நாட்டில் படிப்படியாக பொதுமுடக்கம் நீக்கப்பட்டு, பெரும்பாலான இடம்பெயர்ந்தவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிய பின்னர், மோசமான பட்டினி, திடீர் வேலையின்மை ஆகியவை தந்த துயரங்கள் எப்படியோ கடந்துவிட்டன. ஆனாலும் உண்மை முற்றிலும் தலைகீழானதாகவே இருக்கிறது. ஏற்கனவே மந்தநிலையில் இருந்து வந்த முழு பொருளாதாரத்தை இதற்கு முன்னெப்போதுமில்லாத வகையில் முடக்கி வைத்ததால் ஏற்பட்ட பேரழிவின் தாக்கம், இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிக்கப் போகிறது. இவ்வாறான நிலையில், அரசாங்கம் மற்றும் பணக்கார மற்றும் நடுத்தர வர்க்கங்களின் கூட்டு அலட்சியத்தால் ஏழைகள் அடைந்திருக்கும் மகத்தான துன்பம் கண்ணுக்குப் புலப்படாது தொலைந்து போயிருக்கிறது.
தில்லியின் மிகப்பெரிய தகன மைதானத்தை ஒட்டியுள்ள யமுனா நதிக்கரையில், யமுனா புஷ்டா எனப் படும் 4,000 வீடற்றவர்கள் வசித்து வருகின்ற கரையோர இடம் உள்ளது. அவர்கள் சாதாரண காலங்களில், பெரும்பாலும் உணவகங்கள் அல்லது கட்டுமான இடங்களில் மிகச்சாதாரண ஊதியத்தில் வேலைகளைச் செய்வதன் மூலம் தப்பிப் பிழைத்து வந்தனர். அந்த வேலை நிச்சயமற்றது, எப்போதும் குறைந்த ஊதியம் கொண்டது என்றாலும், குருத்வாராக்கள், கோவில்கள் மற்றும் தர்காக்களில் இருந்து வருகின்ற மதரீதியான தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உணவைச் சாப்பிட்டு, தங்களுடைய பசியை ஆற்றிக் கொண்டு வந்தனர். சமீபத்தில் அவர்களை நான் சந்தித்தேன். அவர்களின் வறுமையும், விரக்தியும் தெளிவாகத் தெரிந்தன. இன்னும் எந்த வேலையும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தொண்டு நிறுவனங்களை போதுமான அளவிற்கு கோவில்கள் தொடரவில்லை. தில்லி அரசு சமைத்த உணவை இலவசமாக வழங்குகின்ற திட்டத்தை பெரும் பாலும் முடித்துக் கொண்டு விட்டது.
பசித்திருப்பவர்களின் வரிசை நீள்கிறது
ஒடுக்கப்பட்ட இடங்களில், கிராமங்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக இடம் பெயர்ந்து சென்றோர் அனுப்புகின்ற பணத்தையே அந்த இடங்களில் மிச்சமிருந்தவர்கள் நம்பியிருந்தார்கள்; இன்றைக்கு பூர்வீகம் திரும்பி வந்திருக்கின்ற இடம்பெயர்ந்தோருக்கும் அங்கே மிச்சமிருந்தவர்களே உணவளிக்க வேண்டியிருக்கிறது.
சாதாரண அன்றாடக் கூலித் தொழிலாளர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள், வீட்டுவேலை பார்ப்பவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள் மற்றும் தெருவோர விற்பனையாளர்கள் என்று அனைவரும் ஆபத்தான வாழ்க்கையையே எப்போதும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான தேவைகள் மிகவும் ஆழமாக நழுவிச் சென்றிருக்கின்றன. சிறுநிறுவனங்கள் மற்றும் உணவகங்களிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், மிகக்குறைந்த வரு மானத்தில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தனியாகப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றவர்கள் என்று பசித்திருப்பவர்களின் வரிசைக்குள் லட்சக்கணக்கில் புதியவர்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர்.
பசியுடன் வாழக் கற்றுக் கொள்வது…
வெகுகாலங்களாகவே இவ்வாறு வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகாலப் பசியுடன் வாழ்வதற்கு கற்றுக் கொண்ட வழிகள் தங்கள் ரத்தத்திலேயே ஊறிப் போன கோடிக்கணக்கானவர்களைப் போல, இந்த வேலையிழந்த தொழிலாளர்களும் தாங்களாகவே அந்த திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாவதாக, பருப்பு, பால், காய்கறிகள், பழம், முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட சத்தான, உணவுப் பொருட்களை, தங்களுடைய உணவில் இருந்து அகற்றிக் கொள்வது. உப்புடன் அரிசி மற்றும் ரொட்டியை மட்டுமே சாப்பிடுவதாக பல குடும்பங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த கட்டமாக, உட்கொள்ளும் உணவுவின் அளவைக் குறைப்பதோடு, உணவின் எண்ணிக்கையையும் குறைத்தல் மற்றும் குறைவான உணவை உடல் சகித்துக் கொள்வதைக் கற்றுக் கொடுப்பது. இவ்வாறு பல வீடுகள் சரிகின்ற போது, பசியுடன் தூங்க வேண்டிய இரவுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்னர் சத்தான உணவிற்காக பள்ளியை அல்லது பாலர் மையத்தை நம்பியிருந்த குழந்தைகள், இப்போது சாப்பிடுவதற்கு அல்லது விற்பதற்காக கழிவுகளுக்குள் இறங்குவது உள்ளிட்ட வேலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
சிதைந்த அல்லது போதுமான சமூகப் பாதுகாப்பு இல்லாத அமைப்புகளில் ஏற்கனவே இருந்து வருகின்ற மோசமான நிலைமைகளை, இப்போதைய தாக்கம் இன்னும் தீவிரப்படுத்தக்கூடும், மேலும் வர விருக்கும் ஆண்டுகளிலும் அது நீடிக்கும்.
பாதுகாப்பற்ற தொழிலாளர்களின் பெரும் துயரத்திற்கு பரிகாரம் செய்வதற்கும், எதிர்கால துன்பங்களைத் தணிப்பதற்கும் பதிலாக, பல மாநில அரசாங்கங்கள் இந்த தொற்றுநோயைப் பயன்படுத்திக் கொண்டு, முறைசாரா தொழிலாளர்களுக்கு தற்போது சட்டம் வழங்கி வருகின்ற மிகக்குறைந்த பாதுகாப்புகளைக் கூட மேலும் பலவீனப்படுத்தியுள்ளன. வேலை நேரத்தை 12 மணி நேரம் நீட்டிக்கவும், பல்வேறு தொழிலாளர் சட்டங்களின் பாதுகாப்பை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும், சில அரசாங்கங்கள் முயற்சித்தன.
தொற்றுநோய்க்கு முன்பாகவே, 2019ஆம் ஆண்டு உலகளாவிய பட்டினி குறித்த தரவரிசைப் பட்டியலில் இருந்த 117 நாடுகளில் இந்தியா 102ஆவது இடத்திற்குச் சரிந்திருந்தது. அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு பிந்தைய இடத்தையே அது பெற்றிருந்தது. 45 ஆண்டுகாலம் காணாத வேலையின்மை அதிகரிப்பின் காரணமாக, பொருளாதாரமும் தடுமாறிக் கொண்டிருந்தது.
பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மிகவும் சிதைந்து போன பொது சுகாதார அமைப்புகளுடன் உள்ள மாநிலங்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பரவியதால், நகரங்களில் உள்ள தனியார்மயமாக்கப்பட்ட சுகாதார வசதிகளிலிருந்து வீடற்றவர்கள் மற்றும் ஏழைகள் விலக்கப்படுவதால், ஏழைகளின் பிரச்சனைகள் மேலும் அதிகரித்தன. அவ்வாறானவர்கள் எவ்விதக் கவனிப்புமின்றி அரசால் கைவிடப்படுகின்றனர்.
இவை அனைத்தினூடாக, அரசு நிறுவனம், ஊடகங்கள் மற்றும் நடுத்தர வர்க்கம் ஆகியவை குற்றவாளிகளாக அலட்சியமாக இருக்கின்றன. அதற்குப் பதிலாக சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவது; அரசாங்கங்களைக் கவிழ்ப்பது; ராணுவத்திற்கு விமானங்களை வாங்குவது; எதிர்கருத்து கொண்டவர்களைச் சிறையில் அடைப்பது; இடிக்கப்பட்ட மசூதியின் இடத்தில் ராமர் கோவிலை நிர்மாணிப்பது போன்ற பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. லட்சக்கணக்கானவர்கள் நீண்டகாலமாக பட்டினி மற்றும் வறுமையில் வாடுவது கண்ணுக்குத் தெரியாமல் நழுவி வருவதால், இந்தியா இந்த அரை நூற்றாண்டு காலத்திலேயே, மிகவும் மோசமான மனிதநேய நெருக்கடியை நோக்கி அமைதியாக விரைந்து கொண்டிருக்கிறது.
தமிழில் : பேரா. தா.சந்திரகுரு
தி ஹிந்து 2020 ஆகஸ்ட் 07

































