வாழ்க்கை என்பது பந்தயமா?

தள்ளுவண்டியில் வடை விற்கும் அந்த மனிதர் அவனை அழைத்து வந்தார். அவன் அவரது மகனாகவோ உறவாகவோ இருக்க வாய்ப்பில்லை என்பதை அவனது தோற்றம் சொன்னது. பணக்கார வீட்டுத் தோற்றம்.

பாடசாலை பேருந்தில் வந்து இறங்குபவன் பாடசாலைக்குப் போவதில்லை கடந்த மூன்று வாரமாக. வடை விற்கும் வண்டியிலேயே இருந்து விட்டு பாடசாலை விட்ட பின் அதே பேருந்தில் வீடு திரும்பியிருக்கிறான்.

பெற்றோரைப் பொறுத்தவரை அவன் பாடசாலைக்குத் தான் சென்றுவருகிறான். 

லேசாக அந்த பையனிடம் பேச்சுக் கொடுத்தேன். வடை பொறிக்கும் போது ஏற்படும் எண்ணெயின் கொந்தளிப்பையும் நெருப்பையும் பார்க்க விரும்புகிறான். அதில் ஏதோ இன்பம் காண்கிறான். வடைக்காக அரைத்த மாவுக் கலவையில் மரம், இலை, காய், மிருகங்களின் உருவங்கள் என வெவ்வேறான வடிவங்களில் ஏதேதோ செய்வதில் மகிழ்கிறான். 

லேசாக புரிந்தது. அவன் பெற்றோரை அவனது தேர்ச்சி அறிக்கையுடன் வரச் சொன்னேன். கெட்டிக்கார மாணவன். நல்ல மதிப்பெண்கள். சமீபத்தில் சில பரீட்சைகளில் சடுதியான சிறு சறுக்கல். அதற்காக வீட்டில் ஸ்பெஷல் க்ளாஸஸ். மேலதிகமாக chess, badminton, swimming என இன்னும் பல வேலைகள் உள்ள… ஒரு மாணவன் அவன். வீட்டிலும் ஐபேட், லேப்டாப், ஸ்மார்ட் போன், விளையாட்டுப் பொருட்கள் என குறையெதுவுமில்லை.

ஆனால் பாடசாலை பிடிக்கவில்லை. படிக்கவோ வழமையான வேலைகளோ அறவே பிடிக்கவில்லை. பாடசாலையை முழுவதுமாக தவிர்க்க நினைக்கிறான். கடற்கரைக்கு அழைத்துச் சென்று நடந்தோம். பல விடயங்கள் புரிந்தது. மணலுக்குள், அலைக்குள், சிப்பிகளுக்குள் தன்னை தொலைத்தான்.

இன்றைய சிறுவர்கள் சபிக்கப்பட்டவர்கள். சார்ஜிங் கார்களும், வீடியோ கேம்ஸ், ஸ்மார்ட் போன், டேப் ஆகியவற்றைக் கடந்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. நினைவுகளெல்லாம் தொடுதிரைக்குள் சிறை செய்யப்பட்டுள்ளன. 

மண்ணும் கிருமி, மழையும் கிருமி. இயற்கையென்பது அவர்களுக்கு அந்நியமாக்கப் பட்டிருக்கிறது. செயற்கையான முறையில் இயற்கையை கொடுக்கிறார்கள் மூன்று வயதில் கின்டர் கார்டன் (Kindergarten school). அதற்கு முன்பே ப்ளாஷ் கார்ட்ஸ் (Flash Cards) மூலம் ஏதேதோ பாடங்கள். மூன்று வயது முதல் ஓய்வில்லாத கல்வி.

“எதிர்காலத்திற்காக பிள்ளைகளை படிக்க வைப்பது பெற்றோர் கடமை” என்கிறார்கள். 

எது எதிர்காலம்?… பக்கத்து வீட்டுப் பையன் ஃப்ரெஞ்ச் மொழி கற்றால் என் பையன் சைனீஸ் கற்றாக வேண்டும். எதிர்வீட்டுப் பெண் அபகஸ் கற்று என் பெண் ஸ்விம்மிங் கற்காமல் போனால் வெட்கம்.

போட்டி போட்டு வாழ்வதற்காகவே பிள்ளை பெற்றுக்கொள்கிறோம். நமது பிள்ளைக்கானது எது? என்பதை வேறு நபர்களே தீர்மானிக்கிறார்கள். 

எதற்காக திணிக்கிறோம் என நமக்கும் தெரியாது. எதற்காக உண்கிறோம் என்று பிள்ளைகளுக்கும் தெரியாது. எதற்கெடுத்தாலும் டியூஷன் க்ளாஸ். பாடசாலை பாடத்திற்கும் க்ளாஸ், கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள் (extra caricullar activities) க்ளாஸ். காலையில் போய் மதியம் வந்து அவசரமாய் எதையோ சாப்பிட்டுவிட்டு திரும்பப் போய் இரவில் வந்தால் இன்னுமொரு சாப்பாடு. தூங்கும் வரை ஒரு வீட்டுப் பாடம். நேரம் மிஞ்சியிருந்தால் ஏதோ ஒரு கேம். மீண்டும் காலையில் அதே வட்டப் பாதை பயணம்.

நம் குழந்தைகளோடு நாம் வாழ்வது வீடா? ஹோட்டலா? விடை தெரியவில்லை. ஆனால் நமது வீடு பரிசுக் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் காட்சிப்படுத்தும் காட்சி அறை என்பதே யதார்த்தம். 

தேவையில்லையென்றால் வீட்டில் யாரும் யாரோடும் பேசுவதில்லை.

சிறு பருவம் புத்தகங்களையா கேட்கிறது? சான்றிதழ்களும் வெற்றிக் கோப்பைகளுமா மகிழ்ச்சியை தரும்? தற்காலிக மகிழ்ச்சி நமது நிரந்தர மனநிறைவுகளுக்கு திரையிட்டிருப்பது ஏன் புரியவில்லை? 

மண் தெரியாது, மண்ணோடு நீரைக் கலந்தால் சேறு வருமென்று தெரியாது. வெற்றிலையை கசக்கினால் வரும் வாசனை என்னவென்று தெரியாது. அருவியில் பாதங்களை மீன்குஞ்சிகள் முத்தமிடும் உணர்வு தெரியாது. 

புத்தகத்தில் பரிசோதனைகள் இருக்கின்றன, அனுபவங்கள் இல்லை. பிள்ளைகள் உணர்வற்றுப் போய்விட்டார்கள். கண்ணுக்குத் தெரியாத எதிரியை வீழ்த்துவது மட்டுமே இலக்கு. யாரைப் பற்றிய கரிசனை(அக்கறை)யும் இல்லை. சாதனைகள் மட்டுமே இலக்கு. சின்னதாய் சறுக்கினாலும் பாதாளத்தில் தவிக்கிறார்கள். 

அனுபவம் மூலம் பெற வேண்டிய அறிவை மேலதிக பயிற்சி வகுப்புகள் மூலம் கற்பிக்கிறார்கள். எந்திரன் சிட்டிக்கும் நமது வீட்டு சிட்டுக்களுக்கும் பெரிதாக வித்தியாசமில்லை. இயங்கத் தெரியும் இங்கிதம் தெரியாது. 

சடத்துவ உலகில் பணமும் வசதியும் சூழ வாழ்கிறார்கள். உடன் பிறந்தவனைப் பற்றியோ உறவினரைப் பற்றியோ ஏன் பெற்றவரைப் பற்றியோ எந்த உணர்வும் இல்லை. “எதையும் பொருட்படுத்தாமல் உன் வேலையை மட்டும் பார்” என்று வளர்த்தவர்கள் நாம்தான்.

குடும்ப விழாக்கள் தெரியாது, மரண வீட்டு சடங்குகளும் தெரியாது. ஏனென்றால் பாடசாலைக்கு விடுப்பெடுக்க முடியாது. அதிக நாட்கள் பாடசாலைக்கு வந்தவனுக்குத் தான் பரிசு. 

உறவுகளைக் காட்டுவதை விட ஏதோ ஒரு பரிசு தான் நமக்கு முக்கியம்.

விடுமுறைக் காலங்களில் கிராமத்திலுள்ள தூரத்து உறவினர் வீட்டில் உரிமையுடன் தங்கியதில்லை இந்த சந்ததியினர். அவர்களெல்லாம் வேற்றுக் கிரகவாசிகளாகவே அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

 உறவு முறைகள் தெரியாது. உறவாடவும் தெரியாது. பெரியவர்களை மதிக்கவும் தெரியாது. விடுமுறைகளை ஆக்கிரமிக்கும் சம்மர் கேம்ப்களிலும் அபகஸ், பர்சனாலிட்டி டெவலப்மன்ட் கேம்ப்களிலும் பிள்ளைகள் இன்னும் எதை எதையோ கற்கிறார்கள். 

விடுமுறைகளிலும் ஓய்வில்லை அவர்களுக்கு. 

என்றோ வரும் வெள்ளத்திற்காகவும் புயலுக்காகவும் தவமிருக்கிறார்கள், விடுமுறைக்காக… 

மூளை சதாகாலமும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. பாலைவனத்தில் வழிமாறிய வழிப்போக்கன் கானல் நீருக்காய் அலைவது போல… பிள்ளைகளின் மூளைகளும் அலைகின்றன.

 திரும்பும் திசையெல்லாம் அழுத்தம். வெற்றி, வெற்றிக்காக ஏக்கம், தோல்வி தெரியாது, வீழ்த்துவதே நோக்கம். வீழ்ந்தால் எழத் தெரியாது. வீழ்ந்தவனை எழுப்பி விடவும் தெரியாது. மனம் பதட்டத்துடனேயே அலைகிறது.

மனதின் அங்கலாய்ப்பு வெளித் தெரிவதில்லை. மனம் நிம்மதியின்றி அலைகிறது. கற்றுக் கொண்ட யோகாவும், மைன்ட் ரிலேக்ஸிங் நுட்பங்களும் சான்றிதழ்களில் உள்ளன. ஆனால் மனம் எதிர்க்காலம் பற்றிய அதீத பயம் பதற்றத்திலேயே நீடிக்கிறது. அலைமோதும் மனதை ஆற்ற நேரமில்லை. மனிதம் தொலைந்து விட்டது. மனித விழுமியங்கள் மங்கி விட்டன. 

பண்புகளும், உயர் குணங்களும் காலாவதியான பொருட்களாகிவிட்டன. மனங்களை இறுகச் செய்துவிட்டு, விபத்தில் காயமடைந்தவனை காப்பாற்றாமல் அங்கே நின்று செல்பி எடுப்பவனை ஏசிக் கொண்டிருக்கிறோம். என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனித மனம் அங்கே சங்கமிப்பதில்லை. இயற்கையைத் தான் நேசிக்கிறது. 

இயற்கையை தூர நிறுத்தி அந்த இடத்தை கல்விக்கான போட்டியும் டிஜிட்டல் திரையும் நிரப்பிக் கொண்டதால் மனம் வெறுமையை உணர்கிறது. 

இயற்கையாய் மனதை ஆற்றுப் படுத்தும் மண்ணையும், புல்லையும், தென்றலையும், புறாவையும், கோழியையும், தென்னை ஓலை வண்டியையும், பனங்காய் சில்லு வண்டியையும் தொலைத்து விட்டு உளவியலாளர்களிடம் ஆறுதலையும், நிம்மதியையும் விலை கொடுத்து வாங்க நினைக்கிறோம். 

பெற்றோர்களின் கௌரவப் போட்டிக்காக, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக என அடமானம் வைக்கப்படும் பிள்ளைகளின் இளமைக் காலம் மீட்கப்படுவதே இல்லை. அவர்களின் சந்தோஷமும் சேர்ந்து காணாமலே போய்விடுகின்றன.

பாவம் அவர்கள் இலக்கு நோக்கி ஓடி முடித்த பின் அனுபவிக்காத வாழ்வை தேடி ஏமாறப் போகிறார்கள். இளமையை எல்லையில்லா இன்பங்களுடன் கழித்த கடைசி சந்ததியும் நாங்களே. 

முதுமையில் நினைவுகளால் மகிழ்ந்திருக்கும் கடைசி சந்ததியும் நாங்களே… 

ஒரு சமுதாயத்தை தாங்கி நிறுத்தும் தூண் கல்வியென்பதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் அதே கல்வி உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட அறிவாளிகளை உருவாக்குகிறது என்றால் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

திணிக்கப்படுபவை உமிழப்படும், அனுபவங்கள் உள்ளீர்க்கப்படும் என்பதே நியதி. சிறு வயதை சிறைக் கூடமாக்காமல் அனுபவங்கள் வாயிலாக அறிவைத் திரட்ட அனுமதிக்கலாம். இயற்கையை விட்டு தூரமாக்கி அந்த பிஞ்சு உள்ளங்களை கசக்காதிருக்கலாம். போட்டியில் பலவந்தமாக ஓடவிட்டு ஊனமாக்காதிருந்தாலே நல்லதொரு எதிர்காலத்தை அவர்களுக்கு வழங்க முடியுமாக இருக்கும், நம் பெற்றோர் வழியில். இன்ஷா  அல்லாஹ்