“உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் சமீப காலம் வரை இந்தியாவும் ஒன்றாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். எனினும், தற்போது இந்தியா குறிப்பிடத்தக்க பொருளதார மந்தநிலையை சந்தித்து வருகிறது,” என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிஃபிக் பிராந்திய உதவி இயக்குநர் ரணில் சல்கடொ தெரிவித்துள்ளார்.
இது குறித்து சர்வதேச நாணய நிதியம் செய்தித் தொடர்பாளர் கெரி ரைஸ் கூறுகையில், “எதிர்பார்த்தைவிட இந்தியப் பொருளாதாரம் மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கூடுதல் ஆய்வு செய்யப்பட்ட விவரங்களை வருகிற சர்வதேச பொருளாதார அவுட்லுக் மூலம் தெரியப்படுத்துவோம்” என்றுள்ளார்.
குறைக்கப்பட்ட கடன் விரிவாக்கம், ஊதிய வளர்ச்சி பலவீனம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வரி விதிப்பு நடவடிக்கை ஆகியவையே இதற்கு முக்கிய காரணம் என்கிறார் அவர். நிதித்துறை சந்தித்த சில சவால்களால், தனியார் துறையின் முதலீடுகளும் பாதிக்கப்பட்டதாக ரணில் கூறுகிறார்.
நுகர்வு குறைவதால் முதலீடு குறைந்து வரி வருவாய் வீழ்ச்சியடைந்து பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது.
சமீப ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வலுவாகவே இருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி, பரவலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. மேலும், ஒப்பீட்டளவில் குறைந்திருக்கும் உணவு விலைகள், கிராமப்புற பொருளாதாரத்தை பெரிதும் பாதித்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
“இந்தப் பிரச்சனை வெளிப்படையாகவே இருக்கிறது. தனியார் துறைதான் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. அரசாங்கத்தால் வேலை வாய்ப்பை உருவாக்க முடியாது,” என்கிறார் CARE ரேட்டிங்ஸ் நிறுவனத்தில் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னவிஸ்.
உற்பத்தியைப் பெருக்க வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகளை இந்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், முதலீட்டு அளவை அதிகப்படுத்த வேண்டும் எனவும் இந்த ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விகிதங்களை இன்னும் குறைக்க வேண்டும் எனவும், சில பொருட்களுக்கான வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழலில் வேலை வாய்ப்பை உருவாக்குவது மிக முக்கியமான தேவை என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கணிசமான வளர்ச்சித் திறன் விமர்சன ரீதியாக கட்டமைப்புச் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதையே சார்ந்துள்ளது. அரசு செய்யுமா?





































