


கருப்பர் குலத்தில் தோன்றிய மால்கம் எக்ஸ் அமெரிக்க கருப்பர் குலத்தின், சமூகம் மற்றும் அரசியல் களத்தில் ஒரு புரட்சியாளர். இஸ்லாம் மட்டுமே கருப்பர் மீதான வெள்ளையர் அடக்குமுறைக்கு தீர்வாக இருக்க முடியும், கருப்பர் சமூகம் இஸ்லாமுக்கு மாறுவது தான் நிறவெறிக் கொடுமையில் இருந்து விடுதலை பெறும் ஒரே வழி என்று அமெரிக்க கருப்பர் சமூகம் முன்பு இஸ்லாமை ஒரு தீர்வாக முன்வைத்துச் சென்றுள்ளார் மால்கம் எக்ஸ்.
அமெரிக்கர்கள் தங்கள் பெயருக்கப் பின்னாள் பிறந்த குடும்பத்தின் பெயர் குலத்தின் பெயரை சேர்த்துக் கொள்வதுண்டு. அமெரிக்கக் கருப்பர்களுக்கு அவர்களுடைய வேர் மறைக்கப்பட்டு விட்டது. அலெக்ஸ் ஹேலி என்பவர் அமெரிக்க கருப்பர்களின் பூர்வீகம் குறித்து ஆய்வு செய்து ‘ரூட்ஸ்'(வேர்கள்) என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. அமெரிக்கக் கருப்பர்களின் பூர்வீகம் வட ஆப்ரிக்கா என்றும், மதத்தால் அவர்கள் முஸ்லிம்கள் என்றும் நிரூபிக்கிறார். இது மால்கம் எக்ஸ் இறப்புக்கு பிறகு நடந்தது.
மால்கம் எக்சும் தன் குலத்தின் தோற்றம் பற்றிய வேரைத் தேடினார். கண்டடையும் வரை மால்கம் என்ற தனது பெயருக்குப் பின்னல் ‘எக்ஸ்’ (X) என்பதாக இருக்கட்டும் என்றார். மால்கம் எக்ஸ் இஸ்லாமை நீண்ட பயணத்துக்குப் பிறகு தற்செயலாக கண்டடைகிறார். இஸ்லாம் குறித்து அதிகமாக படிக்கிறார். அப்போது இஸ்லாம் உலகின் அரசியல் அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது. இஸ்லாமின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கோட்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டதே உலக சமூகங்களின் குழப்பங்களுக்கு காரணம். மேலும் இஸ்லாமே இறுதியான தீர்வு என்பதையும் அவர் புரிந்து கொண்டிருக்கும் வாய்ப்புகள் மிக குறைவு.
ஆனால், சமூகத் தளத்தில் நிறவெறிக்கு எதிரான அறிவாயுதம் இஸ்லாம் ஒன்று தான் என்று அவர் உறுதியாகக் கருதினார். கிறித்தவக் குடும்பத்தில் பிறந்து இளமையில் கிறித்தவராக வாழ்ந்தவர் பின்னாளில் இஸ்லாமுக்கு மாறினார்.
இஸ்லாம் வெள்ளையர்களுக்கு எதிரான சவாலான மதம், அது, அமெரிக்காவுக்கு வெளியே நிறவெறியை சாய்த்து இருக்கிறது, எனவே, உலக கருப்பர்களின் விடுதலை மார்க்கமே இஸ்லாம் என்பது அவரது தொடக்கநிலை கருத்தாக இருந்தது. அவர், இறை இல்லத்தை சந்தித்து வர புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு காபாவுக்கு வந்த போது தான் மிகப்பெரிய உண்மை அவருக்கு புலப்பட்டது. அப்போது அவர் சவுதி அரேபிய மன்னரின் விருந்தினராகவும் வரவேற்கப்பட்டு இருந்தார். புனித இறை இல்லத்திற்கு ஐரோப்பாவில் இருந்து முஸ்லிமாக வந்திருந்த வெள்ளையர்களும் ஆப்ரிக்காவில் இருந்து முஸ்லிமாக வந்திருந்த கருப்பர்களும் தோள் உரசிக்கொண்டு ஒன்றித்து நின்றதைக் கண்டு மால்கம் துணுக்குற்றார். அங்கு தான் அவர் ஓர் உண்மையை கண்டுணர்ந்தார்.
“இறைவன் முன்னால் தன்னை அர்பணித்துக் கொள்ளும் போதே மனிதர்கள் தங்களுடைய வேறுபாடுகளை களைந்து அனைவரும் ‘ஓர் குலம்; ஓர் நிறை’ என்ற நேர் கோட்டுக்கு வருகிறார்கள். நிறவெறி என்பது வெள்ளையாகப் பிறந்தவர்களின் பிரச்சனை இல்லை. இஸ்லாமை ஏற்காதவர்களின் உளவியல் பிரச்சனை. இந்த உளவியல் பிரச்சனையை இஸ்லாம் மட்டுமே வென்றுள்ளது.
எனவே, இஸ்லாம் கருப்பர்களின் மதமல்ல. முகம்மது நபிகளார் கருப்பர்களின் தீர்க்கதரிசி அல்ல. இஸ்லாம் உலகம் முழுவதும் உள்ள வெவ்வேறு வகையான பாகுபாடுகள் கொண்ட மனித சமூகத்திற்கு மத்தியில் சரிநிகருக்கான தீர்வை தருகிறது, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்றொழுகுவதில் இருந்துதான் சரிநிகர் சமமான மானிடத்தை தயாரிக்க முடியும் என்று முடிவுக்கு வந்தவர் பின்னர் வெள்ளையர் மீதான வெறுப்பைக் கைவிட்டார்.
மால்கம் எக்ஸ் பிப்ரவரி 21, 1965ல் சுட்டுக் கொலை செய்யப்படுவதற்கு கொஞ்ச நாட்கள் முன்னதாக சொந்தமாக ஒரு மஸ்ஜித்தைக் கட்டினார். அமெரிக்கக் கருப்பர்களது சன்னி முஸ்லிம்களின் தலைவராகவும் இருந்தார். இஸ்லாம் ஜனநாயகத்தோடு ஒத்துப் போக முடியும் என்று மக்கள் இஸ்லாமை ஏற்க தயாராகிக் கொண்டு வந்த நேரத்தில் தான் மால்கம் எக்ஸ் படுகொலை நடந்தது. அத்தோடு இஸ்லாமுக்கு மாறும் முயற்சியும் தோற்றுப் போனது.
மார்ட்டின் லூதர் கிங் ஒரு புரட்சிகர கிறித்தவராக மாறினார். அதுபோல், மால்கம் எக்ஸ் புரட்சிகர முஸ்லிமாக வந்தார். மால்கம் எக்ஸ் ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க முடியும். மால்கம் எக்ஸ் முஸ்லிம் என்பது உண்மை என்றாலும் தௌராத் புத்தகத்தில் கூறப்பட்ட தீர்க்கதரிசிகளின் கூற்றுகளையும் எடுத்துக் கொண்டார்.
“இந்த உலகத்தை கீழே இருந்து மேலே பார்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். சிறைப்பட்டவர்கள், ஏழைகள், வழிப்போக்கர்கள், கணவனை இழந்தவர்கள், தந்தை இல்லாதவர்கள், தாயை இழந்தவர்கள், பலவீனமானவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் என சமூகத்தின் பொருட்டாக மதிக்கப்படாதவர்களுக்கு நீ என்ன செய்து விட்டாய்” என்று புதிய ஏற்பாடு புத்தகத்தில் ஈசா நபி கேட்பதாக மத்தேயூ அத்தியாயம் 25ல் இடம் பெற்றுள்ள கருத்தையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
ஃபெட்ரிக் டக்ளஸ் (Frederick Douglass), டபிள்யூ. இ. பி. டு போயிஸ் (W. E. B. Du Bois), ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King Jr), எல்லா பக்கர் (Ella Baker), மால்கம் எக்ஸ் (Malcolm X) மற்றும் இடா பி. வெல்ஸ் (Ida B. Wells) ஆகியோரை ஆப்ரிக்க அமெரிக்கர்களின் 6 புரட்சிகரத் தலைவர்களாக கிரிஸ்ட்டா புஷ்ஷென்டோர்ஃப் (Christa Buschendorf) பட்டியலிடுகிறார்.
மால்கம் எக்ஸ் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் இருவரில் ஒருவரை தவிர்த்து மற்றவரைப் பற்றிப் பேச முடியாது. மால்கமிடம் புரட்சிக்கான கனல் ஒன்று இருந்து கொண்டே இருந்தது. மார்ட்டின் லூதரிடம் அது ஆரம்பத்தில் இல்லை. மார்ட்டினிடம் ஒரு தார்மீக நெருப்பு தொடக்கம் முதலாக இருந்து வந்தது. அது மால்கமிடம் பின்னாட்களில் கூட உண்டாகவில்லை. கருப்பு மக்கள் மீது மால்கமுக்கு பலமான அன்பு இருந்தது. அது தீவிரமானதாக இருந்தது. அதனால், அவர் வெள்ளையர்களை பிசாசுகள் என திட்டினார். ஆனால், மார்ட்டின் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. அதேநேரம், மால்கமிடம் கனன்று கொண்டிருந்த புரட்சிக்கான நெருப்பு மார்ட்டினிடம் இருந்ததில்லை. மால்கம் மீண்டும் மீண்டும் ஒரு செய்தியை சொல்லிக் கொண்டே இருந்தார்.
அது : “400 ஆண்டுகால அடிமை வாழ்க்கை மற்றும் படுகொலைகளுக்குப் பிறகு நீங்கள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்? வன்முறை இல்லாமல் பதிலடி கொடுக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு வரலாறு என்ன இருக்கிறது? நீங்கள் தாக்கப்பட்ட போது என்ன மாதிரி பதிலடி தந்தீர்கள் என்பதை பார்க்கலாமா? என்றார். வெள்ளை நிறத்தார் ஒரு போதும் கருப்பர் சமூகத்தை சரிநிகராக ஏற்க மாட்டார்கள் என்பதில் மால்கம் உறுதியான முடிவில் இருந்தார். மார்ட்டின் லூதர் கிங் இந்த நிலை மாறும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்தார். கருப்பர்களும் வெள்ளையர்களும் பொதுவில் சரிநிகர் பேணும் நாளில் தான் கருப்பர் விடுதலை சாத்தியம், அதற்கான ஒரு கோட்பாட்டுத் தளம் இஸ்லாம் என்பது மால்கமின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கை மார்ட்டினுக்கு ஏற்பட்டதில்லை.
மார்ட்டின் லூதருக்குப் பிறகு தான் நிறவெறிக்கு இஸ்லாம் ஒரு தீர்க்கமான தீர்வு என மால்கம் எக்ஸ் உணர்ந்து கொண்டார். ஒருவேளை இஸ்லாமிய சிந்தனை மால்கமுக்கு முன்பே தோன்றி இருக்குமானால் மால்கம் மார்ட்டினுடன் இஸ்லாம் குறித்த உரையாடலை தொடங்கி இருப்பார். மார்ட்டின் லூதரும் மால்கம் எக்ஸும் இஸ்லாமை விடுதலைக்கான தீர்வாக ஏக காலத்தில் முன்வைத்து இருந்தால் இன்று உலகத்தை தனது வல்லாதிக்கத்தால் அச்சுறுத்தும் அமெரிக்காவுக்கு மனித குலத்தை தனது சரிநிகர் கொள்கையால் முறைப்படுத்தும் இஸ்லாம் உள்நாட்டிலேயே ஒரு அச்சுறுத்தும் சவாலாக அமைந்திருக்க கூடும்.
அமெரிக்க கருப்பர்கள் முஸ்லிம்களாக சர்வதேச சமூகத்தோடு ஐக்கியமாகி இருப்பார்கள். இன்றும் அமெரிக்காவிலும் சரி, உலகம் எங்கிலும் சரி, கருப்பர் குலத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் மீது மற்றவர்கள் நிறவெறி காட்டுவதில்லை. அவர்கள் தனி ஆளாக இல்லாமல் உலக சமூகத்தின் ஒரு அங்கமாக இருப்பதே காரணம். இஸ்லாம் மட்டும் தான் நிறம், குலம், சாதி, வர்க்கம் என்று எதிரில் எது வந்தாலும் துவம்சம் செய்து மனித குலத்தின் சரிநிகரை காக்கும் கருவியாக கருத்தியலாக உயிர்ப்புடன் இருந்து வருகிறது. பலருக்கும் அது தான் எரிச்சலாகவும் இருக்கிறது. மால்கம் எக்ஸ் மிகச் சரியாக இஸ்லாமை வல்லாதிக்கத்தின் எதிர்ச் சொல்லாக முன் வைத்தவர்.

































