அறிவின் வாசல்

வாசிப்பு என்பது அறிவின் வாசல். வாசிப்பு உதடுகளின் உச்சரிப்போ கண்களின் அசைவோ அல்ல. உள்ளத்தால் உண்மைகளை உணர்வது அதை வாழ்க்கையால் மெய்ப்பிப்பது அந்த வாசிப்பு தான் “இக்ரஃ”.

வாசிப்பு ஓதுவீராக எனும் திறவு கோலால் ஃபாத்திஹா எனும் வாசல் வழியே அறிவுலகுக்கு குர்ஆன் அழைத்துச் செல்கிறது. உள்ளத்தால் வாசித்து உணர்வுகளால் மொழி பெயர்த்து செயல்களால் முழுமை அடைய வேண்டும்

வாசித்ததையும், கேட்டதையும் செயல்படுத்திய பிறகு அடுத்ததற்காக காத்திருந்தனர் சஹாபாக்கள். அதனால் தான் மாற்றத்தின் காற்று மக்காவில் வீசியது.

வாசிப்பில்லாத மனம் வாசலில்லா வீடு போன்றது. அறிவின் ஒளியும் பண்பாட்டின் காற்றும் அங்கு கடந்து வராது. வாசித்துப் பழகிய மனம் ஈர மண் போன்றது. உன்னத விதைகள் அங்கு எளிதில் முளைக்கிறது.

முதன் முதலாக அருளப்பட்ட ஐந்து சிறு வசனங்களில் அறிவின் அடிப்படையான வாசிப்பு குறித்து ‘இக்ரஃ’ (நீர் ஓதுவீராக) என இருமுறை சொல்லப்பட்டது. அறிவு தேடுவதற்கான முயற்சிக்காக மறு வாசிப்பை வலியுறுத்துகிறது. 

‘அல்லம’ கற்றுத் தருதல் எனும் சொல் இரு தடவையும், பேனாவைக் குறித்த சொல்லும் (அறியாமை களைவதைக் குறிக்கும், அல்லமல் இன்சான மா லம் யஃலம் – அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்) எனும் சொல்லும் வந்தது கவனிக்கத்தக்கது.

இறைவனின் குணமாக கண்ணியத்தையும் (அல் அக்ரம்) குர்ஆன் இங்குதான் குறிக்கிறது. மனிதனுக்கு இறைவன் அளித்த எண்ணற்ற அருள்கொடைகள் குர்ஆனில் பலமுறை கூறப்பட்டுள்ளது. ஆனால் அங்கெல்லாம் அல் அக்ரம் (கண்ணியமானவன்) என கூறவில்லை. 

மனிதனுக்கு அறியாதவற்றை கற்றுத் தந்தான். எழுதுகோலால் கற்றுத் தந்தான். அத்தகைய உமது இறைவன் கண்ணியமானவன் எனும் வாசனமே போதும் அறிவின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள.

(அர் ரஹ்மான் அத்தியாயத்தின் ஆரம்பத்திலும், இவ்வுலகிலும் மறுவுலகிலும் இறைவன் மனிதனுக்கு அளித்ததும் அளிப்பதுமான அருட்கொடைகளை கூறுகின்றபோது ‘உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?’ எனும் கேள்வி முப்பது முறை திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளது. அதற்கு எல்லாம் முன்பாக ஆரம்பத்திலேயே அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான் விளக்கும் திறனைக் கற்றுக்கொடுத்தான் என கூறியுள்ளது (அல்லமல் குர்ஆன், அல்லமஹுல் பயான்).

கல்விக்கான எல்லா ஊடகங்களையும் அதற்கு அடிப்படையான எல்லா அறிவியல்களையும் இந்த ‘பயான்’ எனும் சொல் பேசுகிறது. எல்லாவற்றையும் படைத்த இறைவனை மறந்து எல்லா அறிவுகளையும் மனிதன் கற்கிறான். அறிவின் யதார்த்த ஊற்றான உறைவிடமான அல்லாஹ்வை அவன் நினைப்பதில்லை. அதனால்தான் அதை படைத்த இறைவன் பெயரால் ஓதச் சொல்கிறான். 

பூமியில் பிரதிநிதியாவதற்கு மனிதனுக்கான தகுதியாகக் கொள்ளப்பட்டது அறிவுதான். மலக்குகளின் வணக்கத்தை விட மனிதனின் அறிவுக்கு முன்னுரிமை கொடுத்தான் அல்லாஹ். எனவே ஆதமுக்கு தலை வணங்கச் சொன்னான். 

அறிவு என்பதை குறிப்பிடுகிற ‘இல்ம்’ எனும் சொல் பல மாற்றங்களுடன் 865 (அறிவின் சிறப்பைக் காணலாம்) தடவை குர்ஆனில் வருகிறது. 

அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் என்கிற அறிவு மனிதனுக்கு இருக்க வேண்டுமென்பதற்காக மட்டுமல்ல அவன் மட்டும்தான் எல்லாம் அறிந்தவன். யதார்த்த அறிவு அவனுக்கு மட்டுமே. அவன் எல்லா அறிவுகளின் உறைவிடம் எனும் நம்பிக்கையை அது மூலமாக அல்லாஹ்வின் மகத்துவத்தை அங்கீகரிக்கவும் மனிதனின் எல்லைகளை புரிய வைக்கவும் பல வசனங்கள் நமக்கு விளக்கம் தருகிறது.

அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (2:196) அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (2:231) அல்லாஹ் மன்னிப்பவன் சகிப்புத் தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள் (2:235) அல்லாஹ் அறிந்தவன் செவியுறுபவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (2:244) அவனிடன் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (2:203) உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (49:7) தெளிவாக எடுத்துச் செல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள் (5:92) “இஃலமூ – நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்” எனும் வசனம் குர்ஆனில் 27 இடங்களில் வந்துள்ளது.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக! (47:19) என்று அறிவிக்கும் குர்ஆனை அறிந்து கொள்ளாத முஸ்லிம்களின் நிலைதான் ஏக இறைக் கொள்கைக்கு மாற்றான செயல்களுக்கு ஆதாரம். வேண்டுதலும் வணக்கமும் இறைவனிடம் மட்டும்தான் என வலியுறுத்துகிற வசனங்கள் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் வந்துள்ளது.

உமரின் பாறை மனதை வெண்ணை போல் உருக்கியது குர்ஆனின் வசனங்கள் தான் இன்றும் இருக்கிறது. அதை நாம் மய்யித்தின் காதிலும் மண்ணறையிலும் ஓதுகிறோம் ஊதுகிறோம். பீங்கானில் எழுதிக் குடிக்கிறோம். 

வரலாற்றில் புரட்சிகளை உருவாக்கிய வசனங்கள் நமக்கு ஞாபகமிருக்கிறது. உதடுகளிலிருந்து உள்ளங்களுக்குள் அது இறங்கிச் செல்லவில்லை.  நாம் பரக்கத்துக்காக ஓதுகிறோம், நோய் நிவாரணத்துக்காக, சைத்தானை விரட்ட மந்திரித்து கட்டுகிறோம்.

நசருன் மினல்லாஹி வ ஃபத்ஹுன் கரீப் எனும் எனும் வாசகத்தை மார்பில் செதுக்காமல் மார்பிளில் செதுக்கியதால் அதன் நிழலில் கருப்புச் சந்தையும் கந்து வட்டியும் நமக்கு உறுத்தவில்லை. 

இஸ்லாமை நமது அஜெண்டாவிலிருந்து திருமறையும் நபிவழியும் நழுவிச் சென்றது. உத்தம சமுதாயத்தின் டிரேட் மார்க்குகள் உரூசுகள் ஆகியது.