


ரூபாய், டாலர், தீனார் என எந்தப் பெயரில் இருந்தாலும் பணம் என்பது சாதாரண வெறும் பொருள் அல்ல. அது சமூகத்தின் வளர்ச்சியிலும் பாதிப்பிலும் ஆழமான அழுத்தமான அடையாளங்களை ஒவ்வொரு நாளும் பதிய வைக்கும் பொருளாதாரக் கருவி.
வருமானம் செலவினம் என இரண்டு பக்கங்களைக் கொண்ட பணம் கண்ணில் தென்பட்ட காலம் போய் வெறும் எண்ணாக மாற்றப்பட்டிருக்கும் சூழலில் நாம் வாழ்கிறோம்.
பணம் பொதுவாக இருந்தாலும் பணத்தின் பலன் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடே அதற்கான அடையாளம்.
முதலாளித்துவம் என்றழைக்கப்படுகிற முதலீட்டியம் மனிதர்களை பணக்காரன் ஏழை என இருமுனைகளை கூராக்கியுள்ளது.
உலகம் முழுவதும் அரசியல்வாதிகளாலும் பொருளாதார நிபுணர்களாலும் வசதியாக பயன்படுத்தப்படும் “வளர்ச்சி” என்ற கோஷம் யாருக்கானது? என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
பொருளாதார சமத்துவம், வருமான சமத்துவம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வறிக்கைகள் வெளிவருகின்றன. அதைப் படித்தால் உலக அளவில் பல நாடுகளில் வளர்ச்சியின் பலன் யாருக்குச் சென்றடைகிறது என்பது தெரியும்.
நாடு வேகமாக வளர்கிறது என்று நமது நாட்டின் தலைமைகள் பீற்றிக்கொள்ளும்போதெல்லாம் நம் நினைவில் நிறுத்த வேண்டியது பெரும் செல்வந்தர்கள் பெரும் பலன் பெறுகிறார்கள் என்பதே.
வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட ஆக்ஸ்ஃபாம் கூட்டமைப்பு 2020 ஆண்டின் உலக பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள புள்ளி விவரங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
உலக மக்கள் தொகையில் 60% மக்களிடம் இருக்கும் சொத்து மதிப்பை விட வெறும் 2153 மனிதர்களின் சொத்து மதிப்பு அதிகம். (அவர்களில் ஒவ்வொருவரும் 100 கோடிக்கு மேல் வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களாக பில்லியனர்களாக இருக்கிறார்கள்.)
இந்தியாவில் ஏழ்மை நிலையில் இருக்கும் 70% மக்களின் சொத்துக்களை விட, சொத்து வரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம். (அதாவது சராசரியாக 80 கோடி மக்களின் சொத்துக்களை விட அதிகமாக வெறும் 1.4 பேர் வைத்துள்ளனர்.)
இந்த அறிக்கை உலகம் முழுவது வருமான சமத்துவமின்மை கட்டுப்படுத்த முடியாத அளவை எட்டியுள்ளதைக் காட்டுகிறது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஆண்களுக்கும் பெண்களுக்குமான பொருளாதார இடைவெளி மேலேகண்டதை விட மோசம். குறிப்பாக அதிக அளவு பொருளாதார பாகுபாடுகளால் பாதிக்கப்படுவது பெண்கள் என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.
ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவில் உள்ள பெண்கள் அனைவரின் சொத்துக்களின் மதிப்பை விட உலகப் பணக்காரர்களின் பட்டியல் அடுக்கில் உள்ள முதல் 22 பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகம்.
ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியின் ஒரு வருடச் சம்பளத்தை, வீட்டு வேலை செய்யும் ஒரு பெண் தொழிலாளர் சம்பாதிக்க 22,277 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறது இந்த அறிக்கை.
ஆக்ஸ்ஃபாம் ஆய்வின் படி இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனத்தின் உயர் அதிகாரி பெறும் சம்பளத்தை ஒரு சாதாரண தொழிலாளி எட்டுவதற்கு 941 ஆண்டுகள் ஆகும்.
பொருளாதார சமமின்மை குறித்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை வெளி வந்துகொண்டுதான் இருக்கிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வும், சுரண்டலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வாழ்வாதாரத்தின் மத்திய நிலையிலும், கீழ்நிலையிலும் இருக்கும் மக்களிடம் இருந்து உழைப்பாகவும், லாபமகாகவும், வரியாகவும் சுரண்டப்படும் பொருளாதாரமே பெருமுதலாளிகளின் சொத்துமதிப்புகளாக உயர்ந்து நிற்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தின் சொத்துக்களை பறிக்கும் வேலையைத்தான் முதலாளிகள் செய்கிறார்கள்.
இதனை புள்ளிவிவரங்களோடு எடுத்துச் சொல்லியிருப்பது முதலாளித்துவத்தை சீரமைத்து பாதுகாக்க நினைக்கும், ஆக்ஸ்ஃபாம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களே.
முதலாளித்துவ அமைப்பு உடைந்துவிட்டது என்று வாதிடும் ஆக்ஸ்பாம் அதன் காரணம் கூறும் போது, “முதலாளித்துவம் ஏகபோகங்களை வளர அனுமதிக்கிறது மேலும் குறிப்பிட்ட ஒரு சிலரின் கைகளில் மட்டுமே செல்வத்தை குவிக்கிறது” என்கிறது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ், அமெரிக்காவில் காணப்படும் ஏழை-பணக்காரர் வேறுபாடு, “தார்மீகரீதியிலும் பெருளாதாரரீதியிலும் பேரவலம்” என்று கூறும் அவர் “பெருங்கோடீஸ்வரர்கள் (பில்லியனர்) இருக்கவே கூடாது” என்கிறார்.
“சமத்துவமில்லாமல் செல்வம் சேருவது நாட்டின் சமூக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்” என்கிறது ஆக்ஸ்ஃபாம் “செல்வம் சேர்ப்பதில் அதிக அளவிலான வேறுபாடு ஜனநாயகத்தையே சீர்குலைக்கக்கூடியது” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கோடிக்கணக்கான மக்கள் தீவிர வறுமையில் வாடும் போது மிக மிக சொகுசான வசதி வாய்ப்புகளோடு வாழும் பணக்கார கோடீஸ்வரர்கள் அதிகரித்து வருவது அமெரிக்கா அரசியல்வாதி முதல் ரோட்டோரம் வாழும் எந்த வாய்ப்பும் அற்ற சாதாரண மனிதன் வரை அனைவருக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நெருக்கடியை பொருளாதார சமமின்மையை அரசாங்கங்களே உருவாக்குகின்றன. இதில் அமெரிக்காவும் அடங்கும்.
பொருளாதார அசமத்துவத்தால் பல நாடுகளில் முறையான கல்வியும் தரமான சுகாதாரப் பாதுகாப்பும் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆடம்பரமாக மாறியுள்ளது.
போதுமான சுகாதார பராமரிப்பு பாதுகாப்பு கிடைக்காததால் ஒவ்வொரு நாளும் 10,000 மனிதர்கள் மரணிக்கிறார்கள். தங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கச் செலவிடும் தொகையின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியன் மக்கள் தீவிர வறுமையின் பக்கம் தள்ளப்படுகிறார்கள். (UHC – Universal health coverage,2019)
இந்த பொருளாதார ஏற்றத் தாழ்வு ஆயுளைக் குறைக்கிறது. பணக்காரர்களை விட ஏழைகள் பத்து ஆண்டு குறைவாகவே வாழ்கிறார்கள்.
எதிர்காலத்தை சூன்யமாக்குகிறது, குழந்தைகளின் ஆளுமையை, ஆயுளை சிதைக்கிறது. பணக்காரனாக இருப்பதே வாழ்வதற்கு தகுதியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த பொருளாதார ஏற்றத் தாழ்வு தவிர்க்க முடியாதது அல்ல! மக்களை ஒடுக்கும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
பணக்காரர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் அவர்களது நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தால் வழங்கப்படும் வரிச் சலுகை சாதாரண மக்களின் மீது வரியாக விழுகிறது.
பொருளாதாரம் சார்ந்த இன்றைய வாழ்க்கை அமைப்பில் மூச்சு விடுவதைத் தவிர அத்தனைக்கும் பணம் தேவைப்படுகிறது. அத்தனைக்கும் வரியும் கட்டி அழ வேண்டியதிருக்கிறது.
வரி கொடுக்கும் நாட்டின் குடிமகனை புறந்தள்ளி விட்டு பெரும் பணக்காரர்களுக்கே அத்தனை சலுகைகளும் வாரி வாரி வழங்கப்படுகிறது.
உலகம் முழுவதுமிருக்கும் இது போன்ற பொருளாதாரக் கொள்கை நடுத்தர மக்களை கடுமையாகவும், ஏழைகளை மோசமாகவும் பாதிக்கிறது.
இது மாற வேண்டும் – மாற்றம் சாத்தியம் என்று சொல்லும் ஆக்ஸ்ஃபாம் அதற்கு : “அரசாங்கங்கள் பணக்காரர்களுக்கு நியாயமான வரி விதிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில், நாட்டின் உள் கட்டமைப்பில் முதலீட்டை அதிகரிப்பதை அரசாங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும், பெண்கள் மற்றும் சிறுமிகளை வறுமையிலிருந்து உயர்த்தவும் உலகத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.”
மேலும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் புதிய பொருளாதாரக் கொள்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும். அது
சமூகத்தின் ஒட்டுமொத்த மனிதர்களின் மதிப்பை உயர்த்துவதாக இருக்க வேண்டும்.
முடிவற்ற லாபத்தைத் தேடும் பொருளாதாரக் கொள்கையாக அது இருக்கவே கூடாது. அனைவரையும் உள்ளடக்கிய, பொருளாதாரத்தில் நீதியை சமத்துவத்தை அனைவருக்கும் வழங்குவதாக அது இருக்க வேண்டும் என்கிறது ஆக்ஸ்ஃபாம்.
இதுகுறித்து ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் தலைவர், அமிதாப் பெஹர் கூறுகையில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இந்தப் பெரும் இடைவெளியை, சமமற்ற தன்மையை ஒழிக்கும் தன்மைகள் கொண்ட கொள்கைகள் இன்றி இது சாத்தியமில்லை.
அப்படி ஒரு கொள்கையை தற்போது இருக்கும் எந்த ஒரு நாட்டின் அரசாங்கமும் முன்வைக்கப் போவதில்லை. நிலவும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பில், அப்படி ஒரு திட்டத்தை முன் வைக்க சாத்தியமே இல்லை என்கிறார்.
பொருளாதார அசமநிலையை மாற்றும் வழிதான் என்ன?
மனிதத் தன்மையோடு கூடிய நடைமுறைப்படுத்தப்பட்ட சமத்துவ பொருளாதாரக் கொள்கை இங்கே கோட்பாடாக இருக்கிறது.
நடைமுறை பொருளாதாரக் கொள்கையாக அதை உலகச் சமூகத்திடம் முன் வைக்கும் பொருளாதார ஆளுமைகள் முஸ்லிம்களே உங்களிடம் இருக்கிறார்களா?
அவர்களை உருவாக்க முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கிறதா?





































