மனதின் பரிமாணங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்…..

தூய்மையான உள்ளம்

வல்லநாயன் அல்லாஹு தஆலா இவ்வுலகைப் படைத்து அதில் மனித சமூகத்தைப் படைத்து மனிதன் எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாழ்க்கை நெறியை வகுத்துத் தந்தான். அதன் பெயர் “இஸ்லாம்” என்பதை அறிவோம்.

இவ்வாறு அருள் நிறைந்த இஸ்லாமிய மார்க்கம் மனித வாழ்வின் எல்லா அம்சங்களையும் அதில் மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நுட்பமான வாழ்வியல் நடைமுறைகளையும் இறுதி வேதமான குர்ஆன் மூலமாகவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியல் மூலமாகவும் மிகத் தெளிவாக சொல்லிக் காட்டுகிறது.

இஸ்லாமிய அடிப்படையில் ஒவ்வொரு  தனி மனிதனின் நல வாழ்வு என்பது மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும். அதன் அடிப்படையில் மனிதனின் நல வாழ்வுக்கு மையமாக இருப்பது உடல் மற்றும் உள்ள ஆரோக்கியமாகும்.

உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு நடைமுறைகளை அல்குர்ஆனின் மூலமாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையின் மூலமாகவும் கற்றுத் தந்ததை போன்று உள்ளத்தின் தன்மைகள். அதன் நலம் காக்கும் வழிமுறைகளும் கற்றுத் தரப்படுகின்றன.

உள்ளத்தின் தன்மை குறித்து கீழ்க்கண்ட நபிமொழியின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடியும்.

“உடம்பிலே ஒரு சதை துண்டு இருக்கிறது அது சீராக இருந்தால் உடல் முழுவதும் சீராக இருக்கும் அது கெட்டு விட்டால் உடல் முழுவதும் கெட்டுவிடும், அது தான் உள்ளம். ( புகாரி)

உள்ளம் சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் நிலையை சொல்லும் மேற்சொன்ன ஹதீஸின் வழியாக உள்ளம் பல்வேறு நிலைகளில் சீரற்று செல்வதற்கும், அதன் காரணமாக உடல் நலம் கெட்டுப்போவதற்கும் வாய்ப்பு இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி 2021ஆம் ஆண்டில், உலக அளவில் 7 பேரில் ஒருவர் மனநல பிரச்சினைகளுடன்  வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில்,100 பேரில் சுமார் 11 பேர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

மனிதனைப் படைத்த இறைவன் மனிதனுக்கு ஏற்படக்கூடிய எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வை வைத்துள்ளான் என்ற அடிப்படையில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய இத்தகைய மன நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இஸ்லாம் தெள்ளத் தெளிவாக, தீர்க்கமாக, மனிதனால் எளிதில் பின்பற்றத்தக்க தீர்வுகளை வழிகாட்டுகிறது. 

எனவே உள்ளத்தை ஆற்றல் படுத்துவதற்கு முன்னர் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய உள்ளம் எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமானதாகும்.

அருள்மறை குர்ஆனில் உள்ளம் என்பது கல்ப் (இதயம்), சத்ர் ( நெஞ்சு), நஃப்ஸ் ( ஆன்மா) ரூஹ் (ஆன்மா) என  பல்வேறு பதங்களில் குறிப்பிடப்படுகிறது. 

இதயம்-மனம் என்ற உள்ளத்தின் 20 தன்மைகள் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

முதல் வகை :

கல்புன் சலீம் (தூய்மையான-சீரான மனம்)

———————————-

கல்பு என்பது உள்ளம்-மனம். அது சலீம் என்ற வார்த்தையுடன் சேரும் போது தூய்மையான-அமைதியான உள்ளம், குறைகளற்ற, களங்கமற்ற, திருப்தி பெற்ற உள்ளம், கட்டுப்பட்ட உள்ளம் என்று பல்வேறு அர்த்தங்களைத் தரும்.

எனினும் இறைவன் அருள்மறைக் குர்ஆனில் குறிப்பிடும்போது  :  அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (எது ஒன்றும். எந்தப்) பயனும் தராது. “எவரொருவர் தூய்மையான[சீரான]  உள்ளத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).” (அல் குர் ஆன் 26:88,89)

மேற்கூறிய வசனத்தில் இறைவன் கல்புன் சலீம் எனும் உள்ளமுடையவர் மட்டுமே கண்ணியம் பெறுவார் என்பதை உறுதிப்படுத்தவே இந்த வசனத்தில்  ‘இல்லா’ என்ற வார்த்தையை அலலாஹ் பயன்படுத்துகிறான். எனவே, இறைநெருக்கத்தைப் பெற, சொர்க்கம் செல்ல உளப் பண்பு மிக அவசியம்.

ஏகத்துவ கலிமாவின் அடிப்படையான ‘லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்’ வில் கூட ‘இல்லா’ எனும் வார்த்தை ஈமானை உறுதிப்படுத்தும் நோக்கில்  பயன்படுத்தப்படுவதை நாம் காணலாம்.

தூய்மையான-சீரான உள்ளத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக). ( அல் குர் ஆன் 37:84)

பொய், பொறாமை, சந்தேகம் போன்ற கீழ்ப்படியாமையின் தீய குணங்கள் இல்லாத, அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடும் ஒரு  சீரான – தூய்மையான இதயத்துடன் அவர் இறைவனிடம் திரும்பினார் என்று நபி இப்ராஹீம் ( அலை) அவர்கள் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான். 

மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்று ஆசை கொண்டோரின் உள்ளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

குர்ஆன் விரிவுரையாளர்கள் ‘கல்புன்  சலீம்’ என்பதற்கு பாவமற்ற உள்ளம், உலக வாழ்வில் மூழ்காத உள்ளம், ஈமான் முழுமை பெற்ற உள்ளம் என்று விளக்கமளிக்கின்றனர். 

மேற்சொன்ன பண்பு நலன்களைக் கொண்ட கல்புன் சலீம் எனும் சீரான உள்ளம் என்பது இவ்வுலகில் இறைவனால்  மனிதர்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும் அருட்கொடையாகும்.

உள்ளத்தின் இன்னொரு தன்மை குறித்து அடுத்த கட்டுரையில் அறிவோம்.