







பத்திரைகையாளர் R. நூருல்லா
இதழியல் துறையில் பணியாற்றுகின்ற முஸ்லிம்கள் மிகவும் குறைவே. அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அத்தகையவர்களில் முதன்மையானவர் R.நூருல்லா.
அதுவும் தமிழக முஸ்லிம்களால் பி.ஜே.பி ஆதரவு நாளிதழ் என அறியப்படுகின்ற தினமலர் நாளிதழில் தலைமை நிருபராக அவர் 33 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது ஒரு வியப்பான செய்தியே.
பிறப்பும் – கல்வி :
இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையில் 13.12.1952 அன்று எஸ்.ஏ.ரஹ்மான்-பேகம்ஜானி தம்பதியினரின் மூத்த மகனாக நூருல்லா பிறந்தார்.
தந்தையார் இராணுவத்தில் (விமானப் படைப்பிரிவில்) பணியாற்றி ஓய்வு பெற்று அதன் பின்னர் சில ஆண்டுகள் வனத்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தன்னுடைய தொடக்க, இடைநிலைக் கல்வியை சேலம் CSI உயர்நிலைப் பள்ளியில் கற்றுத் தேறிய அவர், புகுமுகக் கல்வியை சேலம் கலைக் கல்லூரியிலும், B.Sc. இளங்கலை பட்டப்படிப்பை நாமக்கல் அறிஞர் அண்ணா ஆண்கள் கலைக் கல்லூரியிலும் பயின்றார்.
பின்னர் M.A. முதுநிலைப் பட்டப்படிப்பை மைசூர் பல்கலைக் கழகத்திலும், M.Phil ஆராய்ச்சிப் படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும், B.L. சட்டப்படிப்பை பெங்களூரு சட்டப் பல்கலைக் கழகத்திலும் கற்றுத் தேறினார்.
படிக்கின்ற போது பள்ளியிலும், கல்லூரிகளிலும் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளிலும், கவியரங்குகளிலும், பட்டி மண்டபங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றிப் பல பரிசுகள் பெற்றுள்ளார்.
நூருல்லாவுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும் தெரியும். 1969-70களில் பள்ளி மாணவர் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த இவர், சமூக சேவைகளிலும் ஈடுபட்டார்.
தேசிய சமூக சேவை முகாம்கள், செஞ்சிலுவைச் சங்கம், ஸ்கெனட் திட்ட அமைப்பு ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றி எண்ணிறந்த சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். பள்ளியில் நடைபெற்ற நாடகங்களிலும் நடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.
தினமலர் நாளிதழ் நிருபர் :
பட்டப் படிப்பினை முடித்த பிறகு, இவர் சேலத்தில் இயங்கி வந்த அண்ணாமலைக் காட்டன் மில்லில் மேலாளராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது அவர் பெற்ற மாத ஊதியம் ரூ.450/- எனினும் அந்தப் பணியில் தொடராது தினமலர் நாளிதழில் ரூ.150/- மாத ஊதியத்தி்ல் நிருபராகச் சேர்ந்தார். ஏற்கனவே மில்லில் பெற்று வந்த ஊதியத்தைக் காட்டிலும் குறைவான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு தினமலர் நாளிதழில் நிருபராக சேர்ந்ததற்கு இதழியல் துறையில் இவர் கொண்டிருந்த ஆர்வமே காரணமாகும்.
நூருல்லா தினமலர் நாளிதழில் நிருபராகச் சுமார் 33 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது தினமலர் ஆசிரியராக இராம சுப்பைய்யர் இருந்தார். அதன் பின்னர் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி ஆசிரியரானார். இந்த இருவரின் நம்பி்க்கைக்குப் பாத்திரமாக நூருல்லா நடந்து கொண்டார்.
ஒரு நிருபர் என்பதையும் தாண்டி, தினமலர் ஆசிரியரின் குடும்ப நண்பராகவும், அந்தக் குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்னைகளை சுமூகமாகத் தீர்க்கின்ற ஆபத்துபாந்தவனாகவும் விளங்கினார். அதனாலேயே முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த நூருல்லா அந்த இதழில் 33 ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற முடிந்தது.
அவர் நிருபராகப் பணியாற்றியபோது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைப் பேட்டி கண்டும், அவர்களது சுற்றுப் பயண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செய்திகள் சேகரித்தும் மிகுந்த அனுபவம் பெற்றார்.
தமிழக முதல்வர்களான கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் M.G. இராமச்சந்திரன், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் நன் மதிப்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், உ.பி முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ், பீகார் முன்னாள் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், கேரள முன்னாள் முதல்வர் E.K.நாயனார், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்கள் தேவராஜ் அர்ஸ், தேவ கௌடா, ஆந்திர முன்னாள் முதல்வர் N.T.இராமராவ் ஆகிய தலைவர்களின் அறிமுகத்தையும் பெற்றிருந்தார்.
இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் 2000த்திற்கு மேற்பட்ட புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகத் தெரிவிக்கின்றார்.
தமிழ்ச் சுடர் நாளிதழ்:
2004ஆம் ஆண்டு தினமலர் நாளிதழ் நிருபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், ஓராண்டு காலம் தினகரன் நாளிதழில் பணியாற்றினார். பின்னர் சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த உஸ்மான் பயாஸ் என்பவரால் நடத்தப்பட்ட “தமிழ்ச் சுடர்” நாளிதழின் இதழியல் பொறுப்பாளராகப் பணியாற்றினார். 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை சுமார் ஐந்து ஆண்டுகள் அந்த இதழில் பணியாற்றினார். எனினும் 2011ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற செல்வி ஜெயலலிதா இந்த இதழுக்கு முந்தைய கலைஞர் அரசு வழங்கிய அரசு விளம்பரங்களை நிறுத்தியதால் நிதி நெருக்கடி ஏற்பட்டு அந்த நாளிதழைத் தொடர்ந்து நடத்த முடியாது போயிற்று.
எழுத்துப்பணி:
தனது நிருபர் பணிக்கால அனுபவங்களை வலைத்தளங்களில் தற்போது தொடர்ந்து எழுதி வருகிறார். மேலும் பேராசிரியர் சே.மு.மு. முகம்மது அலி அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவருகின்ற “இனிய திசைகள்” மாத இதழில் தனது இதழியல் அனுபவங்களைத் தொகுத்து “பத்திரிகையாளரின் பயணம்” என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதி வருகிறார். அதில் பல சுவையான நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறார். சிலவற்றைப் பார்ப்போம்.
1980ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அன்றைய முதல்வர் MGR நடிகை சரோஜாதேவியை அரசியலுக்கு வருமாறு அழைத்தது – அதனை ஏற்க அவர் மறுத்தது,
காவிரிப் பிரச்னையில் கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் கையொப்பமிட அவர் மறுத்தது
– மணியம்மையை மணந்தது ஏன் என்ற கேள்வி கேட்ட நிருபர் இராமதாஸுக்கு பெரியார் அளித்த பதில் –
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோருடன் அரசியல் நடத்திய நீங்கள் எப்படி எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் அணியில் சேர்ந்துள்ளீர்கள் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இராஜாராம் அளித்த பதில்,
தமிழ்ச்சுடர் நாளிதழும், மலேசியாவின் தமிழ் நேசன் நாளிதழும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேறாமல் போன சோக வரலாறு.
1978ஆம் ஆண்டு சிவகுமார் நடித்து வெற்றிகரமாக ஓடிய “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” படத்தின் வெற்றி விழாவுக்கு முதல்வர் MGRயை அழைப்பதற்காகச் சென்ற சிவகுாமரிடம் அந்த விழாவுக்கு சிவாஜி கணேசனை அழைக்கக் கூடாது என MGR போட்ட நிபந்தனை
– MGR வீட்டிலிருந்து தான் கலைஞர் கருணாநிதி வீட்டிற்கு தினந்தோறும் பால் இலவசமாக வழங்கப்பட்ட செய்தி – போன்ற ஏராளமான சுவையான செய்திகள் இந்தத் தொடரில் இடம் பெற்றுள்ளன.
செய்தித்தாள்களில் வராத பல முக்கியமான செய்திகள் இவரது தொடரில் இடம் பெற்று வருகின்றன. இன்னும் பல சுவையான நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்து எழுதுவார் என நம்புவோமாக.
நூல்கள்:
நூருல்லா ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகவும் மிளிர்கிறார். இதுவரை 19 நூல்கள் எழுதியுள்ளார். அதில் மாநபியின் மறை விளக்கம் , புனித ரமலான் மலர்-ராசிபுரம், புனித பக்ரீத் மலர் –ராசிபுரம், புனித ரமலான் மலர்-சேலம், புனித பக்ரீத் மலர்-சேலம் ஆகிய சமயம் சார்ந்த தொகுப்பு நூல்களும் அடங்கும்.
திருநங்கைகள் பற்றி அவர் எழுதியுள்ள “மூன்றாம் பாலினம்” ஒரு வித்தியாசமான நூலாகும். ஆண்டுதோறும் திருநங்கைகள் கூடுகின்ற கூவாகம் கோயிலுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து பிரச்னைகளைக் கேட்டறிந்து இந்த நூலினை எழுதியுள்ளார். மூன்றாவது பாலினத்தாரை திருநங்கைகள் என அழைக்கலாம் எனப் பரிந்துரை செய்ததும் இவரே.
நிருபரின் நினைவுகள், வரலாற்றுப் பார்வையில் செய்தியாளர் சங்கங்கள், நிருபர் அறிந்த நடராசன் ஆகியன இவரது இதழியல் அனுபவங்களைப் பேசுகின்ற நூல்களாகும்.
பிற சிறப்புகள்:
இவர் நாடெங்குமுள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள் அமைப்புளில் பல்வேறு பொறுப்புகள் வகித்துத் திறம்படச் செயலாற்றியுள்ளார். தென்னிந்திய நாணவியல் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்த இவர், அந்த அமைப்பின் பொருளாளராக 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு நாணவியல் சங்கத்தின் பொருளாளராகவும் பதவி வகித்துள்ளார்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்றம், மாநிலங்களவை, குடியரசுத்தலைவர் அலுவலகம் ஆகியவற்றின் நிருபராகவும் தற்போது பணியாற்றி வருகிறார்.
இலக்கியம் :
பத்திரிகையாளராக மட்டுமல்ல, ஒரு மிகச் சிறந்த இலக்கியவாதியாகவும் நூருல்லா திகழ்கிறார். இஸ்லாமிய இலக்கியங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறார். இஸ்லாமிய இலக்கியக்கழக மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் தனது பங்களிப்பைச் செய்து வருகிறார். தொடக்க காலத்தில் இவர் கவிதைகளும் எழுதியுள்ளார்.
விருதுகள்:
பட்டியலிடமுடியாத அளவுக்கு ஏராளமான விருதுகள் இவர் பெற்றுள்ளார். பத்திரிகைத் துறையில் சிறப்பான முறையில் பணியாற்றியமைக்காக தென்சக்ரா விருதும், 50வது குடியரசு தினத்தன்று தமிழக அரசின் விருதும், மாத்ருஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
குடும்பம்:
நூருல்லாவின் துணைவியார் பெயர் பல்கீஸ். இத் தம்பதியினரின் திருமணம் 18.11.1979 அன்று நடைபெற்றது. இவர்களுக்கு அமானுல்லா, அப்துல்லா என இரு மகன்களும், சுல்தானா பேகம் எனும் மகளும் உள்ளனர். மூத்த மகன் அமானுல்லா அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இரண்டாவது மகன் அப்துல்லா இவரைப் போலவே பத்திரிகைத் துறையில் பணியாற்றுகின்றார். மகள் சுல்தான் பேகம் பேஷன் டெக்னாலஜி படித்துவிட்டு கோ கலர் என்ற நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்.
முடிவுரை:
நூருல்லாவின் இதழியல் அனுபவங்கள் மிகவும் சுவையானவை. அவரிடம் இன்னும் எழுதுவதற்கு ஏராளமான செய்திகள் உள்ளன. அவர் தொடர்ந்து தனது அனுபவங்களை எழுத வேண்டும். எழுதுவார் என நம்புவோமாக! அவரது பணிகள் தொடர இறைவனை இறைஞ்சுவோமாக!
கட்டுரையாளரின் தொடர்புக்கு : 99767 35561



































