சமூக நீதி பிரகடனத்தின் நூற்றாண்டும், தமிழ்நாட்டில் தொடரும் இட ஒதுக்கீடு சட்டப் போராட்டமும்

(சமூகநீதி முரசு ஜனவரி 2021 இதழில் வெளிவந்த “சாதிவாரி கணக்கெடுப்பும் முஸ்லிம் சமுதாயத்தின் கடமையும்” என்ற கட்டுரையின் தொடர்ச்சி)

இந்திய விடுதலைக்கு முந்தைய சென்னை மாகாணத்தில் ஆட்சி செய்த நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை எண் 613 நாள் 16 .9 .1921 அன்று வெளியிட்டது அந்த வகையில் சமூகநீதி பிரகடனத்தின் நூற்றாண்டு இது. இந்த நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை காப்பதற்கு சட்டப் போராட்டம் தொடர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டு வரலாற்றை இப்போது பார்ப்போம்.

ஆகஸ்ட், 15, 1947 இந்தியா சுதந்திரமடைந்ததும் முந்தைய வெள்ளைய அரசு நடைமுறைப்படுத்தி வந்த சட்டங்களில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு தொடரப்பட்டன.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை நவம்பர் 21, 1947 அன்று வெளியிடப்பட்ட அரசு ஆணை எம்.எஸ்.எண் 3447ன் படி பிராமணரல்லாத இந்துக்கள் 14 இடங்களில் 6, பிற்படுத்தப்பட்ட வகுப்பு இந்துக்கள் 14 இடங்களில் 2 ,

தாழ்த்தப்பட்டோர் 14 இடங்களில் 2 , ஆங்கிலோ இந்தியர்கள் இந்திய கிறிஸ்தவர்கள் 14 இடங்களில் 1, முஸ்லிம்கள் 14 இடங்களில் 1 எனவும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு அரசியல் நிர்ணய சபையிலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடும் பிரச்சனையாக்கப்பட்டது. 

சண்பகம் துரைராஜ் என்ற பிராமராண அம்மையார் இடஒதுக்கீட்டின் காரணமாக தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் இப்பெண்மணிக்காக ஆஜரான வழக்கறிஞர் யார் தெரியுமா? டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சட்ட வரைவுக்குழு உறுப்பினராக செயல்பட்ட அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் தான். 

அவரது வாதத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிதத்து. இத்தீர்ப்பை எதிர்த்து குமாரசாமி ராஜா தலைமையிலான சென்னை மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் ஏப்ரல் 9, 1951ல் வகுப்புவாரி ஆணைக்கு எதிராகவே தீர்ப்பளித்தது. 

இதே போல் சீனிவாசன் என்பவரும் தான் பிராமணர் என்பதால் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வகுப்புவாரி 

ஆணைக்கு எதிராக தீர்ப்புச் சொன்னது. 

இதனைத் தொடர்ந்து தான் தமிழகத்தில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான போராட்டம் வீறுகொண்டு எழுந்தது, தந்தை பெரியார் மூட்டிய தீ பட்டி தொட்டியெங்கும் கொழுந்துவிட்டெரிந்தது. 

நிலமையின் விபரீதத்தை உணர்ந்த அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு வகுப்புவாரி ஆணைக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தை திருத்த முன்வந்து மே 29 ,1951 அன்று அதற்கான திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் 

முன்மொழிந்தார். 

கடும் வாக்குவாதத்திற்கு பின், ஜூன் 1, 1957 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 243 எதிராக 5 வாக்குகள் பதிவாகி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. 

அரசியலமைப்புச் சட்டத்தில் விதி 15ல் புதிதாக 4 என்ற உள்பிரிவு சேர்க்கப்பட்டது. அதாவது 16(4) வேலை வாய்ப்பிற்கு மட்டும் என்றிருந்த இடஒதுக்கீடு, 15(4) கல்வியிலும் இடஒதுக்கீடு என்ற திருத்தம் செய்யப்பட்டது.

சட்டதிருத்தம் நிறைவேறியதும் சென்னை மாகாணத்தில் பி.எஸ் குமாரசாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை செப்டம்பர் 15, 1951 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு 16 சதவீதம் என 41 சதவீதத்தை ஒதுக்கீடு செய்தது. 

1967ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டு அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி மலர்ந்தது. இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முக்கிய காரண 

கர்த்தாக்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 

1969 பிப்ரவரி 3 அன்று அண்ணா காலமானதும் கலைஞர் மு.கருணாநிதி முதல்வர் ஆனார். அவர் முதல்வர் பொறுப்பேற்றதும் சமூக நலத்துறை அரசாணை எம் எஸ் எண் 842 மூலம் பிற்பட்டோர் நலக்குழுவை அமைத்தார். 

இக்குழுவிற்கு ஆ.நா சட்டநாதன் தலைவராகவும் ஓய்வு பெற்ற மாவட்ட செசன்ஸ் நீதிபதிகள் சூ.சின்னப்பன், மு.அ ஜமால் ஹுசேன் உறுப்பினர்களாகவும், பிற்பட்டோர் நலத்துறை இயக்குனர் செயலாளராகவும் செயல்பட்டனர்.

இக்குழு தனது அறிக்கையை நவம்பர் 26, 1970ல் முதல் அமைச்சரிடம் அளித்தது. அன்று தமிழ்நாட்டின் மக்கள் தொகை 4 கோடியே 34 ஆயிரத்து 200 என்றும், அதில் பிற்பட்ட வகுப்பினர் 2 கோடியே 4லட்சத்து 67 ஆயிரத்து 928 

அதாவது 51.13 சதவீதம் என குறிப்பிட்டு பிற்பட்ட வகுப்பினராக 105 சாதிபிரிவுகளை பட்டியலிட்டது.

முஸ்லிம்களில் லெப்பை, மாப்பிள்ளா, தூதேகுலா என மூன்றை குறிப்பிட்டது. 7 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கும் நிலையில் 2:12 என்ற நிலையை மாற்றி 1:14 என்று குறைத்திருப்பது முஸ்லிம்களுக்கு பேரிழப்பு என அக்குழு 

சுட்டிக்காட்டியது. 

சட்டநாதன் குழு அறிக்கைக்குப்பின் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்திய முதல்வர் கலைஞர் கருணாநிதி, பிற்பட்டோருக்கு 25சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகவும், தாழ்த்தப்பட்டோருக்கு 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார். 

1971ல் சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்த முஸ்லிம் லீக் உறுப்பினர்கள், பிற்பட்டோர் பட்டியலில் உர்தூ பேசும் முஸ்லிம்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து உர்தூ பேசும் 

முஸ்லிம்களையும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து கலைஞர் கருணாநிதி உத்தரவிட்டார். 

வருவாய் துறையில் சான்றிதழ் பெறும் முஸ்லிம்கள் கடற்கரை பகுதிகளில் மரைக்காயர் என்றும், உள்நாட்டுப் பகுதிகளில் ராவுத்தர் என்றும் குறிப்பிட்டு சான்றிதழ் பெற்று வந்தனர். இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. 

இதுபற்றியும் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். 

அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், லெப்பை என்பது தமிழ் ,உர்தூ பேசுகின்ற மரைக்காயர், ராவுத்தரையும் உள்ளடக்கியதுதான் என அரசாணை பிறப்பித்தார். 

69 சதவிகித இட ஒதுக்கீடும் அதை காக்கின்ற முயற்சியும்:

எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சமூகநீதி கொள்கைக்கு பெரும் சோதனை ஏற்பட்டது. இடஒதுக்கீட்டின் அளவுகோல் வருமான வரம்பாக அறிவிக்கப்பட்டு ஒன்பதாயிரம் ரூபாய் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அ தி மு க தவிர தமிழகம் ஒன்றுபட்டு இதனை கடுமையாக எதிர்த்தது .இச்சமயத்தில் 1980 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று அதில் அ தி மு க படுதோல்வி அடைந்தது. 

இத்தோல்விக்கு இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணையே காரணம் என உணர்ந்த எம்.ஜி.ஆர் அந்த அரசாணையை ரத்து செய்தார். அத்துடன் யாரும் எதிர்பாறா வகையில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 

சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தினார். தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 18 சதவீதத்தையும் சேர்த்தால் இடஒதுக்கீடு 68 சதவீதமாக உயர்ந்தது. இந்தியாவிலேயே அதிக அளவில் ஒடஒதுக்கீடு அளிக்கும் மாநிலம் தமிழ்நாடு என்றானது. 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 1989 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று கலைஞர் கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அச்சமயம் மலைவாழ் மக்களுக்கான இடஒதுக்கீடு பற்றி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் 

அடிப்படையில் மலைவாழ் மக்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69 சதவீதமாக உயர்ந்தது. 

இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதைமீறி 69சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது சட்ட விரோதமானது என வழக்கு தொடரப்பட்டது. 

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துவிட்டதால் 69 சதவீத இடஒதுக்கீடே தொடரலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் மேல்முறையீடு செய்தனர். 

இதனை விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் பதிலைக்கூட கேட்காமல் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு அளிக்க இடைக்கால தடைவிதித்து நவம்பர் 16, 1992ல் உத்தரவிட்டது. விளக்கம் சொல்கிறோம் 

என தமிழக அரசு ஜனவரி 7, 1993ல் சீராய்வு மனு அளித்ததும் இடைக்கால தடையை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்தது. 

69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற தமிழகம் ஒன்றிணைந்து செயல்பட்டது. இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுகோள் விடுத்து நவம்பர் 8, 1993ல் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தொடர்ந்து 16ஆம் தேதி முழு அடைப்பு போராட்டமும் 26 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டமும் நடைபெற்றது. 

“அரசியல் சட்டம் 31(பி) 31(சி) பிரிவுகளின் கீழ் தனிசட்டம் ஒன்றை தமிழக அரசே இயற்றி அதை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கலாம். இதனால் இடஒதுக்கீட்டை எதிர்த்து 

எவரும் வழக்கு தொடுக்கவோ ,எந்த நீதிமன்றமும் விசாரிக்கச் செய்யவோ முடியாதபடி செய்யலாம்.” என்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்தை ஏற்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாடு தனிச்சட்டம் 45/1994 

இயற்றப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து ஜூன் 24, 1994 அன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சி தூதுக்குழு டெல்லி சென்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்து 

நாடாளுமன்றத்தில் தமிழக சட்டம் நிறைவேறுவதற்கு முயற்சி மேற்கொண்டது. 

1994 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் கூடிய நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் “தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டை 9வது அட்டவணையில் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தின் 76 ஆவது திருத்தம் ஒருமனதாக 

நிறைவேறியது. செப்டம்பர் 1, 1994ல் குடியரசுத்தலைவர் சங்கர் தயாள் சர்மா இதற்கு ஒப்புதல் அளித்தார்

ஆயினும் தமிழக அரசின் 1994 ஆம் ஆண்டு 45 வது சட்டம் செல்லும் தன்மையை எதிர்த்தும், வளமான பிரிவினரை 

இடஒதுக்கீட்டிலிருந்து நீக்குவது குறித்தும் தொடர்ந்து வழக்குகள் நடைபெற்றன. 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 50 சதவீதத்திற்கு அதிகமாக இட ஒதுக்கீடு செய்ய முனையும் மாநில அரசு எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களை பிற்பட்டோர் நல ஆணையத்திடம் அளிக்க வேண்டும், அந்த ஆணையம் அவ் விவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவு குறித்து ஓராண்டுக்குள் தீர்மானிக்க வேண்டும் என்று ஜூலை 13 ,2010 அன்று உத்தரவிட்டது.

நீதியரசர் எம்எஸ் ஜனார்த்தனம் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இது பற்றிய விவரங்களை ஆய்வு செய்து 8 .7. 2011 அன்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது .தமிழ்நாடு சட்டம் 45 /1994 ஐ பொருத்தவரை இட ஒதுக்கீட்டில் இருந்து வளமான பிரிவினர் என்று எவரையும் நீக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று அறிவித்தது. இதனை ஏற்று தமிழக அரசு 11 7 2011 அன்று ஆணை பிறப்பித்தது.

தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீடு இந்த அளவிற்கு பாதுகாப்பு பெற்ற பின்பும் இதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் பலரும் வழக்குகளைத் தொடுத்தனர். சட்டப் போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

2012ஆம் ஆண்டில் சி.பி .காயத்ரி என்ற மாணவி சார்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராகஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு பிப்ரவரி 2, 2021 அன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு கொண்டு வந்த இந்த இட ஒதுக்கீடு சட்டம் இந்திரா தானே வழக்கில் அளித்த தீர்ப்பின்படி இல்லை என்பதால் அதை அரசமைப்புச் சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும், 69 சதவீத இட ஒதுக்கீடு ஆனது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14 ,15 ,16 ஆகியவற்றின் கீழ் பொதுப் பிரிவு மாணவர்களுக்கும் அரசு பணிக்கு செல்வோருக்கும் உள்ள அடிப்படை உரிமைகளை பாதிக்கச் செய்கிறது ஆகவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ” இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரித்து உத்தரவிட வேண்டும்; மராத்தா இட ஒதுக்கீடு வழக்குடன் சேர்த்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,”இது முடிந்து போன விஷயம்; இந்த வழக்கே பயனற்றதாகி விட்டது என குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி அமர்வு தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆக சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இட ஒதுக்கீட்டின் பலனை முழுமையாக பெற சாதிவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம் சமுதாயத்தின் கடமை:

கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கி கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு செப்டம்பர் 13, 2007 அன்று ஆணை பிறப்பித்தது. அது எந்த சட்ட சிக்கலும் 

இன்றி இன்றும் நடைமுறையில் உள்ளது.

இடஒதுக்கீட்டை பாதுக்காக்க சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்க, இடஒதுக்கீட்டின் பலனை முஸ்லிம் சமுதாயம் முழுமையாகப் பெற விழிப்புணர்வு பெற வேண்டியது 

அவசியம். 

இடஒதுக்கீட்டின் பலனை முழுமையாக அனுபவிப்பதற்கே சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கை வலுப்பெறுகிறது. அப்படி கணக்கெடுக்கப்பட்டால் கூட முஸ்லிம் சமுதாயத்தை குழப்ப வேண்டும் என்பதற்காக ஆளுக்கு ஆள் 

கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதில் தெளிவாக இருக்க வேண்டும். சாதி என குறிப்பிடுவது கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுவதற்காகவே.

இந்திய நடுவன் அரசு பட்டியலில் இதர பிற்பட்டோர் வகுப்பில் தமிழக முஸ்லிம்களில் லெப்பை (ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டவர்கள்) மாப்பிள்ளா, தூதேகுலா, பட்டாணி, ஷேக் மற்றும் தக்னி இடம்பெற்றுள்ளது. இதில் தக்னி 24.8.2010 அன்று இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ், உர்தூ பேசுகின்ற மரைக்காயர், ராவுத்தரை உள்ளடக்கிய லெப்பை, தக்னி, மாப்பிள்ளா, தூதேகுலா, அன்ஸர், செய்யது, ஷேக் ஆகிய ஏழுபிரிவினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என பட்டியலிடப்பட்டுள்ளனர் .இதில் லெப்பை, தமிழ் பேசுவோர்,தக்னி உர்தூ பேசுவோர், மாப்பிள்ளா மலையாளம் பேசுவோர், தூதேகுலா தெலுங்கு பேசும் முஸ்லிம்கள். 

ஆக மத்தியிலும் தமிழ்நாட்டிலும் இடஒதுக்கீட்டின் பலனைப சிக்கலின்றி முழுமையாகப்பெற லெப்பை, தக்னி, மாப்பிள்ளா, தூதே குலா என்பனவற்றில் ஒன்றை குறிப்பிட்டு சான்று பெறுவதே பொருத்தமாக இருக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் 

இதில் ஒன்றை குறிப்பிடுவதே இடஒதுக்கீட்டின் பலனை முழுமையாகப் பெறுவதற்கு சாதகமாக அமையும் . இதில் முஸ்லிம் சமுதாயம் விழிப்புடன் கவனம் செலுத்த வேண்டும்.