வாசித்து வாழ்வோம்..7,  சேயன் இப்ராகிம்

தமிழகத்தில் முஸ்லிம்கள்

2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கட்தொகை 42,29,479ஆகும். தமிழக மக்கள் தொகையில் இது 5.86 சதவிகிதம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் பரவி வாழ்ந்து வருகின்றனர். அதிகபட்சமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் 15-37 சதவிகித முஸ்லிம்களும், மிகக் குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 1.02 சதவிகித முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர். 

தமிழகத்திற்கு இஸ்லாமிய மார்க்கம் எப்போது வந்தது? எப்படி வந்தது?

தமிழக முஸ்லிம்களின் வரலாற்றுப் பின்னணி என்ன? சோனகர், துலுக்கர், இராவுத்தர், மரைக்காயர், லெப்பை, தக்னி-பட்டாணியர், இப்பெயர்க் காரணங்களின் பின்னணி என்ன? இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கு்ம் நூலே வரலாற்று ஆய்வாளர் எஸ்.எம்.கமால் எழுதியுள்ள “தமிழகத்தில் முஸ்லிம்கள்” என்ற நூலாகும். தமிழக முஸ்லிம்களைப் பற்றி வெளிவந்துள்ள ஒரு மிகச்சிறந்த ஆய்வுநூல் என்று இதனைக் குறிப்பிடலாம். 25 அத்தியாயங்கள் கொண்டுள்ள இந்த நூலில் ஒவ்வொரு

அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ள வரலாற்றுச் செய்திகளுக்கு சான்றாதாரங்கள்

கொடுக்கப்பட்டுள்ளன.

நூலாசிரியர் எஸ்.எம். கமால் இராமநாதபுரத்தைச் சார்ந்தவர். தமிழக அரசின் வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்து தாசில்தாராகப் பதவி உயர்வு பெற்றுப் பணியாற்றியவர். மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளரான இவர் பல வரலாற்றுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, நாணயவியல் ஆகியன பற்றி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். 

பல வரலாற்றுப் பேரவைகளில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

தமிழகத்தில் வணிகர்கள் மற்றும் சூபிஞானிகள் (இறைநேசச் செல்வர்கள்) மூலமாகவே இஸ்லாம் பரவியது என்பதை இந்நூலில் ஆசிரியர் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். அரபுநாடுகளிலிருந்து மார்க்கப் பரப்புரைக்காக தமிழகத்திற்கு வந்த இஸ்லாமிய இறைநேசச் செல்வர்களின் போதனைகளால் கவரப்பட்டு இஸ்லாமை ஏற்றுக்கொண்ட இந்த மண்ணின் மைந்தர்கள்; அரபு நாடுகளிலிருந்து வணிகத்திற்காகவும், பாதுகாப்புத் தேடியும் தமிழகத்திற்கு வருகை தந்து இங்கேயே நிரந்தரமாகக் குடியிருந்த தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து தமிழ் மொழியை தங்களது தாய் மொழியாக ஏற்றுக்

கொண்டவர்கள்.

சுல்தான்கள் மற்றும் நவாபுகள் ஆட்சிக் காலத்தில் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து போர் வீரர்களாகவும், அரசுப் பணியாளர்களாகவும் தமிழகத்திற்கு வந்து இங்கேயே நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்து வருபவர்கள் (இவர்கள் தக்னிகள் அல்லது பட்டாணிகள் என அழைக்கப்படும் உருது மொழி பேசும் மக்கள்) என இந்த மூன்று பிரிவினர்களையும் உள்ளடக்கியது தான் இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகமாகும்

என்பது நூலாசிரியரின் முடிவாகும்.

மேற்கண்ட தனது இந்தக் கருத்தை நிறுவும் பல சான்றுகளை நூலாசிரியர் இந்த நூலில் விவரித்துள்ளார். இனி, இந்த நூலில் காணப்படும் சில வரலாற்றுச் செய்திகளைப்

பார்ப்போம்.

· நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களான தமீம்-உல் அன்சாரி மற்றும் முஹம்மது உக்காசா ஆகியோர் கி.பி ஏழாம் நூற்றாண்டிலேயே தமிழ் நாட்டிற்கு வருகை தந்து மார்க்கப் பரப்புரையில் ஈடுபட்டனர். இந்த இறை நேசச் செல்வர்களின் நினைவிடங்கள் முறையே மஹ்மூது பந்தர் என்று பரங்கிப் பேட்டையிலும் சஹீது பந்தர் என்று கோவளத்திலும் உள்ளன.

· இதே கால கட்டத்தில் ஈராக் நாட்டைச் சார்ந்த காஸிம்(ரலி) அவர்களும், அப்துர் ரஹ்மான் அவர்களும் தமிழகத்திற்கு இஸ்லாமியப் பரப்புரைக்காக வந்தனர். முன்னவரின் நினைவிடம் குமரி மாவட்டம் கோட்டாறிலும், பின்னவரின் நினைவிடம் நெல்லை மாவட்டம் பொட்டல்புதூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையிலும் இருக்கின்றன. (கோதர்ஷா மலை)

· தொடர்ந்து அலை அலையாக இஸ்லாமியப் பரப்புரைக்காக தமிழகத்திற்கு வந்த இறை நேசச் செல்வர்களில் முக்கியமானவர் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சிரியாவிலிருந்து வந்த தப்லே ஆலம் நத்ஹர் வலிபாவா அவர்கள். அன்னாரின் பரப்புரை காரணமாக சோழ மண்டலத்தில் இஸ்லாம் பரவியது. அவரின் நினைவிடம் திருச்சி பாலக்கரையில் உள்ளது.

· கி.பி. 1182ல் மதினாவிலிருந்து தமிழகம் வந்த சுல்தான் செய்யது இப்ராகிம்(வலி) அவர்கள் பாண்டிய நாட்டின் கொற்கைக்கு வந்து சமயப் பணியாற்றினார். அன்னார் ஒரு மிகச் சிறந்த வீரருமாவார். அப்போது ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர் குலசேகரப் பாண்டியன் சுல்தானுக்கு அனைத்து வசதிகளையும் வழங்கி உதவி புரிந்தார். 

அந்தக் காலகட்டத்தில் அவரது சகோதரர் திருப்பாண்டியன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு கொண்டிருந்தார். அவர் குலசேகரப் பாண்டியனுக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்ததால் அவரை அடக்க தனக்கு உதவுமாறு மன்னர் குலசேகரப் பாண்டியன் சுல்தானை கேட்டுக் கொள்ளவே, அவரும் அந்த வேண்டுகோளை ஏற்று மதுரையை நோக்கிப் படை நடத்தி திருப்பாண்டியனைத் தோற்கடித்தார். இதற்கு நன்றி பாராட்டும் வண்ணம் மன்னர் குலசேகரப் பாண்டியன் கிழக்கு இராமநாதபுரம் பகுதியை சுல்தானுக்கு வழங்கி ஆட்சி புரியுமாறு வேண்டினார். பவித்திர மாணிக்கப்பட்டணத்தை தலை நகராகக் கொண்டு சுல்தான் சுமார் 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

எனினும், போரில் தப்பியோடிய மதுரை திருப்பாண்டியன் மீண்டும் படைதிரட்டி வந்து சுல்தானுடன் போர்புரிந்தார். கி.பி 1196ல் நடைபெற்ற இந்தப் போரில் சுல்தான் திருப்பாண்டியனை வெட்டி வீழ்த்தியதுடன் தானும் வீரமரணம் அடைந்தார். அன்னாரின் நினைவிடம் அமைந்துள்ள இடமே ஏர்வாடி தர்காவாகும். இந்தப் போரில் உயிர் நீத்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் வீரர்களின் கல்லறைகள் ஏர்வாடி தர்காவை ஒட்டிய பகுதிகளில் இருக்கின்றன.

· எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈராக் கவர்னர் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப்பின் கொடுங்கோன்மைக்குப் பயந்து 226அரபுக் குடும்பங்கள் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்து தமிழகத்தின் தென்பகுதி கடற்கரை நகரமான கொற்கையில் குடியேறினர். இந் மக்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி வாழலாயினர். அந்தப் பகுதியே தற்போதைய காயல்பட்டினம் நகரமாகும். பின்னர் அங்கிருந்து சில முஸ்லிம் குடும்பங்கள் இலங்கைக்குச் சென்று குடியேறினர்.

· பாண்டிய நாட்டின் குதிரைப் படையில் அரபு நாட்டுக் குதிரைகளே பெருமளவு இடம் பெற்றிருந்தன. இந்தக் குதிரைகளை கப்பல் மூலம் பாண்டிய நாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் பல அரபு வணிகர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த வணிகத்தில் ஈடுபட்டிருந்த கிஸ் நாட்டைச் சார்ந்த மன்னர் ஜமால்தீன் என்பார் பாண்டிய மன்னர் மாறவர்ம குலசேகரப் பாண்டியனின் நெருங்கிய நண்பரானார்.

குதிரை வணிகத்திற்காக அடிக்கடி பாண்டிய நாட்டிற்கு வருகை தந்த ஜமால்தீனின் ஒன்று விட்ட தம்பி ஐயுத்தீன் பாண்டிய மன்னரின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக மாறினார். அவரைப் பாண்டியன் தனது

அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். சீனா நாட்டிற்குத் தனது தூதராகவும்

அவரை அனுப்பி வைத்தார்.

· சோழர்கள் ஆட்சிக் காலத்தில் உறையூரில் (தற்போதைய திருச்சி நகரம்) கி.பி. 734ஆம் ஆண்டு ஹாஜி அப்துல்லாபின் மகம்மது அன்வர் என்பவரால் கட்டப்பட்ட பள்ளிவாசலே தமிழகத்தின் முதல் பள்ளிவாசலாகும். இந்தப் பள்ளிவாசல் தற்போது திருச்சி கோட்டை ரயில்வே நிலையத்திற்கு அருகில்

சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

· தமிழ் இலக்கியங்களில் யவனர்கள் என்று முதலில் ரோமர்களையும், பின்னர் அரபியர்களையும் குறிப்பிட்டுள்ளனர். “சோனகர்கள்” என்பது தமிழகத்தில் குடியேறிய அரபு மக்களைக் குறிக்கும் சொல்லாகும்.

· “அஞ்சு வண்ணத்தினர்” என்ற சொல் தமிழக முஸ்லிம்களைக் குறிக்கும் பொதுவான சொல்லாக தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

· அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளைப் பராமரிக்கப் பாண்டிய நாட்டில் தக்க பயிற்சி பெற்ற ஆட்கள் அப்போது இல்லை. எனவே அரபு நாடுகளிலிருந்து இதற்காக ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். அப்படி பாண்டிய நாட்டுக்கு வந்த இவர்கள் தமிழ் மக்களோடு கலந்து ஒன்றி மண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வரலாயினர். இவர்களே இராவுத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். 

“ராபித்தூ” என்ற அரபுச் சொல்லே மருவி இராவுத்தர் ஆனதாகச் சொல்லப்படுகிறது. இச் சொல்லுக்கு “எதிரியை எதிர்க்கச் சித்தமாக இருப்பவன்” என்று பொருள். இதுவும் முஸ்லிம்களைக் குறிக்கும் பொதுப் பெயராகத் தற்போது விளங்குகிறது.

· சோழ மண்டலக் கடற்கரைப் பட்டினங்களில் மரக்கலங்கள் மூலம் கடல் வணிகத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் ”மரைக்காயர்கள்” என அழைக்கப்படுகின்றனர். “மரக்கலாயர்கள்” என்ற வார்த்தை “மரைக்காயல்கள்” என்று பின்னாட்களில் திரிந்திருக்கலாம்.

· “லெப்பை” என்னும் சொல் தமிழகத்தில் தற்போது வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களைக் குறிக்கின்ற பொதுச் சொல்லாகும்.

· தக்காணத்திலிருந்து நவாபுகள், சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் குடியேறிய முஸ்லிம்கள் தக்காணிகள் என அழைக்கப்பட்டனர். இது பின்னர் திரிந்து “தக்னி” என ஆகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

மன்னர்கள் திருமலை நாயக்கர், இராமநாதபுரம் சேதுபதி ஆகியோரின் படைத்

தளபதிகளாகயிருந்த முஸ்லிம்களைப் பற்றிய குறிப்புகள், இராமநாதபுரம் மன்னர் கிழவன்

சேதுபதி தனது அமைச்சரவையில் சீதக்காதி என்ற தமிழ்ப் புரவலரை நியமித்தது., கான் சாகிப்

பற்றிய வரலாற்றுத் தகவல்கள், தமிழகத்திற்கு வந்த அரபு நாட்டுப் பயணிகள், மாலிக்காபூரை எதிர்த்துப் போரிட்ட பாண்டிய நாட்டு முஸ்லிம் வீரர்கள், தமிழக முஸ்லிம்களின் கடல்

வணிகம், தமிழகத்தில் இஸ்லாமியர்களைக் குறித்துக் காணப்படும் கல்வெட்டுகள் மற்றும்

செப்பேடுகள், சமய நல்லிணக்கச் செய்திகள் என ஏராளமான வரலாற்றுச் செய்திகள் இந்நூலில்

இடம் பெற்றுள்ளனர்.

இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு மையத்தில் பணியாற்றுகின்ற வரலாற்றுப் பேராசிரியர் “பக்தவத்சல பாரதி” கீழ்க்கண்டவாறு

குறிப்பிடுகின்றார்… “முஸ்லிம்கள் இந்தியாவில் ஒரு தேசிய இனமாகவும் அவர்களே தனியொரு மொழிப் பிரதேசத்தில் ஒரு பகுதி இனக் குழுவாகவும் ஆக்கம் பெறும் போக்குகளை இந்நூல்

விவாதிக்கிறது. இதன் மூலம் தமிழக முஸ்லிம்கள் பற்றிய ஒரு அசலான பார்வையை கமால்

இந்நூலில் முன்னெடுத்திருக்கிறார். 

இன்றைய நவீனகால இனத்துவம் சார்ந்த புரிதலைச் செழுமைப்படுத்தவும் புதிய விவாதங்களை முன்னெடுக்கவும் இந்த நூலின் வாசிப்பு மிகவும் முக்கியமானதாகும். தமிழக முஸ்லிம்களைப் பற்றிய ஆக்கங்களில் இந்நூல் ஒரு அகவயமான எழுத்து முறையை முன் வைக்கிறது. அதனால் அந்த வகைமையில் இது முதல் வரிசையில் வைத்துப்படிக்க வேண்டிய நூலாகும்.

இந்த அரிய வரலாற்று நூலை புத்தாநத்தம் “அடையாளம்” பதிப்பம் வெளியிட்டுள்ளது.

அதன் முகவரி ….. அடையாளம், 1205/1, கரும்பூர் சாலை, புத்தாநத்தம் – 621310                                        (திருச்சி மாவட்டம்) தொலைபேசி 04332 273444.