இன்றைய முஸ்லிம்களுக்கு ஷரீஅத்திலும் இபாதத்களிலும் இருக்கின்ற ஆர்வமும் ஓரளவுக்கான புரிதலும், இந்திய நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் இஸ்லாமியப் பார்வையுடன் கூடிய ஆர்வமும் அணுகுமுறையும் இல்லாததைப் பார்க்கின்றோம். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
முகலாயப் பேரரசின் ஆட்சியும் நிருவாக அதிகாரங்களும்,1857 இல் டெல்லியில் நடைபெற்ற போருக்குப் பிறகு பிரிட்டிஷாரின் கைக்குப் போனதால் முஸ்லிம்களின் கல்வி கலாச்சாரம் சமூக கட்டுமானம் உள்ளிட்ட அனைத்தும் சிதைந்து போய்விட்டது.
முகலாய அரச குடும்பத்தினர் மற்றும் அரசின் நிருவாகப் பொறுப்பிலிருந்த பலர் கொல்லப்பட்டனர் அல்லது துரத்தப்பட்டனர்.
அதன் காரணமாக மத்திய காலத்தின் அரசியல் மற்றும் ஆட்சி நிருவாகம் சார்ந்த அறிவும் அனுபவங்களும் ஆதாரங்களும் முஸ்லிம்களின் அடுத்த தலைமுறைக்கு முறைப்படி கடத்த முடியாமல் போய்விட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை இந்திய நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான அறிவிலும் அணுகுமுறையிலும் காலத்திற்கேற்ற இஸ்லாமிய பின்புலத்திலான மாற்றங்களும் மேம்படுத்துதலும் முஸ்லிம்களிடம் நிகழவில்லை. அதற்கான ஆர்வமும் தேடலும் முஸ்லிம்களிடம் இல்லாமல் போய்விட்டது.
ஆனால் இன்றைய இந்தியாவின் அரசியலிலும் பரந்துபட்ட நிருவாகத் துறையிலும் இஸ்லாமிய கண்ணோட்டத்துடன் கூடிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் அறிவார்ந்த முஸ்லிம்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
இன்றைய நமது அரபு மதரஸா பாடங்களில் கண்ணியமான 4 இமாம்களின் சட்டவாக்கங்கள் (ஃபிக்ஹ்) குறித்த பாடங்களில் பயிற்றுவிக்கப்படும் அகீதா, இபாதத் மற்றும் தனிச்சட்டங்கள் சார்ந்தவைகளுடன், பொதுஅரசியல், ஆட்சி, நிருவாகம், கூட்டாட்சி, மதச் சிறுபான்மையினர் உரிமைகள், வேளாண்மை, வரிவிதிப்புகள், வெளியுறவு, இராணுவம் உள்ளிட்ட அரசு நிருவாகவியல் சார்ந்த சட்டங்களையும் இன்றைய காலத்திற்கேற்ப பயிற்றுவிக்க வேண்டும்.
அதாவது மத்திய காலத்தின் மகத்தான பேரரசுகளான பாரசீகத்தின் அப்பாஸியாக்கள் துருக்கியின் உதுமானியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் முஸ்லிம் குறுநில மன்னர்கள் உள்ளிட்டோர் உலகின் பெரும்பகுதி நிலப்பரப்பையும், இன மொழி மத வேறுபாடுகளுடைய கோடிக்கணக்கான மக்களையும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ததற்கு தூணாகவும் துணையாகவும் முதுகெலும்பாகவும் இருந்தது ஹனஃபி மத்ஹபின் நுண்ணறிவுமிக்க இமாம்களும் அவர்கள் ஒவ்வொரு காலத்திலும் இயற்றிய அந்தந்த மண்ணுக்கேற்ற இலகுவான சட்டங்களும் தான்.
இந்த ஃபிக்ஹ் கலை இமாம்கள்தான் மத்திய காலத்திற்கு ஏற்ற ஒரு உலக ஒழுங்கை (World Order) இஸ்லாத்தின் நிழலில் உருவாக்கியவர்கள்.
இன்றைய Law, Economics, Sociology, Political Science, Public Admin, Public Policy, International Relation போன்ற படிப்புகளை படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் மற்றும் இந்திய ஆட்சிப்பணி (Civil Service) தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நாட்டின் அனைத்து துறைகளுக்குமான இஸ்லாமிய சட்டங்கள் முந்தைய காலத்தில் எப்படி என்னவாக இருந்தன என்பதை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அதற்கு அரசாட்சி தொடர்பான மத்ஹப் நூல்களில் வாசிப்பு அவசியம்.
அல்குர்ஆன் சுன்னா நிழலில் பொது நிருவாகச் சட்டங்கள், நிதியியல், நிலவரி, சிறுபான்மையினர் உரிமைகள் உள்ளிட்டவற்றை விவரிக்கிறது இமாம் அபூ யூஸுப் (ரஹ்) அவர்கள் கி.பி 798 இல் இயற்றிய – கிதாப் அல் கரஜ்.
உலகிலேயே முதன்முதலாக சர்வதேச ஒப்பந்தங்கள், வணிகச் சட்டங்கள், சர்வதேச பணப் பரிவர்த்தனைகள், இராணுவம், போர்கள், போர்க் கைதிகளின் உரிமைகள், அகதிகள் உரிமைகள் உள்ளிட்டவை குறித்து இன்றைய சர்வதேச சட்டங்களின் தந்தை எனப்படும் இமாம் முஹம்மது அல் ஷைபானி (ரஹ்) அவர்கள் கி.பி 805 இல் இயற்றிய – கிதாப் அல் ஸியார்.
கி.பி -1197 இல் உஸ்பெகிஸ்தானின் இமாம் புர்ஹானுத்தீன் மர்கினானி (ரஹ்) அவர்கள் இயற்றிய நீதித்துறை சட்டங்கள் – அல் ஹிதாயா. (இந்த நூல் முகலாயர் காலத்திலும் பின்னர் பிரிட்டிஷார் காலத்திலும் வெவ்வேறு வடிவங்களாக்கப்பட்டு இன்று இந்திய சட்டக் கல்லூரிகளில் முகமதிய சட்டங்கள் என்று பயிற்றுவிக்கப்படுகிறது).
உதுமானிய கலீஃபா சுலைமான் அல் கானூனி அவர்கள் மேற்பார்வையில் கி.பி 1530 இல் உருவாக்கப்பட்ட கானூன் நாமா.
நீதி, வரி, குற்றம் மற்றும் சமூக அமைப்புக்கான சட்டங்களை அன்றைய காலத்திற்கேற்றவாறு புதுப்பித்தார் சுலைமான். அதனால் தான் கலீஃபா சுலைமான் அவர்களுக்கு அல் கானூனி (சட்டம் இயற்றுபவர்) என்ற சிறப்பு பெயர் வந்தது.
மன்னர் அவுரங்கஜீப் அவர்களால் இஸ்லாமிய உலகம் முழுவதுமிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 500 உலமாக்கள் டெல்லியிலும் லாகூரிலும் ஒன்றுகூடி கி.பி 1664 to 1672 வரையிலுமான 8 ஆண்டுகளில் இயற்றப்பட்டது தான் ஃபதாவா ஆலம்கீரி.
இந்திய துணைக்கண்டத்தின் சூழலுக்கேற்ப தனிநபர் சட்டம், குடும்பச் சட்டம், அடிமைத்தனம், போர், சொத்து, வரிகள், பொருளாதாரம் மற்றும் பலதரப்பட்ட சட்டப் பிரிவுகளை இது கொண்டுள்ளது.
இவைபோன்று அரசியல் ஆட்சி அதிகாரம் மற்றும் அரசு நிருவாகத்தின் அனைத்து துறைகள் குறித்தும் ஹனஃபி மத்ஹப் இமாம்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான சட்ட நூல்கள் வாசிக்கப்படாமல் இன்றைய காலத்திற்கேற்ப ஆய்வுக்குட்படுத்தப்படாமல் 200 ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளதால் தான் இன்றைய முஸ்லிம்களால் அரசு நிருவாகத்தின் எந்த ஒரு துறைக்கும் கொள்கைக்கும் கருத்து சொல்லவோ நல்ல வழிமுறையை காட்டவோ இயலாமல் தயங்கி தயங்கி நிற்கின்றோம்.
இந்த கிதாபுகளிலுள்ள சட்டங்களின் வேர் அல்குர்ஆன் சுன்னாவாக இருப்பதால் இன்றைய இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், பன்முகச்சூழலுக்கும், பெரும் இடையூறாக இருக்கும் பல்வேறு சட்ட சமூக பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகள் இதில் நிச்சயம் இருக்கும் என்பது உறுதி.
தமிழக முஸ்லிம்கள் வரலாற்றின் எந்த காலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை.
அதனால் ஆட்சி நிருவாகம் குறித்த ஹனஃபி மத்ஹப் நூல்களின் மதிப்பீடுகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இப்போது படித்து வரும் தலைமுறைக்கு இது கட்டாயம் தேவை.
தமிழகத்தில் இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட அரபு மதரஸா பாடங்களில் இந்த நூல்கள் குறித்த அறிவும் ஆய்வும் கட்டாயம் இடம்பெற வேண்டும் அல்லது அந்த கிதாபுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உலகை கட்டி ஆண்ட இஸ்லாமிய நாகரிகத்தின் வேர்களையும் விழுதுகளையும் அறியாமல் இளையத் தலைமுறை உருவானால் அது எப்படி இஸ்லாமிய சமூகமாக கருதப்படும். அது எப்படி முஸ்லிம் உம்மத்தின் அறிவு மரபையும் இஸ்லாமிய நாகரிக மரபையும் இறுதிநாள் வரை எடுத்துச்செல்லும்.
அரசியலில் ஆர்வம் காட்டும் ஆலிம்களுக்கு இந்த நூல்கள் தான் கலங்கரை விளக்கு.
1440 ஆண்டுகால முஸ்லிம் உம்மத்தை ஷரீஆவின் வட்டத்துக்குள் கட்டிப்போட்டு உலகை ஆளும் பேரரசுகளை உருவாக்கிட காரணமாக இருந்த பேரறிஞர்களான ஃபிக்ஹ் கலை இமாம்கள் மற்றும் அவர்களின் சட்டவாக்கங்கள் குறித்த அறியாமையும் குறுகிய கண்ணோட்டமும் முற்றாக அகற்றப்பட வேண்டும்.
-CMN SALEEM


































