


90 களின் ஆரம்பத்தில் வந்த அஞ்சலி என்ற திரைப்படத்தில் அஞ்சலி பாப்பா என்றொரு கதாபாத்திரத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம். அந்த குழந்தையின் காலில் சில ஒலியெழுப்பும் பொருட்களை கட்டி, குழந்தைதையை ஓட விட்டு ஏனைய சிறுவர்கள் சிரித்து மகிழ்வார்கள்.
தன்னை உணரத் தெரியாத குழந்தையை வைத்து எப்படி பிறரால் மகிழ முடிகிறது? என்று அப்போது நான் நினைத்தேன். அதற்கு என்ன பெயர் என தெரியவில்லை. அது ஒரு வகை பரிதாபத்தின் வெளிப்பாடு என்பது பிறகு புரிந்தது.
அது அந்த குழந்தையின் மீதான பரிதாபம் அல்ல. மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளையை ஏளனத்திற்குள்ளாக்கும் நபர்களின் விகாரமான சிந்தனைகள் மீது ஏற்படும் பரிதாபம் அது.
பச்சாதாபம் என்ற உத்தம பண்பு தான் மனிதர்களை மிருக குணங்களிலிருந்தும் பிரித்து நிற்கிறதெனலாம். Empathy அல்லது பச்சாதாபம் என்பதை தெளிவுற வரையறை செய்யத் தெரியவில்லை. இன்னொருவரின் நிலையில் தன்னை நிலைநிறுத்தி குறித்த சந்தர்ப்ப சூழ்நிலை அல்லது நிகழ்வை உணர்தல் என சொல்லலாம்.
உளவியலில் இன்னொருவரின் சப்பாத்துக்களில் நுழைந்து பார்த்தல் என்போம். ஆனால் இன்றைய காலத்தில் அந்த பண்பு ஓர் அருகிவரும் பண்பென்றே கருதுகிறேன்.
தான் அறியாமல் தவறிழைத்த மாணவனின் தொடைகளில் தடம் பதிக்கும் ஆசிரியர்கள் உள்ளனர்.
பசிக்காக வயலினுள் புகுந்த மாட்டை கொளுத்துபவரும் உண்டு.
காமுகரால் துன்பத்திற்கு உள்ளான பெண்ணை போலீஸ்காரன் துவம்சம் செய்கிறான்.
தனக்கு கீழ் பணியாற்றுபவன் கெட்டிக்காரனென்றால் வதைப்பதை எப்படி சமாதானம் சொல்வது?
வேலைக்கு அமர்த்தியவன் உறங்கி விட்டான் என்பதற்காக கம்பியால் சூடு வைக்கும் எஜமானர்களும் உண்டு.
வியாபாரத்தில் நஷ்டப்பட்டவணை தேடிப்போய் என்றோ இழைத்த தவறுகளை எல்லாம் பட்டியலிடுபவரும் இல்லாமலில்லை.
இவையெல்லாம் எப்படி மனிதர்களால் முடியுமாக இருக்கிறதென குழம்பிப் போவதுண்டு. அவர்களுக்கும் அஞ்சலி பாப்பாவை துன்புறுத்தி சிரித்து மகிழ்ந்தவர்களுக்கும் என்னால் பெரிய வித்தியாசத்தை உணர முடியவில்லை.
இந்த மனிதர்களும் பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள் தான்.
ஏன் இவர்கள் கருணையற்றவர்களா? மற்றவர்களின் காரியங்களுக்கான காரணங்களை உணரத் தெரியாதவர்களா?
வலிமையற்றவன் என்பதற்காக வார்த்தைகளால் வலிக்கச் செய்பவன் வலியவனா?
எளியவன் என்பதற்காக எடுத்தெறிந்து நடப்பவன்தான் பெரியவனா?
தமது மனதில் உள்ள அழுத்தங்களை காயப்பட்டு அழுகிய உள்ளத்தின் அசிங்கத்தை இன்னொருவரின் முதுகில் ஏற்றுவதா புத்திசாலித்தனம்? ஒருவரது கவலையில் கஷ்டத்தில் ஆறுதல் சொல்வதற்கும் கண்ணீர் சிந்துவதற்கும் அனைவராலும் முடியும்.
ஏன் பணம் கொடுத்தால் ஒப்பாரி வைக்கும் ஆட்கள் உண்டு. ஆனால் ஒருவரின் நிலையை உணர்ந்து அவருக்கு உறுதுணையாய் நிற்பதற்குத் தான் பலராலும் முடிவதில்லை. நிறைய குழம்பிய நிலையில்தான் Cathy Glass எழுதிய Damaged என்னும் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஜூட் என்ற ஒரு சிறுவனை மையப்படுத்திய கதை அது. அவன் மற்றவர்களை துன்புறுத்துவதன் மூலம் தன் காயங்களுக்கு மருந்திட முயலும் ஒருவன். தன்னுடன் வாழ்ந்த ஏனைய சிறுவர்களை வேதனை செய்கிறான். எல்லோருடனும் முரண்படுவதன் மூலம் சண்டையிடுவதன் மூலம் தனக்கான இன்பத்தை தேடுகிறான்.
நாயைக் கண்டால் கூட மனசாட்சியின்றி வதைக்கிறான். பிறர் கஷ்டப்பட வேண்டுமென்பதற்காகவே தன் ஆடைகளில் மலம் கழித்துக் கொள்கிறான். பிறரின் கஷ்டங்கள் குறித்தெல்லாம் அவனுக்கு எந்த சிந்தனையும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பழிதீர்க்கும் ஒருவனாக இருக்கிறான். தன் தவறுகளை உணரும் அளவுக்கு தெளிவில்லாத நிலை. மனித குணங்களற்ற ஒரு ஆறறிவு மிருகம் ஜூட்.
ஜூட் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன். அன்பு அரவணைப்பு என போதிய அளவில் எதையும் காணாதவன். அதுவும் போதாதென்று திரும்பிய பக்கமெல்லாம் வகை வகையான துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுக்கிறான். அவனை வழிப்படுத்தவும் அன்பு காட்டவும் யாரையும் பெற்றுக் கொள்ளாத துரதிர்ஷ்டசாலி. அவன் ஒரு விபத்தில் மூளை பாதிப்புக்குள்ளாகிறான்.
புத்தகங்களை வாசித்து நல்லதை அறியவும் பிறரின் அறிவுரைகளால் தன்னை மாற்றிக் கொள்ளவும் வல்லமையற்றவன்.
தன்னையோ. பிறரையோ உணரும் அளவுக்கெல்லாம் அவனிடம் ஈரமில்லை. இத்தகைய சூழலில்தான் ஜூட் தன்னை துஷ்டனாக வெளிக் காட்டுகிறான். ஜூட் போலத்தான் பலரும் இங்கே.
துஷ்டனாக தன்னை வெளிப்படுத்துபவர்களிடம் ஒரு மோசமான இறந்தகாலம் இருக்கிறது. என்றோ அவர்களின் உள்ளங்களில் அழுகிப்போன குப்பைகளை இப்போது வெளியேற்றுகிறார்கள். குப்பைத் தொட்டியில் மலர்கள் இல்லை பகிர்வதற்கு. இருப்பதைத்தானே தரமுடியும்.
குடும்ப உளவள அமர்வுகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என என்னிடம் வரும் பலரில் பிறரை கஷ்டப்படுத்துபவர் என அடையாளம் காட்டுபவர்களிடம் பேசியபோது அவர்கள் ஒவ்வொருவரது கடந்தகாலம் அழுகி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
சிறுவர் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு, பெற்றோர் முரண்பாடு, குடும்ப பிணக்குகள் என அவர்களிடம் பல்வேறு காயங்கள் மறைந்திருந்தன. அவற்றில் இருந்து வழியும் சீழின் வாசம் மற்றவர்களை துன்புறுத்துகின்றதென்றால் அந்த சீலை சுமந்திருக்கும் அவர்கள் மனம் குறித்து பேசும் அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.
மற்றவர் மீது கருணை காட்ட தெரியாதவர்கள் பச்சாதாபம்படத் தெரியாதவர்கள், பிறகு கஷ்டத்தில் தன்னை பொருத்திப் பார்க்கத் தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களின் முதுகில் அழுகிப்போன ஒரு மூட்டை இருக்கிறது.
பாவம் அந்த வெறுப்பான வாசனையுடன், அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அதை சுமந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கும் போது அவர்களை எண்ணி பரிதாபப்படத் தான் முடிகிறது. இதன் பெயர் இரக்கம் அல்ல கழிவிரக்கம்.
பிறர் மீது பச்சாத்தாபப்படத் தெரியாதவர்களிடம் பரிதாபப்படுவோம். அழுகிய மூட்டைகளைச் சுமக்கும் அவர்களிடம் மலர் வனங்களை வைத்திருக்கும் நாம் மலர் இதழ்களையாவது கொடுப்போம். பாவம் அவர்களும் அன்பைத்தான் யாசிக்கிறார்கள்.
பௌசுனா இஸதீன், உளவியலாளர், NLP Practitioner, இலங்கை



































