

‘அமெரிக்கா வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தி தொழிலில் வலுவாகத் தலையிடும்’
– டோனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர்
சிலி, குவாடிமாலா, பனாமா, ஈராக், லிபியா வரிசையில் வெனிசூலா.
தென் அமெரிக்காவின் இயற்கை எழில்மிக்க நாடான வெனிசுவேலா, இன்று உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா நடத்திய மின்னல் வேகத் தாக்குதலும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைதும் ஒரு நீண்டகாலப் பகையின் உச்சக்கட்டமாகும்.
நவீன வரலாற்றில் மிகப் பைத்தியக்காரத்தனமான திருப்பம் இது. அமெரிக்கா வெனிசுவேலாவைத் தாக்கினால், அது மாதக்கணக்கில் நீடிக்கும் நீண்ட போராக இருக்கும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் உண்மையில், 2 மணி நேரத்துக்குள் எல்லாம் முடிந்துவிட்டது. அமெரிக்கர்கள் சொல்வது போல, “Game Over”.
வெனிசுவேலாவின் ஆரம்பகால வரலாறு
வெனிசுவேலாவை 1498 ஆம் ஆண்டு ஸ்பெயின் அடிமைப்படுத்தியது. சுமார் 300 ஆண்டுகால அடிமைத்தளையிலிருந்து மீள, புகழ்பெற்ற விடுதலை வீரர் சைமன் பொலிவார் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக, 1811 ஆம் ஆண்டு சுதந்திரம் அறிவிக்கப்பட்டு, 1830 ஆம் ஆண்டு வெனிசுவேலா ஒரு தனி குடியரசாக மலர்ந்தது. 1920 ஆம் ஆண்டுகளில் உயவு எண்ணெய் – எண்ணெய் மசகு (lubricant oil/grease) கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, வளமிக்க உலக நாடுகளில் ஒன்றாக உருவெடுத்தது.
அமெரிக்கா – வெனிசுவேலா பகையின் பின்னணி (சாவேஸ் முதல் மதுரோ வரை)
சுமார் 14 ஆண்டுகள் வெனிசுலாவை ஆட்சி செய்த ஹியூகோ சாவேஸ் (Hugo Chávez), 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு வலிமையான குரலாகத் திகழ்ந்தவர்.
1954 ஆம் ஆண்டில் பிறந்த ஹியூகோ சாவேஸ், ஒரு இராணுவ அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1992 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தினார். இதனால் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
1998 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் “பொலிவேரியன் புரட்சி” (Bolivarian Revolution) என்ற முழக்கத்துடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான அவரது பேச்சு அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இவர் வெனிசுவேலாவின் மசகு எண்ணெய் நிறுவனங்களை அரசுடமையாக்கினார். இதன் மூலம் கிடைத்த வருமானத்தை கல்வி, மருத்துவம் மற்றும் ஏழை மக்களுக்கான உணவுத் திட்டங்களுக்குச் செலவிட்டார்.
தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கம் இருப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார். கியூபா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டார்.
சாவேஸ் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவியது. 2002 ஆம் ஆண்டில் சாவேஸை பதவியிலிருந்து அப்புறப்படுத்த ஒரு இராணுவப் புரட்சி நடத்தப்பட்டது.
இதற்கு அமெரிக்காவின் மறைமுக ஆதரவு இருந்ததாக சாவேஸ் குற்றம் சாட்டினார். ஆனால், மக்கள் ஆதரவுடன் 48 மணி நேரத்திற்குள் அவர் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
சாவேஸின் சோசலிசக் கொள்கைகள் அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்ததால், அமெரிக்கா வெனிசுவேலா மீது பல்வேறு பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது.
உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் இருப்பு இருந்தும், வெனிசுவேலா ஏன் வீழ்ந்தது?
2013 ஆம் ஆண்டு புற்றுநோயால் ஹியூகோ சாவேஸ் காலமானார். அவருக்குப் பின் வந்த நிக்கோலஸ் மதுரோவின் காலத்தில் நாடு பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்க நேர்ந்தது.
2014 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்தபோது, நாட்டின் வருமானம் பாதியாகக் குறைந்தது. வெனிசுவேலாவின் பொருளாதாரம் 95% க்கும் மேல் மசகு எண்ணெய் ஏற்றுமதியையே நம்பியே இருந்தது. எண்ணெய் வருமானம் குறைந்தவுடன் ஒட்டுமொத்த நாடும் முடங்கியது.
இந்தநிலையில், அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், வெனிசுவேலாவால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாமல் செய்தது, இது பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியது.
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டனர்.
வெனிசுவேலாவின் இந்த நிலைமை, ஒரு நாடு தனது இயற்கை வளங்களாலும், வல்லரசு நாடுகளுடனான ஆதிக்கத்தினாலும் எத்தகைய விளைவுகளைச் சந்திக்கும் என்பதற்கு ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.
ஜனநாயக நாடுகளும், சோஷலிச நாடுகளும், சொந்தக் காலில் நின்று அமெரிக்காவின் சுரண்டலை தடுக்க விரும்பும் நாடுகளும் அமெரிக்காவை வலுவுடன் தாக்குவதை நிறுத்தினால் அமெரிக்கா அந்த நாடுகளை அழித்தே தீரும். சே குவேரா தன் உயிரைக் கொடுத்து உலகுக்கு அறிவுறுத்த முயன்றது இதுதான்.
முன்னேறி தாக்குவதை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்ட கியூபா பொருளாதார தடைகள், முற்றுகை, சுற்றி வளைப்பு ஆகியவை மூலம் இன்று வெறுமையான நாடாக மாற்றப்பட்டு வருகிறது. எனவே, ஏகாதிபத்தியத்துடன் சமாதானம் என்பதே சாத்தியம் இல்லை.
வெனிசுவேலா அதிபரை அமெரிக்கா கடத்திய காரணத்தை டிரம்ப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெளிவாகவே சொல்கிறார் “வெனிசுவேலாவின் ஆயில் இண்டஸ்ட்ரியை அமெரிக்க கம்பனிகள் தான் கட்டமைத்தன. அதை சாவேஸ் தேசியமயமாக்கிவிட்டார். அதனால் தான் படை எடுத்தோம். இனி இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு உண்டான இழப்பை அந்த ஆயிலை வைத்து தான் ஈடுகட்டுவோம். வெனிசுவேலாவின் பெட்ரோலிய துறையை மேம்படுத்த மக்களுக்கு எந்த சிரமமும் வேண்டாம். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என சொல்லிவிட்டார்
சில மாதங்களுக்கு முன்பு வெனிசுவேலாவின் அதிபருக்கு “நீங்களே சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு பிடித்த நாட்டில், கைநிறைய பணத்துடன் செட்டில் ஆக உதவுகிறோம்” என பேரம் பேசபட்டதையும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ பேட்டியில் சொன்னார்
“இனி வெனிசுவேலாவை நாங்கள் தான் ஆள்வோம்” என டிரம்ப் வெளிப்படையாக சொல்லியும் விட்டார். வெளியுறவுதுறை அமைச்சர் மார்கோ ரூபியோ, போர்துறை அமைச்சர் பீட்டர் ஹெக்செத் தலைமயிலான ஒரு அணி அதற்கு அமைக்கபட்டுள்ளது
‘அடுத்து எந்த நாட்டின் மேல் நடவடிக்கை” என கேட்டதற்கு “கொலம்பிய அதிபரை எச்சரிக்கையாக இருக்க சொல்லுங்கள். விரைவில் அவரது பின்புறம் காணாமல் போகும்..” என டிரம்ப் சொல்லியிருக்கிறார்
வெனிசுலாவில் தற்போது 303 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது, அமெரிக்கா இனி அதைக் கட்டுப்படுத்தும் என்று டிரம்ப் கூறுவது மிக முக்கியமான விஷயம். குறைவான விலைக்கு விற்றாலும் கூட, அதன் மதிப்பு 8.7 டிரில்லியன் டாலர்களாகும். இது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 4 மடங்கு அதிகம்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 12 மணி நேரத்தில், அமெரிக்கா மற்றும் சீனாவைத் தவிர, உலகின் அனைத்து நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமான மதிப்புள்ள எண்ணெய் வளங்களின் மீது அமெரிக்கா வெகு சுலபமாக தனது கட்டுப்பாட்டை நிறுவியுள்ளது. அமெரிக்கா இன்னும் எந்த அளவிற்கு செல்லும் என்பது போகப் போகத்தான் தெரியும்.
அமெரிக்கா வெனிசுவேலாவை ஆக்கிரமித்தற்கான இன்னொரு காரணமும் இருக்கிறது, அது 1974-ல் ஹென்றி கிஸ்ஸிங்கர் சவுதி அரேபியாவுடன் செய்த ஒரு ஒப்பந்தம். அமெரிக்க டாலர் இன்று வரை உயிர் பிழைத்திருப்பதற்கான காரணமும் இந்த ஒப்பந்தம்தான். ஏனெனில் பெட்ரோ-டாலர் மீதுதான் முழு அமெரிக்க நிதி அமைப்பும் கட்டப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவை உலகின் முதன்மை பொருளாதார சக்தியாக பெட்ரோ-டாலரே இருக்கிறது.
1974-ல் செய்யப்பட்ட அந்த ஒப்பந்தம் : உலகளவில் விற்கப்படும் அனைத்து எண்ணெயும் அமெரிக்க டாலரில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும், அதற்கு பதிலாக, அமெரிக்கா சவுதிக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கும்.
இந்த ஒரே ஒப்பந்தம் உலகம் முழுவதும் டாலருக்கு செயற்கையான தேவையை உருவாக்கியது. எண்ணெய் வாங்க ஒவ்வொரு நாட்டுக்கும் டாலர் தேவை. இதனால் தான் அமெரிக்கா வரம்பில்லாமல் பணம் அச்சிட முடிகிறது; மற்ற நாடுகள் அதற்காக உழைக்க வேண்டிய நிலை உருவாகிறது.
இதன் மூலம் தான் அமெரிக்கா இராணுவத்திற்கு நிதியளிக்கிறது. நலத்திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. பெரும் கடன் செலவினங்களை ஈடு செய்ய நிதியளிக்கிறது.
எனவே, பெட்ரோ-டாலர் என்பது விமான தாங்கிக் கப்பல்களைவிடவும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு முக்கியமானது.
அப்படி வலுவான இந்த பொருளாதார அமைப்பை – பல தசாப்த டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக வெனிசுவேலா மிரட்டியது.
2018-ல், “டாலரிலிருந்து விடுபடப் போகிறோம்” என்று அறிவித்ததோடு, டாலரைத் தவிர யுவான், யூரோ, ரூபிள் என எந்த நாணயத்தையும் எண்ணெய்க்கு ஏற்கத் தொடங்கியது வெனிசுவேலா.
பெட்ரோ டாலருக்கு எதிராக சவால் செய்த தலைவர்களுக்கு இதுவரை என்ன நடந்தது என்பதைப் பாருங்கள்:
2000: சதாம் ஹுசேன், ஈராக் எண்ணெய் டாலருக்கு பதிலாக யூரோவில் விற்கப்படும் என அறிவித்தார்.
2003: ஈராக் மீது படையெடுப்பு. ஆட்சி மாற்றம். எண்ணெய் மீண்டும் டாலருக்கு மாறியது. சதாம் கொல்லப்பட்டார்.
2009: கடாபி, எண்ணெய் வர்த்தகத்திற்கு “தங்க தினார்” என்ற ஆப்பிரிக்க நாணயத்தை முன்மொழிந்தார்.
2011: NATO லிபியாவை குண்டுவீசியது. கடாபி கொடூரமாக கொல்லப்பட்டார். லிபியாவில் திறந்த அடிமை சந்தைகள் உருவானது.
“நாங்கள் வந்தோம், பார்த்தோம், அவர் இறந்தார்!” என அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன் கேமராவுக்கு முன் சிரித்தார். தங்க தினார் கடாபியுடன் செத்துப் போனது.
இப்போது மதூரோ….
உள்ளபடியே இன்று பெட்ரோ-டாலர் இன்று கடும் நெருக்கடியில் இருக்கிறது.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா எண்ணெயை ரூபிள் மற்றும் யுவானில் விற்கிறது.
ஈரான் பல ஆண்டுகளாக டாலருக்கு வெளியே வர்த்தகம் செய்கிறது. சவுதி அரேபியா சீனா நாணயம் யுவானில் விற்பனை செய்வது பற்றி திறந்தவெளியில் பேசுகிறது.
இனி என்ன …
சீனாதான் வெனிசுவேலாவின் கச்சா எண்ணையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு.
அமெரிக்காவின் இந்த தாக்குதல் மூலம் அவர்கள் பில்லியன்களை இழக்கும் நிலை உருவாகும்.
உலகின் அனைத்து நாடுகளும் தங்களது அரசியல் மற்றும். பொருளாதார நடவடிக்கைகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டி வரும் நேரம் இது. சீனா அமெரிக்காவிற்கு ரேர் எர்த் மெட்டல் ஏற்றுமதியை முன்னதாக தடை செய்து ஆட்டம் காண்பித்தது. தற்போது அமெரிக்காவின் நேரம்… கச்சா எண்ணெயை வைத்து என்ன ஆட்டம் காட்டுவார்கள்? தெரியவில்லை.
BRICS நாடுகள், டாலருக்கு வெளியே வர்த்தகம் செய்ததற்காக ஒரு நாடு ஆக்கிரமிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் இந்த தாக்குதலை “ஆயுத ஆக்கிரமிப்பு” என்று கண்டித்துள்ளன. அவ்வளவுதான்.
இந்த தாக்குதலில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு செய்தி : “டாலரை சவால் செய்தால், நாங்கள் குண்டுவீசுவோம்” என்பதுதான் அது.
ஜனவரி 3, 2026: வெனிசுவேலா ஆக்கிரமிப்பு. மதூரோ கைது.
ஜனவரி 3, 1990: பனாமா ஆக்கிரமிப்பு. நோரியாகா கைது.
36 ஆண்டுகள் இடைவெளி. கிட்டத்தட்ட அதே தேதி. அதே நடைமுறை. அதே “போதை பொருள் கடத்தல்” காரணம். வெனிசுவேலா அதிபர் கைது செய்யப்பட்டதற்கும் போதைப்பொருள் கடத்தல், மனித உரிமை மீறல்கள் போன்ற காரணங்களை அமெரிக்கா கூறுகிறது.
நோக்கமும் ஒன்றே : மூலவளங்கள் மற்றும் வர்த்தக நடைமுறைகள் மீது அமெரிக்காவின் கட்டுப்பாட்டை நிறுவுவது.
மனித உரிமை மீறல், போதைப் பொருள் கடத்தல், ஆயுத உற்பத்தி என்று காரணங்களைச் சொல்லி ஒரு நாட்டை தாக்குவதற்கும், அந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளை குழி தோண்டி புதைப்பதற்கும் அமெரிக்காவுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்பது தான் அடிப்படையான கேள்வி. இதற்கு பதில் இதுவரை இல்லை. இனி….?
ஆனால் ஒரே ஒரு விஷயம்தான்… இந்த குழப்பமான அரசியல் பொருளாதார சூழலில் இந்தியாவின் நிலை என்ன…
சர்வதேச அரசியலில் அச்சுறுத்தலை, அராஜகத்தை மானுடத்திற்கு எதிரான கொலைகார பாதையில் பயணிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றுபட்டு குரல் எழுப்புவோம்!!
அடுத்த வரும் காலங்கள், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் சந்தேகமேயில்லாமல் மிக முக்கியமானதாக இருக்கும். காத்திருப்போம்…


































