


நமது உடல் விலை நிர்ணயம் செய்ய முடியாத ஓர் அபூர்வமும் ஆச்சர்யமும் நிறைந்தது. அதனால்தான் ஆங்கிலத்தில் HEALTH IS WEALTH என்பார்கள்.
நமது வாழ்வில் பல செயல்கள் நமது அனுமதியின்றியே நடந்து விடுகின்றன. அதற்கு உதாரணமாக சுவாசம், உள் உறுப்புக்களின் செயல்பாடுகள் மற்றும் நாடித்துடிப்புகளை குறிப்பிடலாம்.
நாம் பிறக்கும் போதே நமது உடலுக்குள் நோய் எதிர்ப்பு எனும் அற்புத ஆற்றல் இருக்கிறது. இந்த அற்புதமான ஆற்றல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் என்ற சமுதாயமே அழிந்து போயிருக்கும்.
பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் மத்தியில்தான் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இவ்வாறு வாழ நம்மால் முடிகிறதென்றால் அதற்கு மிக முக்கியமானது நம்மில் இருக்கின்ற எதிர்ப்பு சக்தியான நோய் எதிர்ப்பு ஆற்றல்தான்.
நாம் வாழுகின்ற உலகில் உலா வருகின்ற பலதரப்பட்ட மருத்துவங்களும், அதன் மருத்துவ முறைகளும் அதற்கு அடுத்த பட்சம்தான்.
நம்மை பெற்றெடுக்க நமது தாய் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்பதனை எல்லோரும் நன்கு அறிவோம்.!
எண்டார்ஃபின், மார்ஃபின் மற்றும் இயற்கை வலி நிவாரணிகள் நமது உடலில் இல்லாமல் போயிருந்தால் மிகக்கடுமையான பிரசவ வலியை யாரால் தாங்கி இருக்க முடியும்.
பிரசவித்த பிறகு ஆனந்தமான ஒரு மயக்க நிலைக்குச் செல்லும் ஆழ்ந்த உறக்கத்தை இங்கு யாரால் தர முடியும்.
விதவிதமான மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் பலவிதமான உணவுகளை நேரம் தவறாமல் உண்டு வந்தாலும் நமது உடலுக்கு ஒத்துக் கொள்ளாதவைகளை எதிர்த்து அழித்து அந்த ஆபத்துக்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதும் இந்த அற்புதமான அதிசயமான நோய் எதிர்ப்பு ஆற்றல்தான்.
இறந்த உடல் சிறிது நேரத்திற்குப் பிறகு உடல் உஷ்ணத்தை இழந்து குளிர்ச்சி அடைந்து கிருமிகளால் பாதிப்படையத் தொடங்கி விடும்.
அழகான இந்த உடல் அழுகத் தொடங்குவது இந்த அற்புதமான நோய் எதிர்ப்பு ஆற்றல் இறந்தவரின் உடலை விட்டு அழிந்து போவதால்தான்.
மருத்துவ உலகில் வெற்றிக் கொடி கட்டி உலா வருகின்றவைகளில் குறிப்பிட்டு சொல்லப்படும்
இயற்கை மருத்துவம் NATURO PATHY MADICINE
மாற்று வழி மருத்துவம் ALTERNTIVE MADICINE
கூட்டு மருத்துவம் COMLEMENTARY MADICINE
ஆங்கில மருத்துவம். ALOPATHY MADICINE
இவைகள் எல்லாமே மனிதன் ஆரோக்கியமாக வாழ்ந்திட அடிப்படைக் காரணம் நோய் எதிர்ப்பு ஆற்றல் தான் என்கிறது.
இந்த அற்புதமான நோய் எதிர்ப்பு ஆற்றல் தன் சக்தியை எப்போது எவ்வாறு இழந்து விடுகிறது என்றால் இயற்கைக்கு முரணாக நாம் செயல்படும்போது தான். நம் உடலில் ஆரோக்கியமாக இருக்கின்ற எதிர்ப்பு ஆற்றல் தனது சக்தியினை இழந்து பலவீனம் அடைந்து விட்டால் உடல் தன்னுள் நோய் வாழ வழிவிட்டு விடுகிறது.
இந்த நிலை ஆரோக்கியமான மனிதனை நோயாளி என்ற நிலைக்கு ஆளாக்கி விடுகிறது.
இயற்கைக்கு முரணான நமது செயல்களில் ஒரு சிலதை நாம் தெரிந்துகொண்டால் அது நமக்கு புரிய வரும்.
இரவில் தூங்காமல் அதிக நாட்கள் (வி) கழிப்பது
வேலைகளை அளவுக்கு அதிகமாக ஓய்வின்றி தொடர்வது
மது, புகை, போதைப்பொருட்கள் போன்ற பழக்கங்கள்
உடலுக்கு ஒவ்வாத உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்பது
மன அழுத்தம், மனக் கவலை, சோம்பேறித்தனம், அதிக உடல் எடை என்பவற்றைச் சொல்லலாம்.
நோய் எதிர்ப்பாற்றல் உடலில் இயங்க மறுக்கும்போதுதான் நமது உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் உடலுக்குள் தங்கி கழிவுகளாக மாறி நாளடைவில் நோய்களாக பல பெயர்களில் உருமாறி விடுகிறது.
நுரையீரலில் தங்கும் கழிவுகள், நுரையீரல் பாதிப்புக்கும், பெருங்குடலில் தங்கும் கழிவுகள் பெருங்குடலின் நோய்களுக்கும் என ஒவ்வொரு உறுப்புகளும் பாதிப்புக்கு ஆளாகின்றன.
இவ்வாறு தொடங்கும் குறுகிய கால நோய்கள் பிறகு நிரந்தர நோய்களாக தங்கி விடுகிறது.
எனவேதான் ஆரோக்கிய வாழ்விற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகவும் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய காரியங்கள் மிகமிக சுலபமானது.
அவைகள் : பசித்தால் பசியாற வேண்டும். தாகம் எடுத்தால் நீர் அருந்த வேண்டும். கழிவுகளை அடக்கி வைக்காமல் வெளியேற்றிட வேண்டும்.
உறக்கத்தை உதாசீனப்படுத்தாமல் நல்ல முறையில் உறங்கி, ஓய்வு தேவைப்படும் போது போதிய ஓய்வையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுருக்கமாக உடலின் இயற்கையை மதித்து வாழ்ந்திட வேண்டும். இயற்கையை மதித்தால் நாம் வாழும் உலகம் நன்றாக இருப்பது போல், நமது உடலின் அருமையை தெரிந்தால் உடலின் இயல்பை நேசித்தால் சுகத்துடனும் நல்ல வளத்துடனும் வாழ்ந்திடலாம்.
M.நூருல் அமீன், BNYS.P.hd, சென்னை


































