

இஸ்லாம் கடமையாக்கிய ரமலான் நோன்பை பேணுகின்ற காலத்தில் இருக்கின்றோம். இந்த நாட்களின் உணவு முறைகளை கொஞ்சம் பார்ப்போம்.
காலை சூரியன் தோன்றுவதற்கு முன் ஸஹர் உணவு, மாலை இஃப்தார் வரை ஒரு துளி நீரைக்கூட பருகாமல், இறைவன் தடுத்தவைகளை பார்க்காமல், கேட்காமல் இருப்பதே இந்த ரமலான் நோன்பின் சிறப்பு
மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சி உள்ளது என்றால் அது தான் நோன்பு.
இந்த ரமலான் மாதம் சுய ஒழுக்கத்தைக் கடைப் பிடிப்பதற்கான வாய்ப்பு மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நம் ஒவ்வொருவறையும் அழைத்தும்
செல்லுகிறது. கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த வேதனை நிறைந்த நேரத்தில், நாம் கடைப்பிடிக்கும் நோன்பை சரியான முறையில் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் நாம் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பது மட்டும் இல்லாமல் வாழும் வரையும் ஆரோக்கியமாகவும் வாழலாம்.
நோன்பு நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும், நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடவும் பேருதவி புரிகிறது.
ஸஹர் நேரத்தில் கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
வெள்ளை சர்க்கரை கலக்காத தயிரை உணவில் சேர்ப்பது நல்லது. அதனால் நம் உடலில் உள்ள தண்ணீரின் அளவுயாமலும் மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கப்படுகிறது. பகல் நேரத்தில் வெயில் கொடுமையால் தண்ணீர் தாகம் அதிகமாகமலும் காத்துக் கொள்ள முடியும்
நார் சத்துள்ள கோதுமை ரொட்டி, தானிய வகைகள் மற்றும் அவைகளின் கஞ்சி போன்ற வைகளையும் எடுத்து கொள்வதும் நல்லது.
புரதச்சத்து நிறைந்த உணவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பின் அளவில் கட்டாயம் கவனம் இருக்க வேண்டும்.
இஃப்தாருக்கு, நீர் ஆகாரங்கள் மற்றும் பேரிச்சை பழம் நல்லது. அத்துடன் இந்த பருவகால பழங்களை உண்பது மிகவும் சிறந்தது. நீர்சத்து நிறைந்த உணவு வகைகள், பழங்கள், காய்கறிகளின் சாறுகளை அருந்த வேண்டும். அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
இஃப்தார் நேரத்தில் குளிரான பழ, காய்கறிச் சாறுகள் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக பழங்கள், சாலட் போன்றவைகள் உண்பது நல்லது. இவைகளைச் சாப்பிடுவதால் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் மெக்னீசியம் தேவையான அளவு உடலுக்கு கிடைத்து விடும்.
மேலும் மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, உடலில் இரத்த சர்க்கரை அளவும் சீராக பராமரிக்கப்பட்டு, நோன்பு காலங்களில் மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படுவதில் இருந்தும் பாதுக்காக்கப்படும்.
இந்த நேரத்தில் எண்ணெய் பலகாரங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக காரம் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் கார உணவுகள் அஜீரணக் கோளாறு மற்றும் நெஞ்செரிச்சலை உண்டாக்கலாம். வாயுவை உண்டாக்கி வயிற்றுத் தொல்லைகள் ஏற்படலாம்.
வறுத்த உணவுகள் அல்லது அதிகப்படியான இனிப்பு உணவுகளை சேர்த்துக்கொள்ள கூடாது. குளிர்ந்த நீர், குளிர் பானங்களையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
நோன்பு காலத்தில் அதிகமான நபர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். ஏனெனில் குடிக்கும் நீரின் அளவு மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுக்கும் அளவு குறைவதால், நமது குடலியக்கத்தில் இடையூறுகள் ஏற்பட்டு, நமக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ஸஹர் நேரத்திலும், இரவிலும் குளிர்விக்கப்படாத ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, அத்திப்பழம், (பட்டர் ஃபுரூட்) வெண்ணெய் பழம் அல்லது அவகேடோ போன்ற நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மிகவும் நல்லது.
வெள்ளரிக்காய், அன்னாசிப்பழம், தக்காளி, ஆரஞ்சு, தர்பூசணி, முலாம் பழம், போன்றவற்றையும் அதிகம் சேர்க்கலாம். மேலும் இளநீரைக் குடிக்கலாம்.
இப்பழங்களை அதிகாலையில் நோன்பு ஆரம்பிக்கும் முன் உட்கொள்வது, நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்துடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவும்.
காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள் காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதிலும் பட்டானி பீன்ஸ், கொண்டைக் கடலை, வெங்காயம், அவரை, போன்றவற்றையும், கோதுமை, பருப்பு வகைகள், ஆளி விதை போன்றவற்றையும் தானியங்கள் மற்றும் நார்சத்து நிறைந்த உணவுகளையும் நோன்பு மேற்கொள்ளும் காலங்களில் எடுத்து கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
கொழுப்பு குறைவான உணவுப் பொருட்களை எடுத்து கொண்டால் வீணான கழிவுகள் நம் உடலில் தங்காமல் வெளியேற உதவியாக இருக்கும்.
கொழுப்புக்கள் குறைவாக உள்ள தோல் நீக்கிய கோழி, மீன் அதே சமயம் புரோட்டீன் அதிகமாகவும் உள்ள உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும். இதனால் நமது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெற்று நோய் தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.
நோன்பு திறந்த பின் தண்ணீரை அதிகம் பருகுவது போல் பழச்சாறுகளையும் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் நோன்பினால் ஏற்படும் உடல் வறட்சி மற்றும் மலச்சிக்கல் உண்டாகமல் பார்த்து கொள்ளலாம். உலர் பழங்கள், பாதாம் போன்றவற்றையும் சாப்பிட வேண்டும். இவைகளில் கொழுப்புகள் குறைவாக இருப்பதும் குறிப்பிட வேண்டியது.
நோன்பு வைக்க இயலாதவர்கள் யார் என்பது பற்றியும் மார்க்கம் சொல்லியுள்ளதை மறக்கக் கூடாது. வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள், பயணத்தில் இருப்போர் ஆகியோர் நோன்பு இருக்க வேண்டியதில்லை.
அவர்கள் இந்த காலங்களில் அவர்களின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு உணவை அவர்கள் எடுத்து கொள்ளாலாம்.
மறந்து விட வேண்டாம் :
இஃப்தார் மற்றும் ஸஹர் நேரத்தில் இன்னொரு காரியமும் மிகவும் முக்கியம். “உண்ணுங்கள், பருகுங்கள். ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள்” என்ற இறைவாக்கை யாரும் மறந்து விட வேண்டாம்.


































