


தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக்களும் போராட்டங்களும் வலுத்து வருகின்றன.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராக இந்தியாவில் குடியுரிமை வழங்குவதில் முதல்முறையாக மதரீதியான பாகுபாடு காட்டப்படுகிறது என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும் இந்த சட்ட திருத்தத்தை தேசிய குடியுரிமை பதிவேட்டோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் போது இஸ்லாமியர்களின் குடியுரிமைக்கு ஆபத்தாக அமையும் என்று நம்புவதால் இஸ்லாமியர்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக வீதிகளில் போராட ஆரம்பித்துள்ளனர்.
அதே நேரத்தில் இது இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் தேவையற்ற அச்சம் இஸ்லாமியர்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன என்றும் அரசாங்கம் தரப்பில் சொல்லப்படுகின்றது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கும், தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இது வெளிநாட்டிலிருந்து வரும் சட்ட விரோத குடியேறிகளை நெறிப்படுத்தவே என்றும் இந்த சட்ட திருத்தத்திற்கு வக்காலத்து வாங்கப்படுகின்றது.
ஆனாலும் இதை நம்ப மறுக்கும் எதிர்ப்பாளர்கள் இந்த சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டங்களை வீரியமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தங்கள் மத பிரச்சினைகளாக கருதப்பட்ட பாபர் மசூதி தீர்ப்பு, முத்தலாக் பிரச்சினை போன்ற விசயங்களை அமைதியாக கடந்து வந்த இந்திய முஸ்லிம்கள் இந்த குடியுரிமை பிரச்சனையில் இவ்வளவு தீவிரமாக போராட்டக் களம் காண்பது ஏன்? உண்மையில் பிரச்சினை தான் என்ன?
குடியுரிமை சட்ட திருத்தம் எதற்கு?
ஒரு அடிப்படை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்வதையே சட்ட திருத்தம் என்று சொல்கிறோம்.
இந்திய மக்களின் குடியுரிமை பற்றிய தெளிவான அடிப்படைச் சட்டம் தான் இந்திய குடியுரிமை சட்டம் 1955.
இந்த சட்டத்தில் சில திருத்தங்களை இந்திய அரசாங்கம் மேற்கொண்டது. இந்த திருத்தங்களுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சம்மதம் பெறப்பட்டு சென்ற டிசம்பர் 12- ஆம் தியதி குடியரசுத் தலைவர் அவர்களின் கையெழுத்து பெறப்பட்டு அமலுக்கு வந்தது.
மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படுவதற்கான சூழ்நிலையை புரிந்து கொண்டால் மட்டுமே இந்த எதிர்ப்புகளுக்கான நியாயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
வங்காளதேசத்துடன் எல்லையை பங்கிடும் அஸ்ஸாமில் எல்லைக்கு அப்பாலில் இருந்து பலரும் சட்ட விரோதமாக குடியேறியதை தொடர்ந்து 1951 – ல் அஸ்ஸாமில் முதல் முறையாக தேசிய குடியுரிமை பதிவேடு பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் அஸ்ஸாம் மாநிலத்தின் அன்றைய மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் சட்ட விரோத குடியேறிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற எந்த விவரமும் இல்லை.
இப்படி தொடர்ந்து எல்லைக்கு அப்பால் இருந்து சட்ட விரோதமாக குடியெறுபவர்களை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை அஸ்ஸாமின் பூர்வ குடிகள் முன்னெடுத்தனர். பாகிஸ்தானுடன் இருந்த கிழக்கு வங்காளத்தை 1971 – ல் நடந்த போரின் மூலமாக இந்திய ராணுவம் தான் வங்காளதேசம் என்ற தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்தது.
இந்தப் போரின் போதும் பலர் இந்தியாவுக்குள் நுழைந்து அஸ்ஸாமில் குடியேறினர். இப்படி அதிகமானவர்கள் வந்து குடியேறியதால் தங்களுக்கும், தங்கள் கலாசாரத்துக்கும் ஆபத்து வரும் என்று எண்ணிய அஸ்ஸாமின் பூர்வ குடிமக்கள் மத வேறுபாடின்றி அவர்கள் அனைவர்களையும் துரத்த பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அதன் இறுதியில் 1985- ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தோடு ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. வரலாறு அதை அஸ்ஸாம் அக்கார்டு என்று பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அஸ்ஸாமில் குடியுரிமை பதிவேட்டை புதுப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது.
1971, மார்ச் 26 அன்று வங்காளதேசத்திற்கான போர் ஆரம்பித்த காரணத்தால் அந்த தேதிக்கு முந்தைய நாள் வரை அஸ்ஸாமில் குடியிருந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என்ற திட்டத்தோடு அந்த பதிவேட்டை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
1971, மார்ச் 25 க்கு முன்பு அஸ்ஸாமில் குடியிருந்ததற்கான ஆதாரத்தையோ அல்லது அவர்களின் இரத்த வாரிசு என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரத்தையோ ஒருவர் வழங்கினால் மட்டுமே அவர்களின் பெயர் இந்த பதிவேட்டில் பதிய முடியும்.
அப்படி அந்த பதிவேட்டில் பதியப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை. அப்படி ஆவணங்கள் காட்ட முடியாதவர்கள் சட்ட விரோத குடியேறியகளாக கருதப்பட்டு நாடு கடத்தப்படவோ அல்லது சட்ட விரோத குடியேறிகளுக்கான பிரத்யேகமாக தயாரிக்கபட்ட சிறைசாலைகளுக்கோ அனுப்பி வைக்கப்படுவர்.
இந்த பதிவேடு பதிவு செய்யும் பணி பல சிக்கல்களுக்கு பிறகு 2013-ல் உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஆரம்பித்தது.
சென்ற 2019ஆகஸ்டு மாதம் இந்த பதிவேட்டை அரசு வெளியிட்டது. சுமார் 19 லட்சம் பேர் அந்த பதிவேட்டில் பெயர் இல்லாமல் ஒரே இரவில் இந்திய குடியுரிமை பிடுங்கப்பட்டு சட்ட விரோத குடியேறிகளாக மாறினர். இதில் ஒரு பெரும் பகுதி ஆவணங்களை காட்ட முடியாமல் போன இந்தியர்கள் என்பது தான் கவலையான விசயம்.
இப்படி ஒரே நாளில் சட்ட விரோத குடியேறிகளாக ஆக்கப்பட்டவர்களில் சுமார் 5 லட்சம் பேர் மட்டுமே இஸ்லாமியர்கள். மீதி இருக்கும் 13 லட்சம் பேர் ஹிந்துக்கள். இதில் அதிர்ச்சி அடைந்த மாநில பா. ஜ. க இந்த பதிவேட்டை ஏற்றுக் கொள்ள எதிர்ப்பு காட்டியது.
இந்த பதிவேடு தன்னுடைய வாக்கு வங்கியை பாதிப்புக்குள்ளாக்கும் என்று நினைத்தவர்கள் இந்த 13 லட்சம் பேரின் குடியுரிமையை பாதுகாக்க திட்டம் வகுத்தனர்.
அந்த திட்டத்தின் காரணமாக உருவானதே குடியுரிமை திருத்த சட்டம். 13 லட்சம் ஹிந்துக்களின் குடியுரிமையில் அக்கறை செலுத்திய பா. ஜ. க அந்த 5 லட்சம் முஸ்லிம்களை வசதியாக கைகழுவி விட்டு விட்டனர்.
அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஆவணங்களை காட்டி குடிமக்களாக முடியாத அந்த 13 லட்சம் ஹிந்துக்களை பின்வாசல் வழியாக இந்திய குடியுரிமையை வழங்க பா.ஜ.க.வால் கண்டெடுக்கப்பட்ட ஆயுதம் தான் குடியுரிமை திருத்த சட்டம்.
இந்த சட்டத் திருத்தத்தின் படி எந்த ஆவணமும் இன்றி சட்ட விரோதமாக குடியேறிய 13 லட்சம் ஹிந்துக்கள் இந்திய குடியுரிமையை பெற முடியும். அவர்கள் பாகிஸ்தானில் பிறந்து இருந்தாலும் சரி, வங்காள தேசத்தில் பிறந்து இருந்தாலும் சரி.
ஆனால் அதே ஹிந்து மக்களோடு காலம் காலமாக வாழ்ந்த முஸ்லிம்கள் மட்டும் தொடர்ந்து சட்ட விரோத குடிமக்களாக நீடிப்பர். ஏன் என்றால் இந்த சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு பொருந்தாது.
ஒரு அரசாங்கம் இந்த நாட்டின் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி ஒரு குடியுரிமை பதிவேட்டை தயார் செய்கிறது. அந்த பதிவேட்டை தயார் செய்ய விதிகளையும் அரசாங்கமே போடுகின்றது. அதன் அடிப்படையில் அந்த பதிவேட்டை தயாரித்து அரசாங்கமே வெளியிடுகிறது. அதில் சிலரை இந்திய குடிமக்கள் இல்லை என்று அரசாங்கமே சொல்கிறது. அதன் பிறகு அரசாங்கமே அடையாளப்படுத்திய அந்த சட்ட விரோத குடியேற்றம் செய்தவர்களை அரசாங்கமே மத ரீதியாக பிரிக்கிறது.
முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர் என்று பிரிக்கப்பட்டு முஸ்லிம்களை தவிர வேறு எல்லோரையும் சட்டப் பூர்வமான குடிமக்களாக மாற்ற ஒரு சட்ட திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு. அரசியல் அமைப்புச் சட்டப்படி அனைவரையும் சரியாக நடத்த வேண்டிய மத்திய அரசு காட்டிய இந்த பாகுபாட்டைத்தான் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இத்தனைக்கும் குடியுரிமை இல்லாதவர்களாக அறிவிக்கப்பட்ட இந்த 5 லட்சம் முஸ்லிம்களில் பெரும்பான்மையானயானோர் இந்திய நாட்டின் குடிமக்கள். இப்படி சட்ட விரோத குடியேறிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமத் அவர்களின் குடும்பத்தாரும் கார்கில் போரில் இந்திய ராணுவத்தில் போரிட்ட சனாவுல்லா கான் போன்றவர்களும் அடங்குவர்.
அஸ்ஸாம் மக்கள் இந்த பிரச்சனையில் போராடுவதற்கான காரணம் நாட்டில் இதர மக்கள் போராடுவதற்கான காரணங்களிலிருந்து மாறுபட்டது. அவர்களின் கோரிக்கை எல்லாம் இந்த 19 லட்சம் பேரின் குடியுரிமையையும் மத வேறுபாடுகளின்றி பறிக்க வேண்டும் என்பது தான்.
குடியுரிமை திருத்த சட்டம் சொல்வது என்ன?
2019,டிசம்பர் 12- ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் 2019 அமலுக்கு வந்தது.
இந்த சட்ட திருத்தத்தின் படி 2014 டிசம்பர் மாதம் 31 தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசத்தை சார்ந்த ஹிந்து, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி, கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்கின்றது.
மேலும் இந்திய குடிமகன் ஆக குறைந்த பட்சம் 11 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவில் வாழ வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி 5 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவில் வாழ்ந்திருந்தால் போதும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சட்ட திருத்தத்தில் எங்குமே மதம் சார்ந்த நெருக்கடி ( Religious Persecution) என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ஆகவே இந்த சட்டத்திருத்தத்தின் படி குடிமகன் ஆக மத ரீதியான துன்புறுத்தல் காரணமாகத்தான் அந்த மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்தேன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை.
இதை தவிர்த்து வேறு எதுவும் அந்த சட்ட திருத்தத்தில் இல்லை. இப்போது இந்த சட்ட திருத்தம் யாரை காப்பாற்ற கொண்டு வரப்பட்டது என்பது வாசகர்களுக்கு நன்றாக புரிந்திருக்கும்.
இதில் ஹிந்து சகோதரர்களுக்கு குடியுரிமை கொடுத்து காப்பாற்றியதை இஸ்லாமியர்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காக மட்டும் அந்த 13 லட்சம் மக்களோடு நின்ற இந்த 5 லட்சம் மக்கள் மட்டும் அநாதைகளாக விடப்பட்டதை அநீதியாக முஸ்லிம் சமூகம் பார்க்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் இந்த தேசிய குடியுரிமை பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தப் போவதாக மத்திய உள்துறை அமைச்சரும் ஆளும் பாஜக வின் தேசிய தலைவருமான அமித்ஷா அறிவித்தார். அஸ்ஸாமில் நடந்ததை உற்று நோக்கிக் கொண்டிருந்த இஸ்லாமிய மாணவ மாணவிகள் அதே நிலைக்கு நாமும் தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்து தங்களின் குடியுரிமையை தற்காத்துக் கொள்ளவே இந்த போராட்டத்தை கையில் எடுத்திருக்கின்றார்கள்.
பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் 1980 களுக்கு பிறகே இந்தியாவில் நெறிமுறைப் படுத்தப்பட்டது. அதற்கு முன்பு பிறந்தவர்களிடம் அந்த சான்றிதழ்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. தற்போது அடையாள அட்டைகளாக பயன்படுத்தப்படும் ஆதார், வாக்காளர் அட்டை போன்ற அடையாள அட்டைகள் அஸ்ஸாமை போன்று இங்கும் குடியுரிமையை தீர்மானிக்கும் ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்படாமல் போனால் மிகப்பெரிய நெருக்கடிகள் ஏற்படும்.
இவை யாவும் முஸ்லிம் சமூகத்தை தாண்டி எல்லா சமூகத்தவர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். தங்களின் ஆவணங்களே சரியாக இல்லாத பட்சத்தில் அஸ்ஸாம் போன்று எதாவது ஒரு ஆண்டை மையமாக வைத்து நம்முடைய மூதாதையர்களின் ஆவணங்களையும் சேர்த்து காண்பித்தால் தான் இந்திய குடியுரிமை என்று சொல்லி விட்டால் பல லட்ச மக்கள் குடியுரிமை அற்றவர்களாக மாற்றப்படுவர்.
லஞ்சம், ஊழல் நிறைந்த இந்த சமூகத்தில் செல்வந்தர்கள் எப்படியாவது இந்த ஆவணங்களை தயார் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் ஏழைகளின் நிலை ரொம்பவும் மோசமாகும்.
இப்படி இந்த பதிவேடு நாடு முழுவதும் இதே நிலையில் அமல்படுத்தப்பட்டால் சாதி, மதங்களை கடந்து பல பேருக்கு குடியுரிமை பாதிக்கும் நிலை வந்தாலும் அத்தனை பேர்களையும் டீடன்சன் சென்டர்களில் (Detention Camps) அடைப்பதற்கான இடமோ பொருளாதாரமோ அரசிடம் இல்லை என்பதால் வழக்கம் போல இஸ்லாமிய சமூகம் தனிமைப்படுத்தப்பட்டு சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சம் முஸ்லிம்களிடத்தில் பரவலாக காணப்படுகிறது.
இப்படி பாதிப்புக்குள்ளாகும் மக்களில் குடியுரிமை திருத்த சட்டம் போன்றவகைகள் மூலமாக இதர சமுதாயத்தவர்களுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்பட்டு இஸ்லாமியர்களை மட்டும் வேதனைப்படுத்த இந்த குடிமக்கள் பதிவேடு பயன்படுத்தப் படுமோ என்ற கவலை அதிகமாக உள்ளது.
இந்த சட்டத்திற்கு ஆதரவாக ஆள் சேர்க்க பல வாதங்கள் அரசாங்க தரப்பில் வைக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகியவை இஸ்லாமிய நாடுகள். அங்கிருந்து மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக இஸ்லாமியர்கள் வர வாய்ப்பு இல்லை. ஆகையால் குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை சேர்க்கவில்லை என்று வாதிடுகிறது அரசு. ஆனால் இந்த சட்ட திருத்தத்தின் எந்த இடத்திலும் மத ரீதியான துன்புறுத்தல் ( Religious Persecution) என்ற வார்த்தையே பயன்படுத்தப்படவில்லை.
அதைப் போன்று இந்த சட்ட திருத்தம் 2014- டிசம்பர் 31 க்குள் இந்தியாவுக்குள் வந்தவர்களுக்கும் வந்த தேதியிலிருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் இஸ்லாமியர்களை சேர்த்து இருந்தாலும் ஏற்கனவே குறைந்தது 5 வருடம் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கே பயன்படும், அதுவும் 2014 டிசம்பர் 31 க்கு முன்பு வந்த இஸ்லாமியர்களுக்கே தவிர புதிதாக யாருக்கும் அது பொருந்தாது. எந்த மதத்தவராக இருந்தாலும் 2015 க்கு பிறகு வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை பெற இந்த சட்ட திருத்தத்தின் படி குடியுரிமை பெற வழியில்லை.
இந்த சட்ட திருத்தம் (CAA) சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சட்டபடி குடியுரிமை பெறுவதற்கான வழியாக (Escape Route) உருவாக்கப்பட்டு இருக்கின்றது. அதற்காக முஸ்லிம் என்ற காரணத்திற்காக மட்டும் அந்த 5 லட்சம் பேர் பலிகடா ஆக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்தும் போது அரசியல் ரீதியாக பா. ஜ. காவுக்கு பலன் செய்யும்.
குறிப்பாக மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களின் குடியுரிமை இல்லாமல் ஆக்கப்படும் போது அவர்களின் வாக்குரிமையும் இல்லாமல் ஆகும்.
பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளாக கருதப்படும் இந்த வாக்குகள் இல்லாமல் ஆவதும் வந்தேறிய ஹிந்துக்களுக்கு குடியுரிமை கொடுக்கும் போது அவர்களின் வாக்குகள் நிரந்தரம் ஆவதும் வாக்கு அரசியலில் பா.ஜ.க.வுக்கு நன்மை பயக்கும்.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து மத அரசியலை உயிர்ப்போடு வைத்திருக்கும் பா.ஜ.க. இந்த விசயத்திலும் திட்டங்கள் தீட்டும்… சூழ்ச்சிகள் செய்யும்…
ஆனால் சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் மிகப் பெரிய சூழ்ச்சிக்காரன் இறைவன் அல்லவா…!!!
மு.அன்சார், உதவி பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை

































