வாசித்து வாழ்வோம்..15 சேயன் இப்ராகிம்

தேங்கையாரின் கை வண்ணத்தில் வெளிவந்துள்ள

“ இறைமறையின் இதயம் – யாஸீன் ஸுறா”

ஆலிம், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், அரபிக் கல்லூரிப் பேராசிரியர் எனப் பன்முகத் தன்மைகள் கொண்டிருக்கிற, ஆலிம் கவிஞர் என தமிழக முஸ்லிம்களால் அறியப்பட்டு வரும் தேங்கை ஷர்ஃபுத்தீன் மிஸ்பாஹியின் கைவண்ணத்தில் அண்மையில் வெளி வந்திருக்கும் நூல் “இறை மறையின் இதயம் – யாஸீன் ஸுறா” என்ற நூலாகும்.

அருள் மறையாம் “திருக்குர்ஆனின் இதயம்” எனக் கூறப்படுகின்ற யாஸீன் ஸுறாவில் அருளப்பட்டுள்ள 83 வசனங்களுக்கு 45 அத்தியாயங்களில் இந் நூலில் தனது விரிவுரையை எழுதியுள்ளார்.

ஆலிம் கவிஞரின் தமிழ் நடை நம்மை சொக்க வைக்கின்றது. நூல் முழுவதும் வார்த்தைகள் நர்த்தனமாடுகின்றன. விரிவுரைக்கு இடையிடையே தக்கலை ஞானமாமேதை பீர்முகம்மது அப்பா, கவிமாமணி தி.மு.அப்துல் காதர், சிராஜ் அப்துல் ஹை சாகிப், தக்கலை ஹலீமா, திருவள்ளுவர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோரின் சிறந்த கவிதைவரிகளையும் பொருத்தமான இடங்களில் இடம் பெறச் செய்துள்ளார்.

அத்தியாயங்களுக்குக் கவித்துவமான தலைப்புகளைக் கொடுத்துள்ளார். “கனிகளைப் பயிர்களைக் கனியாய்த் தருபவன்” “மணக்கும் மலர்களில் மகரந்தச் சேர்க்கை”, “பகலை உரித்தலும் பகலவன் உலவலும்”, “சொக்க வைத்திடும் சுவனத்துச் சுகங்கள்”, “குழந்தை போல் மனிதர்கள் குழைந்திடும் முதுமை” இவை சில அத்தியாயங்களுக்கு அவர் சூட்டியுள்ள தலைப்புகள்.

பகலை உரித்தலும் பகலவன் உலவலும் (அத்தியாயம் 20) சுந்தர நிலவும் சூரிய மண்டலமும் (அத்தியாயம் 21) ஆகிய அத்தியாயங்களில் சூரியன், சந்திரன், பூமி ஆகியன குறித்த பல அறிவியல் செய்திகளை இடம் பெறச் செய்துள்ளார். இந்த அறிவியல் செய்திகள் யாஸீன் ஸுறாவின் 37, 38, 39 மற்றும் 40ம் வசனங்களுடன் எங்ஙனம் பொருந்திப் போகின்றன என்பதையும் விளக்கியுள்ளார். இவற்றைப் படிக்கின்ற போது குர்ஆன் வசனங்களின் முழுப் பொருளையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. ஒரு வானவியல் நூலைப் படித்தது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

“கால் நடைப் பயன்களைக் கருத்தில் கொள்வீர்” என்ற அத்தியாயத்தில் (37) யாஸீன் ஸுறாவின் 71, 72, 73 ஆகிய வசனங்களுக்கு விரிவுரை எழுதியுள்ள நூலாசிரியர் கால் நடைகள் மனிதர்களுக்கு எந்தெந்த வழிகளில் பயன்படுகிறது என்பதையும் பட்டியலிட்டுள்ளார். பசுவதை கூடாது என்ற பெயரால் மனிதவதையில் ஈடுபட்டுவருகின்ற இந்துத்துவ வாதிகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் ரிக் வேதத்திலும் இன்ன பிற இந்து சமய நூல்களிலும் மாட்டிறைச்சியின் மகிமை பற்றி எழுதியுள்ள பல்வேறு செய்திகளையும் இடம் பெறச் செய்துள்ளார். 

“மாமறை ஒளியில் மனிதக் கருவவளர்ச்சி” என்ற அத்தியாயத்தில் (40) மனிதக் கருவின் பல்வேறு வளர்ச்சி நிலைகள் குறித்து இறைவன் அருளியுள்ள வசனங்கள் (யாஸீன் ஸுறா 77) எவ்வாறு இன்றைய  அறிவியல் கருத்துக்களோடு இசைந்து போகின்றன என்பதை விளக்கியுள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த முன்னணி மருத்துவ நிபுணர் டாக்டர் மாரிஸ் புகைல் எழுதியுள்ள விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும் என்ற நூலிலிருந்து பல அறிவியல் உண்மைகளை மேற்கோள் காட்டியுள்ளார். “நிச்சயமாக நாம் மனிதனை இந்திரியத்திலிருந்து படைத்தோம்” என்ற இறைமறையின் வசனங்களை விளக்க வந்த அவர் “மனிதா அருவருப்பான உன் இந்திரியம் முதல் நிலை, அழுகி விடும் சடலம் உன் முடிவு நிலை, அசுத்தமான கழிவுப் பொருளை உனக்குள்ளே (உன் குடலுக்குள்) தாங்கி நிற்பது உன் இடை நிலை, இவ்வாறிருக்கும் போது இறுமாப்பு உன்னிடமிருப்பது எவ்வாறு பொருந்தும். “என ஹழ்ரத் அலி(ரலி) அவர்கள் மனித இனத்தை நோக்கி வினவியதை மேற்கோள் காட்டுகின்றார்”. இந்த அத்தியாயத்தில் கரு வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களை அறிவியல் பூர்வமாக குர்ஆனின் வசனங்களோடு அவர் விவரித்துள்ள பாங்கு போற்றுதற்குரியது. 

யாஸீன் ஸுராக்களுக்கு விரிவுரை எழுதப் போந்த நூலாசிரியர், அந்த ஸுராக்களில் காணப்படும் செய்திகளோடு வேறு பல அத்தியாயங்களில் இறைவனால் அருளப்பெற்ற தொடர்புடைய வசனங்களையும் எடுத்தாண்டுள்ளார். இது இந்த நூலின் சிறப்பிற்கு மேலும் மெருகூட்டுகிறது.

மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா P.A. ஹாஜா முயினுத்தீன் ஹழ்ரத், தமிழ்மாமணி பேராசிரியர் தி.மு. அப்துல் காதர், நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, டாக்டர் K.V.S.ஹபீப் முகம்மது உள்ளிட்ட பெருமக்கள் இந்த நூலுக்கு மதிப்புரையும், அணிந்துரையும், வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். “மீஸான் தராசின் எடைக்கற்கள்” என்ற தலைப்பில் தமிழ் மாமணி தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதியுள்ள நீண்ட அணிந்துரை நூலின் சிறப்பினை விளக்க வல்லதாக அமைந்துள்ளது.

தீங்கையார் செய்தாலும் திருக்குர்ஆன் ஓதக் கேட்டால்

தீன்கையார் ஆகிவிடுவார் மோதிப் பார்க்கக் கை

ஓங்கியார் வந்தாலும் அவர் ஓதிப் பார்க்கக் கேட்பார்

உயர்த்திய கரமோ ஆமீன் உரைக்க உயர்ந்திடும்..

பாங்கையார் கேட்டாலும் பதிலாகப் பாங்கு சொல்லும் 

பாங்கினை இவர் பாட்டைக் கேட்டார் எதிரொலிப்பார்

தேங்கையார் யாஸீன் நூலைத் தீண்டினாலே போதும்

திக்ரு செய்யும் மூச்செல்லாம் ஸலவாத் ஆகும்

என்று அணிந்துரையில் காணப்படும் கவிமாமணியின் கவிதைவரிகள் பொருளுரைகளேயன்றி புகழுரைகளல்ல.

“இது ஒரு புத்தகம் மட்டுமல்ல, ஒரு புதையல் என்ற உண்மையை இந்தத் தமிழ் முஸ்லிம் சமுதாயம் புரிந்து  கொண்டு இந்நூலை வாங்கிப் படிக்கட்டும். இதன் மூலம் இறையியல் பாடத்தைக் கற்கட்டும். இந்த இறை மறையின் இதயம், இதயமுள்ள ஒவ்வொருவரின் இரு கரங்களாலும் இனிதாக அரவணைக்கப்படுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தன்னுடைய எல்லையில்லாப் பேரருளை என்றும் பொழிந்தருள்வானாக” என தனது முன்னுரையின் இறுதியில் நூலாசிரியர் இறைஞ்சுகின்றார். அவரது ஆழிய கருத்துக்களை நானும் முன்மொழிகிறேன்.  

அறிவியலையும், மார்க்கத்தையும் இணைத்து எழுதப்பட்ட இந்நூல் வாசகர்களைப் பெரிதும் ஈர்க்கும். தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகமான சென்னை யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் இந்நூலை வெளியிட்டுள்ளது.
அதன் தொலைபேசி – 044 28343385