தேவர் சமூகத்திற்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமல்ல! தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு சமூகத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு உறவு இருக்கிறது. இந்த உறவை இன்னும் இருக்கமாக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு சமூகத்துடனும் உரையாடல் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறேன். “முக்குலத்தோர் சமூகத்திற்கு முஸ்லிம்களே இரத்த உறவுகள்” தலையங்கம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய செய்தியாகும். அந்த உறவு மேம்படுத்தப்படுவது காலத்தின் தேவை. இந்த சமூகநீதி முரசு இதழிலேயே “தமிழகத்தில் முஸ்லிம்கள்” புத்தகத்தையும் சேர்த்து அறிமுகப்படுதியது பொருத்தமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.
நாகூர் கனி, பட்டுக்கோட்டை
இணைய உலகின் பேராபத்துக்கள் கட்டுரை இன்றைய நிலையில் முக்கியமானது. இந்த கொரோனா காலத்தில் பெற்றோர்களுக்கும் பிளைகளுக்கும் உறவுச் சிக்கலின் மையமாக ஸ்மார்ட் போன் இருப்பதாகவே நான் உணர்கிறேன். இணைய வழி பள்ளிகள் தொடங்கி இணைய விளையாட்டுக்கள் வரை எதையும் கட்டுப்படுத்த இயலாத கையறு நிலையில்தான் ஒரு தகப்பனாக நான் உணருகிறேன்.
மேலும் வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் போனுக்குள் மூழ்கிப் போய் இருக்கிறார்கள். உளவியல் நிபுணர் சிவபாலன் அவர்களின் “போன் பழக்கத்துக்கும் போதை பழக்கத்துக்கும் வித்தியாசமில்லை” என்ற உண்மையானது. விடமுடியவில்லை என்ற காரணத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லாமல் இன்று இணைய விளையாட்டுக்களில் தன்னை பலிகொடுத்துக்கொண்டிருக்கின்ற பல மனிதர்களை நானறிவேன். சொல்வதற்கு ஒன்றுமட்டுமே உண்டு. நம்மை நாம் கவனித்து வரைமுறைப்படுத்தி நம்மை நாமே தற்காத்துக் கொள்வது ஒன்றுதான் இணையத்தில் நம்மை பாதுகாத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி.
அமானுல்லாஹ், வேலூர்
கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களைப் பற்றியும், அவரது நேர்காணலையும் படித்து வியந்து போனேன். அவரது போராட்டமும், சிந்தனையும், கருத்துக்களும் என்னை வியக்க வைக்கிறது. என்னுடைய நண்பர்கள் பலரையும் இந்த நேர்காணலை படிக்கச் செய்து பரவசமடைந்தேன். சமூகப் புணரமைப்பு, அரசியல் நடவடிக்கை, கல்வி மேம்பாடு, சமூக சமய நல்லிணக்கம் என சமூகம் சார்ந்த அனைத்துப் பகுதிகளிலும் அவர் முன் வைக்கும் கருத்துக்கள் நிதர்சனமானது. நடைமுறைப்படுத்தத் தகுதியானது. முஸ்லிம் சமூகம் நடைமுறைப்படுத்துமா என்பதுதான் கேள்விக் குறி? ஒரு பழுத்த சமூக ஆளுமையின் கருத்துக்களை உள்வாங்கி சாத்தியமுள்ளவைகளை நடைமுறைப்படுத்துவது சமூகத்திற்கு நல்லது.
அப்துல் அஜீஸ், மதுரை

































