கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களின் நேர்காணல், நடைமுறையில் நாம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களின் ஆழத்தையும், வேரையும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. பல கேள்விகளின் மூலம் ஒரே கேள்விதான். அது, கல்வி ஏன் எல்லோருக்கும் கிடைக்கும் எளிய நிலையில் இல்லை? என்பதுதான். அதன் பின்னுள்ள வரலாற்றுக் காரணங்களும் தெரிந்தது. இந்த பின்னடைவிலிருந்து வெளிவர “மக்களிடம் அவர்களின் மொழியில் பேச வேண்டும்” என்ற அய்யா பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களின் வழிகாட்டுதலும், முக்கியமானது. இதை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
அப்துல் கரீம், புதுக்கோட்டை
முஸ்லிம் சமூகம் உலக அளவிலும், இந்தியாவிலும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. சென்ற மாதம் சமூகநீதி முரசு மாத இதழின் தலையங்கம் “உலக மக்கள் எதிர்கொண்டுள்ள பல நோய்களுக்கும் மருத்துவத்துறை மூலம் தீர்வு சொல்வது முஸ்லிம் சமூகத்தின் மீதுள்ள கடமை.” அது முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றுப் பாத்திரம் கூட! என்பதை சுட்டிக் காட்டி இந்த சவாலை முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தியது. மிகச் சிறப்பான வழிகாட்டுதல்.
முஹம்மது யூசுஃப், திண்டுக்கல்
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களின் நேர்காணல் மிகச் சிறந்த ஆவணமாக பாதுகாக்கப்பட வேண்டியது. புதிய கல்விக் கொள்கை, நீட் நுழைவுத் தேர்வு, மாணவர்களின் எதிர்காலம் என பல செய்திகளையும் உள்ளடக்கி இருந்தது. இது போன்ற செய்திகளை மக்களுக்கு பரவலாக்கும் சமூகநீதி முரசு மாத இதழின் பணி பாராட்டத்தக்கது.
சதகதுல்லாஹ், திருப்பெரும் புதூர்.
ஈழப் போர் கால கட்டங்களையும், அதன் வரலாற்றுத் தருணங்களையும் பதிவு செய்யப்பட்ட “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” புத்தகம் குறித்த அறிமுகம் மிகுந்த வலியை தந்தது. வாசித்து வாழ்வோம் தலைப்பில் ஒவ்வொரு மாதமும் மிக முக்கியமான புத்தகங்களை அறிமுகப்படுத்தும் சேயன் இபுறாஹீம் அவர்களுக்கு நன்றி. “மனித சமூகத்தின் அழிவுக்கான காரணங்களும், கொரோனா காலமும்” தலைப்பில் அமைந்த கட்டுரை மனித சமூகத்தின் அழிவுக்கான காரணங்களை சுட்டிக் காட்டி இன்றை கொரோனா காலத்தின் யதார்த்ததையும் நமக்கு விளக்கியது. காதர் பாட்ஷா, தாம்பரம்


































