

இது ஒரு நெருக்கடியான காலகட்டம். உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிலும் சொந்த நாட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இன, மத, மொழி, நிற ரீதியாக குறிப்பிட்ட ஒரு சமூகத்தை ஒதுக்கி அவர்கள் மீது வெறுப்பை காழ்ப்புணர்வை அள்ளி வீசி சொந்த நிலத்திருந்தே விரட்டியடிக்கும் மனிதத் தன்மையற்ற போக்கு உலகின் பொதுப் போக்காக மாறி வருவது மனித இனத்திற்கே அவமானம்.
பல்வேறு மொழிகள், முரண்பட்ட வாழ்க்கை முறைகள், பலநூறு இனங்கள், வேறு வேறு சடங்கு சம்பிரதாயங்களை அடையாளங்களாகக் கொண்டு வாழ்ந்தாலும் “மனிதர்களாக கூடி வாழும் சூழல்” உலக வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் சாத்தியமானது.
உலகம் ஒரு கிராமம் என்கிறது அறிவியல் வளர்ச்சி. இல்லை இல்லை நீ என் இனத்தவன் அல்ல! என் மதத்தவன் அல்ல! என் மொழியவனல்ல! என் நிறத்தவனல்ல! என்பது அரசியல் வளர்ச்சி.
மனித இனம் அறிவியலை விசாலப்படுத்திய அளவுக்கு. வாழ்வியல் சூழலை சகித்து வாழும் மனநிலையை மற்றவர்களையும் மனிதனாக ஏற்றுக் கொண்டு வாழும் பக்குவத்தை இன்னும் அடையவில்லை என்பதையே உலகத்தின் இந்தப் போக்கு காட்டுகிறது.
வாழ்க்கையையும் அறிவையும் பொருத்திப் பார்த்து வாழும் கல்வி இந்த பூமியின் எந்த நிலப்பரப்பிலும் போதிக்கப்படவில்லை என்பதே இந்த வெறுப்பு மனநிலைக்கு அடிப்படைக் காரணம்.
பொருளாதாரத்தை, இயந்திரத்தை பாதுகாப்பாக பயன்படுத்தவும், பழுதாகாமல் பாதுகாக்கவும் கற்றுத் தரும் கல்வி நிலையங்கள் சக மனிதனின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் கலையை கற்றுத் தருவதில்லை.
சக மனிதர்களை உயிருடனோ, பிணமாகவோ “கொல்லும் செயல்பாடுகளை” தனக்கு கீழ் இருக்கும் மனிதர்களுக்கு அரசும், கல்விக் கட்டமைப்புகளுமே ஊக்கப்படுத்துவது உலகம் சந்திக்கும் மிகப் பெரும் நெருக்கடி. அதிலும் இந்திய முஸ்லிம்களுக்கு மிக இக்கட்டான ஒரு காலகட்டம் இது.
“இஸ்லாமோ ஃபோபியா” எனும் முஸ்லிம் வெறுப்பு பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு உலகில். முஸ்லிம் வெறுப்பையே மூலதனமாக்கி வளர்ந்த ஒரு கட்சியின் ஆட்சியில் இந்திய முஸ்லிம்கள் உள்ளனர்.
இந்திய முஸ்லிம்களும் தங்கள் குடியுரிமையை, இந்திய அடையாளத்தை இழக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதுபோன்ற சூழலில் எப்படியான நெருக்கடிகளைச் சந்திக்க நேரும் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலை இஸ்லாம் வழங்கியிருக்கிறது.
உலக வாழ்வில் எதிர்கொள்ளும் வெற்றிகளோ தோல்விகளோ போலியானவை, நிரந்தரமற்றவை. அவற்றுக்காக முஸ்லிம்கள் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதுமில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் “முஸ்லிம்களை மட்டும் பட்டியலிலிருந்து நீக்கி குடியுரிமை அற்றவர்களாக ஆக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம்” என இன்று இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் மக்கள் ஆர்த்தெழுந்து முஸ்லிம்களோடு தோள்கொடுத்து நிற்கிறார்கள்.
இந்த மக்கள் எழுச்சி அவ்வளவு எளிதாக இந்திய மண்ணில் ஒரு வெறுப்பை மதத்தின் பெயரால் நிலைநாட்டிவிட முடியாது என்பதைத்தான் காட்டுகிறது.
மனிதாபிமான அடிப்படையிலான உறவுகளை உறுதிப்படுத்தி ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கும் நிதானமும் மனவலிமையும்கொண்ட இந்தியர்களின் முகம் உலகப் பார்வையை அடைந்திருக்கிறது. இந்த மக்களை நாம் தக்கவைத்து பலப்படுத்தி இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வேண்டும்.
அதிகார வெறியும் அடக்குமுறை ஒடுக்குதலின் மீது மோகமும் கொண்ட அரசுகளுக்கு எதிராக எதிர் நடவடிக்கைகளும், வன்முறை தாக்குதல்களும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும் ஒரு காலும் பிரச்சனையை தீர்க்காது.
மக்கள் எழுச்சி ஒன்றே இது போன்ற அடக்குமுறை சட்டங்களிலிருந்து முஸ்லிம்களை மட்டுமல்ல முழு மனித சமூகத்தையும் காப்பாற்றும்.
எந்த வேறுபாடுமில்லாமல் மானுடம் காக்க எல்லா மனிதர்களோடும் கரம் கோர்ப்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கும் வழிகாட்டி இருக்கிறார்கள். இஸ்லாத்தை அங்கீகரிக்காத மக்களோடு நபிகளார் செய்து கொண்ட ஹுதைபியா, நஜ்ரான் உடன்படிக்கைகள் அதற்கு வரலாற்றுச் சான்று.
அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். நமது பாவங்களிலிருந்து விலகிக் கொள்வோம். நமது பக்கத்தில் உள்ள தவறுகளை ஆராய்ந்து அதை சரி செய்வோம்.அத்துடன் நிறுத்திக் கொள்ளக்கூடாது.
இந்த நாட்டில் நமது இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் உடைந்து கொண்டு போகும், நமக்கும் பிற சமூகங்களுக்குமிடையிலான உறவை உறுதியாக கட்டியெழுப்பவும் வேண்டும். அவர்களோடு சமாதான சக வாழ்வை மேற்கொள்ளவும், அவர்களது மனங்களை வெல்லவும் வேண்டும்.
நன்றி செலுத்துவோம் பொறுமையோடு இருப்போம் இரண்டும் ஒரு இறைநம்பிக்கையாளனின் அடையாளம்.


































