“ஹய்ய அலஸ் ஸலாஹ் – ஹய்ய அலல் ஃபலாஹ்” – “தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!” – இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொலியில் கேட்கக் கூடிய வாசகங்கள் தான்!
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ () الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ ()
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர் அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (23: 1-2) இந்த இறை வசனத்திலும், தொழுகையும் வெற்றியும் இணைக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். அப்படியானால் தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்? நாம் ஐந்து வேளைத் தொழுவதால் வெற்றி அடைந்து விடுவோமா? நமது வாழ்க்கையில் நடக்கும் தோல்விகளுக்கு நாம் தொழாதது தான் காரணமா?
நாம் தொழுதும், வாழ்க்கையில் வெற்றி அடையவில்லையெனில், அப்பொழுது அது மறுமையில் அடையும் வெற்றியைத் தான் குறிக்கிறதா? ஆனால் ஃபலாஹ் என்பது ஈருலக வெற்றியையும் குறிக்கும் சொல்லாயிற்றே!
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தவறாது தொழுதார்களே அவர்களுக்கு ஈருலகிலும் வெற்றி தானே! நபித்தோழர்கள் தவறாது தொழுதார்களே, அவர்களும் இவ்வுலகில் வெற்றி அடைந்தார்கள் தானே! இது போன்ற கேள்விகளுக்கு விடை காணுவதற்கு முதலில் நாம் ‘ஃபலாஹ்’ என்ற சொல்லின் பொருளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
ஃபல்லாஹ் என்ற சொல்லின் பொருள்:
விவசாயி, உழவர், வேளாளர் போன்றவற்றை குறிக்கும்.
ஃபலஹ என்பது : உழுதல், பயிரிடுதல், செழிப்பாக்குதல், மகிழ்ச்சி, வெற்றி போன்றவற்றை குறிக்கும். இதை வைத்து ஃபலாஹ் என்பது விவசாயம், மகிழ்ச்சி,வெற்றி ஆகிய மூன்று பொருள்களையும் சேர்த்து குறிக்கும் சொல்லாக நாம் பார்க்கலாம்.
ஒரு விவசாயி, ஒரு விதையை விதைத்து அது பயிரான பிறகு அந்த பயிரை அறுவடை செய்கின்றபோது மகிழ்ச்சி அடைகின்றான்.
அது போன்று, ஒரு இறை நம்பிக்கையாளன், இறைவனுக்கு அடி பணிந்து ஐந்து வேளைத் தொழுவதினால் எண்ணிலடங்கா நன்மைகளை அறுவடை செய்கின்றான். இதுவே அவனது ஈருலக வெற்றியாகும்!
அடுத்து – “யார் தொழுகையை நிலை நிறுத்துகிறாரோ, அவர் தீனை நிலை நிறுத்தியவராவார்” என்ற நபிமொழியை நாம் முன்னதாகவே கூறியிருந்தோம் அல்லவா? இதில் ‘தீன்’ என்ற சொல்லின் பொருள் மார்க்கம், அல்லது வாழ்க்கை நெறி என்று சொல்லலாம்.
ஆக தொழுகை என்பது வாழ்க்கையிலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட ஒரு சடங்கல்ல. அது நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்ட ஓர் அற்புதமான இபாதத்!
இதன் நுட்பத்தைப் புரிந்து கொண்டு, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த போது தமது ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்:
“உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! யார் தன் தொழுகையைப் பேணுகின்றானோ, அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ, அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ, அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்க கூடியவனாகவே இருப்பான்!” (மிஷ்காத்)
எனவே, தொழுகைக்கும் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அடிப்படையாக கொண்டு, தொழுகை வாழ்க்கையோடு எப்படியெல்லாம் தொடர்புடையது என்பதையும் அது எப்படி வெற்றியைப் பெற்றுத் தருகின்றது என்பதையும் நாம் இப்போது பார்க்கலாம்.
சான்றாக:
தொழுகை, சுத்தத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. உளூ இல்லாமல் தொழ முடியாது. இடம் சுத்தம், உடை சுத்தம், உடல் சுத்தம் ஆகியவை தொழுகைக்கு மிக அவசியம். இந்த சுத்தத்தை நாம் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்தால் அது வெற்றியை தருமா? தராதா?
தொழுகை, நேரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நேரத்தைப் பேணுபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்களா? மாட்டார்களா?
தொழுகை, நல்லொழுக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நல்லொழுக்கத்துடன் இருப்பது நமது வாழ்க்கையில் வெற்றியைத் தருமா? தராதா?
தொழுகை, ஜகாத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. தர்மம் செய்வது வாழ்க்கையில் வெற்றியைத் தருமா? தராதா?
தொழுகை, ஒற்றுமையைக் கற்றுத் தருகின்றது. வாழ்க்கையின் வெற்றிக்கு ஒற்றுமை அவசியமா? இல்லையா?
தொழுகை, தலைமைக்குக் கட்டுப்படுவதின் அவசியத்தை கற்றுத் தருகின்றது. வாழ்க்கையின் வெற்றிக்கு அது அவசியமா? இல்லையா?
தொழுகை, பொறுமையோடு இணைக்கப்பட்டுள்ளது. பொறுமை என்பது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதைக் குறிக்கும். அவ்வாறு உணர்ச்சியைக் கட்டுப்படுத்துபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்களா?மாட்டார்களா?
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்……..
இனி மனித வாழ்வின் வெற்றிக்குத் தேவையான ஒவ்வொரு அம்சத்தையும் தொழுகை எவ்வாறு தனக்குள் பிணைத்து வைத்துள்ளது என்பதை ஒவ்வொன்றாக அலசுவோம்.
இன்ஷா அல்லாஹ்……
………………..
மனித உரிமைப் பாதுகாப்புச் சபையிலிருந்து (UNHRC) வெளியேறிய அமெரிக்கா
உலக நாடுகளுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. வாஷிங்டனின் இந்த வெளியேற்றத்தை சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் கண்டித்துள்ளதோடு, உலக நாடுகளின் தலைவர்கள் தமது வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமைப் பேரவை இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியே வாஷிங்டன் வெளியேறுவதாக அறிவித்தது. ஜூன் 19 ஆம் தேதி ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹெலி இத்தீர்மானத்தை அறிவித்தார். மனித உரிமைப் பேரவையில் நிலைத்திருப்பதற்கான யோசனை தமக்கில்லை என்பதனால் இத்தீர்மானத்தை எடுத்ததாக வாஷிங்டனில் அவர் ஊடகவியலாளர் மத்தியில் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ஸைத் ராஇத் அல் ஹுஸைன் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாகவும் ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த முன்வர வேண்டும். பின்நோக்கிச் செல்லக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனநாயகத்துக்கு ஆதரவான நாடு என்ற நிலையிலிருந்து அமெரிக்கா விலகிச் செல்வது ஆபத்தானது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
ட்ரம்பின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் அமெரிக்காவின் இம்முடிவு தமக்கு உற்சாகமூட்டுவதாகக் கூறியுள்ளது.
காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேலின் இனவாத வன்முறைகளையும் நில ஆக்கிரமிப்பையும் எதிர்த்து அமைதிப் பேரணி நடத்தியவர்கள் மீது கடந்த மாதம் இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட கொலை வெறியாட்டம் குறித்து விசாரணைகள் நடத்துவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சில தினங்களிலேயே வாஷிங்டன் பாதுகாப்புச் சபையிலிருந்து வெளியேறியது.
ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்ட பாதுகாப்புச் சபையில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதிலுள்ள ஐந்து நிரந்த உறுப்பு நாடுகளில் ஒன்றாகவே அமெரிக்க இருந்து வந்தது.
மத்திய கிழக்கில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நடத்திய வன்முறைகள் மற்றும் படுகொலைகள் குறித்து இதுவரை ஐ.நா. பாதுகாப்புச் சபை 70 க்கும் மேற்பட்ட தீர்மானங்களை வெளியிட்ட போதும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத வண்ணம் வாஷிங்டன் தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்தது.
பலஸ்தீனர்களைப் பொறுத்தவரை பாதுகாப்புச் சபை அவர்களுக்கு எதிரானதே.
ஐ.நா. பாதுகாப்புச் சபையிலிருந்து வாஷிங்டன் வெளியேறியுள்ளது டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான திருப்பமாகும். உலக நாடுகளை இந்தத் தீர்மானம் மிகுந்த அரசியல் குழப்பங்களில் ஆழ்த்தப் போவதாக அல் ஜஸீராவின் வாஷிங்டன் செய்தியாளர் ரோசிலான் ஜோர்தான் தெரிவிக்கின்றார்.
ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த ட்ரம்ப், தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக பாதுகாப்புச் சபையிலிருந்து வெளியேறியுள்ளார். ட்ரம்பின் சமீபத்திய நகர்வுகள் அவர் சியோனிசத்தின் புதிய தலைமைத்துவத்தை ஏற்றுள்ளாரா என்ற சந்தேகத்தை பரவலாக எழுப்பியுள்ளது.
………………
அலிகர் அரசியல் – 2
அலிகர் பல்கலைக் கழகத்தில் மாணவர் விடுதியில் மாட்டப்பட்டிருந்த ஜின்னாவின் புகைப்படம் இந்திய விடுதலை வரலாற்றோடும், அவற்றின் நினைவுகளோடும் நெருக்கமுடையது. அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது வன்முறை கும்பல் நடத்திய தாக்குதல்களுக்கு ஜின்னாவின் படத்தை காரணமாகச் சொல்வது ஒரு சாக்கு போக்கு தான்.
ஜின்னாவின் படம் அங்கே அதே இடத்தில் 1938 முதல் இருந்து வருகிறது. இங்கே அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு ஒரு செய்தி கூறுகிறார்கள் அது “நீங்கள் சிறுபான்மையர், உங்கள் வரலாறும் அவற்றின் நினைவுகளும் இந்திய நாட்டின் ஒரு பாகம் என்று ஆகாது.”ஜின்னா எந்த இந்து பெரும்பான்மை வாதம் குறித்து பயந்தாரோ அசலாக அதே மிரட்டல் தான் இது.
காவல்துறை கூட தாக்குதல் நடத்திய குண்டர்களை விட்டு விட்டு மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டது. காவலர்கள் உணர்ச்சிக்கும் சட்டத்துக்கும் இடையில் ஊசலாடினார்கள். இந்திய தேசத்தின் அதிகார நிறுவனங்கள் மதவாதமாக மாறிக்கொண்டு இருப்பதை இது உணர்த்துகிறது.
இதையும் தாண்டி அலிகர் பல்கலைக் கழகம் சிறுபான்மை தகுதியை தக்கவைக்க போராடிக் கொண்டிருக்கிறது. இப்போதுள்ள பாஜக அரசு அலிகருக்கு சிறுபான்மை தகுதியை மறுக்கிறது. “சிறுபான்மை” என்ற கருத்து நியாயமான ஜனநாயக அரசியல், அரசியல் சட்டத்தின் மூலம் சிறப்பான உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பதால் ஒரு பெரும்பான்மைவாத அரசுக்கு சிறுபான்மை என்கிற கருத்து எப்போதும் அசௌகர்யமாக இருக்கும்.
அதனால் சிறுபான்மை என்று வருகிறபோது அரசியல் பொறுப்பு உண்டு என்பதால் அவர்களை முஸ்லிம் என்றும் கிறிஸ்டியன் என்றும் மதத்தின் பெயரை கூறி அச்சுறுத்துவது பெரும்பான்மைவாத அரசுக்கு சுலபமாக இருக்கிறது. இது, ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படைகளை மாற்றி விடுகிறது. இவை அனைத்தைப் பற்றியும் ஜின்னா எச்சரிக்கையாக இருந்தார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு முடிவுற்ற போது அதில் ஜின்னா மட்டும் தான் வெற்றியும் மரியாதையும் பெற்றார் என்கிறார் Thy Hand, Great Anarch! நூலின் ஆசிரியர் சி. சௌத்ரி. “ஜின்னா விரும்பிய எதையும் ரகசியமாக வைக்கவில்லை. அவரிடம் ஒளிவு மறைவு இருக்கவில்லை. ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை. பிரிட்டிஷ் அரசுக்கும் காங்கிரசுக்கும் தோல்வியை கொடுத்தார். பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் இந்து அரசியல்வாதிகளும் இரு தரப்பிலுமுள்ள எழுத்தாளர்களும் செய்த பல்வேறு சூழ்ச்சிகளையும் துரத்தியடித்ததன் மூலம் அவர்களுக்கு தோல்வியை கொடுத்தார். அவரால் ஏற்பட்ட தோல்வியை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறிய சமயம் இந்திய மக்கள் அனுபவித்த துயரங்கள் அனைத்துக்கும் ஜின்னாவின் அர்த்தமில்லாத கடுமை தான் காரணம் என்று அவர்கள் ஜின்னா மீது பழி சுமத்தினார்கள்.
ஆனால், அவர்கள் ஜின்னாவின் கடுந்தன்மை (Extremism) என்று கூறுவது முஸ்லிம்களுக்காக அவர் முன் வைத்த குறைந்தபட்ச கோரிக்கைகள் தான். இது மட்டும் தான் அவரது நீண்டகால கோரிக்கை என்று பலருக்கும் தெரியும். முஸ்லிம்களின் தலைவர் முஸ்லிம்களுக்காக பேசக்கூடாது என்று ஏன் ஒருவர் எதிர்பார்க்கிறார்? அவரது கோரிக்கைகள் அர்த்தம் இல்லாதது என்றால் பிரிட்டிஷ் அதிகாரிகளும் காங்கிரஸ் தலைவர்களும் ஏன் அவரது கோரிக்கைகளோடு ஒத்துப்போனார்கள்?” என்கிறார் சௌத்ரி.
சௌத்ரியை பொறுத்தமட்டில், ஜின்னாவின் கோரிக்கைகள் நியாயமானது. இது குறைந்தபட்ச கோரிக்கை தான். ஒரு சிறுபான்மை சமூகமாக முஸ்லிம்கள் இதனை கேட்க முடியும். எதிர்காலத்தில் சிறுபான்மையாகப் போகும் ஒரு சமுதாயத்தின் தலைவராக அந்த சமூகத்தின் உரிமைகளுக்காக எழுந்து நிற்க ஜின்னாவுக்கு உரிமை உண்டு. ஜின்னா தனது அரசியலில் தெளிவாக இருந்தார். மற்றவர்கள தெளிவாக இருக்கவில்லை. அதனால், அவர்கள் அரசியல் போராட்டத்தில் ஜின்னாவிடம் தோல்வி அடைந்தார்கள்.
முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் அரசியல் அதிகாரம் பெறும் வாய்ப்பை அளிப்பதன் மூலம் நாட்டின் பிரிவினையை தவிர்க்கலாம் என்று பிரிட்டிஷ் தூதுக்குழு (Cabinet Mission) முன்வைத்த திட்டத்தை காங்கிரஸ் நிராகரித்தது. தேசப்பிரிவினை போன்ற பேரழிவுகளை கண்ட பின்னர் ஒப்புக் கொண்டது.
அரசியலில் காங்கிரஸ் பக்கம் நிலையான கொள்கை இல்லை என்பதை உணரமுடிகிறது. ஜின்னாவின் கோரிக்கை என்பது அரசியலில் சமநிலை இருக்க இந்துக்களுடன் முஸ்லிம்களும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதாக மட்டும் இருந்திருக்க கூடும். தூது குழுவின் திட்டத்தை காங்கிரஸ் நிராகரிக்கவே ஜின்னா தனது கோரிக்கைகளை அடைய மத அரசியல் என்ற எல்லைக்குப் போனார். சமரசமே இல்லாத படிக்கு பாகிஸ்தான் என்ற எண்ணத்தை நோக்கி நகர்ந்தார்.
ஜின்னா காங்கிரஸ் மற்றும் இந்துக்களிடத்தில் மென்மை காட்டுகிறார் என்று 1930 களில் பிற முஸ்லிம் தலைவர்கள் சந்தேகப்பட்டார்கள். விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசியலில் முஸ்லிம்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுவார்கள் என்பதை ஜின்னா படிப்படியாகத்தான் ஒப்புக்கொண்டார்.
1940 ல் லாகூர் முஸ்லிம் லீக் மாநாட்டில் ஜின்னா தலைமை ஏற்று பேசிய போது, “முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை. எப்படி விளக்கிச் சொன்னாலும் முஸ்லிம்கள் ஒரு நாட்டின் குடி மக்கள் “ என்றார்.
இதனை தர்க்க ரீதியில் நியாயப்படுத்தவும் முயற்சித்தார். சிறுபான்மைக்கு ஒரு நாடு பெரும்பான்மைக்கு ஒரு நாடு என்று ஒரு அரசின் கீழ் இரண்டு நாட்டை வைத்து பராமரிப்பதில் அசௌகர்யம் (Discontent) உண்டாகும் என்றார். இரண்டு நாடாகத்தான் பிரிந்து இருக்க வேண்டும் என்ற நெருக்கடி உண்டான போது ஜின்னா அசௌகர்யமான ஒரு அரசின் கீழ் இருப்பதற்குப் பதில் தனியான ஒரு நாடாக பிரிந்துவிட முடிவு செய்து விட்டார்.
………………………..
இலக்கை தீர்மானியுங்கள்
எனதருமை மாணவக கண்மனிகளே! பள்ளிக் காலங்களில் கனா கண்ட காலங்களை எல்லாம் இன்று நிஜமாக அனுபவித்துக்கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
Uniform போட்டு படித்த பள்ளிக் காலங்களில் கல்லூரி மாணவர்களை பார்க்கின்ற போது ச்சே! சூப்பர் வாழ்க்கடானு அனுபவப்பட்ட நிழல்கள் எல்லாம் இன்று நிஜமாக மாறியிருக்கும். +2 முடித்த பின் ஏதேனும் ஒரு கல்லூரியில் B.A.,B.Sc.,B.Com., B.E., M.B.B.S. போன்ற துறைசார்ந்த படிப்புகளில் ஏதேனும் ஒரு துறையில் படிக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் மட்டுமே இருந்திருக்கும். இந்த குறிப்பிட்டு ஒரு துறையை ஏன் படிக்கிறோம்? எதற்கு படிக்கிறோம் என்பது இதுவரை உங்களுக்கு தெரிந்து இருக்குமா? என்பது சந்தேகம் தான்.
அதுபோல் உங்களை ஒரு கல்லூரியில் ஒரு துறையில் சேர்த்துவிட்ட உங்களது பெற்றோர்களுக்கும் ஏன்? எதற்கு படிக்க வைக்கிறோம் என்ற தெளிவும், புரிதலும் இருந்திருக்குமா?! என்பதும் புரியாத புதிர் இன்றைய குடும்ப, சமூக, தேசிய அளவிலான நிலை குறித்து உங்களிடம் ஒரு கருத்து கேட்டால்… யோசிக்காமல் சொல்வீர்கள் ‘எல்லாம் மோசம்; எதுவும் சரியில்லை’ என்று, சரி / தவறு என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டாம்.
ஆனால் ஒன்று நிச்சயம்…!
‘ஏன் படிக்கிறோம்? எதற்கு படிக்கிறோம் என்ற ‘இலக்கை தீர்மானிக்காத’ உங்களது நிலைப்பாடும், வாழ்க்கை முறையும் எல்லாம் மோசம்; எதுவும் சரியில்லை என்பதற்கு பின்னால் மறைந்து கிடக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்!
இலக்கை தீர்மானிக்காமல் படித்து முடித்து வெளிவருகின்ற உங்களால் இந்த சமுதாய மேம்பாட்டுக்காக என்ன செய்ய முடியும்? எதை சாதிக்க முடியும்? என்று நம்புகிறீர்கள்?!
உங்களது படிப்பை (UG) நிறைவு செய்த பின் நான் என்னவாக உருவாக வேண்டும்? என்ன வேலையில் அமர வேண்டும்? என்பதை இப்போதே தீர்மானியுங்கள்!
படித்து முடித்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுகின்ற ‘சாதாரணமானவர்களை விட’, நான் எனது படிப்பை நிறைவு செய்த பின் ‘இன்ன நிலைக்கு உயரப்போகிறேன்’ என்று இலக்கை நிர்ணயிக்கும் ‘அசாதாரணமானவர்களாக’ மாறுங்கள்.
உயர்கல்வித் துறையிலும், அரசுத் துறையிலும், தனியார் துறைகளிலும், வணிகத்திலும் ஏராளமான வாய்ப்புகள்கொட்டிக் கிடக்கின்ற இன்றைய நவீன யுகத்தில் “இலக்கை தீர்மானிக்காமல்” படித்து விட்டு வெளியேறி வருவது என்பது ஆரோக்கியமான சமூகத்தை புனரமைப்பதற்கும், அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கும் சிறந்ததல்ல…
உயர் கல்வித்துறைகளில் வெறும் இளங்கலையோடு (UG) படிப்பை நிறுத்திக் கொள்கின்ற நாம் PG, M.Phil (Master of Philoshophy) Ph.D. (Doctorate of Philoshophy) PDF (Post Doctorate Fellowship) போன்ற துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மத்திய அரசுத் துறைகள் சார்ந்த வேலை வாய்ப்புகளை வழங்குகின் UPSC தேர்வுகளில் IAS, IPS போன்ற துறைகளை தாண்டி
IFS (Indian Foreign Selrice)
I R S Indian Revenue Service
IAAS – Indian Audit and Accounts Service
IIS – Indian Information Service
ICAS – Indian Civil Accounts Service
ICLS – Indian Corporate Law Service
I T S – Indian Trade Service
I D E S – Indian Defence Estates Service
I D A S – Indian Defence Accounts Service
I O F S – Indian Ordnance Factories Service
I P S – Indian Postal Service
இதைத்தாண்டி இன்னும் பல துறைகள் அதன் கிளைகள், அதற்கான மத்திய அரசு வேலை வாய்ப்புகள் குறித்தும் நாம் யோசிக்க வேண்டும்.
மாநில அரசு வேலை வாய்ப்புகள் வழங்குகின்ற TNPSC மூலம்
Deputy Commercial Tax Officer,
Sub Registrar,
Assistant Inspector of Labour,
Junior Employment Officer,
Assistant Section Officer in TNPSC,
Supervisor of Industrial Co-operatives,
Senior Inspector of Co-operative Societies,
Handloom Inspector… போன்ற ஏராளமான துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
வணிகம் சார்ந்த சிறு, குறு தொழில்கள், பெரும் தொழில், வணிகத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
படிக்கின்ற மாணவர்களாகிய நீங்கள் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை மேற்காணும் ஏதேனும் ஒன்று / இரண்டு / மூன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதற்குள் பயணிக்க தயாராகுங்கள்.
பொதுவாக மனிதர்களுக்கென்று ஒரு இயலாமை உண்டு. ஆடைகளை வாங்கித் தருகின்ற மனிதர்களை புகழ்கின்ற நாம் உடலை தந்த அல்லாஹ்வை புகழ பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். அல்லவா…
அதுபோல், உலகில் எத்தனையோ மாணவர்களுக்கு படிப்பறிவு இல்லாத சூழலில், நமக்கு அந்த வாய்ப்பை வழங்கிய அல்லாஹ்வை நாம் நேசிக்க வேண்டும். என்னைப் படைத்தவன் யார்? அவனுக்கும் எனக்குமான தொடர்பு என்ன? அனைத்திற்கும் வழிகாட்டியாக இருக்கின்ற நபி (ஸல்) அவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பதை இதுவரை யோசிக்க மறந்த நாம் இனியும் அந்த நிலை தொடரக் கூடாது என்பதில் உறுதியாக நிலைத்திருங்கள். பணத்தை மட்டும் இலக்காக வைக்காமல் படைத்தவனை நோக்கமாக வைத்து உங்கள் இலக்கை நோக்கி பயணத்தை தொடருங்கள்.
நாம் வாழுகின்ற 60 – 70 வயதுக்கு உள்ளான இந்த உலக வாழ்க்கையின் இலக்கு “மறு உலகின் வெற்றி” என்பதை உரத்து சொன்னதோடு மட்டுமின்றி ‘இலக்கை நிர்ணயிப்பதிலும்’ முன்மாதிரி என்பதை நிரூபித்திருக்கிறது நமது மார்க்கம்.
வாழ்க்கைக்கான இலக்கை நிர்ணயிக்கச் சொன்ன மார்க்கத்தை பின்பற்றுகின்ற நாம் குறைந்தபட்சம் நாம் படிக்கின்ற படிப்புக்கான இலக்கைக் கூட தீர்மானிக்க முடியாது போனால் ’ச்சே! என்னடா நான் ஒரு மாணவனா?!’ என்று வெட்கித் தலைகுனிய வேண்டியது நீங்கள் மட்டுமல்ல; உங்களைச் சார்ந்திருக்கின்ற இந்த சமூகமாகிய நாங்களும் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
………………………..
இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! – 14
அ. முஹம்மது கான் பாகவி
வாரிசுகள் யார், யார்?
இறந்துபோனவரின் வாரிசுகளில் உயிரோடு இருக்கும் ஆண்களில் 15 பேரும் பெண்களில் 10 பேருமாக மொத்தம் 25 பேர் முதல் நிலை வாரிசுகள் எனும் உரிமை பெறுவார்கள்.
ஆண்களில் 15 பேர்: 1. இறந்துபோனவரின் மகன் 2. (மகன் இல்லாதபோது) மகனின் மகன் 3. தந்தை 4. (தந்தை இல்லாதபோது) தந்தையின் தந்தை 5. உடன் பிறந்த சகோதரன் 6. தந்தை வழிச் சகோதரன் 7. தாய்வழிச் சகோதரன் 8. (சகோதரன் இல்லாதபோது) உடன்பிறந்த சகோதரனின் மகன் 9. தந்தைவழிச் சகோதரனின் மகன்.
- இறந்தவருடைய தந்தையின் உடன்பிறந்த சகோதரன் 11. தந்தையின் தந்தைவழிச் சகோதரன் 12. (தந்தையின் உடன்பிறந்த சகோதரன் இல்லாதபோது) அந்தச் சகோதரனின் மகன் 13. (தந்தையின் தந்தைவழிச் சகோதரன் இல்லாதபோது) அந்தச் சகோதரரின் மகன் 14. கணவன் 15. (அக்கால முறைப்படி, இறந்தவர் அடிமையாக இருந்து விடுதலை பெற்றவராக இருப்பின், சொந்தம் யாரும் இல்லாதபோது) விடுதலை செய்த எசமான்.
இந்தப் பதினைந்து பேருக்கும் இறந்தவரின் சொத்தில் எல்லா நேரங்களிலும் பங்கு கிடைக்கும் என எண்ணிவிடக் கூடாது. இறந்தவருக்கு மிக நெருங்கிய உறவினர் இருக்கையில், தூரத்து உறவினருக்குப் பங்கு கிடைக்காமல்போகலாம். எடுத்துக்காட்டாக, இறந்துபோன ஒருவருக்கு, மேற்சொன்ன 15 வகை உறவினர்களும் ஒருசேர இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்! இறந்துபோனவரின் மகன், தந்தை, கணவன் ஆகிய மூவருக்கு மட்டுமே சொத்தில் பங்கு கிடைக்கும். மிக நெருங்கிய உறவினர்களான மகன், தந்தை ஆகியோரால் மற்ற வாரிசுகள் பங்கை இழந்துவிடுவார்கள்.
பெண் வாரிசுகளில் 10 பேர் : - மகள் 2. (மகன் இல்லாதபோது) மகனின் மகள் 3. தாய் 4. (தாயில்லாதபோது) தாயின் தாய் 5. தந்தையின் தாய் 6. உடன்பிறந்த சகோதரி 7. தந்தைவழிச் சகோதரி 8. தாய் வழிச் சகோதரி 9. மனைவி 10. (விடுதலை செய்த) எஜமானி.
இறந்துபோன ஒருவருக்கு இந்தப் பத்துப் பெண் உறவினரும் உள்ளனர் என்று வைத்துக்கொண்டால், அவர்களில் ஐவருக்கு மட்டுமே பாகம் கிடைக்கும். 1. மகள் 2. மகனுடைய மகள் 3. தாய் 4. மனைவி 5. உடன்பிறந்த சகோதரி. இவர்களின் காரணத்தால் மற்றவர்கள் பங்கை இழந்துவிடுவர்.
இறந்துபோன ஒருவருக்கு, இங்கு குறிப்பிடப்பட்ட 15 ஆண்களும் 10 பெண்களுமாக 25 உறவுகளும் உயிரோடு இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், 25 பேரில் 5 பேருக்கு மட்டுமே பாகப்பிரிவினைச் சட்டப்படி பங்கு கிடைக்கும். 1. தந்தை 2. தாய் 3. மகன் 4. மகள் 5. கணவன், அல்லது மனைவி. காரணம், சொல்லாமலே புரியும். இறந்துபோனவர் விட்டுச்சென்ற சொத்தை அனுபவிக்க, மற்றெல்லாரையும்விட இவர்களே மிகவும் அருகதை உடையவர்கள் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
வரிசைப்படி வாரிசுரிமை
இறந்துவிட்ட ஒருவரது சொத்துக்கு, ஒன்றன்பின் ஒன்றாக வாரிசுரிமை பெறும் மூவகை உறவினர்கள் உள்ளனர். முதல் வகையினருக்கு நிர்ணயிக்கப்பட் பங்கீட்டைக் கொடுத்த பிறகு மீதியுள்ள பங்குகளையே இரண்டாம் வகையினர் பெற முடியும். முதல் இரு வகையினர் இல்லாதபோது மட்டுமே மூன்றாம் வகையினருக்குப் பங்கு கிடைக்கும்.
இந்த வகையினரையும் அவர்களுக்குக் கிடைக்கும் பாகங்களையும் அறிந்துவிட்டாலே, இஸ்லாமியப் பாகப்பிரிவினைச் சட்டம் ஓரளவுக்குப் புரிந்துவிடும். - குறிப்பிட்ட பாகஸ்தர்கள் (அஸ்ஹாபுல் ஃபராயிள்). 2. ஆண்வழி மீதிப் பாகஸ்தர்கள் (அஸபா). 3. பெண்வழி உறவுகள் (தவுல் அர்ஹாம்).
- அஸ்ஹாபுல் ஃபராயிள்
உறவினர்களில் யார் யாருக்கு எவ்வளவு பாகம், இறந்தவர் சொத்தில் கிடைக்கும் என இறைமறை வரையறுத்துக் கூறியிருக்கிறதோ அவர்களே ‘பாகஸ்தர்கள்’ (அஸ்ஹாபுல் ஃபராயிள்) எனப்படுவர். இப்படி ஆறு வகையான பாகங்களும் 12 வகையான உறவுகளும் திருக்குர்ஆனில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
ஆறு வகைப் பாகங்களாவன: 1. இறந்தவர் விட்டுச்சென்ற மொத்த சொத்தில் பாதி அரை (½ – 50%) 2. கால் – நான்கில் ஒரு பாகம் (¼ – 25%) 3. அரைக்கால் – எட்டில் ஒன்று (1/8 – 12.5%) 4. மூன்றில் இரண்டு (2/3 – 66.67%). 5. மூன்றில் ஒன்று (1/3 – 33.33%). 6. ஆறில் ஒன்று (1/6 – 16.67%).
இறந்தவருடைய வாரிசுகளில் 12 பேர், இப்பாகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு உரிமையாளர்கள் ஆவர். ஆண்களில் நால்வரும் பெண்களில் எண்மரும் அந்தப் பாகஸ்தர்கள் ஆவர்.
ஆண் பாகஸ்தர்கள்: 1. இறந்துபோனவரின் தந்தை (Father). 2. (அவர் இல்லாதபோது) தந்தையின் தந்தை (Grand Father). 3. தாய்வழிச் சகோதரன். அதாவது இறந்தவரும் இவரும் ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள்; ஆனால், தந்தை வேறு (Half Brother). 4. கணவன் (Husband).
பெண் பாகஸ்தர்கள்: 1. இறந்தவருடைய மனைவி (Wife). 2. மகள் (Daughter). 3. பேத்தி (மகனின் மகள் – Grand Daughter). 4. சொந்தச் சகோதரி; அதாவது இறந்தவரும் இவரும் ஒரே தாய், தந்தைக்குப் பிறந்தவர்கள் (Full Sister). 5. தந்தை வழிச் சகோதரி; அதாவது இறந்தவரும் இவரும் ஒரே தந்தைக்குப் பிறந்தவர்கள்; ஆனால், தாய் வேறு (Half Sister). 6. தாய்வழிச் சகோதரி; அதாவது இறந்தவரும் இவரும் ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள்; தந்தை வேறு (Half Sister) 7. தாய் (Mother). 8. பாட்டி; அதாவது தாயின் தாய், அல்லது தந்தையின் தாய் (Grand Mother).
உதாரணத்திற்கு ஒன்று
இறந்தவருடைய தாய்க்கு மூன்று நிலைகள் உண்டு: இறந்தவருக்குப் பிள்ளை குட்டிகள் இருந்தால், மொத்த சொத்தில் ஆறில் ஒரு பாகம் (1/6 – 16.67%) உரியதாகும். 2. பிள்ளை குட்டிகள் இல்லாதபோது, தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (1/3 – 33.33%) கிடைக்கும். 3. கணவன், அல்லது மனைவிக்குக் கொடுத்ததுபோக எஞ்சியுள்ள சொத்தில் மூன்றில் ஒரு பாகம் (1/3 – 33.33%) தாய்க்குக் கிடைக்கும். (இந்த மூன்றாவது நிலைக்கு வரைபடம் காண்க:)
ஃபாத்திமா (100%)
கணவன் மீதி தாய் தந்தை
50% 50% 16.67% 33.33%
அதாவது ஃபாத்திமா என்ற பெண் இறந்துவிட்டார். அவருக்குக் கணவன், தாய், தந்தை ஆகிய மூன்று வாரிசுகள் உள்ளனர். இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாததால், மொத்த சொத்தில் பாதி (50%) கணவருக்குச் சேரும். மீதியுள்ள 50 சதவீதத்தில் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (16.67%) கிடைக்கும். இங்கு தந்தை ‘அஸபா’ என்பதால் மீதியான 33.33% சொத்தை எடுத்துக்கொள்வார்கள். சரியா?
- அஸபா
இறந்தவரின் சொத்துக்கு வாரிசாகும் இரண்டாவது வகை உறவினருக்கு ‘அஸபா’ என்று பெயர். அதாவது ஆண்வழி மீதிப் பாகஸ்தர்கள். குர்ஆனில் கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட பாகஸ்தர்களுக்கு உரிய பாகத்தைக் கொடுத்தபின், மீதியிருக்கும் பாகம் முழுவதற்கும் உரிமை பெறும் ஆண் வாரிசுகள்தான் ‘அஸபா’க்கள் என அறியப்படுகின்றனர். உதாரணத்திற்கு, இறந்துபோனவரின் மகன்; மகனுடன் வரும் மகள்; சகோதரன் ஆகியோரைச் சொல்லலாம்!
‘அஸபா’க்களுக்குப் பாகம் நிர்ணயிக்கப்படவில்லை. ‘அஸபா’வில் ஒருவர் மட்டும் இறந்தவருக்கு வாரிசாக இருந்தால், முழுச் சொத்திற்கும் அவரே உரிமையாளராகிவிடுவார். பாகம் நிர்ணயிக்கப்பட்டவர்கள் யாரும் இருப்பின், அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுத்ததுபோக மீதியுள்ள சொத்து முழுவதையும் ‘அஸபா’ வாரிசு எடுத்துக்கொள்வார்.
சில சந்தர்ப்பங்களில், முதல் வகை வாரிசுகளுக்கு (அஸ்ஹாபுல் ஃபராயிள்) சொத்தைப் பங்கிடும்போதே, சொத்து முழுவதும் தீர்ந்துவிடுவதுண்டு. அப்போது மீதிப் பாகம் இராது. இந்நிலையில், ‘அஸபா’ வாரிசுக்குப் பாகம் எதுவும் கிட்டாது.
மூவகை ‘அஸபா’ வாரிசுகள்:
(1) நேரடி அஸபா. இவர்கள் அறுவர். 1. இறந்துபோனவரின் மகன். 2. தாத்தா 3. சகோதரன் 4. சகோதரன் மகன் 5. இறந்தவருடைய தந்தையின் சகோதரன் (uncle). 6. தந்தையுடைய சகோதரனின் மகன் (Cousin).
(2) மற்றொரு உறவினரால் ‘அஸபா’வான வாரிசுகள். இவர்கள் நால்வர். 1. இறந்தவருடைய மகள்; மகனால் ‘அஸபா’ ஆவார். 2. மகன்வழிப் பேத்தி; மகன்வழிப் பேரனால் ‘அஸபா’ ஆவார். 3. சொந்தச் சகோதரி; சொந்தச் சகோதரனால் ‘அஸபா’ ஆவார். 4. தந்தைவழிச் சகோதரி. தந்தைவழிச் சகோதரனால் ‘அஸபா’ ஆவார்.
(3) மற்றோர் உறவினருடன் வருவதால் ‘அஸபா’ ஆகும் வாரிசுகள். இவர்கள் இருவர். 1. இறந்தவரின் சொந்தச் சகோதரி; மகள், அல்லது மகனுடைய மகளுடன் வரும்போது. 2. தந்தைவழிச் சகோதரி; மகள், அல்லது மகனுடைய மகளுடன் வரும்போது.
ஆக மொத்தம் ஆண்வழி மீதிப் பாகஸ்தர்களான ‘அஸபா’ வாரிசுகள் 12 பேர் (6+4+2=12) ஆவர். இவர்களுக்குக் குறிப்பிட்ட பாகம் கிடையாது; ஆயினும், குர்ஆனில் நிர்ணயிக்கப்பட்ட பாகங்களைப் பெறும் பாகஸ்தர்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சியுள்ள பாகத்தை இவர்கள் கையகப்படுத்திக்கொள்வர்.
சில உதாரணங்கள் : 1
அப்துல்லாஹ் (100%) தந்தை தாய் மீதி மகன் மகள்
16.67% 16.67% 66.66% 44.44% 22.22%
(முதல் வகை) (முதல் வகை) (இரண்டாம் வகை) (இரண்டாம் வகை)
இதில், இறந்துபோன அப்துல்லாஹ்வுக்கு நான்கு உறவினர்கள். தந்தையும் தாயும் முதல் வகை (அஸ்ஹாபுல் ஃபராயிள்) வாரிசுகள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் மொத்த சொத்தில் ஆறில் ஒரு பாகம் (1/6 – 16.66%) கிடைக்கும். இறந்தவருக்குப் பிள்ளைகள் இருப்பதால் இதுவே பெற்றோரின் பாகமாகும். இருவரின் மொத்த பாகம் நூறில் 33.34% ஆகும். மீதி 66.66% ஆகும்.
அடுத்து மகன், மகள் இருவரில் மகளும் முதல் வகை வாரிசுதான். ஆயினும், மகனின் காரணத்தால் மகள் இரண்டாம் வகை (அஸபா) வாரிசாகிவிடுவாள். எனவே, மீதியுள்ள பாகத்தை ஆணுக்கு இரு பங்கு; பெண்ணுக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் பிரித்தளிக்க வேண்டும். மீதியிருப்பது 66.66%. இதை 3ஆல் வகுத்தால் 22.22% விடையாகும். இதில் இரு மடங்கு, அதாவது 44.44% மகனுக்கும், ஒரு பாகம், அதாவது 22.22% மகளுக்கும் வழங்கப்படும்.
2 அப்துர் ரஹ்மான் (100%)
மனைவி மீதி மகன் மகள்
12.5% 87.5% 58.33% 29.17%
(முதல் வகை) (அஸபா) (அஸபா)
இங்கு இறந்துபோன அப்துர் ரஹ்மானுக்கு மனைவி இருக்கிறார். குறிப்பிட்ட பாகஸ்தரான இவருக்கு எட்டில் ஒரு பாகம் (1/8 – 12.5%) கிடைக்கும். இறந்தவருக்குப் பிள்ளைகள் இருக்கும்போது, மனைவிக்கு ஒதுக்கப்பட்ட பாகம் இதுதான். நூறில் அரைக் கால் பங்கான 12.5% மனைவிக்குக் கொடுத்ததுபோக எஞ்சியுள்ளது 87.5% ஆகும். இதை மூன்றாகப் பங்கிட்டு, இரு மடங்கு 58.33% மகனுக்கும் ஒரு பாகம் 29.17% மகளுக்கும் அளிக்கப்படும்.
- தவுல், அர்ஹாம்
இறந்தவரின் சொத்துக்கு வாரிசாகும் மூன்றாவது வகை உறவினர், பெண்வழி உறவுகள் (தவுல் அர்ஹாம்) ஆவர். முதல் இரு வகை வாரிசுகள் இல்லாதபோது மட்டுமே, இறந்தவர் சொத்தில் இவர்களுக்கு உரிமை உண்டு. இவர்கள் வாரிசுரிமை பெறும் தருணம் மிகவும் அரிது. இவர்கள் பெண்வழி உறவினர்களாவர்.
இந்த மூன்றாம் வகை உறவினர்கள் என அறுவரைக் குறிப்பிடுவர்: - இறந்தவருடைய மகளின் (ஆண், அல்லது பெண்) மக்கள். 2. மகன்வழிப் பேத்தியின் (ஆண், அல்லது பெண்) மக்கள். 3. சகோதரியின் மகன், அல்லது மகள். 4. இறந்தவருடைய தந்தையின் சகோதரி (அத்தை – Aunt). 5. தாய்மாமன் (Uncle) 6. தாயின் சகோதரி (Aunt).
நிர்ணயிக்கப்பட்ட பாகஸ்தர்களோ (அஸ்ஹாபுல் ஃபராயிள்), ஆண்வழி மீதிப் பாகஸ்தர்களோ (அஸபா) இறந்துபோனவருக்கு இல்லாதபோது, பெண்வழி உறவுகளான இவர்களுக்குச் சொத்தை எம்முறையில் பிரிப்பது என்பது தொடர்பாக அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இருப்பினும் இவர்களுக்கு வாரிசுரிமை உண்டு என்பதே வலுவான கருத்தாகும்.
இவர்களில் பெண்ணோ ஆணோ ஒருவர் மட்டுமே இருந்தால், இறந்தவரின் முழுச் சொத்துக்கும் அந்த ஒருவரே வாரிசாகிவிடுவார். பலர் இருக்கையில், அவர்களின் உறவுமுறையைக் கருத்தில் கொண்டு, நெருக்கமான உறவுக்காரருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பர் சிலர்.
யார் மூலம் இவர்கள் வாரிசாகிறார்களோ அந்த மூல உறவுக்காரரைக் கருத்தில் கொண்டு பாகப் பிரிவினை செய்ய வேண்டும் என்பர் வேறுசிலர்.
உதாரணமாக, இறந்துபோன ஒருவருக்கு, மகள்வழிப் பேத்தியின் மகளும், தந்தைவழிச் சகோதரரின் மகளும் மட்டுமே இருக்கிறார்கள். பேத்தியின் மகளுக்கே சொத்துக் கிடைக்கும். காரணம், பேத்தியின் உறவே நெருக்கமானது என்பர் சிலர்.
இல்லை; சொத்தைச் சரிபாதியாகச் பிரித்து பேத்தியின் மகளுக்கு ஒரு பாதியும் தந்தைவழிச் சகோதரன் மகளுக்கு மறுபாதியும் வழங்க வேண்டும் என்பர் மற்றச் சிலர். மகளின் இடத்தில் பேத்தியின் மகள் உள்ளார். மகள் ஒருவர் இருந்தால் மொத்தச் சொத்தில் பாதி வழங்கப்படும். அதே பாகத்தை மகளின் மகளுடைய மகளுக்கும் வழங்க வேண்டும் என்பது இவர்கள் வாதம்.
அவ்வாறே, சகோதரன் இடத்தில் சகோதரனின் மகள் இருக்கிறார். சகோதரன் ‘அஸபா’ என்ற அடிப்படையில் மீதிக்குச் சொந்தக்காரர் ஆவார். அப்படியே, சகோதரனின் மகளும் ‘அஸபா’ ஆவார் என்பதே காரணம்.
ஆக, முதல் வகை வாரிசுகள் – 12; இரண்டாம் வகை வாரிசுகள் – 12; மூன்றாம் வகை வாரிசுகள் – 6, ஆகமொத்தம் 30பேர். வரிசைக்கிரமப்படி, இவர்களில் ஒருவர்பின் ஒருவராக வாரிசு சொத்துகளை வழங்க வேண்டும் என்கிறது, இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்.
(சந்திப்போம்)
………………………
எதியோப்பியாவுக்கும் எரித்ரியாவுக்கும் இடையில் உடன்படிக்கை
“ஆப்பிரிக்காவின் கொம்பு” என்றழைக்கப்படும் எரித்ரியா ஆஃப்ரிக்கக் கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளில் ஒன்றாகும். அதேவேளை, அதன் எல்லைப் புறத்திலுள்ள எத்தியோப்பியாவும் 65 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட நாடாகும். ஆனால், கிறிஸ்தவர்களே அதன் ஆட்சியாளர்களாக இருந்து வருகின்றனர். நீண்டகாலமாக இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைத் தகராறும் பதட்டமும் நீடித்து வந்தது. கடந்த வாரம் எதியோப்பியா அவசர கால நிலைமையை நீக்கியதை அடுத்து நிலைமை சமாதானத்திற்கு சாதகமாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரு நாடுகளும் வரலாற்றில் அபீசீனியா என்றழைக்கப்பட்டது.
1993 இல் எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்து போனது. பல ஆண்டுகள், பல் உயிர்பலிகளுக்குப் பிறகு எத்தியோப்பிய அரசாங்கம் எரித்ரியா முன்வைத்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு சமாதான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான போரும் பதட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
இரு நாடுகளின் மக்களுக்கு இடையே நல்ல உறவுகளை நிலைநாட்டவும், இரு நாடுகளின் சமாதானத்தை நிலைநாட்டவும் எந்த முன் நிபந்தனையும் இன்றி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச எல்லைக் குழு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
“எங்கள் விருப்பம் வெறுப்புக்கு மாறாக அன்பு” நாங்கள் சகோதரர்கள் எங்களுக்கு எல்லைகள் இல்லை என்கிறார் எத்தியோப்பியாவின் 12 வது பிரதமர் அபி அஹ்மது .
…………………………
துருக்கி : எர்துகானின் வெற்றி சொல்லும் செய்தி!
முஹம்மத் பகீஹுத்தீன்
ஜூன் 25, 2018 அன்று துருக்கி ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட ரஜப் தையிப் எர்துகான் மீண்டும் கைப்பற்றியுள்ளார். 2003இல் பிரதமராக பதவிக்கு வந்த எர்துகான் 2014இல் ஜனாதிபதியாக பதவியேற்றார். அன்று முதல் இன்றுவரை விமர்சனங்களுக்கு இடையிலும் அவர் துருக்கி மக்களின் மனம் கவர்ந்த தலைவராகவே காணப்படுகிறார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்தான்பூல் நகரத் தலைவராக தேர்வானதிலிருந்து இன்று வரை எர்துகான் தன்னை மக்கள் சேவகனாகவே எண்ணி கடைமையாற்றி வருவதாக எர்துகான் வெற்றிவாகை சூடிய தருணத்தில் கூறியுள்ளார்.
மேலும் எதிர்க் கட்சியினரை அழைத்துப் பேசும் போது ‘தேசத்தை கட்டியெழுப்புவதில் பகைமைகளை மறந்து நாட்டின் எழுச்சிக்காக சேவையை தொடர்வதே இனி நமது கடமை’ என வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு துருக்கியில் சர்ச்சைகளுக்கு இடையில் கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் நடந்த புதிய அரசியல் சீர்திருத்த நடைமுறையின்படி பிரதமர் அலுவலகம் என ஒன்று இருக்காது. நாட்டை வழிநடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படும். நாட்டின் ஜனாதிபதியே இனி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருப்பார். அவருடைய பதவிக்காலம் 2030 வரை தொடரும்.
ஜனாதிபதியாக இருப்பவரே அமைச்சர்களை, நீதிபதிகளை, அதிகாரிகளை நியமிப்பார். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை தலைவர்களையும் ஜனாதிபதியே நியமிப்பார். அவ்வாறே ராணுவ நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட்டு அதிகாரங்கள் ஜனாதிபதியடம் வழங்கப்படும்.
இத்தகைய புதிய அரசியல் சீர்த்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு நடந்த இந்த தேர்தலில் வழக்கத்துக்கு மாற்றமாக, சிதறியிருந்த எதிர்க் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து எர்துகானை எதிர்த்தன. ஐரோப்பிய யூனியனின் நேரடி ஆதரவும் உதவியும் எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கு இருந்ததையும் உணர முடிந்தது. எதிரிகள் மீடியா உலகத்தில் அர்துகானின் தோல்விக்கான பிம்பத்தை வளர்த்தார்கள். ஆனால் வாக்குப்பதிவு முடிந்து 52 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று ரஜப் தையிப் எர்துகான் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்றுள்ள எர்துகானின் ஆளும் கட்சி தனித்து இல்லாமல் கூட்டணியாக வெற்றி பெற்றிருக்கிறது. இது துருக்கியின் ஜனநாயகத் தன்மைக்கும் அதிகார சமநிலைக்கும் வழியமைக்கும் என நம்பப்படுகிறது.
எர்துகானின் வெற்றி அடுத்து வருகின்ற ஐந்து வருட காலங்கள், துருக்கியின் உள்நாட்டு அரசியலிலும், பிராந்திய மற்றும் சர்வதேச அரசியலிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசமான பல அதிர்வுகளை ஏற்படுத்த வல்லதாக இருக்கும் என்ற பலதரப்பட்ட எதிர்பார்ப்புகள் பல்வேறு தரப்பினர்களிடத்திலும் இருக்கின்றன.
துருக்கி எதனை நோக்கி நகரப் போகின்றது? பிராந்திய, புவி அரசியலில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களாகவே வரும் ஆண்டுகள் இருக்கப் போகின்றது என்று மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும்.
……………..
கடினமும் இலகுவே…
இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்)
நோய், மரண போன்ற நிகழ்வுகளின் காரணமாக ஒரு முஃமின் நிராசை அடைந்து விடக்கூடாது. இது மனித இயல்புக்கு கொஞ்சம் கடிமான விடயம் என்பது உண்மை.என்றாலும் அவன் பொறுமையை வலிந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒன்றில் தான் அனுபவிக்கும் சிரமத்துக்கு கூலியைப் பெறும் நோக்கில் அல்லது இறைவனது நியதியில் திருப்தி காணும் நோக்கில் அவன் திருப்தி நிலையை உண்டாக்கிகொள்ள வேண்டும். இந்தக் சிரமங்கள் வாழ்வில் சில பொழுதுகள் மாத்திரமே… அத்துடன் அவை முடிந்து விடும்.
நோயிலிருந்து நிவாரணம் அடைந்தவன் நோயின் போது அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அந்த பொழுதுகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கட்டும். இப்போது அந்த நோய் எங்கே சென்றது…? சோதனை நீங்கியது.. கூலி கிடைத்து விட்டது.
அது போலத் தான் பாவங்களின் போது கிடைத்த இன்பம் போய் விடும் பாவம் மட்டும் எஞ்சியிருக்கும்.
மரணம் என்பது வலிகள் நிறைந்த ஒன்று. அதைச் சுமக்கும் ஆன்மாவுக்கு வலிகள் இருக்கத்தான் செய்யும்.
ஒரு நோயாளி; ஆன்மா உடலை விட்டும் பிரிந்து விட்டால் கிடைக்கும் அமைதி நிலையைச் சிந்துத்துப் பார்த்தால், அவனது கஷ்டங்கள் அவனுக்கு அற்பமாகத் தெரியும்.
சோதனைகளைச் சிந்தித்துக் கொண்டு நிராசையில் விழுந்து விடக்கூடாது. இது ஓடத்தைப் போன்றது. ஓடத்தில் பயணிப்பவன் ஒன்றில் சுவர்க்கம் செல்வான். அல்லது நரகம் புகுவான்.
எப்போதும் ஒரு சிரமத்தின் போது கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சிந்தித்தாக வேண்டும்.
மகிழ்ச்சியானவன் யாரெனில், ஆரோக்கிய நிலையைப் பயன்படுத்துபவனே.
சுவனத்தில் அந்தஸ்தின் அதிகரிப்பு; உலகில் பெறும் நன்மைகளின் அதிகரிப்பில் இருக்கிறது.
நல்லவிடயங்கள் அதிகம் இருக்கின்றன. மிகவும் அவசரமாக அவற்றை ஆரம்பிக்க வேண்டும்.
களைப்பின் ஓய்வு மிகவும் நீண்டது… கவலைப்பட்டவனின் மகிழ்ச்சி மிகவும் அதிகம்..
சுவனத்தில் எந்தக் குறையுமற்ற இன்பத்தைப் பற்றி நினைப்பவனுக்கு முன்னால் அனைத்துக் கடினமான நிகழ்வுகளும் இலகுவாக ஆகி விடும்.
தமிழ் : ஷாமிலா இம்தியாஸ் (உம்மு இயாத் விதாத்)
………………………
“காக்க…காக்க…! நட்பைக் காக்க…!!”
மவ்லவீ SNR ஷவ்கத் அலி மஸ்லஹி, பேராசிரியர் : இர்ஃபானுல் ஹுதா – அரபிக்கல்லூரி, தாராபுரம். 9865804000
ஜூலை – 30 என்றவுடன் நம் நினைவுகளில் தவழ வேண்டியது அன்று தான் சர்வதேச நட்பு தினம். அவரவர் தமது நட்பை இன, மொழி, நிற வேறுபாடின்றி வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதை முன்னிட்டு ஐ.நா. சபையால் உருவாக்கப்பட்ட தினம் தான் இந்த நட்பு தினம். அது குறித்து இனி நாம் சில செய்திகளைப் பார்ப்போம்.
மனிதன் உலகில் வாழ்கிறபோது ஒரு போதும் அவன் பிறரின் நட்பின்றியும், பிறரோடு நட்பின்றியும் தனித்து வாழ்ந்து விட முடியாது. உன்ஸ் என்ற அரபுச் சொல்லிற்கு அன்பு, நட்பு, பிரியம், பாசம், நேசம் என்றெல்லாம் பொருள் பலவுண்டு. இம்மூலச் சொல்லில் இருந்துதான் இன்சான் – மனுசன் – மேன் போன்ற முறையே அரபி, சமஸ்கிருத, ஆங்கிலச் சொற்கள் மனிதனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்றறிய முடிகிறது.
ஆக மனிதன் என்றாலே அவன் அன்பானவன், நட்பாளன், நல்லுறவுக்குரியவன், பிரியமானவன், பாச, நேசமானவன் என்று விளங்கிக் கொள்ளமுடிகிறது. உண்மையிலேயே நட்புக்கு நேரம் – காலம், ஜாதி, மதம், நாடு – நகரம், ஆண் – பெண் போன்ற வேறுபாடுகளும், பாகுபாடுகளும் அறவேயில்லை. ஆனாலும் இதே மனிதன் தான் தன்னைத்தானே பல்வேறு கூறுகளாக பிரித்துப் போட்டு நிறமும், தரமும் பார்த்துப் பழகத் தொடங்கினான்.
விளைவு, இன்றைக்கு சர்வதேசமெங்கும் இனவெறி, நிறவெறி, மொழி வெறி, கலாச்சார வெறி கூடவே தற்போது மதவெறி என பல வெறித்தனமான செயல்பாடுகளுக்கிடையே மனிதன் தன் அசல் தன்மையான நட்பை மட்டும் எங்கோ தொலைத்துப் போட்டுவிட்டு நிம்மதியின்றி அங்கும் இங்குமாக அலையாய் அலைந்து, திரிந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு இப்போதைய அவசரத் தேவை சரியான வழிகாட்டுதல் தான் அதை தரப்போவது யார்…?
இக்கட்டான எந்தவொரு நேரங்களிலும் சட்டென ஒளிவீசி வழிகாட்டுவது இஸ்லாம் தான் என்றால் அது மிகையல்ல…! திருமறை வசனம் ஒன்று திட்டமாய் ஓதிக்காட்டுகிறது இப்படி : மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 49:13)
இந்த வசனத்தை மீண்டும் நீங்கள் ஒன்றுக்கு மூன்றுமுறை நிறுத்தி, நிதானமாக வாசித்துப் பாருங்கள் இந்த உலகமே ஒரேகுடையின் கீழ் தான் இயங்குகிறது என்பது புரியும்.
தக்வா எனும் இறையச்சம் மட்டுமே இறுதிப் பிரதானமாக, உறுதிப் பிரமாணமாக இவ்வசனத்தின் இறுதியில் குறிப்பிடப்படுவதையும் நாம் நன்கு கவனத்தில் கொள்ளவேண்டும். குர்ஆன் கூறும் இறையச்சமும், பயபக்தியும் இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டுமே உண்டு என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், எப்படியும் வாழலாம் என்பதல்ல இஸ்லாம்..! இப்படித்தான் வாழவேண்டும் என்பதே இஸ்லாம். அப்படிப் பார்க்கிறபோது இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களோடு பழகுவதற்கும், நட்புகொள்வதற்கும் தடையேதும் விதிக்கவில்லை என்பதுதான் நாம் இங்கு கவனத்தில்கொள்ள வேண்டும்.
இன்றைக்கு மனித நட்புறவுகள் எப்படி இருக்கின்றன…? உண்மையிலேயே அவை நட்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டைவையா…? இல்லை பணம், பொருள், பதவி, அழகு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவையா…? என்று சற்று ஆராய்ந்து பார்த்தால் இன்றைக்கு பல நட்புகள் பாதியில் முறிந்து போன கதையாகத்தான் இருக்கின்றன. “நா…. ஏமாந்துட்டேன்”, “என்ன… ஏமாத்திட்டான்/ள்…! “அவனெல்லாம் ஒரு மனுசனா…?”, “அவன் மனுஷனே இல்ல மிருகம்…!”,”ச்சே…இப்படி அவ இருப்பான்னு நா… கொஞ்சங் கூட நெனச்சே பாக்கல…! “இப்படியான புலம்பல்கள் பலவற்றை அன்றாடம் நீங்கள் கேட்டிருக்கக் கூடும். ஏன்… நீங்களே கூட அப்படி ஒரு கட்டத்தில் புலம்பியிருக்கவும் கூடும். ம்ம்…யார் கண்டது எந்தப்புற்றில் எந்தப் பாம்பு இருக்கின்றதென்று…?
எந்தப் பெரும் பிரச்னையையும் சர்வசாதாரணமாக தாங்கிக் கொள்ளும் மனிதனால் நட்பு உடைவதை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஒரு நட்பின் ஆழ, அகலத்தை நம் புறக் கண்களால் நிச்சயம் எடை போட்டு விட முடியாது. தங்கத்தை, தக்காளியை எடைபோடும் தராசில் எடைபோட்டுப் பார்க்க முடியுமா என்ன…?
ஆனாலும் மனிதன் சில நேரங்களில் தவறான வழிகளை சரியான வழி என புரிந்து கொள்கிறான். அதன் விளைவு தான் அதுமாதிரியான புலம்பல்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்பதை மட்டும் ஏனோ இவன் அவ்வப்போது வசமாய் மறந்து போய் விடுகிறான்…? நல்லோர்களின் நட்பு எப்போதும் நம்மை நேரிய, சீரிய வழியில் தான் வழிநடத்தும் என்பதை மட்டும் என்றைக்கும் நாம் மறந்து விடக்கூடாது.
நபி யூசுஃப் (அலை) அவர்கள் தமது இறுதி நாட்களில் செய்த பிரார்த்தனைச் சொற்களை பின்வருமாறு பதிவு செய்து வைத்திருப்பதிலிருந்தே நன்னட்பின் அவசியத்தை நாம் நன்குணர்ந்து கொள்ள முடியும்.
“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள் புரிந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!” (என்று யூசுஃப் நபி பிரார்த்தித்தார்.) (அல்குர்ஆன் : 12:101)
யூசுஃப் நபி மட்டுமின்றி பல்வேறு நபிமார்களும் “இறைவா ! என்னை நல்லடியார்களோடு சேர்த்து வை…!” என்றுதான் துஆப் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் என்பது புனிதக் குர்ஆன் வெவ்வேறு இடங்களில் நமக்கு காட்டிக் கொடுக்கும் ஒரு அற்பதமானதொரு நல்வழியாகும். எனவே நாமும் நமது அன்றாட துஆக்களில் இதை அவசியம் இணைத்துக் கொள்ள வேண்டும். நல்ல நட்பு ஒன்று நமக்குக் கிடைத்து விட்டால் அதை
விட வேறென்ன பாக்கியம் வேண்டும் மனிதப் பதவிகளில் நபித்துவப் பதவி மிகவும் உயர்ந்தது. அந்தப் பதவியிலுள்ள ஒருவரே “நல்லடியாரோடு
எம்மைச் சேர்ப்பீராக ! “என்று கேட்கும் போது நட்பின் ஆழம் நமக்குப்புரிகிறது. அது மட்டுமல்ல.! தீய நட்பு நம்மை நம்மை பாழும் நரகில் தள்ளிவிடும் என்பதையும் நாம் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.
சுவனவாசி – நரகவாசிகளுக்கிடையேயான பின் வரும் உரையாடல் ஒன்று இதை மெய்ப்பித்துக் காட்டுகிறது இப்படி : அவர்கள் சுவனபதியில் இருந்து கொண்டு, குற்றவாளிகளை நோக்கி, “உங்களை நரகத்தில் புகுத்தியது எது?” என்று கேட்பார்கள். 74:43. அவர்கள் (பதில்) கூறுவார்கள் : “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை (அதற்கு வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம். (என்று பதிலளிப்பார்கள்) (அல்குர்ஆன் : 74:40-45)
ஆக, நமது நட்புறவு எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராத நட்புறவாக இருக்க வேண்டும். அது தான் மெய்யான நட்புறவு. ஆனால் இன்றைக்கு
அத்தகைய நட்பு நம்மிடையே இருக்கிறதா என்ன…? எல்லாவற்றின் பின்னணியிலேயும் பேராசையும், பெரும் பணமும் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. விளைவு, பெரும் நஷ்டத்தைத் தவிர வேறு என்ன…?
பண்பு, பாசம், ஈகை, இரக்கம், விட்டுக் கொடுத்தல், மறத்தல், மன்னித்தல் என எல்லாம் கலந்த கலவை தான் நட்பு என்பது. ரசிப்பதும், ருசிப்பதும் பிறகு காரியம் முடிந்தவுடன் தூக்கி எறிவதும் நல்லதொரு நட்புக்கு நல்லழகல்ல…! சுகத்திலும் – துக்கத்திலும், இன்பத்திலும் – துன்பத்திலும், அமைதியிலும் – பிரச்னையிலும் என எந்தவொன்றிலும் சரிசமமாக பங்கேற்பதுதான் மெய்யான நட்புறவு. இந்த நிலை இன்றைக்கு நமது நட்புகளில் இருக்கிறதா என்ன…? ரொம்பவும் யோசிக்க வேண்டிய ஒன்று.
பெரும்பாலான நட்புறவுகளில் இன்று அவரவர்களின் சுயநலம் தான் முன்னிற்கிறது என்பது கண்கூடு. சும்மா வார்த்தை ஜாலங்கள் வேண்டுமானால் “உனக்காக நான்…”, “நா இருக்கற வர உனக்கு ஒரு கவலயும் இல்ல…!” என்றெல்லாம் அவரவர் வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டுவதை நீங்கள் உங்கள் காது குளிரக் கேட்டிருக்க முடியும். உண்மையான நட்புகள் பேசுவதில்லை; பேசுவதிலும் இல்லை போலியான நட்புகள் தான் புலம்பித் தள்ளுகின்றன.
குறிப்பாக இன்றைக்கு பள்ளிக்கூட நட்புகளும் பாதைமாறிச் செல்வது பெரும் வேதனையளிக்கிறது. நட்பு என்பது மிகவும் தவறாக புரியப்பட்டு அதற்கு காதல் என்று சாயம் பூசுகிற ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உறுதி. ஆனால் அதை எவ்வாறு எதிர்கொள்ளவது என்பது தான் இன்றைய பெரும் பிரச்னையாக நம் கண்முன் நிற்கிறது.
நட்பை நாம் நட்பாகப் பார்க்கப் பழகிக் கொடுக்க வேண்டும். யாரும் இங்கு தனித்து வாழ்ந்து விட முடியாது. ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ வேண்டிய சூழல் இருக்கிறது. அதை நாம் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது. தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவும் கூடாது.
சுருக்கமாகச் சொல்வதானால் நட்பை நாம் நட்பாக மட்டுமே பார்க்க வேண்டும். காதல் என்பதெல்லாம் திருமணத்திற்குப் பிறகுதான் என்று இஸ்லாம் சொல்வது இதனால் தான் என்னவோ…?
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. (குறள் – 786) என்ற திருக்குறள் மட்டும் நம் செவிகளில் என்றென்றைக்கும் திருக்குரலாய் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கட்டும்…!
வாருங்கள் !
நமது தூய நட்பை போற்றுவோம்..!
நமது தீய நட்பை மாற்றுவோம்…!
………………………..
செலவில்லா சித்த மருத்துவம்
- பெருங்காயத்தை சட்டியில் போட்டு பொரித்து பஸ்பமாக்கி அதில் ஒரு கிராம் எடுத்து இளநீருடன் சேர்த்து குடித்தால் நீர் நன்கு பிரியும்.
- திருநீற்று பச்சிலை சாறு, செம்பருத்திப் பூ சாறு, தேன் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு வலி குணமாகும்.
- மருதாணி இலை, சிறிது மிளகு சேர்த்து எழுமிச்சை பழசார் விட்டு அரைத்து வெண் தேமல் உள்ள இடத்தில் பூசி அரப்பு தேய்த்து வந்தால் குணமாகும்.
- அம்மான் பச்சரிசி இலை, வசம்பு, இந்துப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசினால் வண்டுக்கடி, காணா கடி, தடிப்பு, சொறி சிரங்கு மாறிவிடும்.
- வெங்காய சாறு150 மல்லி, பனங்கற்கண்டு 30 கிராம் சேர்த்து குடித்தால் நீர் கடுப்பு குணமாகும்.
- அடுப்பில் பாலை வைத்து காய்ச்சும் போது, கழுவிய துத்தி வேர்களை கொண்டு கிண்டிக் கொண்டே வந்தால் பால் அனிப்பாக மாறிவிடும்.
- அடிவேர் பாகத்தை வெட்டி, அதில் கொஞ்சம் நல்லெண்ணெய், சர்க்கரை, நவச்சாரம் மூன்றையும் சேர்த்து வெட்டிய இடத்தில் வைத்து துணி சுற்றி வைத்தால் நான்கு நாட்களில்வீட்டு சுவர்களில் முளைக்கும் மரங்கள் பட்டுவிடும்.
- சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலக்காய் சம அளவு எடுத்து இள வறுப்பாய் வறுத்து இடித்து சலித்து, இதற்கு சம அளவு அச்சு வெல்லம் சேர்த்து இடித்து பிசைந்து ஒரு டீ ஸ்பூன் அளவு சாப்பிட்டால் வயிறு தொந்திரவு மாறி பசி எடுக்கும்.
- நவச்சாரத்தையும், சர்க்கரையையும் கரைத்து தெளித்தால் வீடுகளில் கரையான் அண்டாது.
- திருகுகள்ளி பாலும், கற்பூரமும் சேர்த்து அரைத்து துணியில் தடவி காய வைத்து திரியாக திரித்து தண்ணீர் ஊற்றிவிளக்கு எரிக்கலாம்.
- உங்கள் வீட்டு பழ மரங்களில் பிரண்டை செடியை போட்டு வந்தால் அணில் எலி கிட்ட வராது.
- அவுரி இலைச்சாறும், எருக்கன் இலை பாலும் சேர்த்து தடவினால் தேள்கடி 10 நிமிடத்தில் குணமாகும்.
- ஒரு காய்ந்த வரட்டியில் வெண்ணெய் தடவி தீ இட்டு வரும் புகையை காதுக்குள் பிடிக்க காது புளு வெளியேறி விடும்.
- காட்டு சீரகத்தை வாங்கி தூள் செய்து அத்துடன் வலுமிச்சை சார் விட்டு பிசைந்து தலைக்கு தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால் தலை பேன் எல்லாம் ஒழிந்துவிடும்.
- வெள்ளெருக்கன் பூ அதழ் ஒரு பங்கு, மிளகு ½ அரை பங்கு, கிராம்பு ¼ பங்கு, வெற்றிலை 1/8 பங்கு சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரை செய்து உலர்த்தி காலை – மாலை 2 மாத்திரை வீதம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
- நொச்சிப்பூ, நந்தியா வட்டப்பூ. குங்குமப்பூ நற்சீரகம் இந்நான்கையும் இடித்து துணியில் வைத்து பிழிந்து கண்களில் 2 சொட்டு வீதம் விட்டு வந்தால் கண்களில் பூ விழுதல் குணமாகும்.
- கற்பூரவல்லி கசாயத்தில் ஏலக்காய் இரண்டு, கிராம்பு ஒன்றை இடித்து சேர்த்து காய்ச்சி தேன் சேர்த்து குடித்து வந்தால் மார்பு சளி குணமாகும்.
- சீரகம் ஒன்று டீஸ்பூன் வெந்தாணம் ½ பொடியாக்கி மோருடன் சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.
- முசுமுசுக்கை, தூதுவளை இலை, பூ, சிறுதும்பை, மிளகு சம அளவு எடுத்து சூரணம் செய்து காலை – மாலை தேனுடன் சாப்பிட ஜலதோஷம் தும்மல், இருமல், குணமாகும்.
மருத்துவர் : கே.பி.பால்ராஜ்
தொடர்புக்கு : 94 87 34 87 03
பயிற்சி : 15.10.2018
இடம் : ராஜா ஹோட்டல், திருச்சி
……………………………..
பெண்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. பெண்களுக்கான நாடு இந்தியா என்பது மாறி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஆர்எஸ்எஸ் தமிழகத்தை விட்டு ஒழிந்தாலே மதவாதம் ஒழியும். மாநிலத்துக்கு ஆளுநர் தேவையில்லை. அவர் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்துவது தேவையற்ற ஒன்று. பசுமை எட்டு வழிச் சாலைக்கு விவசாயிகள் ஆதரவு என்பது தவறானது. விவசாயிகளை அழைத்து பேசாமல் அவசர அவசரமாக திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முயல்வது ஏன், போராடும் விவசாயிகள் கைது செய்யப்படுவது ஏன் என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது..
கனிமொழி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்
…….
‘யோகா’ வைத்தவிர வேறு எதைப் பற்றியும் பிரதமர் பேசமாட்டார். காப்பர் உருக்காலையின் பயன்களைப் பட்டியலிடுவதற்கு இது ஒன்றும் சிறந்த நேரம் இல்லை சத்குரு. மக்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குடிமக்களைச் சுடுவது கொலை. அந்தக் கொலையைப் பற்றிப் பேசுங்கள்.’
சித்தார்த், நடிகர்
……..
“ஒருவர் இந்துவாக இருந்தால் பகவத்கீதை படிக்க வேண்டும், கிறிஸ்துவராக இருந்தால் பைபிள் படிக்க வேண்டும், இஸ்லாமியராக இருந்தால் குர்ஆன் படிக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. அதேபோல, இந்தியக் குடிமகன் குடிமகளாகிய நாம் ஒவ்வொருவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த நூலை படித்துப் பார்க்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் தங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். பொதுவாகவே சட்டம், நீதிமன்றம் என்றாலே அனைவரது மத்தியிலும் ஒருவித பயம் உள்ளது. சட்டத்தை நினைத்துப் பயப்படத் தேவையில்லை. சட்டத்தின் உதவியுடன் எளிதில் எதையும் சாதிக்கலாம் என்பதை மாணவர்களாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் ஒவ்வோர் இளைஞரின் கனவு வழக்கறிஞர் ஆவது என்பதாகவே இருக்க வேண்டும்.
இளங்கோவன், முதன்மை நீதிபதி, தூத்துக்குடி மாவட்டம்
….
“2020-ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலத்தடி நீர் பூஜ்யத்தைத் தொட்டுவிடும் என்கிறது நிதி ஆயோக் அறிக்கை. இதனை முற்றிலும் சரியெனச் சொல்லமுடியாது. இங்கே நாம் நிலத்தடி நீரை எடுக்க எடுக்க கொஞ்சம் கொஞ்சமாக கடல்நீர் உள்ளே வந்துகொண்டிருக்கிறது. இப்போதே சென்னையில் பல இடங்களில் கடல்நீர் உள்ளே புகுந்துவிட்டது. அப்படியிருக்கையில் நம்மால் நிலத்தடி நீர் அளவு பூஜ்யத்தைத் தொட்டுவிடும் எனச் சொல்ல முடியாது. ஆனால், அந்த அறிக்கை கொடுத்திருக்கும் எச்சரிக்கை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிஜம். நிலத்தடி நீரைப் பொறுத்தவரை நாம் எடுக்க எடுக்க, உள்ளே நீர் சென்றுகொண்டே இருக்கவேண்டும். இந்தச் சுழற்சி சரியான முறையில் இருந்தால் பிரச்னையில்லை. ஆனால், இப்போது நாம் நிலத்தடி நீரை எடுத்துக்கொண்டு மட்டும்தான் இருக்கிறோம். அதனை மீண்டும் புதுப்பிக்க எதுவும் செய்வதில்லை. இப்படியே செய்துகொண்டிருந்தால் மண்ணிலிருக்கும் ஈரப்பதம் முழுவதும் குறைந்து பாலைவனமாக மாறிவிடும். சென்னை மட்டுமன்றி, தமிழகமே தற்போது இந்த நிலைமையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. ஜனகராஜன், ஓய்வுபெற்ற பேராசிரியர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
2013ம் ஆண்டு பேசிய மோடி, சுவிஸ் வங்கியில் தான் கறுப்புப் பணம் இருக்கும் என குழந்தைக்கு கூட தெரியும் எனக் குறிப்பிட்டார். ஆனால் தற்போது 2018 ஜூனில் அருண் ஜேட்லி, பியூஷ் கோயல் என அவரது இரு அமைச்சர்களும் சுவிஸ் வங்கியில் உள்ள பணம் அனைத்தும் கறுப்புப் பணம் தான் என்று எண்ணக் கூடாது என வேறு மாதிரி பேசி உள்ளனர். இந்த இரு கருத்துகளில் எது முட்டாள்தனமானது. அமைச்சர்கள் இருவரும் கூறுவது போல் சுவிஸ் வங்கியில் இருப்பவை அனைத்தும் வெள்ளை பணம் என்றால், சுவிஸ் வங்கியில் இருப்பதாக மத்திய அரசு கூறிவந்த கறுப்பு பணம் எங்கே?
ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை மூளை சலவை செய்ய வேண்டிய அவசியம் எந்த அமைப்பிற்கும் தேவையில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தான் நேரடியாக களத்தில் போராடினார்கள். ஆலை நிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளும் வேண்டும் என்றே பொய்யை பரப்பி வருகின்றனர்.
தொல் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள்
…………………………
தொல் புகழ் படைத்த தொண்டி – 2
மதுரையில் வாழும் ஒரு குடும்பத்தாரின் விலாசம் எட்டெழுத்துக்களைக் கொண்டது. TSNMS APM என்பதே அந்த எட்டெழுத்து. இவ்வளவு நீளமான விலாசத்தைக் கொண்டவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா?
அரபுவம்சா வழி எனக்கூறும் கீழக்கரை மரைக்கார்களும் பழவேற்காடு மரைக்கார்களும் தம் நீண்ட வம்சா வழியை ஏட்டில் பதிவு செய்துள்ளனர். விலாசமாக நடைமுறையில் பயன்படுத்துவதில்லை, மதுரைக் குடும்பத்தினரோ எட்டெழுத்துக்களை ஏற்றமுடன் எடுத்துரைக்கின்றனர்.
TSNMS APM – எனும் எட்டெழுத்துக்களில் முதலெழுத்தான T – தொண்டி ராவுத்தர் என்பதே மண்ணின் வரலாற்றில் இவ்விலாசம் பேசப்படுவதற்கான காரணம்.
தொண்டி ராவுத்தரை அடுத்து வரும் சந்ததி சிக்கந்தர் – S என்பதாகும். மூன்றாம் பெயர் நெய்னா முகம்மது – N என்பதாகும். நான்காம் பெயர் மதார் முகைதீன் – M என்பதாகும். TSNM போக மீதியுள்ள விலாசங்களான SAPM நான்கு நபர்களைக் குறிக்காது. நான்கெழுத்தும் ஒருவரையே குறிக்கும். அவர் ஷேக் அஹமது பீர் முகம்மது முஸ்தபா என்பதாகும் SAPM.
இவரே முஸ்தபா ஹாஜியார் என மதுரை மாநகர் ஏற்றிப் போற்றும் கொடை வள்ளல். இவருக்கு அப்துல் லத்தீப், முகம்மது இலியாஸ், முகம்மது இத்ரீஸ், முகம்மது அப்துல்லா என நான்கு புதல்வர்களும் ஒரு புதல்வியும் உள்ளனர்.
இக்குடும்பத்தார் மதுரைப் பகுதியில் மார்க்க சமூக நலப் பகுதிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். அல் அமீன் மேனிலைப் பள்ளி, அல் அமீன் எத்தீம் கானா, திருப்பங்குன்றதிலுள்ள ஜாமிஆ மஹ்ஸினுத்தாரைன் அரபிக் கல்லூரி இவர்களின் குடும்பப் பெயர் சொல்லும் அறக்கொடைகள். அண்மையில் மதுரையில் திறப்பு விழா கண்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத் தலைமையகம் ஒங்கி நிற்கும் 13 செண்ட் நிலம் எட்டெழுத்துக்காரர்கள் கொடுத்த இடம்தான்.
தொண்டி ராவுத்தர் வம்சா வழியில் ஐந்தாவது தலைமுறையில் மதுரை கீழவெளி வீதியில் 1928 – இல் பிறந்த முஸ்தபா ஹாஜியார் 1991 – இல் மரணமடைந்தார். தொண்டிக்காரர்களே அறியாத ஒரு வம்சா வழி மதுரையில் புகழ்க்கொடி பறக்க விட்டுக் கொண்டிருக்கிறது.
சில குடும்பங்களை மட்டும் பார்த்தோம், இனி சில தெருக்களை மட்டும் பார்ப்போம். வானவில் போன்றது முஸ்லிம் சமுதாயம் என்றால் மிகையாகாது. பல வண்ணங்கள் கொண்ட வானவில் போல் பலதரப்பட்ட குழுக்களைக் கொண்டது அந்த சம நிலைச் சமுதாயம்.
மீன் பிடிப்பவர்கள், மீன் வியாபாரிகள், மரக்கலமோட்டிகள், கலங்கள் கட்டுவோர் எனக் கடல் புரத்தில் இருந்தால் மேற்கே மரைக்காயர்கள், மார்க்கத்தைப் போதிக்கும் லப்பைகள், பல்பொருள் வணிகர்கள் என வசிப்பர். இவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்பதால் பள்ளிவாசல்களில் வானவில் போல் இணைவர். தொண்டியின் கடல்புரத்தில் கடலோடிகள் குடியிருப்பு, அடுத்து கலங்களைக் கட்டும் ஓடாவித் தெரு, லெப்பை சாகிபு தெரு மேற்கில் தெற்கு வடக்காக பல்வேறு கச்சவடங்கள் செய்வோரின் தெருக்கள் அமைந்திருப்பதைக் காணலாம். இத்தெருக்களில் நாம் இரு தெருக்களை மட்டும் விரிந்த பார்வைக்கு எடுத்துக் கொள்வோம்.
அவை : மரைக்காயர் தெரு, ஓடாவித் தெரு. மரக்கலங்களில் உரிமையும் அவற்றில் வணிகமும் செய்தோர் மரைக்காயர் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் வாழ்ந்த இடம் மரைக்காயர் தெரு. ஓடாவிகள் என்றால் படகுகளையும் தோணிகளையும் கட்டுவோர் ஆவர். ஓடம் என்ற மூலச் சொல்லிலிருந்து ஓடாவி எனும் சொல் வந்துள்ளது. அவர்கள் வாழ்ந்த தெரு, ஓடாவித் தெரு.
தொண்டியில் மட்டுமல்ல கடலோரப் பட்டினங்களில் இன்றும் ஓடாவிகள் வாழ்கின்றனர்.
சென்னைக்கு வடக்கே பழவேற்காட்டில் கூட ஓடாவிகள் உள்ளனர். இப்போது அவர்கள் மரக்கலங்களை உருவாக்கவில்லையென்றாலும் ஓடாவி எனும் பெயரால் அறியப்படுகின்றனர்.
அங்கெல்லாம் ஓடாவித் தெரு என தனித் தெருக்கள் இல்லை, அது தொண்டியில் இன்றும் உண்டு.
இங்கு ஓடாவித் தெரு இருக்க முக்கிய காரணம், முற்காலத்தில் இங்கு பெரிய அளவில் மரக்கலங்கள் கட்டப்பட்டதே. கலங்களைக் கட்டுவோர் நிறைந்திருந்ததும் கலங்களைக் கட்டுவதற்கான மரங்கள் பர்மாவிலிருந்து வந்து குவிந்திருந்ததும் கடலோசைக்குப் போட்டியாக மரச்சுத்தியலோசை எழுவதற்குரிய காரணிகளாகும்.
நாகை, நாகூர் கடலோரப்பட்டறைகளிலிருந்து கட்டப்பட்ட கலங்கள் கடற்பயணம் செய்தது போல் தொண்டிக் கடலோரங்களில் உருவாக்கப்பட்ட கலங்கள் பயணத்திற்கும் மீன்பாட்டுக்கும் பயன்பட்டிருக்கின்றன. தமிழகக் கடற்கரைகளில் கட்டப்பட்ட கலங்களை கிழக்காசிய நாடுகள் விலை கொடுத்து வாங்கியிருக்கின்றன. நம்மவர்கள் சாதாரணப் படகுகள் மட்டும் கட்டவில்லை, போர்க் கப்பல்களைக் கூட கட்டியிருக்கின்றனர். அவற்றில் நூற்றுக்கணக்கான போராளிகள் பயணம் செய்துள்ளனர்.
கப்பல்கள் கட்டுவதில் தமிழர்களின் கலை நுணுக்கத்தோடு அரபு தேசத்திலிருந்து வந்தவர்களின் கலை வண்ணமும் சேர கிழக்காசியா தமிழகத்தின் கரங்களுக்கு வந்திறக்கிறது. கங்கை கொண்டார் கடாரம் கொண்டாராக உயர வழிவகுத்திருக்கிறது.
ஒன்பதாம் நூற்றாண்டில் பழவேற்காட்டில் குடியேற்றப்பட்ட அரபு ஓடாவிகள் கட்டிய போர்க் கப்பல்களால்தான் மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் சயாமைத் தன் வசப்படுத்தியிருக்கிறான். இவன் தான் ‘தெள்ளாறு எறிந்த நந்தி வர்மன்’ எனப் புகழப்படுகிறான்.
பாண்டிய மன்னன் சிரீ வல்லபனை தெள்ளாற்றில் வென்ற மூன்றாம் நந்தி வர்மன் பழையாறு பூம்புகார் என வென்று தொண்டித் துறைமுகத்திலும் தன் கொடியைப் பறக்கவிட்டதாக நந்திக் கலம்பகம் உரைக்கிறது.
ஒன்பதாம் நூற்றாண்டு வரலாற்றில் மட்டுமல்ல அண்மைக்கால வரலாற்றில் கூட தொண்டி மாநகர் இடம் பிடித்துள்ளது. சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களுக்கு அஞ்சி தொண்டிக்கு வந்த போது மருதரசர்களால் தொண்டியில் குடியேற்றப்பட்ட காதர் மீரா அம்பலம் என்பார் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை காதர் மீரா அம்பலம் பாய்மரக்கப்பலில் ஏற்றி நடுக்கடலில் பல நாட்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
முஸ்லிம்கள் பெருந்தொகையாக வாழும் தொண்டியில் பல பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் கிழக்குத் தெரு பள்ளி பழமையான கல்லுப் பள்ளியாகும். கடலோரமிருந்த பழைய பள்ளியொன்று இப்போது புதிதாக ஓடாவித் தெரு பள்ளியாகியுள்ளது. தெற்குத் தெருவில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. வடக்குத் தெரு பள்ளி ஒரு முக்கியமான பெரிய பள்ளிவாசலாகும்.
வடக்குத் தெரு பள்ளிவாசலுக்கு வடக்கே கைக்கோளன் குளக்கரையின் தெற்கில் ஷைகு மலங்கு சாகிப் தர்கா உள்ளது. வெளிநாட்டிலிருந்தோ வெளி மாநிலத்திலிருந்தோ வந்து அழைப்புப் பணியாற்றிய இறை நேசச் செல்வர் மலங்கு சாகிப். இவரின் தர்கா கைக்கோளன் குளக்கரையில் அமைந்திருப்பதால் இப்பகுதியில் கணிசமாக கைக்கோளர்கள் – நெசவாளர்கள் வாழ்ந்ததாக உய்த்துணரலாம்.
பெரும் புலவர்களின் வம்சா வழியில் கி.பி.1845 – இல் பிறந்த ஷைகு மஸ்தான் மோன நிலையிலேயே இருந்ததால் ‘மோனகுரு மஸ்தான்’ என அழைக்கப்பட்டார். இவருடைய அடக்கத்தலம் தொண்டியம்மன் கோவிலுக்கு கிழக்கில் உள்ளது. இதை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கட்டிக் கொடுத்துள்ளார்கள். ஞானக் கடலாக விளங்கிய அன்பர் எழுதிய பாடல்கள் ‘மோன குரு மஸ்தான் சாகிபு பாடல்கள்’ என நூலாக வெளி வந்துள்ளது.
ஷைகு அபூபக்கர் வலி எனும் இறைநேசச் செல்வர் கீழக்கரையில் பிறந்து தொண்டியில் மண முடித்து வாழ்ந்து நற்போதனைகள் செய்து மறைந்தவர். இவருடைய அடக்கத்தலம் தொண்டிக்குத் தெற்கில் அமைந்துள்ளது. இவரை ஆற்காடு நவாப் முகம்மதலி வாலாஜா தொண்டியில் சந்தித்துள்ளார். இவரின் பெயரை தொண்டியரோடு கீழக்கரையினரும் தம் பிள்ளைகளுக்குச் சூட்டுகின்றனர். என்றாலும் மரியாதை நிமித்தம் அப்பெயரை ‘தொண்டியப்பா’ என விளிக்கின்றனர்.
தொண்டியில் உள்ள அம்மன் கோவில் ‘தொண்டியம்மன்’ கோவில் என அழைக்கப்படுகிறது. தொண்டிப்பகுதியில் மட்டுமே தொண்டியப்பன், தொண்டிராஜ், தொண்டியம்மா எனப் பெயர்கள் உள்ளன.
சோனகர் தெருவிலுள்ள சேமலப்பா எனும் சையிது முகம்மது லப்பை அடக்கத்தலமும் ஒரு வரலாற்றுப் பதிவே. சேமலப்பா பாசிப்பட்டினம் நெய்னா முகம்மது வலியின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மேலும் சில அடக்கத்தலங்கள் உள்ளன.
மதரஸதுல் இஸ்லாமியா செயல்படாமல் போய் விட்டது. ஆயிஷத்துல் சித்தீகா, கமாலியா என மதரஸாக்கள் செயல்படுகின்றன. பெண்கள் மிகப் பெருமளவில் ஆலிமாக்களாக உருவாகும் நிலை பாராட்டுக்குரியது.
நான்கைந்து தலைமுறைகளுக்கு முன் கிழக்குக் கடற்கரை சாலையெனப் பெயர் பெற்றிருக்கும் சேது ரஸ்தா சீரான சாலையாக உருவாகும் முன் சென்னைக்கு வடக்கேயுள்ள பழவேற்காட்டிலிருந்து மாட்டுவண்டியில் பயணித்து தொண்டிக்கு வந்து அரபு மொழி கற்றிருக்கின்றனர்.
கீழக்கரை மேதை சதகத்துல்லாஹ் அப்பாவின் மாணவரான தொண்டி முகம்மது தீபிடம் கல்வி கற்க பழவேற்காடு முகம்மது ஜான் தொண்டிக்கு சென்றிருக்கிறார் எனும் தகவலை பழவேற்காடு மூத்தவர்கள் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.
செய்யது முகம்மது அரசு உயர்நிலைப் பள்ளியோடு அல்ஹிலால் பள்ளி இஸ்லாமிக் மாடல் ஸ்கூல், அமீர் சுல்தான் அகாடமி ஆகியவை கல்விப் பணியாற்றுகின்றன. முப்பதாயிரத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட தொண்டியில் கணிசமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
இடையில் தொண்டி மாநகரின் ஊராட்சி வரலாற்றைக் காண்போம். ஆங்கிலேய அரசால் 1888 – இல் தொண்டி ஊராட்சி அமைக்கப்பட்டு செயல்பட்டிருக்கிறது. தொடக்க காலத்தில் தலைவர்கள் ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
1901 – 22 வரை பெருந்தகைகள் நல்ல பீர் மரைக்கார் – நெய்னார் லப்பை இருவரும் தலைவர்களாக இருந்துள்ளனர். அடுத்து MRM முகம்மது காசிம், MRM முகம்மது இசாக்கும் 1924 – 41 வரை MRM செய்யது முகம்மது எனும் கான் சாகிபும் தலைவர்களாகியுள்ளனர். 1951 – 56 வரை M.S.அப்துஸ்ஸலாம் தலைவராகியுள்ளார்.இவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். இந்நால்வரும் MRM வகையறாக்கள்.
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்கள் பட்டியல் நீளும். 1996 – இல் ஜானாபா செய்னம்பு பீவி, 2006 இல் ஜனாபா மாலிக் நிஷான் (சகோ, மஹ்ரூபுல் கர்க்கியின் துணைவியார்) 2011 – இல் திருமதி புவனேஸ்வரி என பெண்களும் தலைவர்களாகியுள்ளனர். நடந்து முடிந்த ஊராட்சியின் தலைவராக இருந்தவர் சகோ, சேகு நெய்னா.
இனி பாக் ஜலசந்தி கால் நீட்டிப் படுத்துக்கிடக்கும் அலைவாய்க்கரையில் – தொண்டித் துறைமுகத்தில் அமர்ந்தபடி கண்களை மூடிக் கொண்டு கற்பனையில் மிதந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பாய்மரக் கப்பல்கள், கடலோசையைத் தோற்கடிக்கும் படியாக மனிதர்களின் பேச்சுக்கள், அண்மையில் கடற்கரையில் நடந்து வரும் குதிரைகள், சேய்மையில் கடல் நீரில் மிதந்து வரும் குதிரைகள்.
கண்களைத் திறந்து மீண்டும் மூடினேன். காட்சி மாறியது. காலமும் மாறியிருந்தது. பாய்மரக்கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. குதிரைகளைக் காணோம். கலங்களில் கட்டியிழுத்து வரப்பட்டிருந்த பர்மாவின் தேக்கு மரங்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டிருந்தன. கலங்களின் மேலிருந்த அரிசி மூட்டைகள் மனிதர்களின் முதுகுகளில் அமர்ந்து கரை சேர்ந்து கொண்டிருந்தன.
சுங்க வரி செலுத்தப்பட்ட பொருட்கள் பண்டக சாலைகளுக்கும் கிட்டங்கிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. கடற்கரையின் மேற்கிலுள்ள மரவாடிகளிலும் வணிக நிலையங்களிலும் பேரங்கள் நடந்து கொண்டிருந்தன.
கண்களைத் திறந்து கசக்கி விட்டவன் மீண்டும் கண்களை மூட காலமும் காட்சிகளும் மாறியிருந்தன. மாறாதது கலங்கரை விளக்கம் மட்டுமே.
பெரிய பாய்மரக்கப்பல்களைக் காணோம். கடற்கரையில் நின்றதெல்லாம் மீன்பிடிப் படகுகளே. ஆலாக்கள் ஆங்காங்கு தென்பட காக்கைகளும் கள்ளப்பருந்துகளும் கடல், வான்பரப்பை நிரப்பிக் கொண்டிருந்தன.
கண்களைத் திறந்தபடியே காலம் மாறியதையும் புகழ்மிக்க ஒரு துறைமுகம் மீன் பிடித்துறைமுகமாகக் கூட மாறாததையும் எண்ணிப் பார்த்து விசனப்பட்டுக் கொண்டிருந்தேன்.
தொண்டியின் தொல் புகழ் மீட்கப்படும், துறைமுகம் வந்தே தீரும் என கிளிப்பிள்லை போல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினராய் காங்கிரசார் காலம் கடத்திக் கொண்டிருந்தார்கள். சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாக் ஜலசந்தி ஆழமாகி விடும். இந்து மகா சமுத்திரக் கப்பல்கள் மன்னார் வளைகுடாவில் வலசை வந்து பாக் ஜலசந்தியில் பயணித்து வங்காள வளகுடாவில் வளைய வந்து கல்கத்தாவில் கரைபிடிக்கும், அப்போது தொண்டித் துறைமுகம் மாபெரும் துறைமகமாக மாற்றம் காணும் எனச் சொல்லிக் கொண்டே இருந்தனர். காங்கிரசார் கண்மூடித் தூங்க மக்களும் துறைமுகங்களையே தொலைத்து விட்டார்கள்.
ஆங்கிலேயர் இருந்திருந்தால் தொண்டித் துறைமுகம் வந்திருக்கும். பட்டுக்கோட்டையிலிருந்தோ சிவகங்கையிலிருந்தோ தொண்டி மாநகருக்கு இருப்புப் பாதையும் வந்திருக்கும்.
விடுதலைப் பெற்றவுடன் ரயில்வே மந்திரியாக வந்தவர் ஓ.வி.அளகேசன் எனும் தமிழர். மற்ற மாநிலங்கள் எல்லாம் ரெட்டை ரயில் பாதை பெற்றிருக்க தமிழகம் இதுவரை ரெட்டை ரயில் பாதையை பெறவில்லை. சென்னையையும் தூத்துக்குடியையும் தவிர்த்து நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழகத்தில் தேவையான வேறு துறைமுகங்கள் வரவில்லை.
நம்மை ஏமாற்றும் டெல்லிக் காரர்களை இனியும் சாதரணமாக தொண்டிக்குத் துறைமுகம் கேட்டும் பயனில்லை. திரண்டெழும் மக்கள் எழுச்சியின் மூலம் தான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும். உரிமைக் குரல்கள் ஓய்ந்திருந்தால் தொண்டித் துறைமுகம் வராது. அது உப்பூர் அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரியைக் கொண்டு வரும் துறைமுகம் ஆகலாம். தொண்டிப் பகுதி மக்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இல்லையேல் கார்ப்பரேட் கம்பெனிகளின் தனியார் துறைமுகமாகி விடும்.
தொடர்புக்கு : 9710266971
……………………………
நிலமே எங்கள் உரிமை! எழவே எங்கள்வாழ்வு!
“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு வருகிறது. அதில் கதாநாயகன் தன் மக்கள் வசிக்கும் நிலங்களை அரசு இயந்திரம் மற்றும் மக்கள் விரோத அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு தொடர்ந்து போராட்டம் நடக்கும் விதமாக காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆக நிலம் என்பது மனிதர்களுக்கு அதிஅவசியமானது.
நிலம் இயற்கையாக நமக்கு கிடைத்த வரம். அதில் உழைத்து வியர்வை சிந்தி சத்தான, சுவையான காய், கனிகளை, பலவிதமான மரங்களையும் நாம் உற்பத்தி செய்யலாம். நாம் உண்டு கழித்து மீதம் இருக்கும் உற்பத்தி உபரியை வைத்து வணிகம் செய்ய முடியும். பகிர்ந்து கொடுக்கலாம். சேமித்து வைக்கலாம்.
ஆதி மனிதன் முதல் இயந்திரமாகிப் போன இன்றைய நாகரீக மனிதன் வரை மனிதர்கள் அனைவரும் உணவுக்காக நிலத்தையும் மண்ணையுமே நம்பி இருக்கின்றனர். சுரண்டல், ஏற்றத்தாழ்வு என இடையில் நிலம் தொடர்பான உரிமைகள் பிரச்சனைகளாக ஆரம்பித்த போது சமூகம் ஆண்டான் அடிமை என இரு பிரிவாகியது. பின்பு நிலவுடமைச் சமூகம், ஜமீன்தார் முறை சமூகம் என்றாகி இன்றைக்கு நவீன உலகம் முதலாளித்துவ சமூகமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலுள்ள அனைத்து நிலைகளிலும் நிலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
நிலவுடமை சமூகத்தை எடுத்துக் கொண்டால் எந்த சாதிகளிடத்தில் அதிக நிலங்கள் இருந்ததோ அவர்களே அதிகாரம் செலுத்தும் மையங்களாக செயல்பட்டு வந்தனர். நிலத்தில் உழுது உழைத்து உற்பத்தி செய்யும் சாதிகள் தங்கள் கரங்களால் விளைநிலங்களை அலங்கரித்தாலும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீது அவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. நிலவுடமையாளர்கள் கொடுக்கும் அற்ப அரிசியும், தானியமும் தான் அவர்களுக்கு கிடைக்கும் பரிசு.
இன்றைக்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் நிலையை நில உரிமையோடு முடிச்சிப் போட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை புரிந்து கொள்ளலாம். 2011 ஆம் ஆண்டு பொது பதிவுகள் மற்றும் கணக்கெடுப்பு ஆணையம் இணைந்து வெளியிட்ட தரவுகளின் படி நாட்டின் உழவு பணியில் 45.40 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள் என்றும் 60% முஸ்லிம் சமூகம் உற்பத்தி துறையிலும், தொழிற்சாலைகளிலும், உபரி தொழில்களிலும் அதிகமாக இருக்கிறார்கள் என்ற செய்தியும் நமக்கு தெரிய வருகிறது.
உழவு தொழிலில் முஸ்லிம்கள் ஈடுபட்டாலும் நேரடியான விவசாய வேலைகளில் அதிகம் கிடையாது என்பதுதான் உண்மை நிலை.
வட இந்திய மாநிலங்களைப் பொறுத்துவரை முஸ்லிம்களில் பெறும்பான்மையினர் உபரி தொழில்களில் ஈடுபடுகின்றனர். நெசவாளர்களாக, மண்பாண்டம் செய்பவர்களாக, கொல்லர்களாக, தச்சர்களாக, கைத்தறி மற்றும் ஆடை உற்பத்தி துறையில் சிரிய அளவிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பலான முஸ்லிம்கள் விவசாயிகள் அல்ல என்பதை புரிந்து கொள்வது அவசியம். மேலும் முஸ்லிம்கள் சிறு தொழில்களில் மூலமே தங்கள் வருமானத்தை தேடுபவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் என்கிறார் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் செயலர் பி.எஸ்.கிருஷ்ணன்.
2005 இல் இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலையை கண்டறிவதற்காக நீதிபதி சச்சார் அவர்களின் தலைமையில் மன்மோகன் சிங் அரசால் அமைக்கப்பட்ட குழு “முஸ்லிம் சமூக மக்களிடம் குறைவான நிலம் இருப்பதே அவர்களின் பின்னடைவுக்கு ஒரு காரணம்” என்று இந்திய அரசுக்கும், சமூகத்துக்கும் உணர்த்தியது.
இந்திய மக்கள் தொகையில் கிராமத்தில் இருப்போரில் 94% பேருக்கு சொந்த வீடு உள்ளிட்ட சொந்த நிலம் இருக்கிறது. ஒரு ஏக்கர் கொண்டவர்கள் சராசரி 81%. அதிலும் உயர் சாதி மற்றும் இடைநிலை சாதிகள்தான் அதிக நிலம் கொண்டவர்கள். 12.7% நிலம் தான் முஸ்லிம்களிடத்தில் உள்ளது. மற்ற மத சிறுபான்மைகளிடத்தில் 5.4 நிலம் உள்ளது. நம் நாட்டில் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகமான தாழ்த்தப்பட்ட மக்களிடம் 19% நிலமும் மலைவாழ் மக்களிடம் 8.4%மும் இருக்கிறது. சொந்த நிலமற்ற சமூகம் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது என்பதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். அதை இந்த கணக்கெடுப்பு உண்மைப்படுத்துகிறது.
தரவுகள் இப்படி இருக்க ஒரு விசித்திர உண்மை என்னவென்றால் உலகத்திலேயே முஸ்லிம்களால் கொடையளிக்கப்பட்ட வக்ஃபு சொத்துக்கள் இந்தியாவில்தான் அதிகம். ஆம் இந்திய இரயில்வே துறை மற்றும் இந்திய இரணுவத்துக்குப் பிறகு அதிகமான சொத்துக்களையும், நிலங்களையும் கொண்டிருப்பது இந்திய வக்ஃப் ஃபோர்டுதான்.
பதிவு செய்யப்பட்ட 4.9 லட்சம் சொத்துக்களின் மதிப்பு 1.20 லட்சம் கோடி. இந்த தொகையை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. இந்திய முஸ்லிம்களின் முன்னோர்கள் ஆறு லட்சம் ஏக்கர் நிலங்களை தங்களின் சந்ததிகளின் உயர்வுக்காக தங்களது சொத்துக்களை இறைப் பாதையில் வக்ஃபு செய்திருக்கிறார்கள்.
சச்சார் குழு பரிந்துரைப்படி இருக்கின்ற வக்ஃப் சொத்துக்களை முறையாக பராமரித்து வந்தாலே ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் வருமானம் வரும். அதை வைத்து முஸ்லிம் சமூகத்தின் வறுமையை மட்டும் இல்லாமல் மற்ற சிறுபான்மை மக்களின் பொருளாதார நிலையையும் சரி செய்து விடலாம்.
தற்போது இந்திய வக்ஃபு வாரியத்தின் வருமானம் என்பது வெறும் 163 கோடி மட்டுமே. முஸ்லிம்களின் வக்ஃபு சொத்துக்கள் குறித்த அறியாமையாலும், மெத்தனப் போக்காலும் கேட்பாடற்றுக் கிடக்கிறது சமுதாயத்தின் சொத்துக்கள்.
கல்வியில் பின் தங்கியிருக்கிற முஸ்லிம் சமுதாயத்திற்குத் தேவையான தரமான கல்வி நிலையங்களை உருவாக்க வக்ஃபு துறையால் முடியும். நியாயமாக, சரியாக அரசியல் தலையீடு இல்லாமலிருந்தால்.
இன்றைக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏழை, நடுத்தர முஸ்லிம் குடும்பங்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள் சொல்லிமாளாது. முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக வீடு கொடுக்க மறுக்கிறார்கள். பல முஸ்லிம்கள், நண்பர்களின் வீடுகளில் ஒரு அகதியின் வாழ்க்கையைப் போல காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு புறம் பாதுகாக்கப்பட வேண்டிய நம் முன்னோர்கள் வழங்கிய வக்ஃபு சொத்துக்கள் சமூக அக்கறையற்றவர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரமிக்கவர்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோய்க்கொண்டிருக்கிறது.
“நிலமே ஒரு மனிதனின் உரிமை” சமுதாய தன்மானம் அதில் அடங்கி இருக்கிறது. ஆகவே அஸ்தமம் ஆவதற்கு முன் விழித்துக் கொண்டு நம் நிலங்களை மீட்டெடுப்போம். சமூகத்தின் தடை போக்க முயற்சிப்போம்.
……………………………
பொய்களின் அரசியலும் அரசியல் பொய்களும்
– ரவூப் ஸய்ன் –
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி வருடம் தோறும் அந்த ஆண்டுக்கான சொல்லைத் தேர்வு செய்வது வழக்கம். 2016 ஆம் ஆண்டுக்கான ஆக்ஸ்போர்ட் அகராதி தேர்வு செய்த சொல் Post – Truth என்பதாகும். அந்த ஆண்டில் பத்தி எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள், செய்திப் பகுப்பாய்வாளர்கள் இச்சொல்லை 2000 முறை பயன்படுத்தியதனாலேயே அந்த ஆண்டுக்கான சொல்லாக Post – Truth தேர்வாகியது.
1992 இல் The Nation என்ற நாவலின் ஆசிரியர் ஸ்டீவ் டைசிக் என்பவர்தான் இந்தச் சொல்லை முதலில் பயன்படுத்தினார். Post – Truth என்ற சொல்லின் அர்த்தம் உண்மைக்குப் பிந்திய அல்லது உண்மையைக் கடந்தது என்பதாகும். ஆயினும் இப்பெயர்ப்பு அச்சொல்லின் அர்த்தங்களை ஆழ அகலத்துடன் பிரதிபலிக்கவில்லை.
சமகால உலக அரசியல் அப்பட்டமான பொய்களை உண்மைகளாய் நம்பச் செய்து உண்மையான தரவுகள், தகவல்களை புறமொதுக்கி விட்டு, திட்டமிட்ட சில பொய்களோடு இயங்குவதனையே இந்தச் சொல் குறிக்கின்றது. 2016 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அமெரிக்காவின் நடுநிலை ஊடகங்களும் எழுத்தாளர்களும் இச் சொல்லை அதிகம் பயன்படுத்தின. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமெரிக்கக் குடியுரிமை இல்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
நியூயார்க் உணவு விடுதியொன்றின் அருகில் ஹிலாரி கிளின்டனுக்குச் சொந்தமான சிறுவர் துஷ்பிரயோக நிலையமொன்று இயங்குவதாக பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது சில ஊடகங்களில் பரப்பப்பட்டது. வடகரோலினா மாநிலத்திலிருந்து இச்செய்தியைக் கேட்டு ஆத்திரமடைந்த ஒருவர் 500 கி.மீ.க்கு அப்பாலுள்ள நியூயார்க்கிற்கு வந்து உணவு விடுதியின் அருகிலிருந்த கட்டடத்தின் மீது சரமாரியாகச் சுட்டதில் சிலர் இறந்து போனார்கள். பின்னர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட அந்த நபர் குறிப்பிட்ட ட்ரம்பின் கருத்தை தான் நம்பியதனாலேயே இந்த முடிவுக்கு வந்ததாக வாக்குமூலம் வழங்கினார்.
ஆனால், விசாரணையின் பின்னர் ட்ரம்ப் குறிப்பிட்டது போன்று ஹிலாரிக்குச் சொந்தமான துஷ்பிரயோக நிலையமொன்று மொத்தமாகவே அங்கில்லை என்பது தெளிவானது. பொய்களை திட்டமிட்டு உருவாக்குவதும் அதனை நம்பச் செய்து அதன் மீது தமது அரசியலை நடத்துவதுமே இன்று உலகின் பல நாடுகளில் நடக்கின்றது.
‘அரசியலில் பொய்’ என்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. கடந்த காலம் முழுவதும் அரசியல் பொய்கள் முக்கிய திருப்பங்களில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளன. ஹிட்லரின் கொள்கை பரப்புச் செயலாளர் கோயபல்ஸ் மட்டுமே பொய் அரசியலுக்குப் பெயர் போனவர். ஆனால், அவருக்குப் பிந்திய பல பத்தாண்டுகளாக இன்று வரை கோயபல்ஸின் பொய்களை விட மிகப் பயங்கரமானதும் ஆபத்தானதுமான பொய்களோடு உலக அரசியல் நகர்கின்றது.
உண்மைகளைப் பொய்யாக்குவதும் பொய்களை உண்மையாக்குவதுமே Post – Truth எனலாம். இதில் உண்மையான புள்ளிவிபரங்கள், தரவுகளைப் பிழையானதாக அல்லது பொய்யானதாகத் திரிப்பது நிகழ்கிறது. இன்னொரு புறம் இல்லாததை இருப்பதாக பொய்கள் உருவாக்கப்படுகின்றன. உலகின் 748 கோடி மக்கள் 4 வல்லரசுகளின் 5 தலைவர்களால் சொல்லப்படும் பொய்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.
நிறுவனத் தேவைகளுக்கும் தனிநபர்களின் சுயநலன்களுக்கும் சில அரசுகளின் ஆதிக்கப் போட்டிக்கும் ஏற்ப பொய்கள் உருவாக்கப்படுகின்றன. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் அரசியல் செயல்பாடுகள் பெரும்பான்மையானவை உண்மைக்குப் புறம்பான பொய்களின் மீதே நகர்கின்றன. அதன் எதிர்மறையான தாக்கம் உலக அரசியலை விட்டு வைக்க வாய்ப்பில்லை. அதனால், முழு மொத்த சர்வதேச அரசியலையும் இந்த அப்பட்டமான பொய்கள் பாதித்து வருகின்றன.
9/11 க்குப் பின்னர் புஷ்ஷும் பிளேயரும் வெளியிட்ட அறிக்கைகளும் அதனையொட்டி மேற்கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் மிகப் பெரிய பொய்களின் அடிப்படையில் நடந்தவைதான். ஈராக் ஆக்கிரமிப்புக்கும் ஆப்கான் ஆக்கிரமிப்புக்கும் புஷ் முன் வைத்த காரணங்கள் சுத்தமான பொய்கள். அந்தப் பொய்கள் ஈராக்கில் 10 இலட்சம் அப்பாவிப் பொதுமக்களை பலியாக காரணமானது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகளை அநாதைகளாக்கின.
நூற்றுக்கணக்கான ஈராக்கிய பெண்களை பாலியல் வல்லுறவுக்குப் பலியாக்கின. ஈராக்கை மூன்று பிராந்தியங்களாகத் துண்டாடின. அதன் எண்ணெய் வளத்தை அமெரிக்கக் கம்பனிகளின் கீழ் கொண்டு வந்தன. இன்று வரை ஈராக் இன, மத பேதங்களால் குமுறிக்கொண்டிருப்பதற்கு புஷ்ஷும் பிளேயரும் சொன்ன பொய்களே காரணமாகியது. சத்தாம் ஹுஸைனிடம் பேரழிவு தரும் ஆயுதங்கள் உள்ளன என்பதே அவர்கள் சொன்ன பொய். இப்போது இது பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
1963 இல் ஜான் எஃப் கென்னடி சவூதி அரேபியாவுக்குப் படையினரை அனுப்பினார். எகிப்தின் ஜமால் அப்துந் நாஸர் சவூதியை ஆக்கிரமிக்கப் போகின்றார் என்று கென்னடி சொன்ன பொய்யை அடுத்து அவரது நகர்வு நியாயப்படுத்தப்பட்டது. ட்ரம்ப் அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் வெளிநாட்டவர்கள் குறித்து உருவாக்கிய அச்சம் அவரது வெற்றிக்குப் பின்னணியாய் இருந்தது. அது கூட மிகப் பெரிய பொய்தான். 1990 களில் இடம்பெற்ற பாரசீக வளைகுடா யுத்தத்திற்கு முதலாவது புஷ் முன்வைத்த நியாயமும் பொய்யானவைதான்.
2016 இல் உலக அரசியலில் விவாதிக்கப்பட்ட இன்னொரு மிகப் பெரிய பொய் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய சம்பவமாகும். டேவிட் கேமரூன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு முன் வைத்த பொய்ப் பிரச்சாரம் புள்ளி விபரங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இப்பிரச்சாரம் பொய்யென நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனைத் தோற்கடிக்க முடியாத அளவுக்கு பிரக் ஸிட் ஆதரவு ஊடகங்கள் இந்தப் பொய்யை உண்மையாக்கின.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டுமாயின், 3500 இலட்சம் பவுன்களை வருடம் தோறும் இழக்க வேண்டி ஏற்படும். எனவே, இவ்வளவு தொகையை இழந்த வண்ணம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அது நீடிக்க வேண்டியதில்லை என்பதே கேமரூன் அரசின் வாதமாக இருந்தது. ஆனால், முன் வைக்கப்பட்ட தரவு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
அயோத்தியிலிருந்த பாபரி மஸ்ஜித் மொகலாய மன்னர் பாபரினால் கட்டப்பட்டது. அது இலக்கியத்தில் வரும் கற்பனைப் பாத்திரமான ராமன் பிறந்த இடம் என்று பொய்ப் பரப்புரை செய்யப்பட்டு சங்கபரிவாரம் அதனைத் திட்டமிட்டு அழித்தது. இந்தியச் சூழலில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
குஜராத் பிரதமர் நரேந்திர மோடியை பிரதமராக்குவதற்கு கார்ப்பரேட் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்த ஊடகங்கள் திரும்பத் திரும்ப பரப்புரை செய்த பொய்களே துணை நின்றன. பொருளாதாரத்திலும் கல்வியிலும் குஜராத்தே முன்னிலை வகிப்பதாகவும் அதற்கு மோடியே காரணம் எனவும் பொய்கள் கட்டவிழ்க்கப்பட்டன. உண்மை இதற்குப் புறம்பாகவே இருந்தது. கேரளாவுடன் ஒப்பிடும்போது குஜராத்தின் கல்வி நிலை பின்தங்கியிருந்தது.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது ஊட்டச்சத்துக்குறையால் வாடும் குழந்தைகளின் வீதம் குஜராத்தில்தான் அதிகம் இருந்தது. மோசமான இனக் கலவரங்களுக்கும் பெயர் போன மாநிலம் அதுதான். இந்த உண்மைகளெல்லாம் மறைக்கப்பட்டு, மோடியைப் பற்றிய புதிய பிம்பங்கள் ஊடகங்களில் உலா வந்தன. மக்கள் அவற்றை நம்பினார்கள்.
இப்போது ஒரு புதிய சர்ச்சை கூட இந்தியச் சூழலில் உருவாகியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியொருவர் வரலாற்றை தலைகீழாய்ப் புரட்டும் பொய் ஒன்றை கட்டவிழ்த்துள்ளார். தாஜ் மஹாலின் உண்மைப் பெயர் தே.ஜே. மஹால் எனவும் அது பழைய சிவன் கோயில் எனவும் மொகலாயர் காலத்தில் முஸ்லிம்கள் அதனைக் கைப்பற்றி தாஜ்மஹால் என்று மாற்றினர் எனவும் ஹரிசங் ஜெய்ன் எனும் ஒரு நீதிபதியே இப்படிப் பெரிய பொய்யொன்றை அவிழ்த்துள்ளார்.
தாஜ்மஹாலின் வரலாற்றை இவர் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஹரிசங் ஜெய்ன் ஆர்.எஸ்.எஸ். பாசறையில் வளர்ந்தவர் என்பதால் இந்துத்துவ கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களுக்கு தீனி போட முயற்சிக்கிறார். மக்கள் இதனை நம்புவதற்கும் கலவரங்களில் பங்குகொள்வதற்கும் கூட இந்தப் பொய் காரணமாகலாம்.
நாங்கள் உருவாக்கும் உண்மைகளை மக்களை நம்பச் செய்வோம். அவற்றை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதிகார வர்க்கத்தின் பொய் அரசியல் ஆகும். அரசியலில் பொய் என்பதை விட பொய் அரசியல் மிகுந்த ஆபத்தானதாகும்.
அகிலத்தை அழிப்பதற்கும் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும் வல்லரசுத் தலைவர்களும் ஆதிக்க சக்திகளும் தமது கையிலெடுத்துள்ள பயங்கர ஆயுதமே இதுவாகும்.
ஜான் பெர்கின்ஸ் எனும் எழுத்தாளர் ஒரு காலத்தில் அமெரிக்காவின் சதிக் கோட்பாட்டிற்கு பொறுப்பாயிருந்த கூலிகளில் ஒருவர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவர் எழுதியுள்ள ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் எனும் நூலின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவின் மிகப் பெரிய பலம் ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரமும் டாலரின் அடிப்படையில் இருப்பது தான். டாலரை அச்சடிப்பதற்கு நம்மால் முடிகின்றது. அதனால்தான் நாம் வல்லரசாக நிலைத்திருக்கிறோம் என்கிறார்.
அவரது கருத்தில் உலகத்தில் மிகப் பெரிய கறுப்புப் பணம் டாலர்தான். ஆனால் இதனை எத்தனை பேர் நம்புவார்கள் என்பதுதான் நமக்கு முன்னாலுள்ள பிரச்சினை.
நவீன உலக வரலாற்றை தலைகீழாய் மாற்றியதில் உண்மைக்குப் பிந்திய பொய் அரசியலுக்கும் அவற்றைப் பரப்புரை செய்யும் ஊடகங்களுக்கும் பெரிய பங்குள்ளது.
பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் அரசுக்கு ஆதரவானவை. கூலிக்கு மாரடிப்பவை. ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் லாபிகளின் கீழே உள்ளவை. இதனால், உண்மையை விட பொய்த் தரவுகளையும் தகவல்களையும் முன்வைத்து வாதிடுபவை. அவை உருவாக்க விளைவது பொய்ச் சமநிலையையே. பொய்களை அப்படியே சந்தைப்படுத்தும் நிலைக்கே இறுதியில் அவை வந்து சேர்கின்றன.
இன்றைய சமூக ஊடகங்கள் இதற்கு மேலும் பலமூட்டுகின்றன. டிஜிட்டல் பயன்பாடு மற்றும் இணைய வதியுள்ள ஒருவருக்கு தான் விரும்பும் கருத்தை உலகமயமாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அந்த அபிப்பிராயத்தில் பொய்கள், பக்கச் சார்புகள், உண்மையைப் புறந்தள்ளும் வெறுப்பு எல்லாமே கலந்திருக்கின்றது.
பொய்களையும் அசத்தியங்களையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் புழுகுமூட்டை அரசியல், மக்களைத் தவறாக வழிநடாத்துகின்றது என்பது மட்டுமல்ல, உலகிற்கே பெரும் அழிவைக் கொண்டு வருகின்றது.
உண்மைகளைத் திட்டமிட்டு நிராகரித்து பொய்களை உருவாக்கி, சந்தைப்படுத்தும் எந்திரங்களாகவே உலகின் பெரும்பாலான அரசாங்கங்கள் இயங்குகின்றன.
இத்தகைய பொய்களை வடிகட்டி உண்மைகளை மட்டும் உள்ளீர்க்கும் மனோநிலைக்கு மக்களை கொண்டு வந்து சேர்ப்பதுதான் நமக்கு முன்னாலுள்ள பெரும் சவாலாகும்.
…………..
முதல் தலைமுறை மனிதர்கள் 17 – சேயன் இப்ராகிம்
சமுதாயச் சேவையாளர் கும்பகோணம் E.S.M. பக்கீர் முகம்மது சாகிப்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற மூதுரைக்கு ஏற்ப இம்மக்கள் மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வருபவர்கள். அவர்களில் பலர் தாங்கள் ஈட்டிய செல்வத்தின் ஒரு பகுதியை சமய மற்றும் சமுதாயப் பணிகளுக்கு வாரி வழங்கினர். இன்றைக்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் பல புலவர்களையும், கவிஞர்களையும், கல்வியாளர்களையும், எழுத்தாளர்களையும். புரவலர்களையும் தமிழகத்திற்குத் தந்த பெருமை இம்மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்குண்டு. இம் மாவட்டத்தைச் சார்ந்த அத்தகைய ஒரு சமூக சேவையாளரைப் பற்றியே இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
தஞ்சை மாவட்டத்தின் வர்த்தக நகரம் என அறியப்படும் கும்பகோணம் காவேரிக் கரையில் அமைந்தள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இரு சோழர்களின் தலைநகராக விளங்கியது. இதன் பழைய பெயர் பறையாழை என்பதாகும். குடந்தை என்றும் திருக்குடந்தை என்றும் இந்நகர் அழைக்கப்படுகிறது.
கும்பகோணம் என்றதும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்து சமய மக்களின் பண்டிகையான மகாமகம் நமது நினைவிற்கு வரும். வெற்றிலை, டிகிரி காபி ஆகியனவும் நமது நினைவிற்கு வரும். கும்பகோணத்தைப் பற்றிய இந்த நினைவுகளோடு நமது நினைவுக்கு வருபவர் சமுதாயச் சேவையாளராகவும், கல்வியாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்த மறைந்த இ.எஸ்.எம். பக்கீர் முகம்மது சாகிப் ஆவார்.
பிறப்பு – கல்வி – தொழில் :
ஷேக் முகையதீன் இராவுத்தர் என்பார் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் ஒரு சிறிய கடை வைத்து காம்பு புகையிலை வியாபாரம் செய்து வந்தார். அப்போது வெற்றிலையுடன் புகையிலையையும் சேர்த்துப் போடுகின்ற பழக்கம் மக்களிடையே பெருமளவு இருந்து வந்தது. எனவே இவரது கடையில் நல்ல வியாபாரம் இருந்தது. நாளடைவில் இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர் தனது வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒரு புதிய உத்தியைக் கையாண்டார்.
புகையிலையை மிகச் சிறிய துண்டுகளாகக் கத்தரித்து அவற்றை பொட்டலங்களில் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்தார். இந்த உத்தி வாடிக்கையாளர்களைப் பெருமளவு ஈர்த்தது. அதனால் விற்பனை அதிகரித்து வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டியது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் தரமான புகையிலையை அவை விளையும் இடத்திற்கே சென்று கொள்முதல் செய்து அதனை பக்குவமான முறையில் பாடம் செய்து, மணமும் காரமும் இருப்பதற்காக சில செயற்கை சுவையூட்டிகளை அதில் சேர்த்து அதனை சிறு சிறு பொட்டலங்களில் போட்டு ‘மைதீன் புகையிலை’ என்ற லேபிலை ஒட்டி விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
இதற்காகத் தொழிற்சாலை ஒன்றையும் தொடங்கி அதற்க ‘மைதீன் புகையிலைக் கம்பெனி’ என்று பெயரிட்டார். காரமும், மணமும் கொண்ட இந்த மைதீன் புகையிலையின் சுவையில் மக்கள் சொக்கிப் போயினர். இந்தப் புகையிலையின் சந்தை கும்பகோணம் நகரம், தஞ்சை மாவட்டம், தமிழ் நாட்டின் பிற பகுதிகள் என நாளடைவில் விரிவடைந்தது. அன்றையத் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி புகையிலை வணிகராக ஷேக் முகையதீன் இராவுத்தர் திகழ்ந்தார்.
இந்தப் புகையிலை வணிகரான ஷேக் முகையதீன் இராவுத்தரின் புதல்வராக 28.04.1937 அன்று பக்கீர் முகம்மது பிறந்தார். தனது தொடக்க மற்றும் இடை நிலைக் கல்வியை கும்பகோணத்திலிருந்த நேடிவ் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தந்தையார் ஷேக் முகையதீன் இராவுத்தர் திடீரென மரணமுற்றார். எனவே இவரது மூத்த சகோதரியின் கணவர் மைதீன் புகையிலைக் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று சில ஆண்டுகள் நடத்தி வந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும், பக்கீர் முகம்மதுவே புகையிலைக் கம்பெனியின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 18 தான். தனது கடின உழைப்பு, விடா முயற்சி, நாணயம் காரணமாக மைதீன் புகையிலைக் கம்பெனியை மேலும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார்.
பொதுப் பணிகள்:
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் ஸையது கலீலுல்லாஹ் கும்பகோணத்தை ஒட்டிய மேலக் காவிரியில் குடியிருந்து வந்தார். இஸ்லாமியப் பற்றும் பொது நல நோக்கும் கொண்ட இந்த டாக்டருடன் பக்கீர் முகம்மதுவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது நட்பாக மாறியது. டாக்டரின் தொடர்பு காரணமாக பக்கீர் முகம்மதுவுக்கும் பொதுப் பணிகளில் நாட்டமும், இஸ்லாமிய வழிமுறைகளில் நல்ல பிடிப்பும் ஏற்பட்டது.
தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஏதேனும் செய்திட வேண்டுமென இருவரும் எண்ணினர். மாவட்டதிலுள்ள ஒருமித்த எண்ணம் கொண்ட நண்பர்களை அழைத்து ஆலோசனை நடத்தினர். அதன் விளைவாக உருவானது தான் தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கமாகும். பக்கீர் முகம்மது இச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டார்.
மேலக் காவிரியில் தனது தந்தையின் நினைவாக ‘மைதீன் மதரஸா நிஸ்வான்’ என்ற பெண்கள் பள்ளிக் கூடத்தைத் அவர் தொடங்கினார். முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியுடன் பொதுக் கல்வியையும் கற்றுக் கொடுக்கும் பள்ளியாக இது திகழ்ந்தது. இப் பள்ளியின் தாளாளராகவும் அவர் பொறுப்பில் இருந்தார். இந்தப் பள்ளி தற்போது மெட்ரிகுலேசன் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு நன்கு செயல்பட்டு வருகின்றது. தனது தந்தையார் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகள் செய்து வந்தார். தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கத்தால் தொடங்கப்பட்ட அல் அமீன் மெட்ரிகுலேசன் பள்ளியின் வளர்ச்சிக்காகவும் பாடுபாட்டார்.
கும்பகோணம் நகரத்திலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் செயல்பட்டு வந்த பல்வேறு பொது நல அமைப்புகளிலும் பொறுப்புகளை வகித்து மக்கள் பணி ஆற்றியுள்ளார். அவர் அங்கம் வகித்த பொறுப்புகள்
- கும்பகோணம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர். 1973ஆம் ஆண்டு அதன் தலைவர்
- சென்னை காஸ்மோ பாலிடன் கிளப் உறுப்பினர்
- மைலாப்பூர் அகாடமியின் துணைத் தலைவர்
- கும்பகோணம் நேடிவ் மேல் நிலைப் பள்ளியின் தாளாளர்.
- இந்திய முந்திரி வளர்ச்சி கழகத்தின் உறுப்பினர்.
சமயப் பணிகள்:
ஒரு மிகச் சிறந்த முஸ்லிமாகத் திகழ்ந்த பக்கீர் முகம்மது இஸ்லாமிய சமயம் சார்ந்த பணிகளுக்கு வாரி வழங்கினார். மேலக்காவேரியிலிருந்த பள்ளிவாசலைப் புதுப்பித்துக் கட்ட நிதி வழங்கினார். கும்பகோணம் மற்றும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் புதிய பள்ளிவாசல்கள் கட்டிடவும், பள்ளிவாசல்களை விரிவுபடுத்தவும் தாராளமாக நிதி உதவி செய்தார். அரபி மதரஸாக்களுக்கும் பெருமளவு நிதி உதவி செய்துள்ளார். 1972ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மீலாது மாநாடு ஒன்றினை மிகப் பெரிய அளவில் நடத்தி மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றார். இம் மாநாட்டையொட்டி சிறப்பு மலர் ஒன்றை வெளியிடவும் துணை நின்றார்.
அரசியல் :
இளமையிலிருந்தே காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவர் அக்கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனாரின் நம்பிக்கைக்குரிய சீடராக விளங்கினார். 1967 முதல் 1970ம் ஆண்டு வரை கும்பகோணம் நகரக் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டார். இவரின் நேர்மையான கட்சிப் பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இவரை கும்பகோணம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக்கி காங்கிரஸ் கட்சி கௌரவித்தது.
1980 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கும்பகோணம் சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டார். (தி.மு.க காங்கிரஸ் – முஸ்லிம் லீக் கூட்டணி) இவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளராக மறைந்த எஸ்.ஆர். இராதா களத்தில் இருந்தார். இத் தேர்தலில் பக்கீர் முகம்மது அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர். இராதாவை விட 9623 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். (பக்கீர் முகம்மது 40,034, எஸ்.இராதா 35,415) 1980ம் ஆண்டு வரை நான்காண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார்.
1984 மற்றும் 1989ம் ஆண்டுகளில் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பக்கீர் முகம்மது கும்பகோணம் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். (காங்கிரஸ் – அ.தி.மு.க கூட்டணி) இந்த இரண்டு தேர்தல்களிலும் இத் தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தி.மு.க வின் வேட்பாளரான கல்யாணம். இனி ஓட்டு விவரங்களைப் பார்ப்போம்
1984தேர்தல்:
இ.எஸ்.எம். பக்கீர் முகம்மது (காங்கிரஸ்) 3, 35, 033
கல்யாணம் (தி.மு.க) 2, 15, 390
1989 தேர்தல்
இ.எஸ்.எம். பக்கீர் முகம்மது (காங்கிரஸ்) 3, 52, 492
கல்யாணம் (தி.மு.க) 2, 50, 547
ஏழாண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் கும்பகோணம் தொகுதி வளர்ச்சிக்காக மட்டுமின்றி பல்வேறு பொதுப் பிரச்னைகளுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் நிதி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் (1985-1989) தரை வழிப் போக்குவரத்துத் துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் (1990) பொறுப்புகள் வகித்தார். இந்தியாவிலிருந்து புனித ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும் பயணிகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட அரசு ஹஜ் நலக் குழுவின் உறுப்பினராக புனித மக்கா மற்றும் மதினா நகரங்களுக்குச் சென்று வந்தார். (1990) வியாபார விஷயமாகவும், அரசியல் விஷயமாகவும் மலேசியா, சவூதி அரேபியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஹாங்காங் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
நல்லிணக்க நாயகர்:
பக்கீர் முகம்மது சாகிப் சமய நல்லிணக்க நாயகராகத் திகழ்ந்தார். அனைத்து சமூக மக்களிடமும் சுமுக உறவைப் பேணினார். கும்பகோணம் நகர மக்களால் பெரிதும் மதிக்கப் பெற்ற ஒரு பிரமுகராக அவர் விளங்கினார். கும்பகோணம் மகாமகம் திருவிழாவைக் காணவரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதை வழங்கமாகக் கொண்டிருந்தார்.
தனது கம்பெனியில் பணியாற்றிய நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்களை அன்புடனும் பரிவுடனும் நடத்தினார். சிராஜுல் மில்லத் அப்துல் ஸமது சாகிப், வடகரை பக்கர் சாகிபு, கவிஞர் சாரண பாஸ்கரன், சொல்லின் செல்வர் எம்.எம்.பீர்முகம்மது சாகிப் போன்ற சமுதாயத் தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். அனைத்துத் தரப்பினரின் அன்பைப் பெற்றதன் காரணமாக சமுதாய மக்கள் இவரைத் ‘தம்பி’ என்று வாஞ்சையுடன் அழைத்தனர்.
குடும்பம்:
ஒன்பது பெண் பிள்ளைகளுக்கிடையே ஒரே ஒரு ஆண் பிள்ளை பக்கீர் முகம்மது சாகிபு. அதன் காரணமாகப் பெற்றோர்களால் செல்லமாக வளர்க்கப்பட்டார். அவரது தந்தையார் சேக் முகையதீன் இராவுத்தர் காலமான போது நான்கு பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே திருமணம் நடந்தேறியிருந்தது. மீதி ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் (சகோதரிகளுக்கும்) இவரே தந்தையின் ஸ்தானத்திலிருந்து திருமணங்களை நடத்தி வைத்தார்.
பக்கீர் முகம்மது சாகிபிற்கு 21.1.1960 அன்று திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் எம். ரஸ்யாபானு. இத்தம்பதியினருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் என நான்கு பிள்ளைகள். தந்தையாரின் மறைவிற்குப் பின்னர் மகன் கலீல் ‘மைதீன் புகையிலைக் கம்பெனியை’த் திறம்பட நடத்தி வருகிறார். தந்தையாரைப் போலவே அவரும் பொதுச் சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
முடிவுரை:
பக்கீர் முகம்மது சாகிப் 28.01.1991 அன்று தனது 54வது வயதில் காலமானார். அப்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து பொதுச் சேவையில் ஈடுபடுவார் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது அகால மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டு சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாகிப் ஆற்றிய இரங்கலுரை அனைவரின் நெஞ்சங்களையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது.
கும்பகோணம் பக்கீர் முகம்மது சாகிப் ஒரு மிகச் சிறந்த முஸ்லிமாக. மிகச் சிறந்த மனிதராக விளங்கினார். ‘வாழ்வை விட சாவு எல்லோருக்குமானது எல்லோரும் இறக்கிறார்கள். ஆனால் எல்லோருமே வாழ்ந்து விடுவதில்லை’ என்கிறார் அறிஞர் ஆலன் சாக்ஸ். ஆம் பக்கீர் முகம்மது சாகிப் வாழ்ந்து காட்டியவர். ‘தொண்டு செய்யாத மனித வாழ்க்கை மிருக வாழ்க்கை’ என்கிறான் வேறொரு அறிஞன். மக்கள் தொண்டு செய்தோருக்கு ஒரு போதும் மரணமில்லை. மரணத்திற்குப் பிறகும் அவர்கள் மக்களின் நெஞ்சங்களில் வாழ்வார்கள். கும்பகோணம் பக்கீர் முகம்மது சாகிபும் நமது நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள … 99767 35561




































