வாழ்வை சலிக்கச் செய்யும் மனச்சோர்வு

மனச்சோர்வு என்பது ஒரு கோளாறு. இது சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் பாதிக்கிறது. இலங்கையில் 50% தற்கொலைகள் மனச்சோர்வின் விளைவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 6 பேரில் ஒருவர் தற்கொலை செய்வதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

மனசோர்வு என்றால் என்ன?

எதிர்பாராத ஒன்று நமக்கு நேர்ந்தால், அது நமக்கு மிகுந்த சோகத்தையும் விரக்தியையும் ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த நிலை சில நாட்கள் அல்லது நீண்ட உறக்கத்திற்குப் பிறகு குணமடைவது இயல்பு. காலப்போக்கில் அது மாறக்கூடும். அல்லது மறந்து விடும்.

ஆனால், சில பிரச்சினைகளின் தாக்கங்கள் மனதை விட்டு நீங்காமல் நிலைத்திருக்கும். எந்தக் காரணமும் இன்றி கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். உங்கள் இதயத்தில் உள்ள அந்த சோகம் உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் குறுக்கிட்டால், அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். இந்த நிலையே டிப்ரஷன் என்றும் அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பின்வரும் அறிகுறிகள் அனைத்தும் இருக்காது. ஆனால் அவற்றில் சில நடக்கலாம். பின்வரும் அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவ உதவியை நாடுவது அவசியமாகும்.

  • முன்பு தானாகவே விரும்பிச் செய்த ஒன்றை செய்யும் ஆசை குறைவது.
  • உடல் களைப்படையாத போதும் உடலில் ஏற்படும் சோர்வு
  • எதையாவது வெல்ல வேண்டும் என்ற உறுதியை, உற்சாகத்தை இழப்பது
  • கவனம் குறைதல், எதிலும் கவனத்தைக் குவிக்க இயலாமல் இருப்பது.
  • அமைதியின்மை மற்றும் அடிக்கடி எரிச்சல்.
  • பசியின்மை அல்லது அதிகப் பசி, 
  • தூக்கமின்மை அல்லது தூக்கம் அதிகரித்தல்
  • பாலியல் ஆசை குறைதல் அல்லது விருப்பமில்லாமல் போவது
  • தன்னம்பிக்கை குறைதல்
  • விரக்தியான எண்ணங்கள் 
  • சமூகத் தொடர்புகளில் இருந்து விலகி இருப்பது. 
  • தனியாக சிந்தித்தல்
  • மருத்துவ ரீதியான அடிப்படைக் காரணங்கள் இன்றி தொடர் தலைவலி, உடல் வலிகள், மார்பு இறுக்கம், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது.
  • மது மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுதல்
  • தற்கொலை முயற்சி

இந்த அறிகுறிகள் நாளின் குறிப்பிட்ட ஒரு நேரத்தில், பெரும்பாலும் காலையில் தோன்றும்.

மனச்சோர்வுக்கான காரணம்

  • அதிக வேலை
  • எதிர்பாராத இழப்பு அல்லது நஷ்டம். நேசிப்பவரின் திடீர் மரணம் ஆகியவற்றால் ஏற்படும் மூளை உயிரணுக்களில் உயிர் வேதியியல் மாற்றங்கள் மனச்சோர்வுக்கு பங்களிக்கும்.
  • மூளை மற்றும் நரம்பு சார்ந்த நோய்களின் தாக்கம்.
  • பரம்பரைக் காரணிகள்

ஆனால் வெளிப்படையான காரணமின்றி இந்த நிலைக்கு பலியாவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த நிலை Endogenous Depression என்று அழைக்கப்படுகிறது. சில தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு இந்த நிலையை உருவாகும். இது Postpartum Depression என்று அழைக்கப்படுகிறது.

இயற்கையாகவோ, இயல்பு காரணமாகவோ மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடியவர்களும் உள்ளனர்.

யார் மனச்சோர்வு அடைய முடியும்?

  • மனச்சோர்வு சிறு குழந்தை முதல் பெரியவர் வரை யாரையும் பாதிக்கும்.
  • இளைஞர்கள், நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • மேலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த நிலைக்கு ஆளாகும் வாய்ப்புகள் குறைவு.
  • ஆண்களை விட பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மனச்சோர்வுக்கான நவீன மருத்துவ சிகிச்சைகள்

உளவியல் ஆலோசனை

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்களின் பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பது ஒரு வெற்றிகரமான சிகிச்சையாகும். இது நோயாளியின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டறிந்து அவற்றை மனரீதியாக உறுதிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை 

ஆண்டி டிப்ரஷன் மருந்துகளின் பயன்பாட்டின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட நிவாரணம் கிடைக்கலாம். ஆனால் சிகிச்சையின் ஆரம்ப கட்டங்களில் இந்த நோய் நீங்காது. ஆரம்பத்தில், தலைசுற்றல், லேசான தலைவலி மற்றும் மலச்சிக்கல் ஏற்படலாம். தொடர்ந்து சிகிச்சையளிப்பது நோயின் அபாயத்தை குறைக்கும். அல்லாத போது நோயின் தீவிரம் அதிகரிக்கக்கூடும்.

எலக்ட்ரோ கன்வல்சிவ் சிகிச்சை – Electroconvulsive therapy (ECT)  

கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த எலக்ட்ரோ கன்வல்சிவ் தெரபி அல்லது அதிர்ச்சி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மயக்கமடைந்த நோயாளியின் மூளையின் சில பகுதிகள் வழியாக நன்கு கட்டமைக்கப்பட்ட மின்னோட்டங்களை செலுத்துவதன் மூலம் மூளையின் இரசாயன சமநிலையை ஏற்படுத்துதல்.

இது கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கான வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான சிகிச்சையாகும்.

மனச்சோர்வுற்றவருக்காக நாம் எவ்வாறு உதவலாம்?

அதிகபட்ச அன்பையும் தயவையும் காட்டுதல் 

ஒரு தகுதிவாய்ந்த மருத்துவரின் உதவியை நாடுதல்

அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்திய விஷயங்களில் இருந்து விடுபட உதவுதல்.

 சரியான முடிவுகளை எடுக்க உதவுதல்

 மது மற்றும் புகை அடிமையாதலை தடுத்தல்

நோயாளியைக் குறை கூறுவதைத் தவிர்த்தல். குற்றம் சுமத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல்.

நடைமுறை சாத்தியமுள்ள விடயங்களில் கவனம் செலுத்த உதவுதல்.

சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவதற்கு உதவுதல், உற்சாகம் அளித்தல்.

அன்றாட செயல்பாடுகளில் அவர்களுக்கு உதவுதல்.

தற்கொலையே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று அவர்கள் நினைப்பதை அறிந்தால் அதை பொருட்படுத்தாமல் உடனடியாக தகுந்த மருத்துவ உதவியை நாடவும்.

பெளசுனா இஸதீன்

BS.c Psychology

இலங்கை