சு.பொ.அகத்தியலிங்கத்தின்
“விடுதலைத் தழும்புகள்”
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இப் போராட்டத்தில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்திஜி தலைமையில் அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றோம் என்பது நமது பொதுப்புத்தியில் நிலைத்துவிட்ட கருத்தாக இருந்தபோதிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்களது இன்னுயிரையும், சொத்துக்களையும், உடமைகளையும் இழந்து பெற்றது தான் இந்திய சுதந்திரம் என்பதையும் மறுக்க இயலாது.
காந்திஜியின் அகிம்சை வழியினை ஏற்காத நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடுவதன் மூலமே விரைவான விடுதைலையைப் பெற முடியும் என நம்பினார். ஆனால் அதற்காக அவர் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர், முசோலினி ஆகிய பாசிஸவாதிகளுடன் சேர்ந்து கொண்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டது ஏற்புடையதாக இல்லை.
எனினும் அவரது நாட்டுப் பற்றையும், விடுதலை வேட்கையையும் நாம் போற்றுகிறோம். சில ஆங்கிலேய ஆட்சியாளர்களையும், உயர் அதிகாரிகளையும் கொன்றொழித்த அல்லது அச் செயல்களுக்கு உடந்தையாகயிருந்த சில தலைவர்கள் நாளாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலையும் ஏற்பட்டது. சாவர்க்கார், அரவிந்தர் போன்ற தலைவர்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க ஆண்டுகளில் அதில் உத்வேகத்துடன் கலந்து கொண்ட பல தலைவர்கள், மகாத்மா காந்திஜியின் அகிம்சை வழியினை ஏற்காது, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். பின்னர் அவர்கள் சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை.
மிக வல்லமை கொண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, வன்முறைப் போராட்டங்களை நடத்திட காந்திஜி விரும்பவில்லை. வன்முறைப் போராட்டங்கள், அதற்கு எதிர்வினையான அரசின் கடும் அடக்குமுறைகள், தண்டனைகள் ஆகியன போராடுகின்ற மக்களின் மன உறுதியைக் குலைத்து அதன் கூர்மையை மழுங்கடித்துவிடும் என காந்திஜி நம்பினார்.
அகிம்சை போராட்டங்கள் மூலமே சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் அவற்றில் பங்கேற்கச் செய்ய முடியும் என்பதே அவரது திடமான கருத்தாக இருந்தது. போராட்டங்களில் இந்து, இஸ்லாம், சீக்கியர்கள் என அனைத்துச் சமய மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டுமென்பதற்காக அவர் சில சமரசங்களையும் செய்து கொள்ள வேண்டியதாயிற்று. எனினும் அவர் எந்தப் போராட்டத்தையும் அறிவித்தாலும் அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவை மக்கள் இயக்கங்களாக மாறின. பல சமயங்களில் காந்திஜி தனது உடலையே ஆயுதமாகப் பயன்படுத்தினார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மட்டுமல், தீண்டாமைக்கு எதிராகவும், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு ஆதரவாகவும் கூட அவர் உண்ணாவிரதப் போராட்டங்களை மிக வெற்றிகரமான நடத்தினார். போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக அவர் நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்தார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார்.
15.8.1947 அன்று நாடு சுதந்திரதினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது கல்கத்தாவில் ஏற்பட்ட இந்து முஸ்லிம் கலவரங்களைத் தணிப்பதற்காக அவர் அங்கே சென்றிருந்தார். இறுதியில் இந்து மத வெறியன் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். மகாத்மா காந்திஜியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியே நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தது என்பதில் மாறுபட்ட கருத்திற்கு இடமில்லை.
சுதந்திரப் போராட்டங்கள் குறித்து தமிழில் நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் வெளிவந்துள்ள சு.பொ.அகத்தியலிங்கம் எழுதியிருக்கும் “விடுதலைத் தழும்புகள்” என்ற நூல் குறித்தே இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு வெளிவந்த நூலின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பே தற்போது வெளிவந்துள்ள இந்த நூல். சுதந்திரப் போராட்ட வரலாற்றை கோர்வையாகச் சொல்லாமல் மிக முக்கிய நிகழ்வுகளை மட்டும் 252 அத்தியாயங்களில் நூலாசிரியர் மிகச் சுருக்கமாகத் தந்துள்ளார்.
தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் வீரன் அழகு முத்துக் கோன், பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர்கள், வேலு நாச்சியார், கான்சாகிப் தொடங்கி மகாத்மா காந்திஜி கொல்லப்பட்ட நிகழ்வு வரை இந்த நூலில் அவர் விவரித்துள்ளார். விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை மிக விரிவாக அல்லாமல் சுருக்கமாக அதே நேரத்தில் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.
இனி, இந் நூலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ள சில வரலாற்றுத் துளிகளைப் பார்ப்போம்.
- ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் கணவனை இழந்த வேலு நாச்சியார் திண்டுக்கல் கோட்டையில் அடைக்கலம் புகுந்து ஹைதர்அலியிடம் படை உதவி பெற்று மீண்டும் வெள்ளையருடன் போரிட்டு வெற்றி பெற்றார்.
- கர்நாடகாவிலுள்ள சிருங்கேரி மடத்தை பரசுராமபாகு என்ற இந்து மன்னர் கொள்ளையடித்த போது அம்மடத்திலிருந்த சங்கராச்சாரியார் மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் உதவியைப் பெற்று தனது மடத்தை மீட்டார். சங்கராச்சாரியாருக்கு திப்பு சுல்தான் எழுதிய 29 கடிதங்கள் இன்றைக்கும் அந்த மடத்தில் பாதுகாப்பாக உள்ளன.
- வேலூர் சிறையிலிருந்த திப்புவின் புதல்வர்கள் தலைமையில் இந்திய வீரர்களை 9.7.1806 அன்று ஆங்கிலேயருக்கு எதிராகப் பெரும் தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொன்றனர். இதுவே வேலூர்ப் புரட்சி என அழைக்கப்படுகிறது. எனினும் இந்தப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
- சிப்பாய்ப் புரட்சியில் சீக்கியர்கள் கலந்து கொள்ளவில்லை. குவாலியர் மன்னர் உள்ளிட்ட பல சமஸ்தான மன்னர்கள் இப்புரட்சியில் கலந்து கொள்ளாதது மட்டுமல்ல காட்டியும் கொடுத்தனர்.
- சிப்பாய்க் கலகத்திற்குப் பின் தோன்றிய வகாபிகள் இயக்கம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடியது. இந்த இயக்கத்தின் முன்னோடிகளான ரசூல், ஷேக்அலி, அப்துல்லா ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அந்தமானில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பத்ருதீன் தயாப்ஜி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது தீர்ப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. திலகர் மீது தொடரப்பட்ட கொலை வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இது ஆங்கிலேய அரசை அதிர்ச்சியடைய வைத்தது.
- 16.2.1915 அன்று சிங்கப்பூர் ஐந்தாவது லைட் இன்பேன்டரி பிரிவில் பணியாற்றிய இராணுவீரர்கள் ஆங்கில அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபட்டனர். இந்தக் கலகத்தில் ஜமேதார் சிஸ்திகான், சுபேதார் தாவூத்கான், ஜமேதார் அப்துல் அலி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க காலத்தில் பல முஸ்லிம்கள் அதன் முன்னணித் தலைவர்களாக இருந்தனர்.
- 1919ஆம் ஆண்டு காபூலில் அமைக்கப்பட்ட இந்திய அரசில் பிரதமராக மௌலானா பரக்கத்துல்லாவும், உள்துறை அமைச்சராக உபயதுல்லாவும், போர்த்துறை அமைச்சராக பசீரும், வெளியுறவுத் துறை அமைச்சராக செண்பராமன் பிள்ளையும் இடம் பெற்றிருந்தனர்.
- 27.4.1918இல் பி அண்ட் சி மில் தொழிலாளர்களின் நலனிற்காக தொடங்கப்பட்ட சென்னை தொழிலாளர் சங்கம் தான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தொழிற் சங்கமாகும். இதுவே பின்னர் AITUC சங்கமாக உருவெடுத்தது.
- 23.4.1930 அன்று பெஷாவர் நகரில் அன்னிய துணிகளை எரிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இவர்களில் மிகப் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள். ஆனால் இந்த மக்களை அடக்குவதற்காக கார்வாலி துப்பாக்கிப் படைப்பிரிவினரை ஆங்கிலேய அரசு பயன்படுத்த முனைந்தது. இந்த கார்வாலி படைப்பிரிவில் இந்துக்களே பெரும்பான்மையினராக இருந்தனர். ஆனால் வெள்ளை அரசின் இந்த பிரித்தாளும் திட்டம் வெற்றி பெறவில்லை. கார்வாலி வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மறுத்துவிட்டனர். இதனால் 18 கார்வாலி வீரர்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
1935ஆம் ஆண்டில் பாட்லிவாலா என்ற காங்கிரஸ் தலைவர் ஆந்திரா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது சென்னை மாகாணப் பிரதமராகப் பொறுப்பு வகித்த இராஜாஜி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறேன் என்று கூறி அவரைக் கைது செய்ய உத்திரவிட்டார். இதற்கு பண்டித ஜவகர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். - 21.5.1940 அன்று நேதாஜி பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கியபோது அதில் தமிழக காங்கிரஸ் தலைவர்களான N.சீனிவாசன் ஐயங்கார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் இணைந்தனர்.
- 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள பட்டேஸ்வர் என்ற கிராமத்திலுள்ள கிராமச்சாவடி முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வன இலாகா கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்த நிகழ்ச்சியினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களின் வாக்கு மூலத்தின் பேரில் இராணுவத்தினர் அந்த கிராமத்தையே தாக்கி துவம்சம் செய்து ரூ.10,000 ஊருக்கு அபராதம் விதித்தனர். வாக்கு மூலம் கொடுத்த அந்த இரண்டு இளைஞர்களின் பெயர் 1. பிரேம் பிகாரி வாஜ்பாய் (அண்ணன்) 2. அத்தல் பிகாரி வாஜ்பாய்(தம்பி)
- 1943 – 44ஆம் ஆண்டில் வங்காள மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் 12 லட்சம் மக்கள் பட்டினியால் மடிந்தனர்.
- தமிழ்நாட்டில் 1783, 1792, 1807, 1823, 1833, 1854, 1866, 1867, 1878 ஆகிய ஆண்டுகளில் கொடிய பஞ்சங்கள் ஏற்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். பஞ்சத்தால் வாடிய மக்களுக்க உதவிட அன்றைய ஆங்கிலேய அரசு 1878 ஆம் ஆண்டு சென்னையில் பக்கிங்காம் கால்வாயை வெட்டியது. இதற்குக் கூலியாக ரூ.2.2 லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வுகளான சிப்பாய்க்கலகம், கிலாபத் இயக்கம், மாப்பிள்ளை முஸ்லிம் புரட்சி, ஒத்துழையாமை இயக்கம், சைமன் கமிஷன், வெள்ளையனே வெளியேறு இயக்கம், வட்டமேஜை மாநாடுகள், பம்பாய் கப்பற்படைப் புரட்சி ஆகியன குறித்தும் இந்த நூலில் சுருக்கமான குறிப்பகள் காணப்படுகின்றன.
சுதந்திரப் பேராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பையும் ஆசிரியர் இடைஇடையே குறிப்பிட்டிருக்கிறார். முஸ்லிம்களின் பங்களிப்பையும் ஆசிரியர் குறிப்பிடத்தவறவில்லை. அதே நேரத்தில் சுதந்திரப் பேராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்த அலி சகோதரர்கள், மௌலான அபுல்கலாம் ஆஸாத், கான் அப்துல் கபார்கான் ஆகிய மிக முக்கியமான ஆளுமைகள் குறித்து மிகக் குறைந்த தகவல்களே நூலில் காணப்படுகின்றன.
மேலும் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழக முஸ்லிம்களான மதுரை முகம்மது மௌலான சாகிப், கம்பம் பீர்முகம்மது பாவலர், வேலூர் உபயதுல்லா, குடந்தை எஸ்.ஏ.ரகீம், அறிஞர் கரீம் கனி, அமீர் ஹம்ஸா, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், ஜமால் முகம்மது சாகிப், ஹாஜா மியான் இராவுத்தர், கரூர் நன்னா சாகிப் (பட்டியல் நீளமானது – முக்கிய ஆளுமைகளை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்) ஆகியோரைப் பற்றி எதுவுமே எழுதப்படவில்லை. நூலாசிரியர் அடுத்த பதிப்பில் இந்த விடுதல்களைச் சரி செய்யுமாறு வேண்டுகிறேன்.
மிகச் சிறந்த இந்நூலை தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றான சென்னைப் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
அதன் முகவரி …
பாரதி புத்தகாலயம், 7,
இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600018,
தொ.பே.. 044-24332424, 24332924


































