

“நபிகளார் (ஸல்) பள்ளிவாசலில் அமர்ந்திருந்த போது ஒரு கிராமவாசி அங்கு வந்து தொழுதார். முடித்தபின் “யா அல்லாஹ்! எனக்கும், முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் கருணை புரிவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் கருணை காட்டாதே!” என்று பிரார்த்தித்தார். அவரின் பக்கம் திரும்பிய நபிகளார் (ஸல்) “(பிரார்த்தனையின்) விசாலத்தை குறுகலாக்கி விட்டீர்” என்றார்கள்.
சற்று நேரத்தில் அவர் பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி(ஸல்) அவர்கள் ‘அவரைவிட்டு விடுங்கள்; அவர் கழித்த சிறுநீரின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். நீங்கள் (எளிமையான மார்க்கத்தில்) நளினமாக எடுத்துச் சொல்பவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை’ என்று கூறினார்கள்.’ (சுனனுத் திர்மிதி : 220)
முதல் பாடம் : மார்க்கத்திற்கு முரணாக உங்களைப் புகழ்பவரை அனுமதிக்காதீர்! எனக்கும், முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் கருணை புரிவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் கருணை காட்டாதே!” என்ற கிராமத்தவரின் கூற்றை நபிகளார் (ஸல்) ஏற்கவில்லை. அல்லாஹ்வின் கருணை விசாலமானது. அதனைச் சுருக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவித்தார்கள்.
இரண்டாம் பாடம்: மனிதன் தன் சுற்றுச்சூழல், இயல்பு, விருப்பத்தின் தயாரிப்பு. அந்த கிராமத்து மனிதர் தான் அறிந்து வைத்திருந்த முறையில் இயற்கை உபாதையைக் கழிக்கும் வழக்கமுடையவர். அவரிடம் நபிகளார் (ஸல்) மென்மையாக நடந்து கொண்டார்கள். அவருடைய நடைமுறை கேவலமாக இருந்தபோதும், அமைதியாகவும், கண்ணியமாகவும் நடந்து கொண்டார்கள். தோழர்களின் கூச்சல்களுக்கிடையில் அவர்களுக்கு ஒழுங்கை போதித்தார்கள். ஏனெனில் அவர்கள் நபிகளாரிடமே முழுமையாக வளர்ந்து கனிவை அடைந்தவர்கள்.
அதேசமயம், அன்சாரித்தோழர் ஒருவரின் விரலிலிருந்த தங்க மோதிரத்தைக் கழற்றித் தரையில் வீசியெறிந்து விட்டு, “நெருப்புக் குண்டத்தை அடைவதென்று ஒருவர் தீர்மானித்து விட்டால், தன் கரத்தில் இதனை அணிந்து கொள்ளட்டும்!” என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் கடிந்து கொண்டார்கள். மக்களுடன் கலந்துறவாடும்போது, அவர்களின் பழக்க வழக்கங்களையும், இயல்பையும் விளங்க முற்படுங்கள்.
மூன்றாம் பாடம்: அறிவாற்றல் மிக்கவர், இறுதி முடிவுக்கே மதிப்பளிப்பார். எரிகிற கொள்ளிகளில் நல்ல கொள்ளியைத் தேர்வு செய்வார். அதனால் தான் நபிகளார் (ஸல்) கிராமத்து மனிதர் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க வேண்டாம் என்றார்கள். ஏனெனில், அது அவருக்கு மட்டுமே தீங்காகும். நபித்தோழர்கள் தடுத்திருந்தால், அவரின் ஆடையும் அசுத்தமாகியிருக்கும். பள்ளிவாசலின் பெரும்பகுதியையும் அசுத்தமாக்கியிருப்பார்.
“ஒரு தீமையைத் தடுக்கப் போய் அதைவிடப் பெரிய தீமைக்கு வழிவகுத்து விடக்கூடாது!” என்பது அழைப்பியலின் மகத்தான அடிப்படையாகும்.
நான்காம் பாடம்: “நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்பவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை”. வாட்களால் திறக்காத உள்ளங்களை அல்லாஹ் மென்மையால் திறக்கிறான். கடுமையாலும், வன்முறையாலும் நேர்வழி பெறாதவர்களை நளினத்தால் நேர்வழி பெறச் செய்கிறான்.
அழைப்பாளர்களிடம் நேசத்தையும், பரிவையும் ஒரு குற்றவாளி பெறவில்லையென்றால், வேறு எது அவன் குற்றச்செயலைத் தடுத்து நிறுத்தும்?!
அநேக வரட்டு உபதேசங்கள் பிடிவாதமாக பாவச்செயலைத் தொடரவே வழிவகுக்கின்றன. மக்களின் பாதங்களை நேர்வழியில் பதியச் செய்து அவர்களை அல்லாஹ்விடம் கொண்டு சேர்ப்பதே நம் பணி. அல்லாஹ்வுக்கும் மக்களுக்கும் இடையில் தடையாக நிற்பதல்ல.
முஸ்தஃபா காசிமி




































