புதிய தொழில்நுட்பம் காரணமாக புதிய தொழில்கள் வர தொடங்கியுள்ளது. அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பதை பார்க்க வேண்டும். காலம் காலமாக பாரம்பரிய தொழிலில் உள்ளவர்களின் மேம்பாடு, தொழிற்துறையில் புதிதாக வருவோர்களின் மேம்பாடு என இருவேறு விவகாரங்களை முக்கியமாக பார்க்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசின் தொழில்துறை முன் உள்ளது. தொழிற்சாலைகள் பெரும்பாலும் சென்னை அதனை சுற்றியுள்ள இடங்களில்தான் வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் மேம்பாடு மூலம் கோவை போன்ற தொழிற் நகரங்கள் மிகுந்த பயனடையும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவித்து பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்துறையை மீட்டெடுப்பதே அரசின் நோக்கம்.
தங்கம் தென்னரசு, தொழில் துறை அமைச்சர், தமிழகம்
………………….
“கொரோனாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்தத் தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம்.
கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்
……….
“தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்ற தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இது அரசும், மக்களும் எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல.
குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் சிறுவர்களை மூளைச்சலவை செய்து திருட்டு முதல் கொலை, கொள்ளை வரை அனைத்துக் குற்றங்களையும் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். தொடக்கத்தில் குற்றங்களை செய்கிறோம் என்பது தெரியாமல் செய்யும் பல சிறுவர்கள், பின்னர் தொழில்முறை குற்றவாளிகளாக மாறி விடுகின்றனர்.
இதற்கான காரணங்கள் என்னென்னவென்று கண்டுபிடித்து அவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் நடவடிக்கையாக அனைவருக்கும் பட்டப்படிப்பு வரை தரமான, சுகமான, சுமையற்ற, ஒழுக்க நெறிகள் மற்றும் விளையாட்டுடன் கூடிய கல்வி கட்டாயமாகவும், இலவசமாகவும் வழங்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும். குறிப்பாக, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் அன்பு காட்டி அரவணைப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் தவறான வழியில் திசைமாறிச் செல்லாமல் தடுப்பது பெற்றோர்களால் மட்டுமே சாத்தியமாகும்.
இராமதாஸ், பாமக நிறுவனர்
































