சாப்பிடுவது போன்ற மூன்று குணங்களின் கலவையாக இறைவன் மனிதனைப் படைத்திருக்கிறான்.

சகிப்புத் தன்மை, பொறுமை, பிறருக்கு உதவுதல், புன்முறுவலோடு இருப்பது, விட்டுக்கொடுப்பது, நல்ல சிந்தனைகள் போன்ற நன்மையான குணங்கள். 

போட்டி, பொறாமை, அதீத கோபம், வெறுப்பு, வன்மம் தீய சிந்தனைகள் போன்ற தீய குணங்கள்.

பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நன்மை-  தீய குணங்களை உள்ளடக்கியே உருவாக்கப்படுகின்றன.

ஜீன்கள் வழி, நண்பர்கள் வட்டம், சூழல் அமைப்பு போன்ற பல்வேறு காரணிகளால் ஒரு மனிதனுக்கு இயற்கையாக அமையப் பெற்றிருக்கும் நற்குணங்களோ அல்லது தீய குணங்களோ வலுப்பெற்று வருகிறது.

உணவு முறைகளின் மூலம் உடல் அமைப்பு வலுப்பெறுவது போல நல்ல, தீய குணங்கள், சிந்தனைகள் மூலம் நாம் யார்? நமது குணம் என்ன? என்பது வலுப்பெறுகின்றது.

எங்கோ வாழுகின்ற ஒரு மனிதனின் உதவி செய்தல் என்ற நல்லெண்ணம் அவரது எண்ண அலைகளாக வெளிப்படுகின்ற போது இங்கு வாழுகின்ற மற்றொரு மனிதனின் உதவி செய்தல் என்ற அவரது எண்ண அலைகளை வெளிவருகின்ற போது…

“இரு நபர்களின் உதவி செய்தல்” என்ற எண்ண அலைகள் ஒன்றோடொன்று சந்திக்கின்றன.

இதுபோன்று மனிதனின் பெரும்பாலான நல்ல சிந்தனைகளோ அல்லது தீய சிந்தனைகளோ எண்ண அலைகளாக ஒன்றிணைவது… உடலால் தொடர்பு ஏற்படுத்துவதற்கான காரணமாக அமைகிறது.

இப்போது உங்கள் தொடர்பில் இருக்கின்ற நண்பர்கள் உறவினர்கள் அக்கம் பக்கத்து வீட்டினர் பள்ளி கல்லூரிகளில் குழுவாக உட்காருவது எனது சிறுவயதில் இருந்து தற்போது வரை உள்ள தொடர்புகளை கொஞ்சம் கொஞ்சமாக நினைத்துப் பாருங்கள்.

உங்களது குணங்களையும் உங்களுடைய தொடர்பில் இருக்கின்றவர்களின் குணங்களையும் ஒப்பிட்டு பாருங்கள். உங்கள் இருவரின் பெரும்பாலான குணங்களின் அடிப்படையில் தான் உங்களது தொடர்பும் உறவும் அமையப்பெற்றிருக்கும் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

அந்தந்த குணங்களின் தூய்மை, உண்மை, பரிசுத்தம் போன்ற ஆத்ம குணங்களின் அடிப்படையில் உங்கள் உறவுகளின் இருப்புத் தன்மையும், நிலைத்த தன்மையும் அதிகரிக்கும் என்பதை புரிந்து கொள்வீர்கள்.