தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களில் 9% பேர் போதைபொருள் பழக்கத்துக்கு அடிமையாவதாக சென்ற வருடத்தின் ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சித் தகவல் பரவலாகப் பேசப்படுகிறது.
அது குறித்து கோவை மாவட்டப் புகையிலைக் கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் டாக்டர் எம்.சரண்யாதேவி கூறுவதைப் பார்ப்போம்…
”அரசு மருத்துவமனையின் நுரையீரல், பல் மருத்துவம், பொது மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் இருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகள், மாணவர்களுக்கு இங்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை கூல்லிப் எனப்படும் புகையிலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். புகை பிடித்தாலோ, மற்ற போதை வஸ்துக்களைப் பயன்படுத்தினாலோ வாசனையை வைத்து பெற்றோர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், வாயில் அடக்கி வைத்துக்கொள்ளும் கூல்லிப் புகையிலையை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
பெரும்பாலான மாணவர்களுக்கு வயதில் மூத்த நண்பர்கள் மூலமாகவே புகையிலைப் பொருட்கள் அறிமுகம் ஆகின்றன. சிலர் தந்தையிடம் இருந்து இந்தப் பழக்கத்தைத் தெரிந்துகொள்கின்றனர். புகையிலைப் பொருளை வாங்க வீட்டில் பணம் கிடைக்காதபோது பணத்தைத் திருடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து விலகியே இருக்கின்றனர். நாளடைவில் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகவும், புகையிலைப் பொருட்கள் காரணமாகின்றன.
“இதனால், நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய், காசநோய், உளவியல் பாதிப்பு, கண்பார்வைத் திறன் குறைவு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.”
பள்ளியில் படிக்கும் சீனியர் மாணவர்களைப் பார்த்து சிறுவர்கள் இப்பழக்கதுக்கு ஈர்க்கப்படுவதும், பள்ளிகளுக்கு அருகிலேயே இருக்கும் சிறிய பெட்டிக்கடைகளில் போதைப் பாக்கு, புகையிலை போன்ற போதை வஸ்துக்கள் மிக எளிதாக கிடைப்பதும் தான் மாணவர்கள் தடம் மாற முக்கியக் காரணம் என்கிறார்கள் இது குறித்து வேதனை தெரிவிக்கும் பள்ளி ஆசிரியர்கள்.
சமூக தேகத்தில் தோன்றியுள்ள புற்று நோய் என்ன செய்யப் போகிறோம்?



































