உலகில் பல மொழிகள் இருந்தாலும் குழந்தை பேசும் முதல் மொழியே அழுகை தான்! “அழுகையை உணர்வுகளின் மொழி” என்றும் சொல்லலாம்.
ஒரு குழந்தைக்கு தாய் மொழி எதுவாக இருந்தாலும் பசி, தாகம், அரவணைப்பு, கோபம், வலி ஆகியவைகளை அழுகையின் மூலமாகத் தான் தெரிவிக்கும்.
சிரிக்கத் தெரியாதவன் மனிதன் இல்லை என சொல்வது போல், அழுகத் தெரியாதவனை மன நலம் சரியில்லாதவன் என்று சொல்ல நேரிடலாம்.
துக்கமும் விரக்தியும் வாட்டும் பொழுது மட்டும் தான் ஓருவர் அழவார் என்பது இல்லை. ஒருவர் அழுவதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.
மன வேதனையும் உடல் வேதனையும் கூட நம் அழுகைக்கு காரணமாகி விடும் வாய்ப்பு இருக்கிறது. அது போல் அளவில்லா சந்தோஷமும், நிம்மதி பெருமூச்சு விடும் போதும், எதையாவது சாதிக்கும் போதும் கூட நமக்கு அழுகை வருவதைப் பார்க்கிறோம் அதை ஆனந்த அழுகை என்றும், ஆனந்தக் கண்ணீர் என்றும் சொல்லுவோம்.
இது மட்டுமல்லாமல் மற்றவர்கள் அழுவதைப் பார்க்கும் போது நமக்கும் அழுகை உடனே தொற்றிக் வரலாம். திரைப்படங்களின் சோகக் காட்சி, புத்தகத்தில் அல்லது நேரடியாக உணரும் மனதை வருடும் நிகழ்ச்சிகள் நம்மை பாதிக்கும் போதுகூட நமக்கு அழுகை வரலாம்.
“வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நம் கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீர் வெளிப்படுகிறது” என அழுகையைப் பற்றி குறிப்பிடுவார்கள்.
அழுகை, துக்கத்தின் வடிகால், சோகத்தை குறைக்கும் வழி என்பது நம் எல்லோருக்குமே தெரியும். 85 சதவீத பெண்களும் 73 சதவீத ஆண்களும் அழுது கண்ணீர் வடித்த பிறகு மனதளவில் நன்றாக உணருவதாகச் சொல்கிறார்கள்.
கண்ணீரில் மூன்று வகைகள் இருக்கின்றன.
1. அடிப்படைக் கண்ணீர் (Basal Tears) என்று அழைக்கப்படுகிறது. இது கண்களைத் தூய்மையாக வைத்திருக்கவும், பாக்டீரியாக்களை எதிர்க்கவும் பயன்படுகின்றது.
2. இந்த கண்ணீர் எரிச்சலினால் வருவது. கண்களில் தூசி விழுந்தால், புகை பட்டால், அம்மோனியா, சல்ஃபர் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் பட்டால், வெங்காயம் உரித்தால் வருவது. எரிச்சல் ஏற்படுத்திய வஸ்துகளைக் கண்ணிலிருந்து விரட்டுவதே இந்தக் கண்ணீரின் நோக்கம்.
3. உணர்ச்சிவசப்படும்போது வரும் கண்ணீர். இது கடுமையான வருத்தம், உடல் வேதனை, மிக நெருங்கியவர்களின் இழப்பு, சோகமான சம்பவங்கள் அல்லது மிதமிஞ்சிய பரவசம் போன்றவற்றால் வருவது இந்த வகைக் கண்ணீர். இதில் ஹார்மோன்கள் தூக்கலாக இருக்கும். சிறிதளவு வலி நிவாரணியும் இருக்கும்.
அழுகையை ‘லேக்ரிமேஷன்’ என்று ஆங்கிலத்தில் சொன்னாலும் அது லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது. “லேக்ரிமல்” சுரப்பி எனப்படும் கண்ணீர்ச் சுரப்பியில் இருந்து வருவதே கண்ணீர் ஆகும்.
அதிகமாக உணர்ச்சி வசப்பட்டுக் கண்ணீர் சிந்தும்போது நம் மூக்கில் இருந்தும் கூட நீர் ஒழுகுவதை நாம் சில நேரங்களில் உணரலாம்
ஒருவருக்கு கண்ணீர் வருவதற்கு சில கண் நோய்களும் இருக்க தான் செய்கின்றன,
தொடர்ந்து தூசிக்கிடையில் வேலை செய்பவர்களுக்கும், அடிக்கடி கண்ணில் தூசு விழும் நிலையில் இருப்பவர்களுக்கும் தொடர்ந்து கண்ணீர் வரும். இதனால் மெல்லிய குழாயில் அடைப்பு ஏற்பட நேரும். அப்போது கண் ஈரப்பசை இழந்து விடும்.
கடுமையான நீரிழிவு நோயாளிகளுக்கும் கண்ணீர்க் குழாய் அடைபடலாம். கண்ணீர்ச் சுரப்பிகள் சுரக்காவிட்டால் கண்ணில் ஈரப்பசை இல்லாமல் போய்விடுவதும் உண்டு.
விமானத்தினுள்ளும் ஏர்கண்டிஷன் அறையிலும் சிலருக்கு கண்ணீர்ச் சுரப்பிகள் வேலை செய்யாமல் போய் கண் ஈரப் பசையற்றுப் போய், கண்ணில் எரிச்சல் ஏற்படுவதும் உண்டு.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் சிலர் கம்ப்யூட்டர் திரையையே மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்தாலும். செல்போன் விளையாட்டு. தொலைக்காட்சியை ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டு இருப்பதாலும் இந்த நிலை ஏற்படுவது சகஜம்.
ஒரு சிலருக்கு சோக சீரியல் பார்த்தாலும் துக்கம் கவலை வேதனை என எது ஏற்பட்டாலும் எந்தச் சூழ்நிலையிலும் கண்ணீர் வராது. இந்த நிலையை ‘அலக்ரியா’ என கண் மருத்துவத்துறை சொல்லுகிறது.
ஒரு கண்ணில் மட்டும் ஒரு சிலருக்கு கண்ணீர் வருவதும் உண்டு. இது ‘லீமி ஐ’ என்ற ஒரு விசித்திரப் பிரச்னையாகும்.
கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கும் கண்ணில் ஈரப்பதம் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டு கண்ணீர் வருவதில் பிரச்சனையும் உண்டாகிறது.
கண்ணீர் சுரப்பியில் சுரக்கும் கண்ணீர், கண் இமைத்தலின் மூலம் மேல் மற்றும் கீழ் இமைகளின் விளிம்போரத்தில் இருக்கும் சிறிய திறப்பு வழியாக, கண்ணீர் நாளக்குழாயின் மூலம் கண்ணீர்ப் பையை (Lacrimal Sac) அடைகிறது.
நாம் அழும்போது உணர்ச்சி வசப்படுவதால் கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டுக் கண்ணீர் அதிகமாகச் சுரக்கிறது. இதனால், உற்பத்தியாகும் கண்ணீர், இமைகளில் உள்ள திறப்பு வழியாக முழுவதுமாக வெளியேற முடியாத நிலையில், எஞ்சிய கண்ணீர் கண்ணிலிருந்து கன்னங்களில் வடிகிறது.
இந்த நேரத்தில்தான், நாம் கண்ணீரை உணர்கிறோம். அழும்போது அதிகப்படியான கண்ணீர் உள்ளே செல்வதால்தான் மூக்கும் ஒழுகுகிறது.
பிறந்த குழந்தைக்கும் சிலநேரங்களில் இயல்புக்கு மாறாகக் கண்ணிலிருந்து கண்ணீர் வடிய வாய்ப்பு இருக்கிறது.
ஒரு ஆண்டில் 30 முதல் 64 முறை பெண்கள் அழுவதாகவும். 6 முதல் 12 முறை ஆண்கள் அழுவதாகவும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல ஆண்களைவிட அதிக நேரம் அழுகிறவர்கள் பெண்கள் (குறைந்த அளவு 6 நிமிடங்கள்) தான் என்றும், ஆண்கள் குறைவாகவே (குறைந்தது 2 முதல் 4 நிமிடங்கள்) அழுகிறார்கள் என்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சொசைட்டி ஆஃப் ஆஃப்தல்மோலஜி (Society of Ophthalmology) கண்டறிந்துள்ளது.
அழுவதால் நல்ல தூக்கம் வரும், அழுது கொண்டே தூங்கி விடும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அழுதால் தூக்கம் வரும்.
அழுவதால் மன இறுக்கம் குறையும் என்றும். மற்றவர்கள் அழும்பொழுது ஆறுதல் கூற நாம் முயற்சி செய்யும் ஒருவர் நல்ல மனிதாபிமனியாக இருப்பார்.
மனம் விட்டு அழுதாலோ, கதறி அழுதாலோ நிச்சயம் கண்ணீர் வரும். தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாலும் கண் எரிச்சல் ஏற்பட்டு அது தூக்கத்தை அது உண்டாக்கும்.
கண்களில் ஐசோஸைமி (lysozyme) என்கிற அமிலம் சுரக்கிறது. அது கண்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகளை நீக்கி கண்களை சுத்தம் செய்கிறது. இதனால் நீண்ட அழுகைக்குப் பின் கண் பார்வைய தெளிவடையும்.
அழுகை, வறண்ட கண்களில் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதாக நமது தேசிய கண் மையம் விவரித்துள்ளது.
சிந்திக்க தெரிந்தவருக்கு மட்டும் இல்லை. மனிதர்கள் எல்லோருக்கும் அழுகை பொதுவானது.




































