UNHRC இலிருந்து அமெரிக்கா வெளியேறியது

உலக நாடுகளுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. வாஷிங்டனின் இந்த வெளியேற்றத்தை சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் கண்டித்துள்ளதோடு, உலக நாடுகளின் தலைவர்கள் தமது வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமைப் பேரவை இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியே வாஷிங்டன் வெளியேறுவதாக அறிவித்தது. ஜூன் 19 ஆம் தேதி ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹெலி இத்தீர்மானத்தை அறிவித்தார். மனித உரிமைப் பேரவையில் நிலைத்திருப்பதற்கான யோசனை தமக்கில்லை என்பதனால் இத்தீர்மானத்தை எடுத்ததாக வாஷிங்டனில் அவர் ஊடகவியலாளர் மத்தியில் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ஸைத் ராஇத் அல் ஹுஸைன் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாகவும் ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த முன்வர வேண்டும். பின்நோக்கிச் செல்லக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனநாயகத்துக்கு ஆதரவான நாடு என்ற வகையில் அமெரிக்கா விலகிச் செல்வது ஆபத்தானது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. பிரிட்டன் வெளிவிவகாரச் செயலாளர் மொரிஸ் ஜோன்சன் இது வருந்தத் தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் இம்முடிவு தமக்கு உட்சாகமூட்டுவதாகக் கூறியுள்ளது.
காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேலின் இனவாத வன்முறைகளையும் நில ஆக்கிரமிப்பையும் எதிர்த்து அமைதிப் பேரணி நடத்தியவர்கள் மீது கடந்த மாதம் இஸ்ரேல் கட்டவிழ்த்த கொலைவெறியாட்டம் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒரு சில தினங்களிலேயே வாஷிங்டன் பேரவையிலிருந்து வெளியேறியது.
ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்ட பாதுகாப்புச் சபையில் 47 அங்கத்துவ நாடுகள் உள்ளன. அதிலுள்ள ஐந்து நிரந்த உறுப்பு நாடுகளில் ஒன்றாகவே அமெரிக்க இருந்து வந்தது. மத்திய கிழக்கில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலில் வன்முறைகள் மற்றும் படுகொலைகள் குறித்து இதுவரை ஐ.நா. பாதுகாப்புச் சபை 70 இற்கும் மேற்பட்ட தீர்மானங்களை வெளியிட்டபோதும் அவற்றை நடைமுறைப்படுத்தாத வண்ணம் வொஷிங்டன் தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்தது. பலஸ்தீனர்களைப் பொறுத்தவரை பாதுகாப்புச் சபை அவர்களுக்கு எதிரானதே.
ஐ.நா. பாதுகாப்புச் சபையிலிருந்து வாஷிங்டன் வெளியேறியுள்ளது டொனால்ட் ட்ரம்பின் நிருவாகத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான திருப்பமாகும். உலக நாடுகளை இந்தத் தீர்மானம் மிகுந்த அரசியல் குழப்பங்களில் ஆழ்த்தப் போவதாக அல் ஜஸீராவின் வாஷிங்டன் செய்தியாளர் ரோசிலான் ஜோர்தான் தெரிவிக்கின்றார்.
ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த ட்ரம்ப், தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக பாதுகாப்புச் சபையிலிருந்து வெளியேறியுள்ளார். ட்ரம்பின் சமீபத்திய நகர்வுகள் அவர் சியோனிசத்தின் புதிய தலைமைத்துவத்தை ஏற்றுள்ளாரா என்ற சந்தேகத்தை பரவலாக எழுப்பியுள்ளது.