

பகுத்தறிவு என்பது படைத்தவனை மறுப்பதில்லை. படைத்தவன் யார் அவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், ஆற்றல்கள் என்ன என்று தமது அறிவின் துணை கொண்டு தெரிந்து கொள்வது தான்.
கண்ணுக்குத் தெரியாத உயினங்களையும் உருவத்தில் மிகப்பெரிய உயிரினம் என அறிவுலகம் சொல்லுகின்ற டைனோசர்கள் வரை பல்வேறு வகையான அமைப்பில் உயிரினங்களை பிரபஞசத்தின் படைப்பாளன் படைத்துள்ளான்.
அவனின் பல விதமான படைப்புகளில் மிகவும் அற்புதமான படைப்பு மனிதன் என்ற உயிரினம் தான். வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத பல்வேறு சிறப்புகளுடன் மனிதனை படைத்துள்ளான் படைப்பாளன்.
இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: ‘அத்தியின் மீதும், ஜெய்த்தூனின் மீதும் சத்தியமாக, தூர்ஸினாய் மலைத்தொடரின் மீதும் சத்தியமாக, அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீதும் சத்தியமாக, நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகிய அமைப்பில் படைத்திருக்கிறோம்’ (95:1-4) என்று கூறியதை கொஞ்சம் யோசிப்போம்.
படைப்பாளன் மனிதனை அழகிய அமைப்பில் படைத்திருக்கின்றோம் என்று சொல்வதிலும் கூட ஒரு மறை பொருளை வைத்துச் சொல்கிறான். மனிதன் அழகானவன், அழகிய வடிவத்தில் படைக்கப்பட்டிருப்பவன்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை உள்ள உடல் உறுப்புகள் அனைத்தையும் அவனுக்கு பயன்படும் வகையில் இறைவன் படைத்திருக்கின்றான். அதனால் தான் அழகை மட்டும் சொல்லாமல் அதன் அமைப்பையும் சேர்த்தே தனது வேதத்தில் சொல்கிறான்.
மனிதன் சிரிப்பு, அழுகை, துக்கம், மகிழ்ச்சி, கோபம், அமைதி, என்று வேறுபட்ட உணர்வுகள் தன்மைகளை உள்ளடக்கமாகக் கொண்டவன். தன் வாழ்நாளில் எதிர்கொள்கிற நிகழ்வுகளில் தன்னையறியாமல் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி விடும் தன்மையை அளித்திருக்கிறான் பிரபஞ்சத்தின் அதிபதி.
இந்த உலகில் பிறந்த, பிறக்க இருக்கின்ற ஒவ்வொரும் ஒரு விஷயத்தில் தனித்தன்மை கொண்டவர்களாகவே படைக்கப்படுகிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எல்லா வகைகளிலும் ஒத்து போகின்ற இரட்டை பிறவிகளில் கூட
அவர்களின் கைரேகை ஒன்றாய் அமைவதில்லை. என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. இதன் மூலம் படைத்தவனின் படைப்பாற்றல் எவ்வளவு நுணுக்கமானது என்பதை எல்லோரும் அறிந்துகொள்ளலாம்.
ஆம்! இதைத்தான் இறைவன் தனது திருக்குர்ஆன் வசனத்தில் : அவனுடைய விரலின் நுனியைக் கூட மிக துல்லியமாக அமைப்பதற்கு நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்” (75: 4) என்று ரத்தின சுருக்கமாக சொல்கின்றான்.
மனிதனின் தனித்தன்மையை நிரூபிக்க இன்றைய அறிவியல் அவனின் ரேகையையும், D.N.A. என்னும் மரபணுக்களின் தொகுப்பையும் நம்பியுள்ளது. இப்படி எத்தனையோ அத்தாட்சிகளைக் கொண்டு அற்புத படைப்பாய் மனிதனை படைப்பாளன் படைத்திருக்கின்றான்.
நமது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள ஒவ்வொரு உறுப்பும் காலப்போக்கில் பலவீனத்தை சந்திக்கும். ஒருவருக்கு வயது ஆகிறது என்றால் அவருடைய தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளுக்கும் தான் வயதாகிறது… என்பதை நம்மில் எத்தனை பேர் புரிந்து கொண்டுள்ளோம் என்பது பெரிய கேள்வி.
ஒரு வருடம் முடிந்து விட்டது என்றால் நமக்கு ஒரு வயது கூடுகிறது என்ற பொருள் மட்டும் இல்லை. நம் உடலும் பலவீனம் அடைகிறது என்ற யதார்த்தமும் அதில் அடங்கி இருக்கிறது.
பிரான்ஸ் நாட்டு மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ள ஆய்வின் தகவல்கள்… எல்லோரையும் யோசிக்கச் செய்கிறது.
ஒவ்வொருவரின் எண்ணம், சொல், செயல்களுக்கு நமது மூளையிடும் கட்டளைகள் தான் காரணம் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
நமது மூளையில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை சுமார் 10,000 கோடி,
அது ஒருவருடைய 20 வயது வரை தான் சுறுசுறுப்புடன் இருக்கிறது. அதன் பிறகு இந்த எண்ணிக்கை குறைய ஆரம்பித்து.நமது 40 வது வயது முதல் ஒரு நாளுக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் குறைந்து, நினைவாற்றல் உட்பட உடலின் பல இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனத்தைச் சந்திக்கும்.
சைக்கிள் ஓட பெடல் தேவைப்படுவது போல நமது உடல் இயங்க குடல் மிகவும் தேவை. நம்முடைய 55 வயது வரை தான் குடலுக்கு முழு ஆரோக்கியம் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது போன்றவைகள் குறைய ஆரம்பித்து அஜீரணம் குறைவது மட்டும் இல்லாமல் சில வயிற்றுப் பிரச்னை போன்றவைகளும் அந்த வயதில் இருந்தே தனது சக்தியை இழக்க அது தொடங்குகிறது…
சுவாசிக்க பயன்படும் நமது நுரையீரல் 20 வயது வரை தான் முழுவீச்சில் சிறப்பாக இயங்கும். அதன் பிறகு நம் இடுப்பு எலும்பு பகுதி நெருங்கிக் கொள்வதால், நுரையீரலின் சக்தி குறைந்து, மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும் அளவும் குறைந்து விடும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் கூட மூச்சு வாங்குவதற்கு இது தான் காரணம்.
தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கின்ற வரைதான் ஒருவருக்கு குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பின்னால் அது பலவீனமாகி, ‘கரகர’ என்ற குரலாக மாறுகிறது.
நம் இதயம், ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது. உடலுக்கு ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும் குறையும். கல்லீரல் ஒருவருக்கு 70 வயது வரை நல்ல ஆரோக்கிய இயக்கும் வாய்ப்பு உள்ளது. மதுப் பழக்கத்திற்கும், மற்ற பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகாத வரை கல்லீரலின் பலம் ஆண்டுக் கணக்கில் தொடரும்.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 25 வயது வரை தான் அவர்களின் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் அவர்களின் 35 வயது முதல் அது பலவீனமடைய ஆரம்பிக்கும்.
இதனை இன்றைய கார்பரேட் விளம்பரங்கள் கூட தங்களின் வியாபார உத்தியாக பயன்படுத்திக் கொள்கிறது.
சாதாரணமாய் எச்சில் என்னும் உமிழ் நீர் ஊறும் வரை தான் அனைவரின் பற்களுக்கும் வலிமை. அவைகள் தான் பாக்டீரியாக்களை நமது வாயில் இருந்து விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கிவிடுகிறது. அதனால் சிலரிடம் துர்நாற்றம் வாயில் உண்டாக காரணமும் ஆகிறதாம்.
இந்த உலகம் தான் நிச்சயமானது, நிரந்தரமானது என நம்புகின்ற மனிதர்களுக்கு உண்மையை புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலேயே போய் விடுகின்றது.
பலவீனமடைந்து, அழிவை சந்திக்கப் போகும் உடலையும், உலகையும் நிரந்தரம் என நம்பி வாழும் மனிதர்கள் என்றும் அழியாத படைப்பாளன், பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் இறைவனை, அவனின் அற்புத அத்தாட்சிகளையும் பகுத்து அறிந்து சிந்திக்க இயலாமல் போவது ஈடு செய்ய முடியாத இயல்பு.
படைப்பாளன் யார் என்று அறிய முயற்சி செய்து, தெரிந்து படைப்பாளனை பின்பற்றி வாழ்வது தான். அறிவின் வெளிப்பாடு. இனியாவது அதற்காக வாழ்வோமே…..


































