



உலகில் இணையதளத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 55.40% மக்கள் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் உள்ள மொத்த முகநூல் கணக்கு 44,42,00,000 இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 24 சதவிகிதத்தைக் கொண்டது.
இந்தியாவின் டிஜிட்டல் உள் கட்டமைப்பு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதற்கு சரியான தீர்வு எட்டப்படாவிட்டால் நாட்டின் பொருளாதார, கல்வி, சமூக கட்டமைப்பு ஆகியவற்றில் மிகப்பெரும் பின் விளைகள் ஏற்படக் கூடும் என்று சென்ற ஆண்டு ஜனவரி மாதம் பிசினஸ் லைன் செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
தீர்வு
டிஜிட்டல் காலனித்துவத்தின் அமைப்பு மற்றும் விளைவுகளை நாம் விரிவாகப் பார்த்தோம். இ்னி இதற்கான தீர்வு என்ன? நம்மை நம் தேசத்தை எவ்வாறு இதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போம்
இரண்டு வகையான தீர்வுகளை நாம் பார்க்கலாம்
1) சீன நாடு பின்பற்றும் வழிமுறை
சீன நாட்டிற்கென அனைத்து தொழில் நுட்ப சேவைகளையும் அந்த நாடு சொந்தமாக உருவாக்கியுள்ளது. உதாரணமாக சீனாவில் நீங்கள் கூகுள் தேடுபொறியை பயன்படுத்த இயலாது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் பிரதியேகமான தேடுபொறியாக “பைடு” உள்ளது.
அதே போன்று டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலிகளான கூகுள் பே போன்ற செயலிகளை சீனாவில் பயன்படுத்த இயலாது. அதற்குப் பதிலாக அந்த நாட்டில் உருவாக்கபட்ட செயலி அலி பே, விசாட் போன்றவற்றையே பயன்படுத்த இயலும்.
சீன மக்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிநாட்டு மேகக் கணினிகளில் சேமிப்பதைத் தடுக்கவே அந்த நாட்டு அரசு இவ்வாறான கட்டமைப்புகளையும் மேலும் பல சட்ட திட்டங்களையும் அமைத்துள்ளது.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கடுமையான சட்டங்களை அமல்படுத்துவது சாத்தியமற்றது.
2) ஐரோப்பிய நாடுகள் பின்பற்றும் வழிமுறை
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடுமையான தனி நபர் தகவல் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன (General Data Protection Regulation). இவற்றின் மூலம் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது அவற்றின் தகவல் பாதுகாப்புக் கொள்கைகளை தங்கள் நாட்டின் சட்டங்களுக்குத் தக்கவாறு மாற்றி அமைப்பது அந்த நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கான அமைப்பை உருவாக்குவது போன்றவற்றை இந்த சட்டங்களின் மூலம் செய்து வருகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஃபிரான்ஸ் நாட்டில் கூகுள் நிறுவனம் மக்களின் அனுமதி இன்றி அவர்களின் இணையதளத் தேடலை பின் தொடர்ந்ததற்காக 128 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 8,69,30,46,000 ரூபாய்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்றே அமேசான் நிறுவனத்திற்கும் 42 மில்லயன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 3,04,25,66,100ரூபாய்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இப்படி பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அபராதம் செலுத்தி உள்ளன.
இந்தியாவில் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் நிலை
கடந்த 2017ஆம் ஆண்டு கே.ஸ்.பட்டுசாமி என்பவரால் மத்திய அரசுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குத் தீர்ப்பின் படி தரவு (Data) என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் General Data Protection Regulation சட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்ட முன்வரைவை (Personal Data Protection Bill, 2019) மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த சட்ட முன் வரைவின்படி சமூக வலைதளத்தினைப் பயன்படுத்தும் பயனர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது, அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் பயன்பாட்டை அவர்களுக்கு குறிப்பிடுவது, பயனரின் முக்கியமான தரவுகளை (வங்கிக் கணக்கு, பணப் பரிமாற்றம் போன்ற தகவல்களை) வெளிநாட்டு மேகக் கணினிகளில் சேமிப்பதைத் தடுப்பது இது போன்ற முக்கிய தகவல் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி இந்த சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டது.
இந்த சட்ட முன்வரைவு அமலுக்கு வருவது தாமதம் ஆன நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் போது எற்படும் தரவுகளை இந்திய மேகக் கணினியில் சேமிப்பது கட்டாயம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது.
மேலும் வெளிநாடுகளின் மேகக் கணினியில் இருக்கும் தரவுகளை பணப் பரிவர்த்தனை நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் அந்த தரவை அழிப்பதையும் கட்டாயமாக்கியது.
இது போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம் மட்டுமே டிஜிட்டல் காலனித்துவத்தை முழுமையாக இல்லாவிட்டாலும் சிறிதளவிலாவது கட்டுப்படுத்த இயலும்.


































