



நாம் வாழுகின்ற நாட்களை பயனுள்ளதாக ஆக்க வேண்டுமென்றால் நாம் சுவாசிக்கின்ற நிமிடங்களை வீணாக்காமல் பயன்படுத்தினால் தான் முடியும். அதற்கு நாம் நம் வாழ்க்கையின் பொருள் புரிந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால்தான் முடியும்.
துளிகளில் துவங்கி, ஒன்று சேர்ந்து வெள்ளமாக மாறுகின்ற மழைநீரைப் போல நம் நேரத்தையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பல நொடிகளில் தொடங்கி நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக வருடங்களாக பரிணமித்து வாழ்க்கையாக முழுமைப்படுகிறது.
நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் அதனால்தான் “காலத்தின் மீது” சத்தியமிடுகிறான். நேரத்தின் அருமையை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், மருத்துவர் கூறுகின்ற கோல்டன் அவர்ஸ் (Golden Hours) சில் தெரிந்துகொள்வோம். மற்ற நேரங்களில் ‘நேரம்’ என்பதை சிந்திப்பதே கிடையாது.
மனிதனாக நாம் நமது முக்கிய கடமைகளில் முதல் கடமையும், முக்கிய கடமையுமான தொழுகையை பேணுவதற்கு இறைவன் இடுகின்ற கட்டளை நேரத்தை குறிப்பிட்டுதான். தனது புனித வேதமான திருக்குர்ஆனில் 4 : 103 வது வசனத்தின் மூலமாக “குறித்த நேரம்” என கட்டளையிடுகிறான்.
எந்த ஒரு காரியத்தையும் செய்வதென்றால் அதற்கென குறிப்பிட்டுள்ள நேரத்தில் செய்ய வேண்டும் என்பது நமக்கு இடப்பட்டுள்ள கடமையாகும்.
தொழுகை மட்டுமல்ல தனது வாழ்நாளில் செய்ய வேண்டிய ஒவ்வொரு கடமையையும் நேரத்தின் மதிப்பு அறிந்து செய்திட வேண்டும்.
ஒவ்வொரு நாளின் முதல் கடமையான ‘ஃபஜ்ர்’ தொழுகைக்கு குறித்த நேரத்தில் தொழாமல், எப்பொழுது விழிப்பு வந்து எழுகின்றோமோ அப்பொழுது தொழுதுகொள்ள நபிவழி இருக்கிறது என்று ‘வாய்சவடால்’ வீரர்களாக வாழ்கின்றோம், இரவு தொழுகைக்குப் பிறகு சீக்கிரம் தூங்க வேண்டும் என்ற நபி மொழியை நினைவில் வருவதில்லை.
நண்பர்களுடன் பேசுவதற்கு நல்ல முடிவுகள், டி.வி. பார்ப்பதற்கு, வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தொடர்பு கொள்வதற்கு, இயக்க செயல்பாடுகளை செய்வதற்கு என இரவெல்லாம் கண் விழித்துக் கொண்டு கண்ட நேரத்தில் தூங்கி, காலையில் கண்ட நேரத்தில் எழுந்து தொழுகின்றவர்களாக சிலர் இருக்கின்றோம்.
இறைவனின் அற்புத படைப்பான மனித உடலின் மூலமாக நேரத்தின் மதிப்பை நமது உள் உறுப்புகளின் இயக்கத்திற்குத் தேவைப்படுகின்ற சக்தியினை அளிக்கின்ற நேரத்தின் அருமையை பௌதீக கடிகாரம் (Physical clock) என இன்று விஞ்ஞானம் கூறுவதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
நம் உள் உறுப்புகள் இயங்குவதற்கு, நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த பௌதீக கடிகாரம் முக்கிய பங்காற்றுவதாக விஞ்ஞானம் இன்று பாடம் நடத்துகிறது. உண்பதற்கான நேரம், ஓய்வுக்கான நேரம், உறங்குவதற்கான நேரம் என ஒவ்வொன்றுக்கும் நேரம் செயல்படுவதாக இந்த உள் உறுப்பு கடிகாரம் என்னும் ORGAN CLOCK கூறுகிறது.
ஒவ்வொரு நேர தொழுகையும் நமது ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரமாக இருப்பதை உணர்ந்தால் தொழுகையின் மகத்துவமும் குறித்த நேரத்தில் தொழுவதின் அற்புதமும் நமக்கு விழிப்புணர்வை தந்து விடும்.
காலை நேர தொழுகையின் மூலமாக நமது நுரையீரல் அற்புதமாக செயல்பட்டு, பெருங்குடலுக்குத் தேவைப்படும் சக்தியினை அளித்து நமக்கு மலச்சிக்கல், ஆஸ்துமா, தோல் நோய்கள், மூச்சு தொடர்பான சிக்கல்கள் தலைமுடி உதிர்வுகள் போன்ற பல நோய்களில் இருந்து காப்பாற்ற உதவும்.
மதிய நேர லுஹர் தொழுகையை முறைப்படி கடைபிடிக்கும் போது சிறு குடல் நன்றாக வேலை செய்து, காது இரைச்சல் போன்றவைகள் இல்லாமல் இதயம் நன்றாக வேலை செய்து செரிமானம் முறைப்படி நடந்து கழிவுகள் தங்காமல் வெளியேறி, பசி ஏற்பட்டு, மதிய நேர உணவை எடுத்துக்கொள்கின்ற நேரமாக அது ஆகிறது.
அசர் என்று சொல்லக்கூடிய மாலை நேர தொழுகையின் மூலமாக நீர் கழிவுகள் வெளியேறி, உடலுக்குத் தேவைப்படுகின்ற நீர் சக்திகள் எடுக்கப்பட்டு, சிறு நீரகப்பை நன்றாக செயல்படுவதற்கு காரணமாக ஆகிறது.
இந்த கடமைக்குப் பிறகு வருகின்ற மக்ரிப் என்ற அந்தி மாலை தொழுகையை கடைபிடிப்பதால் சிறு நீரகம் அற்புதமாக செயல்பட்டு அதனுடைய கழிவுகளை வெளியேற்றி, முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு வலி தொடர்பான உடல்வலிகள் எதுவுல் இல்லாமல் மன அமைதி பெறுவதற்கு அந்த நேரம் உதவுகிறது.
இவைகளை முறைப்படி பின்பற்றி அந்த நாளின் பகலை முடித்திருந்தால் இரவு பசி நன்றாக ஏற்பட்டு உடலுக்குத் தேவையான ஓய்வுக்காக தயாராகும்.
இரவு நேர இஷா தொழுகையையும் சிறப்பாக முடித்து விட்டால் அன்றைய நாளில் நடைபெற்ற காரியங்களை அலசிப் பார்த்து நல்ல முடிவு எடுப்பதற்கும், உடலின் உஷ்ணங்களை சமச்சீர் பெறுவதற்கும், உடல் உள்ள உறுப்புகள் ஓய்வு எடுக்கவும் தயாராகும்.
இஷாவை முடித்தவுடன் சீக்கிரம் உறங்கினால் சிறுகுடல் நன்றாக வேலை செய்கிறது. சீக்கிரம் உறங்கி விட்டு நடுநிசித் தொழுகை எனும் அற்புதமான தஹஜ்ஜுத் தொழுகைக்கு விழித்துக் கொண்டால் நமது வயிறு காலியாக இருப்பதால் காஸ்மிக் எனர்ஜி (Cosmic Energy) என்று விஞ்ஞானம் சொல்லக்கூடிய அற்புத ஆற்றல், பீனியல், பிட்யூட்டரி போன்ற நம் நாளமில்லா சுரப்பிகளுக்கு சக்தியைக் கொடுத்து நம்மை பிரகாசமாக வாழச் செய்யும் ஓசோனின் தூய காற்றும் நமக்கு கிடைத்து விடும்.
இவ்வாறு ஒவ்வொரு தொழுகையின் நேரம் மட்டுமல்ல ஸஜ்தா என்னும் சிரம் பணியும் நேரத்தில் “அதிக நேரம்” எடுத்துக் கொண்டு பொறுமையாக பூமியில் நம் சிரத்தை சிரமம் பாராமல் வைத்திருந்தால் அந்த நேரத்தின் அருமையினால் மூலைக்குச் செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் தடையின்றி சென்று மூலையில் கட்டி, தலைவலி, பக்க வாதம், உதவாதம் போன்ற பயங்கர நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
ஒவ்வொரு நாளிலும் உள்ள மணித்துளிகளை நாம் முறைப்படி பயன்படுத்தினால் முன்மாதிரி சமூகமாக நோய் இன்றி வாழ்வது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற மனிதர்களாகவும் வாழ்ந்திட முடியும்.



































