மூலவளங்களை நாம் காக்க வேண்டும் – தொ.பரமசிவன்

இயற்கையை/வளங்களைத் தரும் மூலவளங்களை கடந்த 40, 50 ஆண்டுகளில் நாம் கடுமையாக நாசப்படுத்தி வைத்திருப்பதுதான் இப்போது நாம் சந்திக்கும் சிக்கல்.

இன்றைக்கும் தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களில் “மனிதர்கள் அருந்துகின்ற நீர்நிலையை தனியாகவும், கால்நடைகளைக் குளிப்பாட்டுகின்ற நீர்நிலையைத் தனியாகவும் வைத்திருக்கிறார்கள். குளம் என்பது குளிப்பதற்கு உரிய இடம், ஊருணி என்பது உண்ணும் நீர் இருப்பதற்குரிய இடம்” என்று அவர்கள் நீர் மேலாண்மை செய்திருக்கிறார்கள். 

விடுதலை பெற்று பத்து ஆண்டுகள் கழித்துக்கூட நம்முடைய வயல்களும், நீர்க்கால்களும் எவ்வளவு சுத்தமாக இருந்தன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இப்போது எந்த ஆற்றிலும் இறங்கி குளிப்பதற்கு பயமாக இருக்கிறது. 

அப்போது ஒன்றிரண்டு வயல்களைத் தவிர மற்ற எல்லா வயல்களுக்கும் இயற்கை உரங்கள்தான் போடப்பட்டது. 

வாய்க்காலில் குளித்துவிட்டு வரப்போரமாகச் சென்றால் நீர்முள் மட்டுமல்ல, மஞ்சள்காமாலைக்கு மருந்தான கீழாநெல்லி, அதுபோன்ற இருபது வகையான தாவரங்களைப் பார்க்கலாம். 

நிலம் என்பது வெறும் நெல்லை உற்பத்தி செய்கிற இடமாக மட்டுமில்லாமல், அந்த வயலினுடைய வரப்பு பல தாவரங்களை குறிப்பாக மூலிகைகளை உருவாக்கக் கூடிய இடமாக இருந்தது.

வயல், நெல்லை மட்டும் உற்பத்தி செய்யவில்லை. மீனையும் உற்பத்தி செய்தது. வயக்காட்டிலே விறால் பார்த்திருக்கிறேன், விலாங்கு பார்த்திருக்கிறேன். குறிப்பாக ஆரல் மீனும், உளுவை மீனும். வயலுக்குத் தண்ணீர் கொண்டு போகும் ஓடைகளிலே ஆரல் மீனைப் பிடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். 

இலக்கியங்களிலே இந்தக் காட்சியை நாம் பார்க்கலாம். இரண்டாவது போகத்திற்காக வித்து கொண்டு போகிற நார்ப்பெட்டியிலே மீனை எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்று ஒரு பாட்டு உண்டு. சங்க இலக்கியப் பாட்டு மட்டுமல்ல, நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய நடைமுறையாகவும் இருந்தது. 

செயற்கை உரங்களைப் போடப்போட வயல்களிலே உளுவை மீன் இல்லை, ஓடைகளிலே ஆரல் மீனைக் காணோம். ஒரு வயலிலிருந்து இன்னொரு வயலுக்குத் தாவும் விரால், விலாங்கு போன்ற மீன்களை எல்லாம் பார்க்கவே முடியவில்லை. செயற்கை உரங்களினால் வயல்களில் மீன் உற்பத்திச் சங்கிலி இன்று அறுந்துவிட்டது. 

மரபுவழி தொழில்நுட்பத்தின் வாயிலாக சேர்த்துவைக்கப்பட்டிருந்த பல்வேறுவகையான விதைகள் அழிக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் அறுபது வகையான சம்பா நெல் ரகங்கள் இருந்ததாகச் சொல்வார்கள். நான் அறிய ஐ.ஆர்.8ம், ஐ.ஆர்.20ம் வருவதற்கு முன்னாலே செங்கல்பட்டு சிறுமணி, அரிக்கிராவி, கௌதம்பித்தாளை, பொட்டைச்சம்பா, ஆனைக்கொம்பன் என்று நிறைய நெல் ரகங்கள் இருந்தன. போகத்துக்குப் போகம் நெல்லை மாற்றிமாற்றித்தான் நட்டுக் கொண்டு இருந்தார்கள். 

கௌதமபித்தாளை என்பது இன்றைக்கு இருக்கிற பாசுமதியைவிட பொடிசாக இருக்கும். இதெல்லாம் போய் இன்று எங்கு பார்த்தாலும் ஐ.ஆர்.8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50, கோ.36 என அறுபது வகையான நெல் வகைகள் இருந்த இடத்திலே இன்று நான்கு வகையான நெல் வகைகள்தான் இருக்கிறது. பன்முகப்பட்ட தன்மையினை அழிக்க அழிக்க நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம் என்ற சந்தேகம் வருகிறது.

இயற்கை நூற்றாண்டுக்கால பரிமாணத்தில் நமக்கு உருவாக்கித் தந்த பல விசயங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். வானம் பார்த்த கண்மாய்களிலே தண்ணீர் அதிகம் வந்துவிட்டால் அதற்கென்றே ஒரு பயிர் வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் அரியான். 

குளத்தில் தண்ணீர் ஏற ஏற இந்த அரியான் தாமரை மாதிரி வளர்ந்து கொண்டே வரும். குளத்திலே தண்ணீர் நிறைய இருக்கிறபோது இந்தப் பயிர் ஆறடி உயரம் இருக்கும். வாழை மரங்களைப் படகுபோல கட்டி தண்ணீரில் போய் அதன் கொண்டையிலுள்ள கதிர்களை மட்டும் அறுத்துக் கொண்டு வருவார்கள். இந்தப் பயிர் எத்தனை நூற்றாண்டு காலப் பரிணாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விசயம். 

இந்தப்பயிர் இப்போது இல்லை. வறட்சி தாங்கும் பயிரான மின்னி என்ற ஒரு பயிர் உண்டு. மிளகாய்ச்செடி போல இருக்கும். அது எந்த பஞ்சம் வந்தாலும் கால்நடைகளுக்கு உணவு பஞ்சம் வரக்கூடாது என்பதற்காக நம்மிடம் இருந்தது இந்த மின்னி. இந்த மின்னி இன்று காணப்படவே இல்லை. 

இப்படி நாம் தொலைத்த விசயங்களை மீண்டும் உருவாக்குவதாக இருந்தால் இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகும்? இவைகளை நாம் எப்படி உருவாக்கப்போகிறோம் என்பது நாம் சிந்திக்க வேண்டிய விசயம்.

வளங்களைத் தருகிற மூலவளங்களை அழித்ததன் விளைவாகப் பல்வகை உயிரினங்கள், பயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது இதற்கான மாற்று பற்றி சிந்திக்கக் கூடிய இடமும், நேரமும் வந்திருக்கிறதென நான் கருதுகிறேன்.

நாவல் மரங்கள் முன்னைப்போல பரவலாக இல்லை. இலந்தைச்செடிகள் குளக்கரைகளில் இல்லை, எங்காவது மலைச்சரிவுகளில் கிடைத்தால்தான் உண்டு. ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள வயல்களில் விரால், உளுவை போன்ற மீன்கள் எவ்வளவு கால்சியத்தை உற்பத்தி செய்தது? இந்த கால்சியத்திற்கு மாற்றாக நாம் என்ன வைத்திருக்கிறோம்? இதற்கு மாற்றாக என்ன கொண்டுவந்திருக்கிறோம் என்பதை யோசிக்கும்போதுதான் சிக்கல் உருவாகிறது.

இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நாம் திரும்பத்திரும்ப இரசாயனங்களை நோக்கித்தான் போய் கொண்டிருக்கிறோம். இப்படி அழிந்து போன விசயங்களின் பட்டியலை எடுக்க எடுக்க நான் முன்னரே சொன்னதுபோல வளங்களைத் தரும் மூலவளங்களைத் தின்று கொண்டிருக்கிறோம் என்பது தெளிவு. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘மடு அறுத்துப் பால் குடிக்கிற’ மாதிரி. அதையே மேலோர் மரபிலே சொன்னால் ‘பொன் முட்டையிடுகிற வாத்தை அறுக்கிற’ மாதிரி. ஒரு மரம் ஒரே நாளிலே வெட்டப்படலாம். அது உருவாவதற்கு எவ்வளவு நாள் ஆகும்?

நம்முடைய மூலவளங்களை நாம் பறிகொடுத்தது பசுமை புரட்சியின் பின்விளைவு என்று நினைக்கிறேன். நான்கு வகையான புதிய விதைகளை மட்டுமே அறிமுகப்படுத்தி, அதோடு துங்ரோ வைரஸ் என்று சொல்லக்கூடிய ஒரு கிருமியையும் அறிமுகப்படுத்தி, உரம் என்ற பெயரிலே நம் பணத்தை பிடுங்கி, பூச்சிக்கொல்லி மருந்து என்ற பெயரிலே நம் பணத்தைப் பிடுங்கித் திரும்பத்திரும்ப வகைப்பட்ட தன்மையுடைய மரபுவழி தொழில்நுட்பத்தையும் சாய்ப்பதற்கென்றே இந்த பன்னாட்டு மூலதனங்கள் பின்னாலே நின்று வேலை பார்க்கின்றன. 

இதிலேதான் நாம் நிறைய இழந்துபோனோம். எங்கெங்கெல்லாம் பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு ஒன்று மட்டும் முன்னிருத்தப்படுகிறதோ அங்கு கலாச்சாரமும் சுரண்டப்படுகிறது, பொருளாதாரமும் சுரண்டப்படுகிறது.

பசுமைப்புரட்சியின் பின்விளைவுகளில் ஒன்றாக நான் எதைப் பார்க்கிறேனென்றால் ஒரு இரண்டு, மூன்று தாவரங்கள் நாடெல்லாம் மண்டிப்போய்விட்டன. குழை என்று சொல்லக்கூடிய வெங்காயத்தாமரை முன்பு குளத்தில் மட்டும்தான் கிடக்கும். எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் வாய்க்காலிலோ, ஆற்றிலோ மிதந்து வரும். இப்போது பார்க்கிற இடமெல்லாம் வெங்காயத்தாமரையாக இருக்கிறது. 

அதற்கடுத்து நாட்டு விடுதலைக்குப் பிறகுவந்த காட்டுக்கருவை (சீமைக்கருவேலம்), அது எல்லா இடங்களிலும் பரந்து கிடக்கிறது. அது நிலப்பரப்பை வெயில்தாக்காமல் மூடிவிடுகிறதென இவர்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் கூட அதனால் அழிக்கப்பட்ட மற்ற பயிர்வகைகள்? காட்டுக்கருவேலம் இருக்கிற இடத்துல பிரண்டை வளர்கிறதில்லை. பிரண்டை இருக்கிற இடத்தில் காட்டுக்கருவேலம் இருக்கிறது. 

அதுபோல நீர்நிலைகளில் ஜிலேபிக் கெண்டை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். இந்த ஜிலேபிக் கெண்டையை நீருக்குள் விட்டால் மற்ற மீன்களுடைய இருப்பை முழுக்க அது அழித்துவிடுகிறது. அதுபோல காட்டுக்கருவேலம் மற்ற தாவரங்களுடைய இருப்பை மொத்தமாக அழித்துவிடுகிறது. பன்முகப்பட்ட தன்மையை நிராகரிக்கக்கூடிய விசயங்களில் இவர்கள் செயற்கையாக மட்டுமல்ல, இயற்கையாகவும் ஊக்கப்படுத்தினார்கள் என்பதுதான் நமது குற்றச்சாட்டு. இதிலிருந்து நாம் மீள வேண்டும். எப்படி மீள வேண்டும் என்பதை நாம் கூடிச் சிந்திக்க வேண்டும்.

நன்றி: ஆர்.ஆர்.சீனிவாசன்