
அரசியல் சாக்கடை, அரசியல்வாதிகள் ஊழல் லஞ்சவாதிகள் என்றே கேட்டுக் கேட்டு பழகிய காதுகளுக்கு நபிமார்களின் அரசியல் ஈடுபாடு தலைப்பை பார்த்ததும் வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருந்ததால் அந்தக் கட்டுரையை முதலில் படித்து விட்டேன். அடக்குமுறைக்கு எதிராக, பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராக, ஒழுக்க வீழ்ச்சிக்கு எதிராக என சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் நபிமார்கள் களமாடி இருக்கிறார்கள். கட்டுரையாசிரியர் உஸ்தாத் ஃபழீல் நளீமி சொல்வது போல “அரசியலில் இருந்து நல்லவர்களும் வல்லவர்களும் ஒதுங்குவது பேராபத்தையே உலகுக்கு கொண்டு வரும்.” நமக்காக நாம்தான் அரசியல் திட்டத்தை உருவாக்க வேண்டும். முஹம்மது காஸிம், விருத்தாச்சலம்
நாகரீக மனிதர்கள் எதை எதையோ கற்றுக் கொள்கிறார்கள். வாழக் கற்றுக் கொள்ளவில்லை. மன அழுத்தம், மன இறுக்கம் என எப்போதும் ஏதோ ஒரு சுமையுடனே வாழப் பழகி விட்டோம். நாம் அதையே கல்வி என்ற பெயரில் எதிர்காலம் என்ற பெயரில் எல்லாவற்றையும் திணித்து நமது அடுத்த தலைமுறையை நெருக்கடிக்கு ஆளாக்குகிறோம். கடைசியில் இன்றைய மாணவர்கள் கற்றுக் கொள்வது அதீத நம்பிக்கை, பயம், வெறுப்பு. வாழக் கற்றுக் கொடுப்போம் கட்டுரையில் மனநல மருத்துவர் சொல்வது போல நமது குழந்தைகளுக்கு வாழச் சொல்லிக் கொடுப்போம்.
இம்ரான் நசீர், சிவகங்கை
‘காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.எஸ்.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுடனான நேர்காணல்’ பகுதியில் இன்றைய அரசியல் களநிலவரம், பிரதான எதிர்கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் நிலை, பெரும்பான்மை வாதத்தின் தன்மை, இதில் முஸ்லிம்கள் செய்ய தவறியது, அதனால் ஏற்பட்ட விளைவுகள், செய்ய வேண்டியது, அது ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் என திரு.எஸ்.பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தன் கருத்துக்களை நேர்மையாக நேரிடையாக முன்வைத்துள்ளார். சேயன் இப்ராகிம் அவர்களின் ‘மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்’ எனும் கட்டுரை, இக்கிளர்ச்சியின் மூலகாரணத்தையும், அதன் பரிணாமத்தையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும், wagon tragedy என்ற ரயில் பெட்டி கோரச் சாவு பற்றியும், இக்கிளர்ச்சியின் முடிவும் என்னவென்று தெளிவாக விளக்கியிருந்தது.
பேராசிரியர். முனைவர், ஏ. அப்துல் ஹை ஹஸனி நத்வி அவர்களின் ‘முஸ்னது அஹ்மத் தமிழாக்கம்’ மீதான மதிப்புரை கட்டுரை ஹதீஸ் கலை மீதான ஆர்வத்தையும், முஸ்னது அஹ்மத் நூலின் மீதான ஈர்ப்பையும் அதிகரிக்கிறது.




































