இறைவனின் படைப்புகளில் தனிச்சிறப்புக் கொண்டது மனித இனம். ஏனைய படைப்புகளை விட்டும் வித்தியாசமான பண்புகளைக் கொண்டுள்ள ஒரே இனம்.
மனிதன் தனது சிந்தனையைத் தளமாகக் கொண்டுதான் அனைத்துச் செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்கிறான். காட்டுமிராண்டித் தனமான வாழ்விலிருந்து மீண்டு ஒழுங்கு விதிகளால் வடிவமைக்கப்பட்ட வாழ்வின்பால் வரவழைப்பதுதான் அல்குர்ஆனின் பணியாக உள்ளது.
சுதந்திரமான வாழ்க்கை அமைப்பும், நாகரிக மேம்பாடும், மனித சிந்தனை எதிர்பார்க்கும் இயல்பு நிலையும் தனது பகுத்தறிவை பிரயோகிப்பதில்தான் தங்கியுள்ளது. அல்குர்ஆன் தோற்றுவித்த ‘சமூக அமைப்பு’ வஹியின் ஒளியில் பகுத்தறிவை பயன்படுத்தியதன் விளைவாக அமைந்தது.
அல்குர்ஆனிய போதனைகளும் சிந்தனைகளும் மனிதனை தூரநோக்குடன் ஆராயத்தூண்டியது. மட்டுப்படுத்தப்பட்ட அவனது அறிவெல்லைக்கப்பால் சென்றுவிடாமல் வஹி அவனைப் பாதுகாத்த அதேவேளை குருட்டுத்தனமான பின்பற்றல்களில் சிக்காமல் பாதுகாத்தது.
ஷரீஆ, அகீதா இரண்டும், மனிதன் முஸ்லிமாக மாறுவதற்கான ஏகத்துவப் பிரகடனமான கலிமாவின் உள்ளார்ந்த அர்த்தமும் மனிதனை சுதந்திரமானவனாகவும் நாகரிகமயப்பட்டவனாகவும் மாற்றுவதையே நோக்மாகக் கொண்டுள்ளது.
அபீசீனிய ஹிஜ்ரத்தின் போது நஜ்ஜாஷி மன்ன னுக்கு முன்னால் ஜஃபர் பின் அபீதாலிப் பிரகடனப்படுத்திய அம்சங்களின் ஆழமான அர்த்தங்களை நோக்கினால் ஜாஹிலிய்யத்தினதும், பண்பாட்டு கேவலத்தைக் கொண்ட அநாகரிக சமூகத்தினதும், அவ்வாறே நாகரிக சமூகத்தினதும் தன்மையை உணரலாம்.
உயர்ந்த நாகரிகத்துக்கான அடித்தளத்தை இட்டது அல்குர்ஆன்தான். “(அனைத்தையும்) படைத்தவன் அறியமாட்டானா?” (முல்க்:14) என்று அல்லாஹ் கேட்பதும்… ஜின் வர்க்கத்தையும் மனித வர்க்கத்தையும் படைத்தது என்னை வணங்கவே” (அத்தாரியாத்: 56) என்பதும் மனிதனுக்கான உயர்ந்ததோர் நாகரீக ஒழுங்கை உருவாக்கித் தந்தது அல்லாஹ்தான் என்றும் அவ்வாறே வாழ்வது இபாதத் என்றும் சொல்கிறது.
நதிக்கரையோரங்களில் தோன்றிய நாகரிகங்கள் அதன் செல்வாக்கை இழந்துள்ளன. நைல் நதிக்கரையின் எகிப்திய நாகரிகமும் சிந்து நதிக்கரையின் இந்து நாகரிகமும் குவாங்கோ நதிக்கரையின் சீன நாகரிகமும் எந்நிலையில் காணப்படுகின்றன…?
ஸம்ஸம் நீரூற்றை மையமாகக் கொண்டு உருவான இஸ்லாமிய நாகரிகம் இன்னும் தன்பயணத்தைத் தொடர்கிறது. அதன் பசுமையும் செழுமையும் இன்னும் வாடவில்லை.
காரணம் அது மனிதப் பலவீனங்களாலன்றி அல்லாஹ்வின் வழிகாட்ட லால் தோற்றுவிக்கப்பட்டமைதா.
மனித இயல்புகள், உணர்வுகள், தேவைகள், விருப்பங்கள் அனைத்துமே இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. கீழ்த்தரமான உணர்வுகளும் எண்ணங்களும் இங்கு அதிகாரம் செலுத்த முடி யாது.
மிருகத்தனத்தின் பரிணாமம் தான் மனிதன் என்று நிறுவ முனையும் டார்வினின் “Theory of evolution” எப்படி உயர்ந்த நாகரிகத்தை உருவாக்கும்…?
ஃபிராய்டின் கனவு விளக்கம் மனித சிந்தனைகளை, உணர்வுகளை மீண்டும் குழிதோண்டிப் புதைக்க முயலும் மேற்கு நாகரிகத்தை தோலுரிக்க ஏதுவாக அமைகிறது.
மேற்கு தோற்றுவிக்க முனையும் ஒற்றைக் கலாசாரமும் பண்பாட்டு ஏகாதிபத்தியமும் நிர்வாணக் கலாசாரத்துக்கும் வரண்ட நாகரிகத்துக்கும்தான் துணை செய்கின்றன.
இங்குதான் இஸ்லாமிய ஷரீஆவின் உயர்ந்த நோக்கங்கள் மனிதனது உயிர், பணம், மானம், பகுத்தறிவு, பரம்பரை போன்றவற்றைப் பாதுகாக்கவே அமைந்துள்ளன என்பது புலனாகின்றது. இங்குதான் இஸ்லாமிய நாகரிகம் உயர்ந்து நிற்கிறது.
தொன்மைகளில் புதையாமலும் நவீனத்தைப் புதைக்காமலும் வீரியமாக நிற்பது இஸ்லாமிய நாகரிகம்தான்.
மனிதனை சீராகப் படைத்து (அத்தீன்: 4) நன்மை, தீமைகளை விளக்கி (அஷ்ஷம்ஷ்: 8) அவனது mission, vision இரண்டையும் தெளிவாக்கி உயர்ந்த நாகரிகத்தை கட்டியெழுப்பியவன் அல்லாஹ். ”அவனே உங்களை பூமியில் படைத்து அதனை வளப்படுத்துமாறும் வேண்டுகிறான்” (ஹூத்:61) என்று அல் குர்ஆன் கூறுகிறது.
“கிராமப்புற வாழ்வின் எளிமைத் தன்மையிலிருந்து வளம்மிகு நாகரிக வளர்ச்சியை நோக்கி தம் வாழ்வை நகர்த்த மனிதன் செலவழிக்கும் முயற்சியில்தான் நாகரிகம் எழுகின்றது. பிரபஞ்சம், மனிதன், வாழ்வு இம்மூன்றுக்கும் இடையிலான மனித செயற்பாட்டின் விளைவுதான் நாகரிகமாக பரிணமிக்கிறது” என்கிறார் ஸஈத் ரமழான் அல்பூதி.
நாகரிகம் பற்றிப் பேசும்போது அல்ஜீரிய சிந்தனையாளர் மாலிக் பின் நபி; மனிதன், மண், நேரம் அல்லது ஆயுள் மூன்றையும் அடியாகக் கொண்டு கட்டியெழுப்பப்படும் நாகரிகமே நின்று நிலைக்கும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.
இவர் ‘துராப்’ எனும் மண் மூலம் நாட வருவது பூமியை அல்லது பூமியின் பார்வையில் அது பிரபஞ்சமாக அமைகிறது. இந்த மூன்றையும் தளமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படும் நாகரிகம் தான் நிலை பெறும். மனித சந்ததியும் பலன்பெறும். பூமியும் வளம் பெறும்.
எனவே, எமது நாகரிகம் மனித சிந்தனைகளால் உருவாக்கப்பட்டதல்ல. மனித சிந்தனையைப் பாதுகாக்க அல்லாஹ் விதியாக்கிய ஒழுங்குகளால் உருவாக்கப்பட்டது.
மனிதாபிமானமும் மனித உணர்வுகளும் மதிப்பிழந்துள்ள நிலையில் இஸ்லாமிய நாகரிகத்தின் பால் எமது வாழ்வை அமைத்து அதலபாதாளத்தின் எல்லையிலிருந்து மீண்டுவர வேண்டும். எமது முன்னோர்கள் கட்டிக்காத்த நாகரிகத்தைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.
மேற்குலகு மிருகத்தனமான வாழ்வை வரவேற் கிறது. தன்மானம், வெட்க உணர்வு போன்றவற்றை பழமைவாதம் என்கிறது.
கலாசாரம் என்பது மேற்கின் பார்வையில் ஆடைகளைக் களைவதுதான். இஸ்லாத்தின் பார்வையில் ஆடை அணிந்து அவ்ரத்தை மறைப்பதிலிருந்துதான் நாகரிகம் ஆரம்பிக்கிறது. இஸ்லாமும் ஜாஹிலிய்யத்தும் ஒருபோதும் ஒன்றிணையாது; சங்கமிக்காது.
எனவே, “Clash between civilizations’ எனும் ஆட்டத்தில் வெற்றிவாகை சூடப்போவது, அதனை எடுத்து நடக்கும் முஸ்லிம்கள் தான் என்பதே உண்மை.
காரணம் “சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்து மறைந்தது” என்கிறது அல்குர்ஆன். சக்திவாய்ந்த இஸ்லாமிய நாகரிகத்தின் காவலர்களாக இருந்து அதனைப் பாதுகாப்பதற்காக நாம் அனைவரும் முயல வேண்டும்.
எம்.ஏ.எம்.பிஸ்மிதாமி



































