


கி.ரா. என்றகிற கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. வட்டார இலக்கியத்தின் ‘முன்னெத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, தேர்ந்த கதை சொல்லி என்று இலக்கிய உலகத்தால் கொண்டாடப்படுபவர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில் வசதியான குடும்பத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். எட்டாவதுக்கு மேல் படிப்பதற்கு அவரது சூழல் இடம் தரவில்லை.
1958 இல் அவரது முதல் சிறுகதை வெளியானது. வட்டார வாய்மொழி மரபு, செவ்விலக்கியக் கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து, தனக்கென தனி நடையை உருவாக்கிக்கொண்டவர். கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார்.
இயற்கைச் சூழலை, மனிதர்களின் குணாதிசயங்களை, நுண்ணுணுர்வுகளை, அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை நுணுகிப் பார்க்கும் பார்வையோடுதான் அவரது கதைகள் விரிவடையும்.
கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார். கதை சொல்லி என்ற இதழையும் தற்போதும் நடத்தி வருகிறார்.
சிறுவர்களுக்குக் கதை எழுதுவதிலும் விருப்பமுடையவர் கி.ரா. அவரது ‘பிஞ்சு’ சிறார் குறுநாவலுக்கு இலக்கிய சிந்தனை விருதும் கிடைத்தது.
“கோபல்லபுரம் கிராமம்” கோபல்லபுரத்து மக்கள்” ஆகிய அவரது நாவல்கள் இலக்கிய உலகில் பெரும் புகழ்பெற்றவை. ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவல் வழியாக 1991-ல் சாகித்ய அகாடமி விருது அவரை அடைந்தது.
இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கியச் சாதனை-2016 சிறப்பு விருது உட்பட பல விருதுகள் அவருக்குக் கிடைத்த பெருமைகளில் சில.
‘கிடை’ என்ற இவரது குறுநாவல் ‘ஒருத்தி’ என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
நேரடியான அரசியல் ஈடுபாடும் கொண்டவர். இடதுசாரி இயக்கங்களில் உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். தோழர் ஜீவா, எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்றோருடன் நெருங்கிப் பழகியவர். விவசாய சங்கங்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டுமுறை சிறை சென்றிருக்கிறார். காந்தியின் மீது பெரியாரின் மீது ஈர்ப்புடையவர்.
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் துறையின் வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்தார். இப்போதும், புதுச்சேரி பல்கலைக்கழக வளாகக் குடியிருப்பில்தான் வசித்து வருகிறார். தனது 98 வயதை எட்டிய நிலையிலும் அயர்ச்சியின்றி எழுதிக் கொண்டிருக்கிறார்.
கி.ரா.வின் கதைகள் தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கி.ரா.வை ‘இனக்குழு அழகியலின் முன்னோடி’ என்கிறார் ஜெயமோகன். எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர், கி.ராவிற்கு ‘ஞானபீடம்’ விருது வழங்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். அதை சமூகநீதி முரசு மாத இதழும் முன் மொழிகிறது.
எழுத்தாளர் பழனி ஷஹானும், இணை ஆசிரியர் வலியுல்லாஹ்வும் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா. அவர்களுடன் சமூகநீதி முரசு மாத இதழுக்காக செய்த நேர்காணல் இது.

































