களத்து மேடு

தமிழர் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் நேர்காணலை சமூகநீதி முரசு மாத இதழில் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. நிரப்பமான மகிழ்ச்சி. சமூக நீதி பாதுகாப்பு, மனு தர்ம எதிர்ப்பு, தனியார், தாராளமய புறக்கணிப்பு, தற்சார்பு ஏற்பு என சமகாலத்தின் சிக்கல்கள் – அதற்கான வழிகாட்டுதல்கள் அனைத்தையும் படித்த போது என்னுள் ஒரு தெளிவு உண்டானது. தமிழர் தலைவரைப் போல் தூர நோக்கோடும் திடப் பார்வையோடும் கருத்துக்களை முன்வைக்கும் தலைவர்கள் தமிழகத்தில் ஒருவரும் இல்லை. சமூக நீதி முரசு என் வாழ்த்துக்கள்.

ஜெய தேவன், பாண்டிச்சேரி

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட விதம், அரசியல் நிர்ணய சபையின் போக்கு இவைகள் குறித்து அறியாமையும், போதாமையும் நிரம்பி வழியும் இந்தியச் சமூகத்திற்கு “அரசியல் நிர்ணய சபையில் நடந்த நிகழ்வுகள்” குறித்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் பலதையும் அறியாமலேயே வாழ்ந்து மடியும் சோகம் இந்தியர்களின் தலை எழுத்து போலும். 

அரசியல் நிர்ணய சபையில் முஸ்லிம்களின், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை குறைத்த பட்டேலின் வாரிசுகள் கையில் அரசமைப்புச் சட்டம் ஆபத்தான நிலையில் இருக்கிறது.

அதைக் காப்பது இந்திய மக்கள் ஒவ்வொரின் மீதும் கடமை.

காயம் மஹ்பூப் அவர்கள் எழுதிய “இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபை” கட்டுரையை ஒவ்வொரு இந்தியனும் வாசிக்க வேண்டும்.

ஜலாலுத்தீன், மதுரை

“எனது பர்மா குறிப்புகள் புத்தக விமர்சனம்” பல வரலாற்றுத் தருணங்களை குறிப்புகளாக வழங்கியது. சிறப்பு. “வேலை வாங்கும் கலை” கட்டுரை சிறப்பான வழிகாட்டுதல்களை எனக்கு வழங்கியது. திருமாவின் நேர்காணல், மற்றும் அவரது அறிமுகம் நேர்த்தியாக இருந்தது.

முகைதீன் பாதுஷா, மதுரை,

தொல்,திருமாவளனின் நேர்காணலில் பல கேள்விகள் என்னுள் இருந்தவை. இதுவரை யாரிடமும் கேட்கப்படாமலேயே எனக்குள் அமிழ்ந்து கிடந்தது. ஒரு ஒரு கேள்வியின் பதிலும் எனக்குள் விடுதலை உணர்வையும், மன விசாலத்தையும் வழங்கியது. சனாதனம்-கார்ப்பரேட் மயம் இரண்டுக்கும் மாற்றாக அவர் முன் வைத்த சமூக நீதி-தற்சார்பு இரண்டும் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிகாட்டுதல்கள். “விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை” குறித்து அவரது பார்வை, முக்கியமானது. ஆனாலும் ஒவ்வொரு சமூகமும் அவரவர்களுக்கான அதிகாரப் பகிர்வை அடைவதும் முக்கியமானதாகப் பாக்கிறேன். சிறப்பான நேர்காணல்.

தீன் முஹம்மது, அரக்கோணம்