துன்பங்களைக் கடக்கும் சிறுவன் முஸ்தஃபாவின் புன்னகை

பல்லாயிரம் மனிதர்களைக் கொன்று, குழந்தைகளை, பெண்களை சூறையாடி ஒரு தலைமுறை குழந்தைகளையே ஊனமாக்கியுள்ளது சிரியாவில் நடக்கும் போர். அங்கு நடக்கும் போரில் தன் தாயையும் தந்தையையும் இழந்து போரின் காரணத்தால் தன்னுடலில் ஊனத்தையும் சுமப்பவன் எட்டு வயது முஸ்தஃபா. தற்போது அவனது பாட்டியின் அரவணைப்பில் ஜோர்டானில் உள்ள அகதிகள் முகாமில் வாழ்கிறான். 

சிரியா போரில் நடந்த ஒரு வெடிகுண்டு வெடிப்பின் போது முஸ்தஃபாவின் உடலில் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதேநேரம் “சிதறிய குண்டின் ஒரு பகுதி அவனது மூளையை துளைத்து பாதி உடலை செயலிழக்க வைத்தது.” முஸ்தஃபாவின் உயிரைக் காக்கும் முயற்சியில் அவனது தந்தை உயிரிழந்தார். 

தற்போது முஸ்தஃபா தனது பெற்றோர் பற்றிய நினைவுகளை மெல்ல மெல்ல இழந்து வருகிறான். உன் அம்மா அப்பா எப்படி இருப்பார்கள்? அவர்களைப் பற்றி உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்டால் எனக்கு எதுவும் நினைவில் இல்லை என்கிறான். 

தனது தந்தை குறித்து முஸ்தஃபா நினைவுகூரும் போது “அந்த வெடிகுண்டு தாக்குதலின் போது “அவர் என்னை சுமந்துகொண்டு ஓடினார். எனது பாதுகாப்பை நினைத்து அவர் பயந்தார். என்னை அவர் கீழே இறக்கிவிட்டபின் அவர் இறந்து விட்டார். நான் காயமடைந்தேன்.” என்கிறான்.

அவனுடைய பிசியோதெரபி நிபுணர் ஷாதா ஹமாஷா கூறுகிறார் : “என்னை அம்மா என்று சில நேரம் அழைப்பான். சில நேரம் நீ எனது அம்மாவா என்று கேட்பான். ஒவ்வொரு முறையும் சிகிச்சை அளிக்கும் போதும் அவனுக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது” என உணர்கிறேன் என்கிறார்.

முஸ்தஃபாவின் பாட்டி ஃபாதிலாஹ் தனது பேரன் குறித்து பேசும் போது : அவன் எனது நேசத்திற்குரியவன். எங்காவது வெளியில் சென்றால் அல்லது வேறு குடும்பங்களைப் பார்த்தால் எனது தாயும் தந்தையும் எங்கே ? எனக்கு பெற்றோர்கள் இல்லையா? என்பான்.  நான் “உனது தாயும் தந்தையும் நான்தான்” என்று சொல்வேன் அவன் என்னை அணைத்து முத்தமிடுவான். “எனது மரணத்திற்குப் பின் அல்லாஹ் அவனுக்கு உதவுவான்.” என்கிறார். 

அவனது ஆசிரியர் ஹனான் கஸ்லாஹ் கூறுகிறார் : “அவன் அன்பானவன், வாழ்க்கையையும் விளையாட்டையும் அவன் நேசிக்கிறான். அவன் உறுதியானவன். அவனுக்கு சிக்கல்கள் இருந்த போதிலும் ஓடுகிறான். தனது உடல் குறைபாடு தன்னை முடக்குவதை முஸ்தஃபா விரும்பவில்லை. எல்லாவற்றையும் மீறி முஸ்தஃபா தொடர்ந்து புன்னகைத்துக் கொண்டே இருக்கிறான். எனினும் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு பராமரிப்பு தேவைப்படலாம்.” 

உடை அணிவது, மாற்றுவது உள்ளிட்ட வேலைகளை அவனது பாட்டி அவனுக்கு செய்து தருகிறார். அவனே சில நேரம் ஆடை அணிந்து கொள்கிறான். ஏன் என்று கேட்டால் எதிர்காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் நானே அணிந்துகொள்ள பழகிக் கொள்கிறேன் என்பான். 

நான் வளர்ந்த பிறகு வேலைக்குச் செல்ல வேண்டும். என்னைப் போன்றவர்கள் என்னை ஊனமுற்றவன் என்று அழைப்பதை விரும்பவில்லை. நான் வேலை செய்ய வேண்டும். இயல்பாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

நீ இறைவனிடம் பிரார்த்திக்கும் நேரத்தில் என்ன வேண்டுவாய் ? நான் குணமாக வேண்டும் எனது கை மற்றும் கால்கள் எனக்கு வேலை செய்ய வேண்டும். நான் எனது தாய் தந்தையுடன் சுவனத்தில் ஒன்று சேர வேண்டும் என்றும், எனது தந்தைக்கு அல்லாஹ் கருணை காட்ட வேண்டும் என்றும் பிரார்த்திப்பேன் என்கிறான்.

அவன் எப்போதும் தன்னை துவளவிட்டதில்லை. தன்னைத் தானே வரையச் சொல்லி முஸ்தஃபாவிடம் கேட்ட போது “அவன் வரைந்த படத்தில் இருந்த சிறுவன் சிரித்துக் கொண்டிருந்தான்.”