களத்து மேடு

ஜனவரி மாத தலையங்கத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொட்டில் அடித்தாற்போல் இருந்தது. பெரும் மனிதக் கூட்டத்தை நாடற்றவர்களாக ஆக்க நினைக்கும் ஆட்சியாளார்களுக்கு ஒற்றை பதில்தான் “எனது தாய்நாடு ஒரு சூட்கேஸ் அல்ல! நான் பயணியும் அல்ல!!” 

நிஜாமுல் ஹக், திருப்பத்தூர்

பேராசிரியர் அப்துஸ் சமது அவர்கள் எழுதிய “அறிவின் வாசல்” கட்டுரை வாசிப்பின் அவசியத்தையும் அது தனி மனிதனிலும் சமூகத்திலும் உண்டாக்கும் முன்னேற்றத்தையும் தெளிவுபடுத்தியது. “வாசிப்பில்லாத மனம் வாசலில்லா வீடு போன்றது. வாசித்துப் பழகிய மனம் ஈர மண் போன்றது.” வாசிப்பு உதடுகளின் உச்சரிப்போ கண்களின் அசைவோ அல்ல. உண்மைகளை உணர்வது அதை வாழ்க்கையால் மெய்பிப்பது.

முஹம்மது ஃபாரூக், நாகப்பட்டினம்

வரலாற்றின் போக்கில் கேவலமடைந்து வீழ்ச்சியடைந்த சர்வாதிகாரிகளின் வரலாற்றை குர்ஆனிய பார்வையில் வாசித்த போது மனம் கொஞ்சம் ஆசுவாசமடைந்தது. “சர்வாதிகாரிகள் விமர்சனங்களை எதிர்ப்புகளை சந்திக்கத் திராணில்லாத சர்வாதிகாரிகள் கோழைகள்” என்பதை இந்திய சர்வாதிகாரிகளும் மெய்ப்பிக்கிறார்கள். இவர்களுக்கு முன்னால் அசாத்திய துணிச்சலோடு நிற்பதற்கு இறைஉதவியும் பொறுமையும் அவசியம் என்பதையும் வரலாறு கற்றுத் தருகிறது. நமக்கும் நிச்சயம் இறை உதவி கிடைக்கும். அதுவரை பொறுமையுடன் காத்திருப்போம்.

அஹ்மது தாஹா, திருமங்கலம் 

ஜனவரி மாத தலையங்கம், இன்றைய இந்திய சூழல் மக்களுக்கு மன நெருக்கடிக்கு தீர்வு சொல்லியது. +2 தேர்வு நடக்க இருக்கிற சூழலில் மருத்துவ துறையை தேர்வு செய்ய இருக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் வழங்கிய “மருத்துவ மேற்படிப்பு பயின்று மக்கள் செவை செய்வோம்” கட்டுரை தேவையான கட்டுரை.

முகம்மது மைதீன், கரூர்

பணத்தை மையப்படுத்தி வாழ்க்கையை நகர்த்த கற்றுக் கொடுத்திருக்கும் முதலாளித்துவ சித்தாந்தத்தின் பரிசாக நமக்குள் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சமத்துவமின்மையை ‘ஆக்ஸ்ஃபாம்’ அறிக்கையின் வழியாக அலசி ஆராய்ந்த இறைநேசனின் கட்டுரை மிக ஆழ்ந்த கவனத்திற்குரியது. பாராட்டுக்கள். பேராசிரியர் அப்துல் ரசாக் எழுதிய சுதந்திர இந்தியாவின் வீரமங்கைகள் கட்டுரை, பேராசிரியர் அன்சரின் கட்டுரை, உலகம் மறந்த விஞ்ஞானிகள் கட்டுரை ஆகியவை காலத்திற்கேற்ற ஒன்று. இளம் எழுத்தாளர்களின் புதிய சிந்தனைகளோடு அழகான அச்சுக் கோர்வையில் வெளிவரும் சமூகநீதி முரசு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

பேரா, ஃபக்கீர் இஸ்மாயீல் பிலாலி