முன்னோடி ஆசிரியர்

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலை, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (Stanford University) சமீபத்தில் வெளியிட்டது. இந்த மதிப்புமிக்க பட்டியலில், ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான, டாக்டர் ஷகீல் அகமது (Dr Shakeel Ahmed) அவர்களும் இடம் பெற்றுள்ளார்.

டாக்டர் ஷகீல் அகமது அவர்கள், ஜம்மு-காஷ்மீரின் மேந்தரில் உள்ள அரசு பட்டம் கல்லூரியில் (Government Degree College) வேதியியல் கற்பிக்கிறார். பச்சை நானோ பொருட்கள் மற்றும் பயோபாலிமர்கள் (green nanomaterials and biopolymers) ஆகியவற்றின் பயன்பாடுகளை குறித்த இவரது பல ஆய்வுக்கட்டுரைகள் சர்வதேச ஆராய்ச்சி இதழ்களில் (International Research Journals) வெளியாகியுள்ளது.

மேலும் “அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி மற்றும் ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்டரி” (American Chemical Society and Royal Society of Chemistry) – இன் உறுப்பினரான இவர், பாலிமர்கள் (polymers), நானோ பொருட்கள் (nanomaterials) மற்றும் பச்சை பொருட்கள் (green materials) ஆகிய தலைப்புகளில் 15க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

டாக்டர் ஷகீல் அவர்கள், அரசு கல்லூரியில் தனது இளங்கலை படிப்பையும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா – இல் தனது முதுகலை மற்றும் ஆய்வுக்கல்வியையும் முடித்தார். பின் 2017 ஆம் ஆண்டில் ஐ.ஐ.டி-டெல்லியில் தற்காலிக ஆய்வு மேற்பார்வையாளராக (post doctorate fellow) இருந்த போது, தனது சொந்த ஊரில் மாணவர்களுக்கு கற்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சற்றும் யோசிக்காமல் சட்டென்று புறப்பட்டு வந்துவிட்டார்.

முதல் தலைமுறை பட்டதாரியான இவர் இவ்வாறு கூறுகிறார். “ஒரு நல்ல கல்விக்கான போராட்டம் என்னவென்று எனக்குத் தெரியும். என் தந்தை மரணித்த போது எனக்கு ஒரு வயதுதான் ஆகியிருந்தது. உதவித்தொகை மூலம் மட்டுமே என்னால் படிப்பை முடிக்க முடிந்தது. நான் வளர்ந்த ராஜோரி மாவட்டம், பல வாய்ப்புகளற்ற ஒரு பின்தங்கிய பகுதி என்பதால், எனக்கு பெரியளவில் உதவவில்லை. ஆனால் நான் என் சமூகத்திற்கு ஏதேனும் திருப்பித் தர விரும்பினேன். எனவே மறுமுறை யோசிக்காமல், நேராக சொந்த ஊர் வந்து, உயர்கல்வியில் அறிவியலை எடுத்து படிக்குமாறு மாணவர்களை ஊக்குவிக்கத் தொடங்கினேன்.”

இவரது முயற்சிகள் நல்ல பலனை தந்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை, ஒருசில மாணவர்களின் விருப்பப் பாடமாக இருந்த வேதியியல், இன்று பெரும் தொகுதி மாணவர்களின் விருப்பத்தை பெற்றிருக்கிறது. அதில் சரிபாதி பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு.

         டாக்டர் ஷகீல், தனது ஆசிரியப்பணி போக, அதிகப்படியான நேரத்தை, மக்கும் தன்மை கொண்ட பாலிமர்களை உருவாக்குதல் (biodegradable polymers) குறித்த ஆய்வில் செலவிடுகிறார். சுற்றுசூழலிலும், உடல் ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய அளவில் மாசுபாட்டை ஏற்படுத்துகின்ற செயற்கை பாலிமர்களுக்கு தீர்வை முன்வைக்க முயற்சிக்கும் டாக்டர் ஷகீல் அவர்களின் ஆய்வு முழுமையாய் வெற்றி பெறவும், உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பெற்றமைக்கும், அவரது சமூக அக்கறைக்கும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

வி.ஆர்.அப்துர்ரஹ்மான், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்.