“ஒற்றுமை” என்ற இதழில் பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய “நான் புரிந்து கொண்ட நபிகள்” என்ற கட்டுரைத் தொடரே அதே தலைப்பில் நூலுருவம் கொண்டு வெளிவந்துள்ளது.
இது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்ற நூல் அல்ல. எனினும் நபிகளார் பற்றியும், இஸ்லாம் குறித்தும் நிலவிவருகின்ற சில தவறான புரிதல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் 28 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
முதல் அத்தியாயத்தின் இறுதியில் “எனினும் இந்நூல் அண்ணலாரின் வரலாறு அல்ல. இஸ்லாத்திற்கும் நபிகளுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களின் மெய்மைகளையும், பொய்மைகளையும், நபிகளின் வாழ்க்கை, இஸ்லாமிய வரலாறு ஆகியவற்றுடன் மதிப்பிடுகின்ற ஒரு எளிய முயற்சியே இத் தொடர்” என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
இஸ்லாம் குறித்தும், நபிகளார் குறித்தும் பிற சகோதர சமயங்களைச் சார்ந்த பல அன்பர்கள் நூல்களை எழுதியுள்ளனர். அந்த வரிசையில் வெளிவந்துள்ள இந்நூல் சற்று வித்தியாசமானது என்றே கருதுகிறேன்.
நபிகள் நாயகத்தைப் பற்றி தமிழில் நவீன சிந்தனையாளர் ஒருவர் எழுதிய மிகச் சிறந்த நூலாக இதனைக் கருதலாம். “எனது எழுத்துக்களிலேயே நெகிழ்ச்சி மிகுந்த பாராட்டுதல்களை மிக அதிகமாகக் குவித்தது இந்த “நான் புரிந்து கொண்ட நபிகள்” என்ற நூலுக்குத்தான். அந்தப்
பாராட்டுகள் என்னையும் பெரிய அளவில் நெகிழ்ச்சியடைய வைத்தன.
மனம் நெகிழ்வதை விட மிகப் பெரிய பேறு வேறு என்னவாக இருக்கமுடியும்? என்று நூலாசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
நாட்டுப் பிரிவினைக்குப் பின், இந்திய முஸ்லிம்கள் தங்களது எதிர்காலம் இனி என்னஆகுமோ? எனக் கையறு நிலையில் கை பிசைந்து நின்ற சூழ்நிலைகளை
விவரிப்பதிலிருந்து இந்நூல் தொடங்குகிறது.
இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மையற்ற மார்க்கம் என்ற மேலைநாட்டு வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுக்களை தக்க ஆதாரங்களுடன் இந்நூலில் மறுப்புத் தெரிவித்துள்ள ஆசிரியர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.
“ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் பலதரப்பட்ட மதங்கள் நடைமுறையிலிருந்தது. அரபு நாட்டில் தோற்றம் கொண்ட இஸ்லாம் மற்ற மதங்களை அழித்தொழிக்க நினைத்ததில்லை. சொல்லப்போனால், யூதத்தையும், கிறிஸ்துவத்தையும் அது தனக்குச் சாதகமான மதங்களாக ஏற்றுக்கொண்டது.
மற்றவர்களின் இறை தூதர்களையும், அவர்களின் இறை வெளிப்பாடுகளையும் ஏற்றுக் கொள்கிற ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே.
ஸ்பெயினிலும் கூட தமது மதத்தைக் கடைப்பிடிக்கவும், பிரச்சாரம் செய்யவும் கிறிஸ்துவர்களுக்குப் பூரண சுதந்திரம் இருந்தது. இப்படி மற்ற மதங்களையும் அதன் இறை
தூதர்களையும் வேறெந்த மதமும் ஏற்றுக் கொண்டதில்லை என்பது சிந்திக்கத்தக்கது. சமயப் பொறை என்பது இஸ்லாத்தின் இயல்பான, பிரிக்க இயலாத கூறாக உள்ளது”.
மற்ற தீர்க்கதரிசிகளிடமிருந்து நபிகளார் எங்ஙனம் வேறுபடுகின்றார் என்பதை தொடக்கத்திலேயே நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார்.
“இயேசுவும், புத்தரும் நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டக் கூடிய ஒரு அரசைத் தாமே உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் கிஞ்சிற்றும் இல்லாதவர்களாக இருந்தனர். எனவே நிலவும் அரசமைப்புகளுடன் அவர்கள் நிறுவிய மதமும் அவர்களும் சமாதானமாகிப் போனார்கள்.
சமரசம் செய்து கொண்டார்கள். ஆனால் இஸ்லாமோ அரசுகளற்ற ஒரு இனக்குழுச் சமூகங்களின் மத்தியில் ஒரு சிறிய பிரிவாக உருவாகி ஒரு இயக்கமாகப் பரிணமித்தது, ஏக இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற கருத்தியலைப் பிரச்சாரம் செய்து, எண்ணற்ற தியாகங்களை மேற்கொண்டு, ஒரு கட்டத்தில் புலம் பெயர்ந்து, கொண்ட
கொள்கைகளுக்காகப் போராடி அவற்றை நிறுவுவதற்கான ஒரு அரசியல் கட்டுமானத்தை (அரசை) உருவாக்கியது” என்று குறிப்பிடுகின்றார்.
மார்க்ஸியத்திலும், பெரியாரிசத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கும் நூலாசிரியர் மார்க்ஸ், இஸ்லாம் மற்றும் நபிகளார் குறித்து பெரியார் ஈ.வெ.ரா தெரிவித்துள்ள கருத்துக்களை நூலின் ஒன்பதாவது அத்தியாயத்தில் விவரிக்கின்றார்.
பத்ரு, உஹது, அகழ்ப் போர்கள் குறித்து விரிவாக எழுதியுள்ள அவர், இப் போர்களில் நபிகளார் மேற்கொண்ட யுக்திகளையும் விவரித்துள்ளார். நபிகளார் நடத்திய போர்கள் தற்காப்புக்காகவும் அநீதிக்கு எதிராக நடத்தப்பட்ட போர்களே என்பதை நிறுவும் ஆசிரியர் நபிகளாரின் “வாள் உயர்ந்தது அதனால் வையக மக்களின் வாழ்வும் உயர்ந்தது்” என்று பெருமிதத்துடன் குறி்ப்பிடுகின்றார்.
நபிகளாரின் பலதாரம் மணம் குறித்து சில மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்களின் அவதூறுப் பிரச்சாரங்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வண்ணம் இந்நூலின் 11வது மற்றும் 12வது அத்தியாயங்கள் அமைந்துள்ளன. மக்கா வெற்றிக்குப் பின் நபிகளார் எதிரிகளை நடத்திய
முறை, இஸ்லாமிய ஆட்சி உருவான வரலாறு, நபிகளாரின் இறுதி நாட்கள் என இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய சம்பவங்களையும் நூலாசிரியர் தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.
“ஒரு குறிப்பான காலத்தில் வாழ்ந்து அன்றைய அநீதிகளையும், ஒடுக்கு முறைகளையும் எதிர்த்துப் பேராடியவர் அந்த எளிய மனிதர். ஒரு சாதாரண ஒட்டக மேய்ப்பராக வாழ்வைத் தொடங்கி உலகை மாற்றியவர். அவர் வழி இறங்கிய திருக்குர்ஆன் இன்றைக்கும்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதியை எதிர்த்துப் போராடும் உத்வேகத்தை அளிக்கும் செய்திகளைத் தாங்கி இதோ நம்முன் விரிந்து கிடக்கிறது. அநீதிகள் எதன் பெயரிலானாலும் அதை எதிர்ப்பதே ஒரு முஸ்லிமின் கடமை” என்று முஸ்லிம்களின் கடமைகளையும் இந்நூலின்
இறுதி அத்தியாயத்தில் சுட்டிக் காட்டுகின்றார்.
நூலில் அவர் கையாண்டுள்ள அரபுச் சொற்களுக்கான பொருளையும். விளக்கத்தையும் “அருஞ்சொற்கள்” என்ற தலைப்பில் தொகுத்து வழங்கியுள்ளார். பிற சமய அன்பர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது திண்ணம்.
நூலாசிரியர் அ.மார்க்ஸ் ஒரு மனித உரிமைப் போராளி. அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் ஆதரவாகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்.
எங்கெல்லாம் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் உடனடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று வாதாடி வருகிறார்.
குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இஸ்லாமியருக்கு எதிரான
கட்டுக்கதைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 37 ஆண்டுகள் அரசுக் கல்லூரிகளில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.





































