




Dr. எம். நூருல் அமீன்
இந்திய இஸ்லாமிய மருத்துவ முன்னோடிகள். தொடர் – 4
சஃபா صفاء என்ற அரபுச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்படுகிறது அதில் ஒன்று ‘தூய்மை’. சூஃபி என்ற சொல்லுக்குத் தூய்மையானவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம் என்று சிலர் கூறுகின்றனர். இதயத்தைத் தூய்மைப்படுத்துவதை வலியுறுத்துவதால் அப்படி அழைக்கப்படுகிறார்கள்.
சூஃபிக்கள் ஏக இறைவனை நெருங்குவது பற்றியும், நோயாளிகளை குணப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி உலகெங்கும் பரவி வாழ்ந்துள்ளனர்.
இந்தியாவில் ஆண் சூஃபிக்கள் பீ-ரப்பா என்றும், சூஃபிக்களின் (Peer) மனைவிமார்களை சில இடங்களில் கண்ணியமாக பீ-ரானிமாக்கள், பீர்-தாய் (Peertai), பீ-ரம்மா என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
ஆண் சூஃபிக்களில் தக்கலை பீ-ரப்பா போன்றவர்களையும், பெண் சூஃபிக்களில் மண்டைக்காட்டு ‘முத்து பீவி அம்மா, பூந்தமல்லி பாப்பா பீ-அம்மா போன்றோரையும் உதாரணமாக குறிப்பிடலாம்.
இவர்களின் சேவை, பெரும்பாலும் திப்-இ-ரூஹானி (Tibb-e-Ruhani – ஆன்மீக மருத்துவம்) என அழைக்கப்பட்டது. சூஃபிக்கள் ஆன்மீகத்துடன் (Spiritual Healing) நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும், இஸ்லாமிய வாழ்வியல் நடைமுறைகளைப் பின்பற்ற போதித்தும், புனித குர்ஆன் வசனங்களை ஓதியும் இறைவனிடம் மன்றாடிட வேண்டும் என வாழ்ந்து வழி காட்டியவர்கள்.
பீபி பாத்திமா சாம் (டெல்லி) இவர் நோயுற்றவர்களுக்குத் பிரார்த்தனை (துஆ) மூலமும், சில இயற்கை மருத்துவ முறைகளின் மூலமும் குணமளித்ததாகக் குறிப்புகள் உள்ளன.*(1)
தொடக்க காலத்தில் பெண்களுக்கான மருத்துவமனைகள் பாரசீக மொழியில் ஜனானா -(டெல்லியில் Victoria Zenana Hospital-1905, இன்று Kasturba Hospital), ஷிஃபா-கானா (உருது) என அழைக்கப்பட்டன. பெண்களின் மருத்துவத் துறையை திப்-உல்-நிசா (அரபி) என்றும், பெண்கள் தங்குமிடங்களை கான்கா (பாரசீகம்) என்றும் குறிப்பிட்டனர். பின்னர், இந்த கான்காக்கள் சிகிச்சை அளிக்கும் இடங்களாக மாற்றப்பட்டன.
பின் குறிப்பு :
சூஃபிக்கள் ஏகத்துவத்தை எடுத்து, “அழைப்பு பணியை” – இஸ்லாத்தை அறிமுகம் செய்து வாழ்ந்தவர்கள். மார்க்கத்திற்கு முரணாக, சூஃபிக்களின் பெயரால் நடக்கும் எந்த செயல்பாடுளுக்கும் சூஃபிக்கள் பொறுப்பாக மாட்டார்கள். அவ்வாறு வாழ அவர்களும் வழிகாட்டவில்லை என்பதே வரலாறு.
மேலும், யுனானி மருத்துவத்தில் (Unani Medicine) ஆண் மருத்துவர்கள் ஹக்கீம் என்றும், பெண் மருத்துவர்கள், பாரம்பரிய மருத்துவர்கள் ஹக்கீமா அல்லது தபிபா (அரபி) எனவும் அழைக்கப்பட்டனர்.
பெண்களின் உடல் நல பிரச்சினைகள் மற்றும் மகப்பேறு தொடர்பான சிகிச்சை வழங்குவதற்கு ஹக்கீமாக்கள்/தபிபாக்கள் இருந்தார்கள். இன்றும் தேவைப்படுகிறார்கள்.
சத்தி அல்-நிசா (Sati al-Nisa), 17ஆம் நூற்றாண்டு முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் காலத்தில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற இந்தோ-பாரசீக பெண் மருத்துவர் (Indo-Persian female physician) ஆவார். இவர் ஷாஜஹானின் மனைவியான பேரரசி மும்தாஜின் நெருங்கிய தோழியாகவும், தலைமைப் பணிப் பெண்ணாகவும் (Chief Attendant), அரச குடும்பப் பெண்களின் சுகாதாரப் பராமரிப்பில் அறிவுத் திறன் மிக்க சிகிச்சையாளராகவும் (Medical Practitioner) இருந்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த பெண் முதியோர்களை மாமி, தாதிம்மா, வாப்பம்மா, உம்மா, அத்தம்மா, நானிம்மா, பீ-பிமா, முத்தா, செல்லம்மா, உம்மணம்மா, பாட்டியா என தமிழத்தின் அனைத்து பகுதிகளின் பாரம்பரியப்படி அழைக்கப்படுவது முஸ்லிம்களின் வழக்கமாகவே தொன்று தொட்டு தொடர்கிறது.
பலர் பாரம்பரிய மருத்துவம் தெரிந்தவர்களாகவும், பிரசவம் பார்ப்பதிலும், குழந்தைகளின் பராமரிப்பிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும், மற்றும் அவசரகால சுகாதார வல்லுநர்களாகவும் அவர்களில் பலர் இருந்துள்ளனர்.
சளி, காய்ச்சல், வயிற்று கோளாறுகள் போன்ற பல நோய்களுக்கு, மூலிகைகள், வாசனைப் பொருட்கள் (Folk and Herbal Remedies) ஆகியவற்றை பயன்படுத்தியும், பாரம்பரிய உணவு முறைகளோடு ஆன்மீக நம்பிக்கைகளின் அடிப்படையில், சிகிச்சையளித்தவர்களாகவும், முஸ்லிம் மூதாட்டிகள் முக்கியமானவர்களாக வாழ்ந்துள்ளனர்.
நவீன மருத்துவ வரலாற்றில் (Modern Western Medicine) இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மருத்துவர்களாக இருந்த யாகூப் சகோதரிகளைப் போல, 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், வட இந்தியாவில் சில முஸ்லிம் குடும்பங்கள் தங்களது பெண்பிள்ளைகளை யுனானி மருத்துவக் கல்வி பயில ஊக்குவித்தன.
லத்தீஃபுன்னிசா,1890களின் இறுதியில் கல்கத்தா காம்பெல் மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணி என ‘பாமபோதினி பத்திரிகா’ இவரைப் பாராட்டி எழுதியதைக் குறிப்பிடலாம்.
ஹகீம் சவ்தா பேகம், 20 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு குறிப்பிடத்தக்க யுனானி மருத்துவர் ஆவார். யுனானி மருத்துவத்தில் பெண்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.
சவ்தா பேகம் எழுதிய “அவ்ரத் அவுர் தப்” (Aurat aur Tibb – பெண்களும் மருத்துவமும்) என்ற சிறு கையேடு 1920-களில் லாகூர் or டெல்லியில் அச்சிடப்பட்டிருக்கலாம் என்ற குறிப்புக்கள் உண்டு.
அன்றைய ஆவணங்கள் பெரும்பாலும் பார்சி, உருது மொழிகளில் இருப்பதும், பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படாததும், பழைய வரலாறுகள் டிஜிட்டல் மயமாக்கப்படாததும் இந்திய மருத்துவ வரலாறு மற்றும் இஸ்லாமியப் பெண் கல்வி குறித்த குறிப்புக்கள் கிடைக்காமல் இருப்பதற்கான காரணங்கள்.
ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம், முஸ்லிம் பெண்களின் கல்விக்கு குறிப்பாக மருத்துவத் துறைக்கு ஆதரவளித்துள்ளது.
டாக்டர் ஃபாத்திமா ஷா(Dr. Fatima Shah) 1914ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம், பரேலியில் பிறந்தவர். இவர் புகழ் பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியில் (Madras Medical College – MMC)1930 இல் ஆரம்ப மருத்துவம் பயின்று, முஸ்லிம் பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்.
அபுஷா பீ பி மரைக்காயா தென் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மருத்துவராகவும், நம் நாட்டின் முதல் பெண் மருத்துவ வாரிய இயக்குநராகவும் இருந்துள்ளார் என்பதையும் (இணையம் மூலம்) தெரிந்து கொள்ள முடிகிறது.
அபுஷா பீ பி மரைக்காயர் மதராசு மருத்துவக் கல்லூரியில்1937ஆம் ஆண்டு மருத்துவ படிப்பையும்,1938 ஆம் ஆண்டு மகப்பேறு மருத்துவ மேல் படிப்பையும் முடித்துள்ளார். இவர் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பில் லாசரஸ் தங்கப் பதக்கமும் வென்றவர். (2)
டாக்டர் ஹமிதா சைதுசாஃபர் (Dr. Hamida Saiduzzafar). இவர் அலிகாரைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவக் குடும்பத்தை சேர்ந்தவர். இந்தியாவின் நவீன மருத்துவ வரலாற்றில், குறிப்பாக இஸ்லாமியப் பெண்களின் மருத்துவப் பயணத்தில் ஒரு மயில் கல்லாகக் கருதப்படுபவர்.
இவரது தந்தை கேப்டன் டாக்டர் சைதுசாஃபர் கான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (AMU) மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும், புகழ் பெற்ற மருத்துவராகவும் இருந்தவர்.
டாக்டர் ஹமிதா சைதுசாஃபர் கண் மருத்துவத்தில் (Ophthalmology) மேற்படிப்பை லண்டனில் முடித்து (DO, London) பின் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் கண் மருத்துவத் துறையின் துறைத் தலைவராகவும் (JNMC) பணிபுரிந்துள்ளார்.
“1920-களில் வெளியான Tahzib-e-Niswan , (தஹ்ஸீப்-இ-நிஸ்வான்) என்ற உருது இதழில் ‘Hifzan-e-Sehat’ (சுகாதாரப் பாதுகாப்பு) என்ற தலைப்பில் பெண் மருத்துவர்கள் எழுதிய கட்டுரைகள் முஸ்லிம் பெண்களிடையே நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ அறிவைப் புகுத்துவதில் பெரும் பங்கு வகித்துள்ளது. இதன் ஆசிரியர் மும்தாஜ் அலி.
இதில் வெளியான கட்டுரைகள் பெண்களிடம் சிறந்த வரவேற்பு பெற்றுள்ளது.
அவைகளில் சில :
ஜச்சா அவுர் பச்சா கி தேக்பால் – குழந்தை பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய்-சேய் நலன் குறித்த ஆலோசனைகள்.
அம்ராஸ்-இ-மஸ்துராத் – பெண்களின் நோய்கள் மற்றும் கோஷா முறையில் பெண்களுக்கு ஏற்படும் பிரத்யேக நோய்களுக்கு தீர்வுகள்.
கரேலு நுஸ்கே – வீட்டு வைத்திய முறைகள்; சமையலறைப் பொருட்களை பயன்படுத்தி முதலுதவி செய்வது.
தர்பியாத்-இ-அத்ஃபால் – குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ப்பு; சத்துணவுக் குறைபாட்டை நீக்கும் வழிமுறைகள்.
ஔரத் டாக்டர் கி ஜாருரத் – பெண் மருத்துவர்களின் அவசியம்.
“பெண் மருத்துவரே சமூகத்தின் பாதுகாவலராகத் திகழ்கிறார்” (Ek Tabiba pure khandan ki muhafiz hoti hai), – “மருத்துவ அறிவு ஆண்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தின் உயிர் நாடியான பெண்களுக்கும் மிக அவசியமானது” (Tibb sirf mardon ke liye nahi, balki auraton ke liye bhi lazmi hai) போன்ற கருத்துக்களை “தஹ்ஸீப்-இ-நிஸ்வான்” விதைத்துச் சென்றுள்ளது
உஸ்மானியா மருத்துவக் கல்லூரி (Osmania Medical College) 1846-ஆம் ஆண்டு 5வது நிஜாம் அப்சல் உத்-தவ்லா(Afzal ud-Dawla)வால் ஹைதராபாத் மெடிக்கல் ஸ்கூலாக தொடங்கப்பட்டு, 1919-இல் பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது.
சமூக சீர்திருத்தவாதி ஜனாப் சர் சையத் அகமது கானின் முயற்சியால் உத்தரப்பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று மத்திய பல்கலைக் கழகமாக உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக(Aligarh Muslim University – AMU)த்தின் ஒரு பகுதியாக 1962 இல் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி – (ஜேஎன்எம்சி) தொடங்கப்பட்டது.
1989 ஹக்கீம் அப்துல் ஹமீத் என்பவரால் ஜாமியா ஹம்தர்த் மருத்துவக் கல்லூரி புது டெல்லியில் நிறுவப்பட்டது. ஹம்தர்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் (HIMSR) 2012 ஆம் ஆண்டும் தொடங்கியது.
ஜாமியா ஹம்தர்த் பல்கலைக்கழகம் யுனானி மருத்துவம், செவிலியர் மற்றும் உடலியக்க சிகிச்சை துறை (பிசியோதெரபி)யும், நவீன மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளுடன் நிகர் நிலைப் பல்கலைக் கழகமாகவும் (Deemed University) செயல்பட்டு வருகிறது.
பிரசவம் மற்றும் மகப்பேறு சிகிச்சைகளுக்கு ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தயங்கி, முஸ்லிம் பெண்கள் சிலர் உயிர் இழப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர்.
சென்னை கோஷா மருத்துவமனையின் வரலாறும் மிக முக்கியத்துவமானது 1885 ஆண்டு, ‘ராயல் விக்டோரியா சாதி மற்றும் கோஷா பெண்களுக்கான மருத்துவமனை’ (The Royal Victoria Hospital for Caste and Gosha Women) என்ற பெயரில் நுங்கம்பாக்கம் மூர் கார்டனில் (Moore Garden) தொடங்கப்பட்டு, திருவல்லிக்கேணி ராஜா வெங்கடகிரி உள்ளிட்ட உள்ளூர் செல்வந்தர்களின் நன்கொடைகளால், 1890 இல் இப்பொழுது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு 1948 முதல் ‘கஸ்தூரிபா காந்தி நினைவுப் பொது மருத்துவமனை’ (Kasturba Gandhi Hospital for Women and Children) என பெயருடன் சேவைகளை தொடர்ந்து வருகிறது.
தெலுங்கானா, ஹைதராபாத்தில் டெக்கான் மருத்துவ அறிவியல் கல்லூரி (DCMS) தென்னிந்தியாவில் முஸ்லிம் சமூகத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் மருத்துவக் கல்லூரியாகும்.
தென்னிந்தியாவில் முஸ்லிம் சமூகத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் மருத்துவக் கல்லூரி டெக்கான் மருத்துவ அறிவியல் கல்லூரி (Deccan College of Medical Sciences – DCMS), (1984-85).
கர்நாடகா, பிஜாப்பூரில் அல்-அமீன் மருத்துவக் கல்லூரி, குல்பர்காவில் கவாஜா பந்தனவாஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், ஆந்திரா விஜயவாடாவில் நிம்ரா மருத்துவ அறிவியல் நிறுவனம், கடப்பாவில் பாத்திமா மருத்துவ அறிவியல் நிறுவனம், கேரளா மலப்புரத்தில் எம்.ஐ.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் டிரஸ்ட் மருத்துவக்கல்லூரி, நெய்மூலி, பாலக்காடு, கரூணா மருத்துவக் கல்லூரி, கோழிக்கோடு கே.எம்.சி.டி மருத்துவ கல்லூரி, தொடுபுழா இடுக்கியில் அல்-அசார் மருத்துவக் கல்லூரி, உ.பி. ஈராஸ் லக்னோ மருத்துவக் கல்லூரி & தொழில் மருத்துவக் கல்லூரி, பீகார் கதிஹார் மருத்துவக் கல்லூரி, ஆக்ரா பிஹா மருத்துவ கல்லூரி, மகாராஷ்டிரா ஜலனாவில் இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி (IIMSR), *(3) போன்ற பல நிறுவனங்கள், மருத்துவக் கல்வியை ஊக்குவிக்கவும், முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைவருக்கும் கல்வி சேவைகளை தொடர்ந்தும் வருகின்றன.
முஸ்லிம் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் நாட்டின் பிற மாநிலங்களில் உள்ளது போல தமிழகத்தில் இல்லை என்பது வருத்தம்தான். இருந்தாலும், பெரும் முயற்சிகளுக்கு பின் சாலிஹீன் கல்வி அறக்கட்டளை நமது மாநிலத்தில் மருத்துவ கல்லூரி திறக்கின்ற இறுதி கட்டத்தை அடைந்துள்ளது ஆறுதல் செய்தியாக உள்ளது.
இவ்வாறு பல நிலைகளை ஆரம்ப கால-பீ பி, இடைக்கலா-தபிபா / ஹக்கீமா, நவீன கால டாக்டர் என பயணித்த முஸ்லிம் பெண்களின் மருத்துவ சேவை நூற்றாண்டைக் கடந்து இறைவனின் கருணையால் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பது மகிழ்ச்சி தரும் செய்தியே!
“இஸ்லாமிய மருத்துவ முன்னோடிகள்” தொடரை தொடர்ந்து வாசித்தும் தொலைபேசியில் கருத்துக்கள் தெரிவித்தும் ஊக்குவித்த “சமூக நீதி முரசு’ வாசக அன்பர்களுக்கும் நன்றி தெரிவித்தவனாய் இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.



































